No icon

தலையங்கம்

ஒடுக்கப்பட்ட குரலற்றவர்களின் குரல்!

ஆகஸ்டு 15, 2022 அன்று இந்தியா தன் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய அதே நாளில் ஜனநாயக இந்தியாவைச் சுடுகாடாக்கும் நிகழ்வு சத்தமின்றி குஜராத்தில் அரங்கேறியது. அமிர்த மஹோத்சவ் நடந்த அதே சமயத்தில் விஷம மஹோத்சவ் குஜராத்தில் நடைபெற்றது. பில்கிஸ் பானோ பாலியல் வன்முறை வழக்கின் குற்றவாளிகள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

பில்கிஸ் பானோ! பிப்ரவரி 27, 2002 அன்று குஜராத் கோத்ரா கலவரத்தின்போது மனசாட்சி உள்ள ஒவ்வொருவரையும் உலுக்கியது அவரது கண்ணீர். சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலின் பெட்டிகள் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. மார்ச் 3, 2002 அன்று தஹோத் மாவட்டம், லிம்கேடா தாலுகா, ரந்திக்பூர் கிராமத்தில், ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோ தனது நான்கு வயது மகள் மற்றும் பதினைந்து பேருடன் தனது கிராமத்தை விட்டு வெளியேறி ஊரோரம் இருந்த ஒரு வயலில் தஞ்சம் அடைந்தார். 20-30 பேர் கொண்ட கும்பல் அரிவாள்கள், மற்றும் தடிகளுடன் ஆயுதங்களுடன் அவர்களைத் தாக்கியது. இவரை, கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து, இவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இதில் பிறந்து இரண்டு நாளே ஆன பச்சிளங்குழந்தையும் அடக்கம். அவருடைய மூன்று வயது குழந்தையை கல்லில் அடித்து கொன்றனர்.

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. குற்றவாளிகள் 2004 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு விசாரணை அகமதாபாத்தில் தொடங்கியது. சாட்சிகள் பாதிக்கப்படலாம் என்று பில்கிஸ் பானோ அச்சம் தெரிவித்ததையடுத்து, இந்த வழக்கை உச்சநீதிமன்றம் 2004 அன்று மும்பைக்கு மாற்றியது. ஜனவரி 21, 2008 அன்று மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. சாட்சியங்கள் இல்லாததால் 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர். விசாரணையின்போது குற்றவாளிகளில் ஒருவர் இறந்துவிட்டார். 2018 ஆம் ஆண்டு விடுதலையை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் உச்சநீதிமன்றம் பில்கிஸ் பானோவுக்கு ரூபாய் ஐம்பது இலட்சம் இழப்பீடு, வேலை மற்றும் வீடு வழங்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. அப்போது பேட்டியளித்த பில்கிஸ் பானோ, மாண்புமிகு உச்சநீதிமன்றம் என்னுடன் நிற்கிறது என்பதை எனக்குத் தெரியப்படுத்தியுள்ளது. 2002 ஆம் ஆண்டு வன்முறையில் இழந்த அரசியலமைப்பு உரிமைகளை மீட்டெடுப்பதற்கான எனது வலி, எனது துன்பம் மற்றும் எனது போராட்டத்தை இது புரிந்து கொண்டது. எந்த குடிமகனும் அரசின் கைகளால் பாதிக்கப்படக்கூடாது’ என்று கூறினார்.

ஜஸ்வந்த்பாய் நாய், கோவிந்த்பாய் நாய், ஷைலஷ் பட், ராதேஷ்யாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, பிரதீப் மோர்த்தியா, பகபாய் ஹோனியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா ஆகியோரே பதினொரு குற்றவாளிகள். ராதேஷ்யாம் ஷா, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432, 433ன் கீழ் தண்டனையை ரத்து செய்யக்கோரி குஜராத் நீதிமன்றத்தை நாட, குஜராத் நீதிமன்றமோ பொருத்தமான அரசாங்கம் மகாராஷ்டிரம் தான் என்று அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் ஏப்ரல் 1, 2022 அன்று (உலக முட்டாள்கள் தினத்தன்று) பதினைந்து ஆண்டுகள் நான்கு மாதங்கள் சிறையில் இருந்ததாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய, ஜூலை 9 ஆம் தேதி, முன்கூட்டியே விடுவிப்பதற்கான விண்ணப்பத்தை பரிசீலித்து இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்குமாறு வழி காட்டியது. குஜராத் அரசோ பஞ்சமால் மாவட்ட ஆட்சியர் சுஜால் மயாத்ரா தலைமையில் குழு அமைத்து, ஏக மனதாக, அனைவரையும் கருணை அடிப்படையில் தண்டனைக்காலம் முன்பாகவே விடுதலை வழங்கிட முடிவுசெய்தது.

அந்த அடிப்படையில் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி, இந்தியாவின் 75வது சுதந்திரத் தினத்தன்று இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறையிலிருந்து வெளியில் வந்தவர்களை ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து, அவர்கள் காலில் விழுந்து ஆசீர் வாங்கி, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

குஜராத் பா.ஜ.க எம்.எல்.ஏ சி.கே ராவுல்ஜி, “விடுதலை செய்யப்பட்ட 11 பேரும் பிராமணர்கள். பொதுவாகவே பிராமணர்கள் நல்ல பழக்க வழக்கம் கொண்டவர்கள். சிறையிலும் அவர்கள் நடத்தை நன்றாகவே இருந்திருக்கிறது. அதனால்தான் விடுதலை செய்யப்பட்டார்கள்’ என்று சாதிய சப்பைக்கட்டு கட்டுகிறார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, "குஜராத் அல்லது கதுவாவில் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு ஆதரவாக நிற்பதுதான் காவிக் கட்சியின் கொள்கை. சிலரின் சாதியால் அவர்கள் கொடூரமான குற்றம் செய்தாலும் அவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்க முடியும், மற்றவர்கள் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் ஆதாரம் இல்லாமல் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படலாம். அது தவறாகாது. பில்கிஸ் பானோவை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் ‘சன்ஸ்கார்’ (ஆழ் உணர்வு திறன் கொண்ட) பிராமணர்கள் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ சர்டிஃபிகேட் தருகிறார். அவர்கள் நடத்தை நன்றாகவே இருந்திருக்கிறது. அதனால்தான் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இதுதான் பிரதமர் மோடி சுதந்திர தினத்தின்போது பேசிய நாரி சக்தியின் நிகழ்ச்சி நிரல். சாதி அடிப்படையில் ‘சிறையிலிருந்து வெளியேறு’ என இலவச பாஸ்களை பா.ஜ.க வழங்குகிறது. இதில் குறைந்தபட்சம் கோட்சேயாவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டதற்கு, நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்" என தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

ஆம். காவி பயங்கரவாதம் எப்போதுமே தன் உறுப்பினர்களைப் பாதுகாக்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிருபிக்கப்பட்டுள்ளது. இந்திய பெண்களின் மனசாட்சியாக எழுந்த பில்கிஸ் பானோ தற்போது கூனி குறுகி வெட்கி தலைகுனிந்துள்ளார். பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி, தன் மகளைப் பறிக்கொடுத்து., உறவினர்களை இழந்து, அனைத்தையும் இழந்து, தன்னம்பிக்கையை மட்டும் இழக்காமல், நீதிமன்றத்தின்மீது முழு நம்பிக்கையை வைத்து இருபது ஆண்டுகாலம் போராடிய போராட்டம் தோல்வியைத் தழுவியுள்ளது. இவ்வளவு கொடுமைகளுக்குப் பிறகும் தன் உயிரை மாய்த்துக்கொள்ளாமல் தன்னை சிதைத்தவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று மனவுறுதியுடன் போராடிய போராட்டம் சிதைக்கப்பட்டுள்ளது. அன்று அவரது புகாரை ஏற்காமல் ஐந்து போலீசார் அவமரியாதை செய்தனர்; பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட அவருக்கு இரண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் துரத்தியடித்தனர். பின்னர் இப்பெண்மணியின் வீரமிகுந்த சட்டப் போராட்டத்தின் விளைவாக, அவர்கள் கைது செய்யப்பட்டனர்; பாலியல் வன்புணர்வு செய்த 11 பேரும் கைது செய்யப்பட்டனர்.

குஜராத்தின் அகமதாபாத்தில் விசாரணை நடைபெற்றால், நியாயம் கிடைக்காது; சாட்சிகள் கலைக்கப்படுவார்கள் என்று சட்டப்போராட்டம் நடத்தி மும்பை நீதிமன்றத்திற்கு கொண்டுச் சென்றார். உடல் காயங்கள் ஆறினாலும் மனக்காயங்கள் ஆறாமல், ஆளும் அரசையும் ஆட்சியாளர்களையும் எதிர்த்து இரவிலும் பகலிலும் உறக்கமின்றி அவர் நடத்திய போராட்டம் பாராட்டுக்குரியது. மிரட்டல்களுக்கு அடிபணியாமல், திமிறி எழுந்து, உயிர்வாழும் ஒவ்வொரு நிமிடமும் பாதுகாப்பு ஏதுமின்றி, ஒரு சிறுபான்மையினராக, ஒரு பெண்மணியாக அவர் செய்த நீதி புரட்சி, இந்திய ஜனநாயகத்தின் நீட்சியாகும். ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான் குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து இந்திய நீதி பரிபாலனத்திற்கு புத்துயிர் அளித்தார். பில்கிஸ் பானோ - இந்தியப் பெண்களின் மனசாட்சி. குரலற்றவர்களின் குரல்.

மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா, ‘எப்படி ஒரு பெண்ணுக்கான நீதி இப்படி முடிய...முடியும்? சுயமரியாதையுடைய தொலைக்காட்சி தொகுப்பாளர்களெல்லாம் இன்று எங்கே போனார்கள்? பில்கிஸ் பானோ பற்றிய விவாதத்துக்கு பெரிய ஆளுமைகள் எல்லாம் செல்லவில்லையா? இந்த தேசம் (உங்கள் முதுகுத்தண்டைப் பற்றி) தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் பில்கிஸ் பானோ ஒரு பெண்ணா? அல்லது முஸ்லீமா? என்பதை இந்த தேசம் முடிவு செய்யட்டும்.’ என்று கொந்தளித்துள்ளார்.

இந்தக் குற்றவாளிகளின் விடுதலை, இந்திய ஜனநாயகத்தின், இந்திய நீதி பரிபாலனத்தின் தோல்வி. ராகுல்காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், உன்னாவ் - பாஜக எம்எல்ஏ வைக் காப்பாற்ற வேலை! கதுவா - பாலியல் வன்கொடுமையாளர்களுக்கு ஆதரவாகப் பேரணி! ஹத்ராஸ் - பாலியல் வன்கொடுமையாளர்களுக்கு ஆதரவான அரசாங்கம்! குஜராத் - பாலியல் வன்கொடுமையாளர்களின் விடுதலையும் கௌரவமும். இது போன்று குற்றவாளிகளுக்கு பாஜக ஆதரவளிப்பது, பெண்களின் மீதான அவர்களின் அற்ப மனநிலையையே காட்டுகிறது. இத்தகைய அரசியலில் வெட்கமில்லையா பிரதமரே?’ என்று கேட்கிற கேள்வி இமயம் முதல் குமரி வரை எல்லார் மனதிலும் எதிரொலிக்கட்டும்!

56 இன்ச்குள் குறைந்தபட்சம் 5 இன்ச்சாவது இக்கேள்வி இறங்கட்டும்.

 குரலற்றவர்களின் குரல் பாதுகாக்கப்பட வேண்டும்.

Comment