No icon

28-04-2024 - இயேசுவில் இணைந்து நற்கனி கொடுக்க...

பாஸ்கா காலத்தின் 5-ஆம் ஞாயிறு (2-ஆம் ஆண்டு) திப 9:26-31; 1யோவா 3:18-24; யோவா 15:1-8

வியட்நாம் போரின் போது (1955-1975) அமெரிக்க இராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களில் மேலே சுழலும் இறக்கைகளை ஹெலிகாப்டருடன் இணைக்க MRRN என்ற திருகாணிகளைப் பயன்படுத்தினர். MRRN என்றால் Main Rotor Retaining Nut, அதாவதுசுழல் விசையுடன் இணைத்து வைக்கும் மையத் திருகாணிஎன்று பெயர். இந்தத் திருகாணியை அமெரிக்க இராணுவ வீரர்கள்இயேசு திருகாணி’ (Jesus Nut) என்று அழைத்தனர். இந்தப் பெயர் வைக்கப்பட்டதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம் மிக அற்புதமானது.

ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருக்கும்போது, இந்த MRRNஅல்லதுஇயேசு திருகாணிகழன்றுவிட்டால், மேலே சுற்றும் இறக்கைகள் ஹெலிகாப்டரிலிருந்து பிரிந்துவிடும். அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் அனைவரும் பெரும் விபத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, அந்நேரத்தில் ஹெலிகாப்டரில் இருப்பவர்களை இயேசுவால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்பதை வீரர்கள் உணர்ந்ததால், அந்த மையத் திருகாணிக்கு, ‘இயேசு திருகாணிஎன்று பெயரிட்டனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில்இயேசு திருகாணிகழன்று விழுந்து எந்த விபத்தும் ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை.

இயேசு திருகாணியோடு ஹெலிகாப்டரின் இறக்கைகள் இணைந்து இருப்பதுபோல, நாமும் நம் வாழ்வின் திருகாணியான இயேசுவோடு இணைந்து கனி கொடுக்க, பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு நம்மை அழைக்கின்றது. இயேசுவின் இவ்வழைப்பைஇயேசுவே உண்மையான திராட்சைச் செடிஎன்னும் உவமை வழியாகத் தியானிக்கலாம்.

உடனிருப்பை உணர்த்தும்நானேவாக்கியங்கள்

யோவான் நற்செய்தியில் ஏழு நானே வாக்கியங்கள் இடம்பெறுகின்றன. அவை: 1. வாழ்வு தரும் உணவு நானே (6:35), உலகின் ஒளி நானே (8:12), நானே வாயில் (10:9), நல்ல ஆயன் நானே (10:2), உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே (11:25), வழியும், உண்மையும், வாழ்வும் நானே (14:6), உண்மையான திராட்சைச் செடிநானே (15:1) என்பன.

இன்றைய நற்செய்தியில் இயேசுநானே உண்மையான திராட்சைச் செடிஎன்று தம்மைத் திராட்சைச் செடியாக உருவகப்படுத்துகிறார்.

இயேசு எத்தகைய கடினமான சூழல்களில் நானே எனும் வாக்கியங்களைப் பயன்படுத்தினார் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம். தம் அதிகாரத்தைக் காட்டவோ அல்லதுநான்என்ற ஆணவத்தை வெளிப்படுத்தவோ அல்லது தம் புகழைப் பறைசாற்றவோ நானே என்ற உருவகங்களை இயேசு பயன்படுத்தவில்லை. மாறாக, சீடர்கள், இயேசுவால் நலம் பெற்றவர்கள் எதிர்ப்புகள், குழப்பங்கள் போன்ற கடினமான சூழல்களைச் சந்தித்த வேளையில் தமது உடனிருப்பை வெளிப்படுத்திய வாக்கியங்கள் அவை.

பெருங்காற்று மற்றும் பொங்கி எழும் கடல் அலையில் சீடர்கள் தத்தளித்ததைத் தொடர்ந்து வரும் நிகழ்வில், ‘வாழ்வு தரும் உணவு நானேஎன்றும், விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணைக் காப்பாற்றிய நேரத்தில், ‘உலகின் ஒளி நானேஎன்றும், தம்மால் பார்வை பெற்ற ஒருவர் பரிசேயர்கள் மற்றும் சமயத் தலைவர்களால் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட வேளையில் (யோவா 9:24,34) ‘நல்ல ஆயன் நானேஎன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தினார். இதை விட ஒரு நெருக்கடியான சூழலில், சீடர்களை விட்டுப் பிரிந்து செல்லும் வேளையில், தம் சீடர்களுடன் இறுதி இராவுணவைப் பகிர்ந்தபோது, இயேசு, தம்மை ஒரு திராட்சைச் செடியாகவும், அவர்களை அதன் கிளைகளாகவும் உருவகப்படுத்திப் பேசுகிறார். நெருக்கடியான வேளைகளில் இயேசு நம்மோடு நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதை நமக்கு உணர்த்துபவையே இயேசுவின் இந்தப் புகழ்மிக்கநானேவாக்கியங்கள். இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ளநானேவாக்கியத்தைப் பழைய ஏற்பாட்டுப் பின்னணியில் புரிந்துகொள்வோம்.

இஸ்ரயேல் எனும் திராட்சைச் செடி

திருவிவிலிய ஆசிரியர்கள் இஸ்ரயேல் மக்களினத்தைத் திராட்சைச் செடியாக, தோட்டமாக வர்ணிப்பது வழமை. “எகிப்தினின்று திராட்சைச் செடி ஒன்றைக் கொண்டு வந்தீர்; வேற்றினத்தாரை விரட்டிவிட்டுஅதனை நட்டு வைத்தீர்” (திபா 80:8) எனக் கடவுளைப் புகழ்ந்து பாடுகிறார் திருப்பாடல் ஆசிரியர். “அந்நாளில் ஒரு கனிமிகு திராட்சைத் தோட்டம் இருக்கும். ஆண்டவராகிய நானே அதன் பாதுகாவலர்; இடையறாது அதற்கு நீர் பாய்ச்சுகிறேன்” (27:2-3) என்று இறைவாக்கினர் எசாயாவும், “இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த திராட்சைச் செடி; அது மிகுதியான கனிகளைத் தன்னகத்தே தாங்கி நிற்கிறது” (10:1) என்று இறைவாக்கினர் ஓசேயாவும், “துளிர்த்துப் படரும் திராட்சைச் செடியாயிற்று;…அது கொப்புகளை விட்டுக் கிளைகளைப் பரப்பியது” (17:6) என்று இறைவாக்கினர் எசேக்கியேலும் இஸ்ரயேல் மக்களைப் பற்றிக் கூறுகின்றனர்.

இஸ்ரயேல் எனும் திராட்சைச் செடி கடவுளுடைய சட்டங்களை நிறைவேற்றினால், ஆண்டவர் திராட்சைத் தோட்டங்களை ஆசிர்வதிப்பார் என்பது நம்பிக்கை (இச 8:6-10). ஆனால், இஸ்ரயேல் எனும் இந்தத் திராட்சைச் செடி அதனை நட்டு வளர்த்த இறைவனின் நோக்கத்தை நிறைவேற்றவில்லை. எனவே, இறைவனே வியப்பு மேலிட்டவராய், “முற்றிலும் நல்ல கிளையினின்று உயர் இனத் திராட்சைச் செடியாய் உன்னை நட்டு வைத்தேன். நீ கெட்டுப்போய்த் தரங்கெட்ட காட்டுத் திராட்சையாய் மாறியது எப்படி?” (எரே 2:21) எனக் கேட்கிறார். “கிளைப் பரப்பிக் கனி கொடுக்கும் ஒரு சிறந்த திராட்சைச் செடியாய் விளங்கும் பொருட்டன்றோ, செழிப்பு நிலத்தில் இது நடப்பட்டது!” (எசே 17:8) என வேதனையுடன் வினவுகிறார்.

உண்மையாக இருக்க வேண்டிய திராட்சைச் செடியாகிய இஸ்ரயேல் மக்கள், அதனை நட்டு வளர்த்த கடவுளுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டனர் (எசே 15:4-8). இந்தப் பின்புலத்தில் இயேசு தம்மைஉண்மையான திராட்சைச் செடியாகஉருவகித்துக் கூறுகிறார்.

இயேசுவின் இந்த உவமை சீடத்துவத்தின் இரண்டு முக்கியப் பண்புகளை நமக்குக் கற்றுத் தருகின்றன. அவை:

1. திராட்சைச் செடியோடு அதன் கிளைகள் இணைந்திருக்க வேண்டும்.

2. இணைந்திருக்கும் கிளைகள் கனிதர வேண்டும்.

சீடத்துவத்தின் முதல் கூறு

இயேசுவோடு இணைந்திருத்தல்

இணைந்திருத்தல்யோவான் நற்செய்தியில் மிக முக்கியமான பண்பைக் குறிக்கிறது. இயேசுவோடு இணைந்திருத்தல், அவரில் நம்பிக்கை வைத்தல், அவரை மெசியாவாக ஏற்றுக்கொள்ளல், அவரது போதனைகளில் நிலைத்திருத்தல் போன்ற பல புரிதல்களைத் தருகின்றன. நற்செய்தியாளர் மாற்குவும் சீடர்கள்இயேசுவோடு இருக்க வேண்டியதை’ (3:14) சீடத்துவத்தின் முதன்மையான கூறாகக் கருதுகிறார். இயேசு துன்புறும்போது அவரோடு இணைந்திருக்க வேண்டிய சீடர்கள், அவரை விட்டுப் பிரிந்து சென்றனர். இதன் விளைவாக ஒருவர் காட்டிக் கொடுத்தார்; இன்னொருவர் மறுதலித்தார்; மற்றவர்கள் ஓடிப்போயினர். சீடர்களின் இந்தத் தோல்வி, இயேசுவோடு இணைந்து இருக்க வேண்டியதன் அவசியத்தை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது. “என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாதுஎன்பது யோவான் நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மிக அழகான, அழுத்தமான வரியாகும் (15:5). எனவே, இயேசு தம் தந்தையோடும், தம் மக்களோடும் இணைந்திருப்பதுபோல, சீடர்களும் இறைவனோடும், மக்களோடும் இணைந்திருக்க வேண்டும் என்பது சீடத்துவத்தின் முதல் அழைப்பாகும்.

கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தும் சவுலாக அடையாளம் காணப்பட்ட பவுல், இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்றுக்கொண்ட பின் பர்னபாவின் உதவியோடு, அவரின் மற்றச் சீடர்களுடன் இணைந்து கனி தரும் திருத்தூதராக மாறுகிறார் (முதல் வாசகம்). கிறிஸ்துவிடம் நம்பிக்கைக் கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவதன் மூலமாகக் கடவுளுடன் இணைந்திருப்பதை அறிந்துகொள்ளலாம் (இரண்டாம் வாசகம்). 

சீடத்துவத்தின் இரண்டாவது கூறு

நற்கனி கொடுத்தல்

கிளைகள் குறித்து நிற்கின்ற இயேசுவின் சீடர்கள் இயேசுவோடு இணைந்திருந்தால் மட்டும் போதாது; அது தன்னிலே ஒரு நிறைவான இலட்சியம் ஆகிவிடாது. வேர்கள் இல்லாத் திராட்சை கிளைகள், செடியோடு இணைந்திருந்தாலன்றித் தானாகக் கனிதர இயலாது (15:4). செடி வழியாகக் கிளைகள் உணவுச் சத்தைப் பெறுவதுபோல, சீடர்களும் இயேசு வழியாகத்தான் அருளாற்றலைப் பெற முடியும். அவ்வருள் ஆற்றல் இருந்தால்தான் அவர்கள் கனிதர முடியும்.

நீங்கள் கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது” (15:8) எனக் கனி கொடுத்தலின் முதன்மையைச் சீடர்களுக்கு இயேசு உணர்த்துகிறார். அதே நேரத்தில், செடியுடன் கிளைகள் இணைந்து விட்டால் எல்லாம் சுகமாக இருக்கும் என்ற தவறான கற்பனையை இயேசு தரவில்லை; மாறாக, கனி கொடாத கிளைகள் அனைத்தும் வெட்டி எறியப்படும்; அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும் (யோவா 15:2) என்கிறார். இது திராட்சைச் செடிக்கும், கனி கொடுக்கும் கிளைகளுக்கும் மிகவும் அவசியமான செயல். அதாவது, நன்றாகக் கனிதரும் கிளைகள் அக்கறையுடன் பாதுகாக்கப்பட வேண்டியவை என்பது கடவுளின் நீதியாகப் பார்க்கப்படுகிறது.

திராட்சைச் செடிநமக்கு உணர்த்தும் பாடம்

இயேசுவோடு நாம் இணைந்து, அவரது வார்த்தைகளில் நிலைத்திருந்தால், நாம் விரும்பிக் கேட்பதெல்லாம் நமக்கு நடக்கும். இயேசுவோடு இணைந்திராமல் இருந்தால் நம் வாழ்க்கை, வாழ்வற்ற நிலையாக மாறிவிடும்.

இயேசுவோடு இணைந்திருப்பவர்களால் மட் டுமே நிறைந்த கனி கொடுக்க முடியும். அவர்களால் இறைவன் மகிழ்ச்சி கொள்வார்; மாட்சி அடைவார். அவர்கள் முன்மாதிரியான வாழ்வு வாழ்வார்கள்.

இச்சமூகத்தில் கனிகொடுப்பவர்களாக வாழ முற்படும்போது, சில கனி கொடாத கிளைகளால் நாம் கசக்கிப் பிழியப்படலாம். இத்துன்பங்களில் எல்லாம் இயேசுவும் உடனிருப்பார் என்பது இந்த உவமை நமக்குத் தரும் மிக ஆழமான நம்பிக்கை.

நிறைவாக, நம்முடைய முயற்சிகளும், நம் குடும்பங்களில் நிகழவிருக்கும் நிகழ்வுகளும் நற்கனிகளைத் தரவேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம். இயேசு என்ற திருகாணியுடன் இணைந்து மிகுந்த கனி கொடுப்போம்.

Comment