No icon

பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு (05-05-2024)

திப 10:25-26, 34-35, 44-48; 1யோவா 4:7-10; யோவா 15: 9-17

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். ‘என் அன்பில் நிலைத்திருங்கள்’ என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தியின் வழியாக நமக்கு அறிவுறுத்துகிறார். ‘அவரது அன்பில் எப்படி நிலைத்திருப்பது?’ என்ற வினாவிற்கு அவரே விடையும் தருகிறார். ‘என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால், நீங்கள் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்’ என்று கூறுகிறார். ஆண்டவரை அன்பு செய்ய வேண்டும்; அயலானை அன்பு செய்ய வேண்டும் என்பதே ஆண்டவர் நமக்குத் தந்திருக்கிற கட்டளை. இந்தக் கட்டளையை முழு உள்ளத்தோடும், முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும் கடைப்பிடிக்கிறபோது ஆண்டவருடைய அன்பில் நாம் நிலைத்திருப்போம் என்பது உறுதி. ஆண்டவருடைய கட்டளைகளை நாம் கடைப்பிடிக்கிறபோது அவருடைய நண்பர்களாக நாம் மாறுகிறோம் என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறுகிறார். எனவே, ஆண்டவரின் அன்பில் நிலைத்திருக்க வேண்டும் என்றால், அவரது நண்பர்களாக நாம் இருக்க வேண்டும் என்றால் ஆண்டவரையும், அயலாரையும் அன்பு செய்ய வேண்டும் எனும் கட்டளையை நாம் முழு மனத்தோடு கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இத்திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவர் ஆள் பார்த்துச் செயல்படுபவர் அல்லர்; அவருக்கு அஞ்சி நடப்போர் அனைவருக்கும், அவர் தமது அருள் வரங்களைத் தூய ஆவியார் மூலம் அளிக்கிறார் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவி மடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பு கடவுளிடமிருந்தே வருகிறது. எனவே, அன்பு செய்யும் அனைவருமே கடவுளிடமிருந்தே வருகிறார்கள் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

அன்புத் தந்தையே இறைவா! உம் திரு அவையை வழிநடத்தும் திருப்பணியாளர்கள், அன்பே உருவான உம் திருமகனைப் போல அனைவரையும் அன்பு செய்து, அரவணைத்துப் பேணிக் காத்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கமுள்ள தந்தையே! தம்மைத் தேர்ந்தெடுத்திருக்கும் மக்களை நாட்டுத் தலைவர்கள் அன்பு ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நல்வழிப்படுத்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

விண்ணகத் தந்தையே! எம் பங்கையும், பங்குத் தந்தையையும் நிறைவாக ஆசீர்வதியும். நாங்கள் அனைவரும் வேற்றுமைகளைக் களைந்து, ஒருவரை ஒருவர் அன்பு செய்யும் கிறிஸ்தவர்களாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் பரம்பொருளே! அன்பின் பற்றாக்குறையால் உறவுகளை இழந்து தவிக்கிற ஒவ்வோர் உள்ளத்திற்கும் நிறைவான அமைதி தந்து அவர்களைக் காத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment