No icon

பொய் பரப்பும் ஊடகங்களும் உண்மைகளும்

ஊடகங்கள் கீழே விழுந்து கிடக்கும் மனிதரைத் தூக்கி நிறுத்தவும், மேலே உயர்ந்து நிற்கும் மனிதரைக் கீழே போட்டு மிதிக்கவும் ஆற்றல் கொண்டவை. பணம் படைத்தவர்களின் கரங்களுக்கும், அரசியல்வாதிகளின் அதிகாரத்திற்கும் மட்டுமே எட்டிய ஊடகங்கள், இன்று சாமானிய மனிதர்களின் கைகளிலும் கொண்டு சேர்க்கப்பட்டது மகிழ்ச்சியைத் தந்தாலும், ஊழலுக்குத் துணை போகும் ஊடகங்கள் மத்தியில் உண்மையை உரக்கச் சொல்லும் ஊடகங்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது.

நாட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவை ஊடகங்கள்.  ஆனால், இந்த நவீன ஊடகங்கள்தான் தவறான செய்திகளைப் பரப்புவதும், உண்மையான செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்லாமல் மறைப்பதும், குழந்தைகள் மத்தியிலும், இளையோர் மத்தியிலும் சமூக அக்கறையை மழுங்கடிக்கச் செய்து வருவதும் வருத்தத்தைத் தருகிறது.

இன்றைய ஊடகம்

மார்ச் 11, 2024 அன்று ‘இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம்-2019’ நாடு முழுவதும் அமலாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் இஸ்லாமியர்களை முழுவதுமாக இந்திய நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற மறைமுகக் கொள்கையை மறைத்து, இந்தச் சட்டம் நாட்டின் வளர்ச்சிக்குத்தான்; இவர்கள் இந்தியக் குடிமக்களே அல்ல என்று மக்களை நம்ப வைக்க இந்துத்துவ அரசியல் தலைவர்கள் நவீன ஊடகங்களான முகநூல், புலனம், வலைதளம், தொலைக்காட்சி போன்றவற்றைக் கருவிகளாகப் பயன்படுத்தி, தொடர் பொய்ச் செய்திகளைப் பரப்புவது என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சமூகத்தின் வளர்ச்சிக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட நவீன ஊடகங்கள், சமூகத்தைப் பற்றிச் சிந்திக்க விடாமல், பொய்யைப் பரவலாக்கம் செய்யும் இயந்திரங்களாக மாறிப்போயின. அறிவியல் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த சமூகத்தில் ஏன் இன்னும் மனிதம் வளர முடியவில்லை? மனிதத்தை இழந்து மானுடம் தழைக்க முடியுமா? நவீன ஊடகங்களின் உண்மைத் தன்மையை எவ்வாறு கண்டறிவது? ஊடகம் கட்டமைக்கும் பொய்களால் சிதைக்கப்படும் மனிதத்தை, மனித மாண்பினை உண்மையால் மீட்டெடுத்து, அதை நிலைநாட்டி மாற்றுச் சமுதாயத்தைப் படைக்க நம்மைத் தூண்டி எழுப்பிடும் உயர்வான சாத்தியக் கூறுகள் என்னென்ன?

ஊடகத்தின் நேர்மையின்மை

மக்களின் நலன் பற்றிய அக்கறையில்லாமல், பணம் சம்பாதிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஊடகங்கள் செயல்படுகின்றன. எரிந்து கொண்டிருக்கும் வீட்டின் தீயை அணைக்காமல், அங்குள்ள பொருள்களைத் திருடுவது எவ்வளவு பெரிய குற்றமோ, அதற்கு ஈடானதே இன்றைய ஊடகங்களின் செயல்பாடுகளாகும்.

2008-ஆம் ஆண்டு மனிதர்களையும், அடுத்தத் தலைமுறையையும் பாதிக்கக்கூடிய மரபணு மாற்றப் பயிர்களைச் சோதனை முறையில்  பயிரிட அரசிடம் பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதி கேட்டிருந்தன. இந்நிலையில் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழ், மரபணு மாற்றுப் பயிர்களை விளைவித்த இரு கிராமங்களில் ஆய்வு செய்து, அங்கு விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று கட்டுரை வெளியிட்டது.  மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், இந்திய மக்களின் உடல் நலனுக்கு எதிராகவும் கட்டுரை வெளியானது, அதன் நேர்மையின்மையைக் காட்டுகிறது. சாதாரண வெகுசன ஊடகங்களைப் பார்க்கையில், அவை சார்புத்தன்மை கொண்டவையாக, குறிப்பாக வர்த்தக நிறுவனங்களுக்கும், தனிமனித முதலாளிகளுக்குச் சார்பாகவும் செய்திகளை வெளியிடுகின்றன என்பதுதான் இக்காலக் கட்டத்தின் உண்மையாகும்.

பொய்யை உண்மையாக்கும் ஊடகங்கள்

ஹிட்லரின் நாசிசக் கட்சியின் கொள்கைகள் அடங்கிய ‘மெயின்கேம்ப்’ என்ற புத்தகத்தை மொழியாக்கம் செய்த ஜேம்ஸ் வின்சென்ட் மர்பி, ‘ஒரு செய்தியை மீண்டும் மீண்டும் பரப்புவதால் நாளடைவில் அது மக்கள் மத்தியில் உண்மைச் செய்தியாகக் கட்டமைக்கப்படுகின்றது. இதே யுக்தியைதான் ஹிட்லர் தனது ஆட்சியில் கடைப் பிடித்தார்’ என்று கூறினார்.

மக்களைச் சிந்திக்கவிடாமல், தான் எதைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தாரோ அதையே திரும்பத்  திரும்பக் காட்டி மக்கள் மத்தியில் உண்மையென நம்ப வைத்தார்.  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தான் அதிபராகப் பொறுப்பேற்ற முதல் 99 நாள்களில் தினமும் ஏதேனும் ஒரு தவறான செய்தியை வெளியிட்டுள்ளார் என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ குறிப்பிடுகிறது. இதே கொள்கைகளைத் தன்வயப்படுத்திக் கொண்ட பா.ச.க. அரசியல்வாதிகள் நம் நாட்டிலும் தொடர்ந்து அதைச் செயல்படுத்துவது கவலையளிப்பதாகவும், அச்சுறுத்தலாகவும், நாட்டை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்வதாகவும் இருக்கிறது.

நாம் வாழும் பின்நவீனத்துவ உலகத்தில் குறிப்பிட்ட தரவுகள் மட்டுமல்ல, முழு வரலாறுகளும் போலியானவை. இப்பொழுது வரை பல புனைக் கதைகளை உண்மை என நம்பி வாழ்கிறோம்.  உண்மையில் பொய்களை உண்மையாக்கி இவ்வுலகை ஆட்சி செய்வது நவீன ஊடகங்களேயாகும்.

யார் வேண்டுமானாலும் தாங்கள் நினைத்ததைச் செய்தியாக, குறும்படமாக, இசையாக, பாடலாக, படமாகப் பல வடிவங்களில் கொண்டு சேர்க்கின்றனர். தவறான செய்திகளையும், கருத்துகளையும் வெளியிடலாம். ஆனால், அதற்கு அவர்கள் பொறுப்பு ஏற்பதில்லை. தவறான செய்திகளைப் பரப்புபவர்களைக் கண்டுபிடிப்பதும் கடினமாகிறது.

2018-ஆம் ஆண்டிற்கான உலக ஊடகத் தொடர்பு நாளுக்கான செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ், “ஊடகத்தால் பலரும், பலமுறை ஒரு செய்தியைப் பகிர்வதால், அது ஒரு வழிப் பயணமாக அமைந்து திறந்த உரையாடலுக்கும், நலமான விவாதத்திற்கும் வழிவகுப்பதில்லை. ஆகவே, பல வேளைகளில் அடிப்படை உண்மைத்தன்மையற்ற செய்திகளை மக்களை நம்பும் அளவிற்குக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்” என்கிறார்.  

திருத்தந்தை பிரான்சிஸ் கற்பிக்கும் மாற்று ஊடகம்

திருத்தந்தை பிரான்சிஸ் தன்னுடைய ‘நற்செய்தியில் மகிழ்வோம்’ (Evangelii Gaudium) எண் 53-இல், ‘ஒரு வீடில்லா ஏழை முதியவர் உணவில்லாமல் பட்டினியால் இறந்தால் அது செய்தியாக ஊடகங்களில் வெளிவருவதில்லை. ஆனால், பங்குச் சந்தையில் பொருளாதாரச் சரிவு ஒரு புள்ளி குறைந்தாலும் முக்கியச் செய்தியாக வெளிவருகிறது’ என்று குறிப்பிடுகிறார். 

ஊடகங்கள் எந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ, அதைத் துணுக்குச் செய்தியாக்கி விடுகின்றன. எதை ஓரங்கட்ட வேண்டுமோ, அதை முன்னிலைப்படுத்துகின்றன.

கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் மனித மாண்போடு நடத்தப்பட வேண்டும். கடவுளின் பார்வையில் அனைவரும் சமம். ஆனால், நவீன ஊடகங்களின் பார்வையில் பணமும், பதவியும், அதிகாரமும், பேராசையும், சுயநலமும் முதலிடம் பிடித்துக்கொள்கின்றன. சாமானிய மனிதரும் நாட்டின் எல்லா உரிமைகளையும் பெற வழிவகை செய்வதே உண்மையான ஊடக நெறியாகும். இதுவே கடவுளின் உருவில் படைக்கப்பட்ட மனிதருக்கான மாண்பும் ஆகும்.

பொய் நிறைந்த ஊடகங்களை எதிர்கொள்வோம்

இத்தகைய பொய்மை நிறைந்த, அநீதியான ஊடகங்களுக்கு மத்தியில் முன்மதியுடனும், புத்திக் கூர்மையுடனும் இயங்குவது மிகவும் தேவையானது ஆகும். எனவே, பொய்மைநிறை ஊடகங்களை நாம் எதிர்கொள்ள பின்வரும் யுக்திகளைப் பயன்படுத்தி, அதன் முகத்திரையைக் கிழிக்க வேண்டியது நமது கடமையாக இருக்கிறது.

ஊடகங்கள் எவ்வாறு ஆதிக்கச் சக்திகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மதவாத சக்திகளுக்கும், பணத்திற்கும் இரையாகின்றன என்பதை மக்களுக்குச் சுட்டிக்காட்ட முயற்சிகள் எடுக்க வேண்டும். மேலும், அன்றாட வாழ்வில் நவீன ஊடகங்களைப் பொறுப்போடும், தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தவும், நவீன ஊடகங்கள் எவ்வாறு பொய்ச் செய்திகளைத் தீவிரமாகப் பரப்புகின்றன என்பது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்குக் கொடுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

இறுதியாக, தகவல் புரட்சி உலகில் வாழும் நமக்கு, ஊடகம் மிகச் சிறந்த கொடையாக அமைந்துள்ளது. நவீன ஊடகங்கள் மனித வாழ்வுக்குத் தேவையான அறநெறியையும், அழிவுக்குத் தேவையான அறநெறியற்ற சிந்தனைகளையும் தன்னகத்தே கொண்டதாய் இருக்கின்றன. கிறிஸ்துவின் ஒளியில் நன்மையைத் தேர்ந்தெடுத்து உண்மைச் செய்திகளைப் பரப்ப, பாரம்பரிய மற்றும் மரபு ஊடகங்கள் இக்காலக் கட்டத்திற்குத் தேவையான மாற்று ஊடகங்களாக அமைகின்றன.

திருத்தந்தை 23-ஆம் யோவான் தன்னுடைய ‘அவனியில் அமைதி’ என்னும் மடலில், ‘ஊடகம் திரு அவைக்குக் கிடைத்த மிகச் சிறந்த கொடை’ என்கிறார். இயேசுவை ஊடக அர்ப்பணத்திற்கான வழிகாட்டியாக நாம் காண முடியுமெனில், இன்று திரு அவையின் ஊடகப் பணி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் குழப்பத்திற்கு இடமில்லை. ‘யாவரும் இறைவனின் மக்கள்’ என்ற நிலையில் எல்லாருக்குமான அருளின் ஊடகமாகத் திரு அவை திகழ்கிறது. ஆகவே, ஊடகத்தின் வழி நற்செய்திப் பணியில், இயேசுவைப் போல உண்மையின் செய்திகளை உரக்கச் சொல்லி மனிதத்தையும், இறையாட்சியையும் இம்மண்ணில் கட்டி எழுப்பிடுவோம். இக்காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ற மாற்று ஊடகங்களாக நாமும் மாறிடுவோம்.

Comment