No icon

சனநாயகத்தின் தன்மை

வலி‘மை’, மேன்‘மை’, தூய்‘மை’

தேர்தல்  திருவிழா; தேசத்தின் பெருவிழா!’ என்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முழக்கம் நாடெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. 28 மாநிலங்களையும், 8 ஒன்றிய அரசின் நிர்வாகப் பகுதிகளையும் (Union Territories) கொண்ட உலகின் மாபெரும் சனநாயக நாட்டின் 18-வது மக்களவைக்கான தேர்தல் இது. இம்மாதம் ஏப்ரல் 19, 2024 அன்று துவங்கி ஏழு பகுதிகளாக நடைபெறும் இத்தேர்தலின் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி  அறிவிக்கப்பட உள்ளன. 96.8 கோடி வாக்காளர்கள் (49.7 கோடி ஆண்கள், 47.1 கோடி பெண்கள்) பங்கேற்கத் தகுதி பெற்றுள்ள இத்தேர்தல் திருவிழாவில், 19.74 கோடி இளம் வாக்காளர்கள்; அதில் 1.8 கோடி நபர்கள் முதல்முறை வாக்காளர்கள்.

கற்றறிந்த அறிவுச் சமூகம் தளிர்விடும் இந்த நாட்டில், நூறு விழுக்காடு வாக்குப்பதிவு என்பதே இத்தேர்தலின் இலக்காக அமைந்திருக்கிறது. கடந்த காலங்களில் இது எட்டாக் கனியாகவே இருந்திருக்கிறது. கடந்த இரு மக்களவைத் தேர்தல்களிலும் 66% (2014), 67% (2019) மட்டுமே வாக்குப் பதிவாகியிருக்கிறது. இங்கே, ஒருபுறம் நூறு விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக விளம்பரப் பதாகைகள், துண்டுச் சுற்றறிக்கைகள், தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி, விழிப்புணர்வு குறும்பாடல்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வீதிகளில் கோலங்கள், விழிப்புணர்வு மணல் சிற்பம், புதிய வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள், பேரணிகள், கருத்தரங்குகள் எனப் பல்வேறு நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. குறிப்பாக, சென்னை மாநகராட்சி, தேர்தலில் வாக்களிப்பதற்கான, கையொப்பமிட்ட உறுதிமொழி படிவத்தை நான்கு இலட்சம் நபர்களிடம் 12 மணி நேரத்திற்குள் பெற்று உலகச் சாதனையும் படைத்துள்ளது.

மறுபுறமோ, தேர்தல் களம் உச்ச நிலையில் சூடு பிடித்திருக்கிறது. கட்சிகளின் எதிர் துருவ விமர்சனங்கள் காதுகளைத் துளைக்கின்றன. ‘இந்தியாவின் நேரம் வந்து விட்டது; வலிமையான, முன்னேறிய இந்தியாவை உருவாக்குவதற்கு ஊழல்வாதிகள் அகற்றப்பட வேண்டும்; ஊழல் தலைவர்களைப் பாதுகாக்கும்இந்தியாகூட்டணிக்கும், பா...விற்கும் இடையிலான போட்டிதான் இந்தத் தேர்தல். ‘மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம்!’ என்று (மூட) நம்பிக்கையுடன் உத்திரப்பிரதேசத்தின் மீரட்டிலிருந்து தனது பரப்புரையைத் தொடங்கியுள்ளார் ஒன்றிய முதன்மை அமைச்சர். ‘பிரதமர் மோடி மீண்டும் பதவியேற்றால், நாடு பற்றி எரியும்என்று இராகுல் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

பாரத ஸ்டேட் வங்கி, நீதிமன்றங்கள், வருமான வரித் துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் ஆகிய அனைத்தும் பா...வின்பி. டீம்களாகக் களத்தில் இறக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக முடுக்கிவிடப்பட்டுள்ளன. காலாவதியாகிப்போன கச்சத்தீவு மீட்புப் பற்றிக் களமாடுகிறார் ஒன்றிய முதன்மை அமைச்சர். ஆனால், அருணாச்சலப் பிரதேசத்தில் பறிபோகும் பகுதிகள் பற்றி கள்ள மௌனம் காக்கிறார். தேர்தல்கள் தோறும் இதுபோன்ற நாடகங்களைப் பிரதமர் நடத்துவது ஒன்றும் நமக்குப் புதிதல்ல.

தேர்தலில் போட்டியிட ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டென அரசமைப்புச் சட்டம் உறுதி செய்வதுபோல, வாக்களிக்கும் உரிமையும் 18 வயது நிறைந்த இந்திய குடிமகனுக்கும், குடிமகளுக்கும் உண்டு என்று உரக்கச் சொல்கிறது இந்தியச் சட்ட வரைவு 326. குறிப்பாக, 1988-ஆம் ஆண்டு கொண்டு வந்த 61-வது சட்டத் திருத்தம், அதை 21 வயதிலிருந்து 18 வயதாக உறுதி செய்திருக்கிறதுஆகவே, இளையோரே, இத்தேர்தல் களம் அறிவுசார்ந்த சமூகத்திற்கும், ஆயிரமாயிரம் கனவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் நமது இளைய தலைமுறையினருக்கும் விடுக்கப்பட்டிருக்கும் பெரும் சவால் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்சமூகத் தீமைகளுக்கு எதிராக நம் விரல்கள் உயரே எழ வேண்டிய நேரமிது. கைம்மாறு கருதாமல் சமூக நலனுக்காக உழைக்க விரும்புவோரை அரியணை அமர்த்த வேண்டிய தருணம் இது. பணமும், பதவியும், அதிகாரமும், பேராசைகளும் கொண்ட மனிதர்களும், கட்சிகளும் நிராகரிக்கப்பட வேண்டிய காலம் இது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், யார் நம்மை ஆள வேண்டும் என்பதைவிட, யார் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது.

எண்ணத்தில் தூய்மையும், உள்ளத்தில் நேர்மையும், வாக்கினில் உண்மையும், வாழ்வினில் மேன்மையும் கொண்ட தலைவர்களை நாம் தேட வேண்டும். உண்மையான தலைவர்கள் வேண்டும்; கூர்மையான சிந்தனை உயர்ந்திட வேண்டும்; நேர்மையான அரசியல் தளிர்விட வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மை நிலைநிறுத்தப்படவும், பொதுநலன் சார்ந்த சிந்தனைகள் பரவலாக்கப்படவும், சமூக மாற்றத்திற்கானபுது விடியல்உதயம் காணவும் வேண்டும்.

நள்ளிரவு 12 மணி ஒலித்து ஓயும்போது, உலகம் உறங்கச் செல்லும். ஆனால், இந்தியா புதிய வாழ்வை, புதிய விடுதலையைப் பெறுவதற்காக விழித்திருக்கும் இது போன்றதொரு தருணம், வரலாற்றில் மிக அரிதாகவே அமையும். ஆம், நாம் பழமையிலிருந்து புதுமைக்கு நடைபோடத் தொடங்குகிறோம். இதுவரை நீண்டு வந்த ஒரு யுகம் முடிகிறது. நெடுங்காலமாக ஒரு நாட்டின் ஆன்மா, தன் உரிமைக் குரலை எழுப்ப முடியாமல் ஒடுக்கப்பட்டது. இனி அதன் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கும்என்று விடுதலை நாளில் உணர்வு பொங்க உரையாற்றிய விடுதலை இந்தியாவின் முதல் பிரதமர், சோசலிசச் சிற்பி நேருவின் வார்த்தைகள் இன்றைய இந்திய அரசியல் சூழலில் ஆழமாகப் பொருள்படுவதாகவே கருதுகிறேன். அவர் ஒரு தீர்க்கத்தரிசி!

1947-ஆம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் நெஞ்சில் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று எரிந்த அந்தச் சுதந்திரத் தாகம், இந்தத் தலைமுறைக்கு அவசியம் தேவைப்படுகிறது. பல்வேறு சாதி, சமய, இன, மொழி, கலாச்சாரப் பண்பாட்டு வேறுபாடுகளைக் கொண்டு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஆன்மா புத்துயிர் பெற, பிற மதக் கொள்கைகளை வெறுக்காமல் மதிக்கும் மாண்பு மலர, சமய ஒற்றுமை காணும்சகோதரத்துவம்வளர, மனிதநேயம் கொண்டு, மதநல்லிணக்கத்தில் அமைதித் தென்றல் வீசபுதிய இந்தியாவிடிய வேண்டும். அதற்கு நமது கரங்கள் இணைய வேண்டும்.

ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஒரு முடிவு தவிர்க்க முடியாததே! இயற்கையின் படைப்பில் எல்லை இல்லாதது ஏதுமில்லை. இயற்கைக்கே முடிவுரை உறுதி என்ற பிறகு, செயற்கைக்கு? என்ற கேள்வி பொருளற்றது. ‘பறவைகள் வரலாம் போகலாம்; ஆனால், அவை தங்க இடம் தந்த பெரிய மரமோ சாய்ந்து விடக்கூடாதுஎன்றார் கவிஞர் கண்ணதாசன். கட்சிகள் வரலாம், போகலாம்; ஆனால், சனநாயகம் மட்டும் அழிந்துவிடக் கூடாது. நாட்டைவிடக் கட்சியும், கட்சியை விட வேட்பாளரும், வேட்பாளரைவிட அவர்தம் சாதியும் முன்னிலைப்படுத்தப்படுவதும், அதுவே அரசியல் ஆளுமையின் அளவுகோலாக அமையப் பெற்றதும் சமுதாயத்தைப் பீடித்திருக்கும் பெரும் நோய்களுக்கான அடையாளக் கூறுகள். இனிமேல் இவை அடையாளமின்றி அழிந்தொழியட்டும்.

இங்கே...

வாக்குச் சீட்டின் வலிமையறியாமல்

ஏழைக் குடியானவன் மலிவு விலைக்குத்

தன்னையே விற்கிறான்;

தான் தேர்வு செய்த அரசியல்வாதியோ

பதவியில் அமர்ந்ததும்

மண்ணையும், பொன்னையும்

அறத்துக்குப் புறம்பாக அள்ளிக் குவிக்கின்றான்!’

என்ற விமர்சனம் தவிர்க்க முடியாததாகிப் போனது.

அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள கொலம்பஸ் அரங்கில் நடந்த சர்வ சமய மாநாட்டில் பேசிய ஆன்மிக ஞானி சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவின் இறுதி வார்த்தைகளானஇந்தப் பேரவை கூடியபோது முழங்கிய மணியோசை மத வெறிக்கும், ஒரே குறிக்கோளை அடையப் பல்வேறு வழிகளில் பயணிக்கும் மக்கள் மனங்களில் நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாக மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்என்ற சொற்பதமே என் நினைவுக்கு வருகிறது. ‘மக்களவைத் தேர்தல்-2024’ என்ற இந்த வாய்ப்பு மத வெறிக்கும், பாசிசக் கொள்கைக்கும், ஊழலுக்கும், சுரண்டலுக்கும், சர்வாதிகாரப் போக்கிற்கும், சமயச் சுதந்திரம் மறுக்கப்படும் அநீதச் சூழலுக்கும் சாவு மணி அடிக்க நமக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பு.

ஏனெனில், துயரமான சோதனைக் களமும், காலமும் நம் கண்முன் விரிந்து நம்மை அச்சுறுத்துகிறது. ‘சமத்துவமும், சகோதரத்துவமும் இந்த மண்ணிலிருந்து விடைபெற்று விட்டனவோ!’ என்று கலக்கம் கொள்ளச் செய்கிறது. மனிதகுலத்திற்கே கேடான இரக்கமற்ற, இக்கொடுங்கோன்மையை முறியடிக்க இயற்கையும், இறைவனும் தந்த அரியதொரு வாய்ப்பு இந்தத் தேர்தல். முழு வலிமையுடன், உள்ளத் தூய்மையுடன், இந்திய சனநாயகத்தின் மேன்மைகாக்கப் புறப்படுவோம். நமது ஒற்றை விரல்மை’, தீமையை விரட்டட்டும்; நன்மையை வளர்க்கட்டும்.

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினில் இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்!’

என்ற பாரதியின் வரிகளைத் தாங்கிச் செல்வோம். வெற்றி ஒன்றே இலக்கு; விடியல் உண்டு நமக்கு!

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்

Comment