No icon

சிறியோரின் பாதுகாப்புப்பணிக்கென நிறுவப்பட்டுள்ள திருப்பீட அவை

'தயவுசெய்து நல்ல அருள்பணியாளர்களாக வாழுங்கள்'

கத்தோலிக்கத் திருஅவையின் அருள்பணியாளர் ஒருவரால் பாலியல் முறையில் தவறாக பயன்படுத்தப்பட்ட பெண்மணி ஒருவர், தன் கடந்தகால வேதனைகளையும், திருஅவை மீது தான் இன்னும் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தி எழுதியுள்ள மடல் ஒன்றை, சிறியோரின் பாதுகாப்புப்பணிக்கென நிறுவப்பட்டுள்ள திருப்பீட அவை, அக்டோபர் 19 செவ்வாயன்று வெளியிட்டுள்ளது.

ஆயர் மாமன்றப்பணிகள் உலகெங்கும் துவங்கியுள்ள இவ்வேளையில், திருஅவை தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளது என்றும், இந்தப் புதுப்பித்தலின் ஒரு முக்கிய பகுதியாக, திருஅவையின் ஒரு சில பணியாளர்களால் உருவான இடறல்களையும், காயங்களையும் நினைவுகூருவதற்கு உதவியாக, இம்மடல் வெளியிடப்படுகிறது என்றும், சிறியோரின் பாதுகாப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Sean O'Malley அவர்கள் கூறியுள்ளார்.

இத்தாலிய மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த மடலை வாசித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மடலை எழுதியவரின் பெயரை வெளியிடாமல், இம்மடலில் கூறப்பட்டுள்ள கூற்றுகளை வெளியிடுமாறு கூறினார் என்பதையும், கர்தினால் O'Malley அவர்கள் இம்மடலின் அறிமுகமாகக் கூறியுள்ளார்.

தன்னை ஒரு உடன்பிறவா தங்கை என்றழைத்து, தன் நம்பிக்கையைப் பெற்ற ஓர் அருள்பணியாளர், பின்னர், தன்னை, பாலியல் முறையில் தவறாகப் பயன்படுத்திய வேதனைகளை இம்மடலில் கூறியுள்ள இப்பெண்மணி, அருள்பணித்துவ பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இளையோரிடம், தங்கள் அழைத்தலுக்கு மிகவும் பிரமாணிக்கமாக வாழும்படி விண்ணப்பித்துள்ளார்.

திருஅவையில் நிகழும் தவறுகள் என்ற குப்பையை கம்பள விரிப்புகளுக்கு கீழே தள்ளி மூடிவிடாமல், உண்மைகளை அனைவரும் அறியும்படி செய்வது ஒன்றே, பல தவறுகளைத் தடுத்து நிறுத்தும் என்று இம்மடலில் கூறியுள்ள அப்பெண்மணி, 'தயவுசெய்து நல்ல அருள்பணியாளர்களாக வாழுங்கள்' என்ற சொற்களுடன், தன் மடலை நிறைவு செய்துள்ளார்.

Comment