No icon

டெல்லி பல்கலைக்கழகமே! பாடத்திட்டத்திலுமா தீண்டாமை?!

டெல்லி பல்கலைக்கழகமே!

பாடத்திட்டத்திலுமா தீண்டாமை?!

அருள்முனைவர் . இருதயராஜ் சே.

 மனிதகுல வரலாற்றில் பெண் என்பவள் இரண்டாம் தர பிரஜையாகவே கருதப்பட்டு வந்திருக்கிறாள். சுதந்திரமாக சிந்திக்கவும், செயல்படவும் முடியாமல் அவள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறாள் என்பதற்கு ஆயிரமாயிரம் கதைகளும், நிகழ்வுகளும், வரலாறு நெடுகிலும் கொட்டிக்கிடக்கின்றன. அந்த வகையில் பெண் எழுத்தும், அவளின் குரலும் நசுக்கப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.

ஆகஸ்ட் மாதம் டெல்லிப் பல்கலைக்கழகம் வங்க எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி, தமிழ் எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணி போன்றோரின் படைப்புகளைக் கல்லூரி பாடநூல் பிரிவிலிருந்து எந்தவித முன்னறிவிப்புமின்றி நீக்கியுள்ளது. நீக்கியதோடு மட்டுமல்லாமல் அவசர அவசரமாக ஒரு மேலோட்டமான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள எந்த வாதமும் நாம் ஏற்கக்கூடியதாக இல்லை.

டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்த செயல் இது இலக்கிய வட்டத்திலும், அறிவாளிகள் மத்தியிலும் பெரும் விவாதத்தையும், கண்டனத்தையும் எழுப்பியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்  தமிழக எழுத்தாளர்களின் படைப்பு நீக்கப்பட்டிருப்பது குறித்து பேசினார். நீக்கப்பட்ட படைப்பு மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை எடுத்துரைத்தார். கல்லூரிக்குள்ளும், பாடத்திட்டத்திற்குள்ளும் ஒருபக்க சார்புள்ள பிற்போக்கான அரசியல் நுழைவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. அறிவையும், ஞானத்தையும் வளர்க்கும் கல்விக்கூடத்தில் நஞ்சை வைப்பதும், சுதந்திரக் காற்றைத் தடைசெய்வதும் ஒரு வன்முறை என்றே சொல்ல வேண்டும்.

பெண் எழுத்தின் கம்பீரம்

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?”  என்ற பழமொழிக்கேற்ப பெண்ணுக்கு கல்வி காலங்காலமாக மறுக்கப்பட்டது. பெண் படித்து ஆணுக்கு நிகராக வேலைக்குச் செல்வது, பணம் சம்பாதிப்பது எல்லாம் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படாத செயலாக இன்றும் இருக்கிறது. இந்தப் பின்னணியில் படித்த பெண்கள் தங்களின் அனுபவங்களை எழுத்தில் கொண்டுவரும் போது அது ஆழமாக வெளிப்படுகிறது. குறிப்பாக, தாழ்த்தப்பட்ட தலித் பெண்கள் தங்களின் வலியை, காயத்தை, வடுக்களை, வேதனையை எழுதும்போது அது வீரியமிக்கதாக உருவெடுக்கிறது. வாசிப்பவரின் மனதில் உரசலையும், கீறலையும், பாதிப்பையும் ஏற்படுத்திவிட்டுச் செல்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட பெண்களின் எழுத்துக் கம்பீரமாக நிற்க முடியும் என்பதற்கு மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துக்கள் சான்றாக அமைந்துவிட்டன.

வங்கதேச எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும் தொடர்ந்து எழுதி வந்த ஒரு போராளி. அவர் எழுத்தில் ‘திரௌபதி என்ற படைப்பில் பாலியல் குறித்த விசாரணைகள் அதிகமாக இருப்பதாக சுட்டிக் காட்டப்படுகிறது. இந்திய இராணுவத்தைத் தவறாகச் சித்தரிக்கிறது என்ற காரணம் சொல்லப்படுகிறது.

பாலியல் வல்லுறவு குறித்து எழுதப்பட்ட பாடத்தை ஏற்கனவே 1992 ஆம் ஆண்டு முதல் பாடத்திட்டத்தில் வைத்திருக்கின்றனர். இப்போது மட்டும் அது ஏன் நீக்கப்படவேண்டும்? அப்படியென்றால் இதுவரை படித்த மாணவ, மாணவியர் தவறாக வழிநடத்தப்பட்டனரா என்ற கேள்வி எழுகிறது. மேலும் டெல்லி பல்கலைக்கழகம் கொடுத்த விளக்கத்தில் பதின் பருவத்தில் உள்ள மாணவர்கள் எப்படி கொச்சையான, பாலியல் குறித்த விஷயங்களைப் படிக்க முடியும். அவர்களைத் தவறாக வழிநடத்துவதற்கும், முகம் சுழிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறதல்லவா? என்ற ஐயத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஆனால், நடைமுறையில் பாடத்திட்டத்தில் உள்ள காட்சிப் பிம்பங்களைவிட மிகவும் அகோரமான காட்சிகள் அல்லவா அரங்கேறுகின்றன. பச்சிளம் குழந்தை முதல் வயதான பாட்டி வரை பாதுகாப்பற்ற சூழலில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அவை தினசரி செய்திகளாகவும், காட்சிப் படிமங்களாகவும் சமூக ஊடகங்களில் வெளிவருகின்றன. இதெல்லாம் மாணவர்களின் மனதை அதிர்ச்சிக்குள்ளாக்காதா? பாடத் திட்டம் மட்டும் தான் செய்யுமா? உண்மையில் சொல்லப்போனால் பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி ஒரு போராளி எழுதிய படைப்பைப் படிக்கும் மாணவ, மாணவியருக்கு அவை புதிய சிந்தனையையும், அகத்திறப்பையும் தானே கொடுக்கும்?! இதுபோன்ற கொடுமைகளைத் தடுப்பதற்கு நம்மாலான முயற்சிகளை செய்ய வேண்டும் என்ற புதிய சிந்தனை கூட பிறக்கும். எப்படி ஒரு பாடத்திட்டம் மாணவ, மாணவிகளை தவறாக வழிநடத்த முடியும் என்று படைப்பாளிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

வலியைப் பதிவு செய்யும் தலித் படைப்புகள்

தமிழகத்தில் உள்ள பல முன்னணி பெண் எழுத்தாளர்களில் பாமா, சுகிர்த ராணி இருவரும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின், குறிப்பாக தலித் பெண்களின் பிரச்சனைகளை, வலியை, மன இறுக்கத்தை மிகவும் நுணுக்கமாக கண்டு, உணர்ந்து, அனுபவித்து எழுதுவார்கள். அவர்களின் எழுத்து தலித் பெண்களின் அவலத்தைச் சுட்டிகாட்டுவதோடு நிற்கவில்லை. மாறாக தலித் பெண் என்பவள் அடிமைத்தனத்திலிருந்து மேலே எழுந்து வரவேண்டும். காயங்களையெல்லாம் விடுதலை வாழ்வுக்கு இட்டுச் செல்லும் கருவிகளாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனையை ஆழமாக விதைப்பதாக இருக்கும்.

பாமா எழுதிய “கருக்கு மற்றும் “சங்கதி ஆகியவை தனித்துவமான படைப்புகள் என்று சொல்லலாம். ‘கருக்கு பாமா தன்னுடைய இளம் வயதிலிருந்து சந்தித்த சாதிய ஒடுக்கு முறைகளை கூர்மையான அறுவாள் போன்ற நுணுக்கங்களுடன் விளக்கும் ஒரு சுய சரிதை நாவல். கடந்த 95 ஆம் ஆண்டிற்குப் பிறகு மேலாக இந்த நாவல் பல மேடைகளில் விவரிக்கப்பட்ட ஒன்று. பல கல்விக் கூடப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. பல ஆய்வு மாணவர்கள் ஆய்வுக்கான கருப்பொருளாகவும் வைத்துள்ளனர். இப்போது டெல்லி பல்கலைக்கழகத்தில், இவர் எழுதிய ‘சங்கதி நாவலின் சில பகுதிகள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து பாமா கூறும்போது  “ஒரு தலித் பெண்ணின் படைப்பை நீக்கும்போது இன்னொரு தலித் பெண்ணின் படைப்பைத்தானே உள்ளே வைத்திருக்க வேண்டும்? ஏன் அவர்கள் பண்டித ராமாபாயின் வாழ்க்கை வரலாற்றை வைத்துள்ளனர். இது ஒன்றே அவர்களின் திட்டத்தையும், ஆதிக்க மனோபாவத்தையும் வெளிப்படுத்துகிறது என்கிறார். மேலும் பெண்கள் எப்படி எழுத வேண்டும் என்ற ஆணாதிக்க சிந்தனையும் டெல்லிப் பல்கலைக்கழகத்தின் கூற்றில் வெளிப்படுகிறது.

என்னுடைய படைப்பு நீக்கப்பட்டது குறித்து கேள்விப்பட்டவுடன் நான் வருத்தப்பட்டேன் என்பதைவிட,  ஆக்ரோசமாகக் கோவப்பட்டேன் என்று சொல்வது தான் சரி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தலித் பெண்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். அந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு எழுதப்படவில்லை. அதைப் பற்றி எழுதும்போது ஒடுக்குமுறையின் வலியோடு வார்த்தைகள் வந்து விழுகின்றன. அது கலகக்குரலாகவும், விடுதலைக்கான வேட்கையாகவும் இருக்கும். “இப்போது என்னுடைய படைப்பை பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதன்மூலம் தலித் பெண் படைப்பாளிகளின் குரல்வலையை நெரிக்கப்பார்க்கிறார்கள். இதனால் நாங்கள் முடங்கி விடுவோம் என்று கங்கணம் கட்டி செயல்படுகின்றனர். இனிமேல்தான் இன்னும் கூடுதலாக எழுதுவோம். முன்பை விட இன்னும் காத்திரமாக எழுதுவதற்கு சக்தி பிறந்திருக்கிறது என்று கோவத்தோடு பேசுகிறார் பாமா.

சுகிர்தராணி ஒரு பெண் கவிஞர். தலித் பெண்களின் உள்ளார்ந்த மன உணர்வுகளை அனுபவப்பூர்வமாக உணர்ந்து, உயிரோட்டத்துடன் கவிதை படைப்பவர். அவர் எழுதிய “கைம்மாறு மற்றும் ‘என் உடல் என்ற இரண்டு கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, டெல்லியில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. ‘கைம்மாறு என்ற கவிதை வாசிப்பவரை எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கும். உடம்பெல்லாம் மெய்சிலிர்க்க வைக்கும்.

மனித மலத்தை கையில் அள்ளி பிஞ்சுபோன கூடையில் சேர்த்து தலையில் தூக்கி சுமக்கும்போது மலம் கூடையிலிருந்து வெளியேறி முகத்தில் ஒழுகும். அதைத் துடைத்தவாறே இயல்பாக நடந்து போகிற காட்சி, அவளுக்கு நான் செய்யும் கைம்மாறு “ஒரு நாள் மலம் கழிக்காமல் அடக்கிக் கொள்வதுதான் என்று சுகிர்த ராணி அந்தக் கவிதையை முடித்திருப்பார். மலம் கழித்த பிறகு நாம் அதன் அருகில் நிற்கக்கூட தயங்குவோம். ஆனால், முன்பின் தெரியாத மனித மலத்தை அள்ளி தலையில் சுமப்பது எவ்வளவு பெரிய துயரம் என்பதை அறிந்தவர்கள்தான் இதுபோன்று எழுத முடியும். (படிக்க பக்.12)

அடுத்து “என் உடல் என்ற தலைப்பில் தொடுக்கப்பட்ட கவிதை இயற்கையில் கொட்டிக்கிடக்கும் மரம், செடி, நீர் பரப்புகள், பழம், பாறை, எரிமலை சிவப்பு சாம்பல், வானம், குளிர்ந்த இரவு ஆகியவற்றை உவமையாகவும், உருவகங்களாகவும் பயன்படுத்திவிட்டு, இந்த இயற்கை என் உடலாகிக் கிடக்கிறது என்று முடிக்கிறார். ஒவ்வொருவரும் வாசிக்கும்போது அவரவரின் அனுபவத்திற்கேற்ப பல புரிதல்கள் ஏற்படும். ஒரு பெண்ணின் உடல் எப்படி வன்முறைக்குள்ளாக்கப்படுகிறது என்பதைப் பூடகமாக விளக்குகிறார். பெண் உடல் பற்றி நாம் வைத்திருக்கும் எண்ணம், சிந்தனை, கருதுகோள் அனைத்தையும் தொட்டுப்பார்க்கிற விசயமாக இந்தக் கவிதை இருக்கிறது.

இவருடைய இந்த இரண்டு கவிதைகளையும் பாடத்திலிருந்து நீக்கியது குறித்து பேசும்போது

என்னுடைய படைப்பை 2019 ஆம் ஆண்டு பெண் எழுத்தாளர் என்ற தலைப்பில் பாடத்திட்டத்தோடு சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளும் ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டு, ஏன் இப்போது மட்டும் அதை நீக்குகிறார்கள். அது ஐந்தாவது செமஸ்டரில் தான் மாணவர்கள் படிப்பதற்கு வருகிறது. அதை படித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் வரும்போது நீக்கிவிட்டனர். இது மிகப்பெரிய வன்முறை என்று கூறுகிறார்.

மேலும், "சமகாலப் படைப்புகளை புறக்கணித்துவிட்டு வெறும் கற்பனைக் கதைகளைப் பாடங்களாக வைப்பதால் என்ன பலன்?" என்று கேள்வி எழுப்புகிறார். அதோடு, “தான் வாழ்கின்ற சமூகச் சூழலை நாம் அரசியல் பின்னணியையும், மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தாமல் நூற்றாண்டு முன்பு வாழ்ந்த கற்பனைக் கதைகளைப் பரப்புவது நகைச்சுவைக்குரியது என்கிறார். இந்த இருவரின் எழுத்துக்களை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியதன் மூலம் டெல்லிப் பல்கலைக்கழகம் எவ்வளவு பிற்போக்குதனத்திற்கு தன்னைத் தள்ளிக் கொள்கிறது என்பதை உணர வேண்டும்.

பாடத்திட்டத்திற்குள் ஒளிந்திருக்கும் அரசியல்

பள்ளிக் கூடமும், கல்லூரியும் அடுத்த தலைமுறையினரை அறிவார்ந்தவர்களாக வார்த்தெடுக்கும் நாற்றாங்கால் என்றால் மிகையில்லை. முற்போக்குத்தன்மையை வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை. பிற்போக்கு சிந்தனையையும், குறுகிய மனப்பான்மையையும் ஒருபோதும் வளர்த்துவிடக்கூடாது. “பெண் எழுத்து என்ற பிரிவில் சமகால பெண்களின் பிரச்சனைகளை, சமகாலப் பெண்களே எழுதிய படைப்புகளை வைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அவை மாணவர்களுக்கு பல திறப்புகளை உருவாக்கும். புதிய சிந்தனையை உருவாக்குவதன் மூலம் சமூக மாற்றத்தின் கருவியாக அவர்களை மாற்றும். எனவே, டெல்லிப் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஏன் பாமா, சுகிர்தராணி படைப்புகளை சேர்த்தார்கள், ஏன் பிறகு நீக்கினார்கள்? என்பதற்கு போதுமான காரணம் சொல்லப்படவில்லை.

பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது எல்லா எதார்த்தங்களையும் உள்ளடக்கியதாக இல்லை. பாடத்திட்டம் ஒரு பக்க சார்பாக இருக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை நீக்கிவிட்டு, ஆதிக்க வர்க்கம் மேல்தட்டு வர்க்கம் உருவாக்கிய வரலாற்றை பாடத்திட்டத்திற்குள் நுழைப்பது ஒருபக்க சார்பில்லையா? இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடியினர் வரலாறு இப்போதுதான் எழுதப்படுகிறது. எழுதப்பட்ட வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு கடத்துவது தேவையாக இருக்கிறது. மாறாக அது தடை செய்யப்படும் போது மீண்டும் கலையப்பட்ட வரலாறு மறைக்கப்படுகிறது என்றுதானே அர்த்தம். சாதி, மதம், இந்துத்துவா, வகுப்புவாதம் பெண்ணடிமை பற்றி யார் எழுதினாலும் அவை தடைசெய்யப்படுகின்றன. உதாரணமாக, காஞ்சா அய்லைய்யாவின் படைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

இப்படி தடைசெய்யப்பட்ட படைப்புகள் மற்றும் எழுத்தாளர்கள் பல்கலைக்கழகத்தை அளந்துப் பார்க்கிறார்கள் என்றே அர்த்தமாகிறது. பழமைவாதத்தை தூக்கிப்பிடிக்கும் இந்துத்துவா சக்திகள் பல்கலைக்கழகத்திற்குள்ளும் இறங்கி வேலை செய்வது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. அறிவையும், ஞானத்தையும், புதிய சிந்தனையையும் அறிமுகப்படுத்தும் வகுப்பறைக்குள் நச்சு அரசியலைப் புகுத்துவது வன்முறையான செயல். இதன்மூலம் இந்தியாவை இன்னும் பத்தாண்டுகளுக்கு பின்னால் இழுத்துச் செல்லும் வேலை நடக்கும் முற்போக்கு படைப்புகளை பாடத்திட்டத்தில் இன்னும் வேகமாக பல படைப்புகள் புதிதாக உருவாகும். அது எதிர்கால வரலாற்றைப் புரட்டி போடும் சந்ததியினரை உருவாக்கும்.

Comment