No icon

குடந்தை ஞானி

2022 ஆம் ஆண்டு, பிரித்தானியாவில், புனித பெர்னதெத் திருப்பொருள்கள்

பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் அன்னை மரியாவின் காட்சிகளைக் காணும் பேறுபெற்ற புனித பெர்னதெத் அவர்களின் திருப்பொருள்கள், 2022 ஆம் ஆண்டில், பிரித்தானியாவின், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, மற்றும் வேல்ஸ் பகுதிகளில், மக்களின் வணக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற வாரம், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் மேற்கொண்ட ஆண்டுக்கூட்டத்தின் இறுதியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கூறிய இந்த ஆயர் பேரவையின் செயலர், அருள்பணி கிறிஸ்டோபர் தாமஸ் அவர்கள், 2009 ஆம் ஆண்டு, லிசியுக்ஸ் நகரின் புனித குழந்தை தெரேசாவின் திருப்பொருள்கள், மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில், 2,50,000த்திற்கும் அதிகமான மக்கள் அவற்றைக் கண்டனர் என்பதை நினைவுகூர்ந்தார்.

அண்மைய இரு ஆண்டுகளாக, புனிதத் தலங்களுக்கு, மக்கள் செல்லும் திருப்பயணங்கள், கோவிட் பெருந்தொற்றினால் தடைப்பட்டதை சுட்டிக்காட்டிய அருள்பணி கிறிஸ்டோபர் தாமஸ் அவர்கள், தற்போது, லூர்து நகர் திருத்தலத்திற்குச் செல்ல இயலாத மக்களைத் தேடி, புனித பெர்னதெத் வருவது சிறந்ததொரு அடையாளம் என்று கூறினார்.

மரிய பெர்னார்தி சோபிரியுஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட புனித பெர்னதெத் அவர்களுக்கு 14 வயதான வேளையில், அவர், அன்னை மரியாவின் காட்சிகளைக் காணும் பேறுபெற்றார்.

கேவ் நதியின் கரையில் அமைந்திருந்த மசபியேல் குகையில், 1858ம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதிக்கும், ஜூலை 16 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில், அன்னை மரியா, புனித பெர்னதெத் அவர்களுக்கு 18 முறை காட்சியளித்தார்.

1854 ஆம் ஆண்டு, திருத்தந்தை 9 ஆம் பயஸ் அவர்கள், அன்னை மரியா களங்கம் ஏதுமற்ற முறையில் பிறந்தவர் என்பதை திருஅவையின் கோட்பாடாக அறிவித்ததையடுத்து, 1858 ஆம் ஆண்டு, லூர்து நகரில், புனித பெர்னதெத் அவர்களுக்கு, வெண்ணிற உடையில் தோன்றிய அன்னை மரியா, தன்னைஅமல உற்பவிஎன்று அறிமுகம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1879 ஆம் ஆண்டு, தன் 35வது வயதில் இறையடி சேர்ந்த பெர்னதெத் அவர்களை, திருத்தந்தை 11 ஆம் பயஸ் அவர்கள், 1925 ஆம் ஆண்டு அருளாளராகவும், 1933 ஆம் ஆண்டு, டிசம்பர் 8 ஆம் தேதி, அமல அன்னை மரியாவின் திருநாளன்று, புனிதராகவும் உயர்த்தினார்.

Comment