No icon

அந்தோனியோ கூட்டேரஸ்

நிக்கராகுவாவில் மக்களாட்சி தடைகளைச் சந்திக்கின்றது

நிக்கராகுவா நாட்டு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ள ஆயர் அல்வாரெஸ் அவர்களோடு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் உட்பட பல்வேறு தலத்திருஅவைத் தலைவர்கள் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், நிக்கராகுவா நாட்டின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்துள்ள, .நா. வின் தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், அந்நாட்டில் மக்களாட்சி, கடுமையான தடைகளை எதிர்கொண்டு வருகின்றது என்று குறை கூறியுள்ளார்.

அந்நாட்டின்  மட்டாகால்பா  மறைமாவட்ட தலைமையகம் தேசிய காவல்துறையால் இரவில் சூறையாடப்பட்டது உட்பட கத்தோலிக்கத் திருஅவை நிறுவனங்களுக்கும், பொது மக்கள் அமைப்புகளுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள அண்மை நடவடிக்கைகள் மிகுந்த கவலையளிக்கின்றன என்று கூட்டேரஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

.நா. தலைமையகத்தில் கூட்டேரஸ் அவர்களின் பேச்சாளர் ஃபர்ஹான் ஹாக் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளதோடு, தானியேல் ஒர்த்தேகா அரசு, நிக்கராகுவா நாட்டு அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளின் பாதுகாப்புக்கு உறுதிவழங்கவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார்.

குறிப்பாக, பேச்சு சுதந்திரம், மனச்சான்றின் சுதந்திரம், சமய சுதந்திரம் உட்பட உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து அடிப்படை சுதந்திரங்களின் பாதுகாப்புக்கு உறுதி வழங்கவேண்டும், மற்றும், திட்டமிட்டு கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரும் விடுதலைசெய்யப்படவேண்டும் என, ஃபர்ஹான் ஹாக்  அவர்கள், அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.  

மேலும், அமெரிக்க நாடுகளின் மனித உரிமைகள் அவை (Cidh), அமெரிக்க நாடுகள் நிறுவனம் (OAS) உட்பட பல்வேறு அமைப்புகளும் கைதுசெய்யப்பட்டுள்ள நிக்கராகுவா ஆயரோடும், நாட்டு மக்களோடும் தங்களின் தோழமையுணர்வை வெளிப்படுத்தியுள்ளன.

Comment