No icon

பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு (07-04-2024)

​​​​​​​இறை இரக்கத்தின் ஞாயிறு திப 4:32-35; 1யோவான் 5:1-6; யோவான் 20:19-31

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம், இந்த ஞாயிறை இறை இரக்கத்தின் ஞாயிறாகக் கொண்டாட திரு அவை நமக்கு அழைப்பு விடுக்கின்றது. ஏனெனில், ஆண்டவர் இயேசுவோடு உண்டு, மகிழ்ந்து, உறவாடி வலம் வந்த திருத்தூதர்கள், அவர் கெத்சமனி தோட்டத்திலே கைது செய்யப்பட்டபோது அவரைத் தன்னந்தனியாக விட்டு விட்டு ஓடிப் போனார்கள்; அவரை மறுதலித்தார்கள்; காட்டிக் கொடுத்தார்கள். இறுதியாக, அவரது உயிர்ப்பிலே நம்பிக்கை கொள்ள மறுத்தார்கள். இத்தகைய நிலையில்தான் ஆண்டவர் இயேசு அவர்கள் முன்பே தோன்றுகிறார். அப்போதுகூட அவர்களைக் கடிந்து கொள்ளாமல், ‘உங்களுக்கு அமைதி உண்டாகுகஎன்று வாழ்த்துக் கூறுகிறார். இறை தந்தையின் இரக்கமுள்ள முகமாக ஆண்டவர் இயேசு இங்கே தோன்றுகிறார். எந்தப் பணிக்காகத் திருத்தூதர்களை அவர் மூன்று ஆண்டுகள் தயார்படுத்தினாரோ, அதையெல்லாம் மறந்து உயிருக்கு அஞ்சி நடு நடுங்கி அவர்கள் பயந்து மறைந்திருந்தபோதுகூட, இயேசு அவர்களைக் கடிந்து கொள்ளாமல், தமது இரக்கமுள்ள இதயத்தைக் காட்டி அவர்களுக்கு வலுவூட்டுகிறார். “உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள்எனும் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை நினைவில் கொண்டு, அனைவர் மீதும் இரக்கம் காட்டும் மக்களாக வாழ்ந்திட இத்திருப்பலியில் பக்தியோடு மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பிலே நம்பிக்கை கொண்ட அனைவரும், ஒரே தாயின் மக்களாக ஒருவரை ஒருவர் அன்பு செய்து ஆண்டவரின் பணியைச் செய்தார்கள் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுள் அன்பாய் இருக்கிறார்; அந்த அன்பானது அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் இருக்கிறது. எனவே, அவரது கட்டளைகளுக்கு ஏற்ப வாழ்வோம் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

● இரக்கமுள்ள தந் தையே! உமது திரு அவையின் திருப்பணியாளர்கள், தங்களின் இரக்கச் செயல்களால் உமது மந்தையை வழிநடத்தவும், சமுதாயத்தின் விளிம்பில் உள்ள மக்களுக்காக உழைத்திடவும் வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

● கனிவுள்ள தந்தையே! உம்மில் நம்பிக்கை கொள்வதற்கு எங்களுக்குத் தடையாக இருப்பவற்றை நாங்கள் தகர்த்திடவும், நீரே வாழும் உண்மைக் கடவுள் என்பதற்கு நாங்கள் சாட்சிகளாய் விளங்கிடவும் வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

பரிவுள்ள தந்தையே! உமது இரக்கத்தைப் பெரு விழாவாகக் கொண்டாடும் இந்நாளில், எங்கள் பங்கில், வீடுகளில் ஏற்பட்டிருக்கும் கசப்புணர்வுகளைக் களைந்து, ஒருவர் மீது ஒருவர் இரக்கமுள்ளவர்களாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

● கருணைக் கடவுளே! ஆணவத்தால், பலவீனத்தால், சூழ்நிலைகளால் பல்வேறு குற்றங்கள் புரிந்து சிறைகளில் வாடுவோர் மீது, நீர் உமது இரக்கக் கண்களைத் திருப்பி, மன்னித்து, மறு வாழ்வளித்திட  வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment