No icon

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு (17-3-2024)

எரே 31: 31-34; எபி 5: 7-9; யோவான் 12: 20-33

திருப்பலி முன்னுரை

இன்று நாம் தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தியிலே வழிபாட்டிற்காகத் திருவிழாவிற்கு வந்திருந்த ஒரு சில கிரேக்கர்கள்இயேசுவைக் காண விரும்புகிறோம்என்று இயேசுவின் திருத் தூதர்களிடம் கூறுகிறார்கள். யூதர்களைப் பொறுத்த வரையில் யூத மக்களைத் தவிர்த்து, மற்ற அனைவரையும் பாவிகளாகவும், பிற இனத்து மக்களாகவும் எண்ணினார்கள். இத்தகைய சூழலில் இந்தக் கிரேக்க மக்கள் ஆண்டவர் இயேசுவைக் காண வேண்டும் என்ற விருப்பத்தோடு வந்திருக்கிறார்கள். திரு விழாவைக் காண வந்தவர்கள் ஆண்டவரைக் காண வேண்டும் என்ற ஆவலோடு வந்திருக்கிறார்கள். இதை அறிந்த ஆண்டவர் இயேசு, தாம் மாட்சி பெறப் போவதாகக் கூறுகிறார். நாம் எப்போதெல்லாம் ஆண்டவரைக் காண வேண்டுமென்று ஆவல் கொள்கிறோமோ, அப்போதெல்லாம் ஆண்டவரை மகிமைப்படுத்துகிறோம். இன்று நாம் ஆண்டவரை எங்கு காண்கிறோம்? ஆலயத்தில் மட்டும் காண்கிறோமா? அல்லது அடுத்து இருப்பவரிலும் காண்கிறோமா? தவக்காலத்தில் இருக்கும் நாம் நமக்கு அடுத்திருக்கும் நம் சகோதர, சகோதரிகளிலும் ஆண்டவரைக் காணக்கூடிய வரம் வேண்டி இந்த ஞாயிறு திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவர் புதிய உடன்படிக்கையைச் செய்திருக்கிறார். அந்த உடன்படிக்கையின் வழியாக எவர் துணையுமின்றி, நாமே ஆண்டவரை முழுமையாக அறிந்துகொள்கிறோம் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவர் இயேசு இறைமகனாய் இருந்தும், துன்பங்கள் வழியாகக் கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டார். நாமும் ஆண்டவருக்குக் கீழ்ப்படியும் போது மீட்படைவோம் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

எம்மை அன்பு செய்யும் தந்தையே! உம் திரு அவையை வழிநடத்தும் திருப்பணியாளர்கள் திரு அவையைச் சார்ந்த மக்களுக்கு மட்டும் தொண்டு செய்யாமல், தம்மை நாடிவரும் எல்லா மக்களுக்கும் பணிபுரிந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தை வழங்குபவரே! வரவிருக்கும் தேர்தலில் நாட்டு நலனில் அக்கறை கொண்டு மக்களை நல்வழிப்படுத்துகிற தலைவர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடிய சக்தியை நீர் தந்தருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

மனத்திடனை அளிப்பவரே! தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் எம் மாணவ-மாணவியர் நன் முறையில் படித்துத் தேர்வு எழுதி வெற்றி பெற தூய ஆவியாரின் துணையை அளித்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

எம்மைக் காண்பவரே! இத்தவக்காலத்தில் ஆலயத்தில் மட்டுமே உம்மைத் தேடாமல் எமக்கு அடுத்திருக்கும் சகோதர, சகோதரிகளிலும் உம்மைக் காணக்கூடிய வரத்தை நீர் தந்தருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment