No icon

கணினித்துறை பேராசிரியை.

இறைஊழியர் ‘அன்னம்மாள்’ என்ற அரும்புதல்வி அருள்சகோதரி முனைவர் இரா. சாந்தா மேரி ஜோஷிற்றா

திருச்சி, தமிழகத்தின் காவிரி கரையோரம் அமைந்த டெல்டா மாவட்டம். தொழிற்சாலைகளும் வயல்வெளிகளும் நிறைந்த வண்டல் பூமி. திருச்சி நகரத்தின் பேரழகாக அமைந்துள்ள மலைக்கோட்டை. கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் அதன் ஒருங்கே அமைந்த அறிவு பூமி. தமிழகத்தின் மையமும் திருச்சிதான். இந்த  திருச்சி மாநகரத்தின் வணிக மையமாக விளங்கும் மார்க்கெட் பகுதியை ஒட்டி அமைந்த பழையகோவில் பங்கினைச் சார்ந்த வரகனேரி என்னுமிடத்தில் செல்வச்செழிப்பு மிகுந்த செல்வநாயகம் என்பவருக்கு, 1836 ஆம் ஆண்டு இளைய மகளாய்ப் பிறந்தவர்தான் எம் அன்னம்மாள்.

அன்னம்மாள்... பக்தியும், நல்லுள்ளமும் கொண்ட குழந்தை! செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்ததன் காரணமாக பெண் பிள்ளையாக இருந்தாலும் இளமையில் கல்வி கற்கும் வாய்ப்பினைப் பெற்றார். பெண்கல்வியை ஊக்குவிக்காத அன்றைய காலகட்டத்தில், பெண்ணடிமைத்தனம் நிறைந்த ஆணாதிக்க சமுதாயத்தில் தான் பெற்ற கல்வியின் காரணமாக எதையும் கேள்விக் கேட்கும் ஆற்றல் பெற்ற மங்கையாக மிளிர்ந்தாள். கல்வியில் கருத்தூன்றி, பாட சாலையில் சிறந்து விளங்கி, ஆசிரியர்களுக்கும் சக மாணவர்களுக்கும் ஓர் முன்னுதாரணமானவராகவே திகழ்ந்தார்.

தந்தை செல்வநாயகமும் சிறந்த பக்திமான். ஆலயப் பணிகளை ஆர்வத்துடனும் அர்ப்பணத்துடனும் செய்து வந்தார். சிறுமி அன்னம்மாவுக்கும் தன் தந்தையைப் போல ஆலய காரியங்களில் ஈடுபட ஆர்வம் அதிகம் உடையவராகத் திகழ்ந்தார். ஆகையால், தன்னையும் தன் வாழ்வையும் இறைவனுக்கு அர்ப்பணிக்க துணிந்தார். தன் பெற்றோரின் அனுமதிபெற்று, அக்காலத்தில் பாண்டிச்சேரியிலிருந்த ஒரு துறவற சபையில் புகுமுக துறவியாக இணைந்து பயிற்சி பெற்றார். நவதுறவு நிலையில் சிறந்த பயிற்சியும் பக்குவமும் பெற்றார். அனைத்து திறமைகளும் ஒருங்கே பெற்ற இவர் இயல்பாகவே மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடுவார்ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்பார். அப்படி ஒருமுறை அவர் தம் தலைவர்களிடம் கேள்வி கேட்டதால், அவர்கள் பொறுக்க முடியாமல் அவரைத் துறவறத்திலிருந்து வீட்டிற்கு அனுப்பினர். எனினும், கடவுள் காரியங்களில் காட்டிய ஆர்வம் சற்றும் குறையாமல் பக்தி முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

நவத்துறவற பயிற்சியிலிருந்து பாதியில் வந்துவிட்ட அவரது எதிர்காலம் குறித்துக் கவலைப்பட்ட அவர்தம் பெற்றோரோ அவருக்குக் கட்டாயப்படுத்தித் திருமணமும் செய்து வைத்தனர். இல்லற வாழ்வும் இனிதான ஒன்றாக அமையவில்லை. ஆம். அப்போது திருச்சி மாநகரில் கொடிய காலரா பரவியது. கொத்து கொத்தாக தற்போது கொரோனாவின் காரணமாக மக்கள் இறந்ததுபோல மக்கள் காலராவின் காரணமாக கொத்து கொத்தாக மடிந்தனர். அன்னம்மாளின் கணவரும் காலராவுக்கு தப்பவில்லை. அவரும் திடீரென்று இறக்க குடும்ப வாழ்க்கையும் நிலைகுலைந்து போனது.

 துறவறத்திலிருந்து இல்லறம் சென்ற அன்னம்மாள் கைம்பெண் ஆனார். மீண்டும் ஒரு கையறுநிலை. இயல்பிலேயே பக்திமிக்க அன்னம்மாள் மீண்டும் தன் கவனத்தை இறைவன்மீது திருப்பினார்.

கிழக்கிந்திய கம்பெனி கோலோச்சிய இந்தியாவில், ஆங்கில ஏகாதிபத்தியம் மேலோங்கியிருந்தது. மூட நம்பிக்கையின் பிடியில் சிக்கியிருந்த இந்திய சமுதாயத்தில் பெண்கள் கீழானவர்களாகவே மதிக்கப்பட்டனர். கைம்பெண்கள் நிலையைப் பற்றி சொல்லவே தேவையில்லை. நாயினும் கீழானவர்களாகவே கருதப்பட்டனர். கல்வியறிவின்மையின் காரணமாக, பல்வேறு இன்னல்களுக்குள்ளாயினர். உடன்கட்டை ஏறுதல், சமூகப் புறக்கணிப்பு என்று பல்வேறு தடைகளைச் சந்தித்தனர். இந்தக் காலச் சூழ்நிலையில், அன்னம்மாள் துணிச்சலும், வீரமும், தீரமும் நிறைந்த பெண்மணியாக, பெண்ணடிமைத்தனம் தகர்த்து, வீட்டுச் சிறை உடைத்து வீதிக்கும் வர துணிந்தார். தான் பெற்ற கல்வி துணைநிற்க, துறவுமடத்தில் தான் பெற்ற பயிற்சி வழிநடத்த, அவர் கொண்டிருந்த பக்தி, பிறரன்பு, சமூக அக்கறை என்று அனைத்தும் அவருடன் அணிவகுக்க, அன்று சமுதாயத்தில் புரையோடிப் போயிருந்த சாதியக் கட்டமைப்பைத் தகர்த்து, வீதிக்கு வந்தார். சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு, ஊருக்குப் புறம்பே விளிம்புநிலையில் வாழ்ந்த மக்கள் இயல்பிலேயே அமைந்த பக்தி மற்றும் அடிப்படைக் கல்வியுடன் துறவற மடத்தில் கற்றுக்கொண்ட துறவறப் பண்பும் துணைவர, வீரப் பெண்மணியாய் அன்றையச் சமுதாயம் புறந்தள்ளிய  தர்மநாதபுரம் என்ற பகுதிக்குச் சென்று, மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டார்.

சிறுவர்களைக் கூட்டி திருமறைச் செபங்கள் சொல்லிக் கொடுத்தார். காலரா, வாந்திபேதி போன்ற நோய்கள் வராமல் வருமுன் காப்பது எப்படி? என்று சுகாதார வாழ்விற்கான வழிமுறைகளை எடுத்துச் சொன்னார். இவர்தம் சேவை ஏழை - பணக்காரன், கற்றவர் - கல்லாதவர், உயர்த்தப்பட்டவர் - தாழ்த்தப் பட்டவர் என்று எல்லாரையும் கவர்ந்தது.

தனக்கென வாழாது, பிறருக்கென வாழ்ந்த இந்தக் கைம்பெண் அன்னம்மாளின் வாழ்வு, சுற்றி வாழ்ந்த ஏனைய கைம்பெண்களுக்கு நம்பிக்கையைத் தந்தது. கைம்பெண்களின் விளக்குமுகமாக அன்னம்மாள் ஒளிர்ந்தார். நம்பிக்கைப் பூக்கள் நாலிரு திசைகளிலும் பூத்து குலுங்கின. ஐந்து கைம்பெண்கள் இவரின் தலைமையில் சேவை செய்யும் நோக்கத்துடன் ஒன்றிணைந்தனர். இறையுணர்வுடன் தன்னோடு இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்த கைம்பெண்களை அழைத்துக்கொண்டு, அப்போதைய திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு அலெக்சிஸ் கானோஸ் ஆண்டகை அவர்களிடம் சென்று, அவர்கள் அனைவரும் குழுமமாய் இணைந்து வாழ அனுமதி கேட்டார்.

தமது திருச்சி மறைமாவட்டத்தில் அதிகரித்து வரும் கிறித்தவ இளம் கைம்பெண்களின் எதிர்கால வாழ்வு குறித்து ஆயரும் ஆழ்ந்த கவலையும், அக்கறையும் கொண்டிருந்தார். கைம் பெண்களின் தன்னம்பிக்கை முனையாக, கலங்கரை விளக்கமாக அன்னம்மாளின் கோரிக்கை ஆயருக்கு மகிழ்ச்சியளித்தாலும், மறைமாவட்டத்தின் நிதி நிலைமை மோசமாயிருந்ததைச் சுட்டிக்காட்டி, அனுமதி வழங்க ஆயர் சற்று தயங்கினார். இதனை நன்கறிந்த அன்னம்மாள்நிதி வேண்டேன், அனுமதி மட்டும் போதும்என்று இறைபராமரிப்பின் மீதிருந்த தனது நம்பிக்கையை வெளிக்காட்டினார்.

அனைவரும் இணைந்து தங்குவதற்கு ஓர் ஓலைக்குடிசையும், துறவற வாழ்வைச் செம்மையாக்க ஓர் ஒழுங்கு நூலும் ஆயர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, 1858 ஆம் ஆண்டு - பிப்ரவரி 2 ஆம் நாள், ஐந்து கைம்பெண்களுடன் திருச்சி மேலப்புதூரில், திருச்சி புனித அன்னாள் துறவற சபையைத் துவக்கினார். மறைமாவட்ட ஆயர் ஒப்படைத்த பெற்றோரில்லாப் பெண் குழந்தைகள் மற்றும் நோயுற்றோரை பேரன்புடன் பராமரித்தனர்; தங்களைப் போன்ற கைம்பெண்களைப் பராமரித்து பாதுகாப்பதற்கான இல்லத்தை தங்களின் மறைத்தூதுப்பணியாய் ஏற்றுக்கொண்டனர்; கைம்பெண்களின் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்துவதும் மறுவாழ்வு அளிப்பதும் முதன்மை நோக்கமாக மாறின. ஆகையால் ஓலைக்குடிசையில், விளக்கின் வெளிச்சத்தில், எளிய வாழ்க்கை வாழ்ந்து, அன்றாட உணவிற்கு கடினமாய் உழைத்து, கைக்குத்தல் அரிசியையும் காட்டுக்கீரையையும் சமைத்து, நோய் நொடியின்றி தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவரையும் காத்து பராமரித்து, பாதுகாத்தார்அன்னை அன்னம்மாளின் அன்பில் அனைவரும் மகிழ்ந்திருந்தனர்; கூடி செபித்தனர்; குடும்பமாய் உழைத்தனர்.

1865 ஆம் ஆண்டு, அன்னம்மாள் அவர்கள் ஏற்படுத்திய புனித அன்னாள் சபை, வியாகுல மாதா சபையுடன் இணைக்கப்பட்டு, துறவறப் பயிற்சிக்காக பிரான்ஸிலிருந்து மறைப்பணிக்காக திருச்சி மறைமாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்த பரிகார மாதா சபையினரின் பொறுப்பில் விடப்பட்டன. ஆனால், தியான வாழ்வில் கைதேர்ந்த பிரான்ஸ் நாட்டின் பரிகார மாதா சபையினரால் மறைபரப்புப் பணிக்கென இந்தியக் கன்னியர்களுக்கு அவர்களுக்குரிய விதத்தில் தக்க பயிற்சியோ, வழிகாட்டுதலோ தர இயலவில்லை. ஆகையால், மண்ணின் மணத்திற்கேற்ப, மக்களின் சூழ்நிலைக்கேற்ப மறைப்பணியாற்ற மீண்டும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, 1877 ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 16 ஆம் நாள் ஒன்பது அருள்சகோதரிகளுடன் புனித அன்னாள் சபை மறுபிறப்படைந்தது.

வெறும் ஐவருடன் துவங்கிய திருச்சி புனித அன்னாள் சபைஅன்பு, செபம், சேவைஎன்னும் விருதுவாக்குடன்வாழ்வில் எளிமை, வறியவர் பணிஎன்னும் தனிவரத்துடன் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம்பெண்களைத் தன்னோடு துறவு வாழ்வில் இணைத்துக்கொண்டு, இந்தியாவின் 8 மாநிலங்களில் சிறப்பான மறைப்பணியாற்றுகின்றனர்; மேலும் இத்தாலி உள்ளிட்ட மேலை நாடுகளிலும் துறவற இல்லங்களைக் கொண்டு நற்செய்திப் பணியுடன் நலவாழ்வுப்பணி, கல்விப்பணி, சமூகப் பணி மற்றும் மாற்றுத்திறன் படைத்தோர் பணிகளில் தன்னை முழுவீச்சில் ஈடுபடுத்திவருகிறது.

வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த கைம்பெண்களின் வாழ்வில் விடிவெள்ளியாய் உதித்த அன்னம்மாளை இன்று திருச்சபைஇறைஊழியராய்அங்கீகரித்துப் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க அனுமதியும் அளித்துள்ளது.

இறைஊழியர்அன்னை அன்னம்மாளின் அடிச்சுவட்டில் வழிநடக்கும் திருச்சி - புனித அன்னாள் சகோதரிகளும் கல்லாமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பணிகளில் அயராது தொடர்ந்து வீறுநடை போட்டு வருகின்றனர்.

Comment