No icon

கண்டனையோ... கேட்டனையோ...

மௌனத்தின் கோபுரம்!

இறந்த உடலைத் தயார் செய்தல், அடக்கம் செய்தல், துக்க நிவர்த்திச் சடங்கு... போன்ற மனிதனின் இறுதி நிகழ்வுகள் நிறைவேற்றப்படும் முறை மதத்திற்கு மதம், கலாச்சாரத்திற்குக் கலாச்சாரம்  வெகுவாக மாறுபடுகின்றன. ஆள் உயிரோடு இல்லை என்பது மட்டும்தான் அதில் உள்ள ஒரே பொது அம்சம்.

நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நோர்டிக் நாடுகளின் பல கலாச்சாரங்களில், ‘தண்ணீர் அடக்கம்’ பழக்கத்தில் உள்ளது. இறந்த உடலை ஒரு படகில் வைத்து, ஆற்றிலோ கடலிலோ விட்டு விடுகிறார்கள். ‘Watery Grave’ என்று ஆங்கிலத்தில் மரபு மொழியில் சொல்லப்படுவது, நோர்டிக் நாடுகளில் உண்மையில் நடக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஓர் இனக்குழுவினர் இறந்தவரை ஒரு நாற்காலியில் அமர்த்தி, நன்றாக அலங்காரம் செய்து, ஒரு சுருட்டைக் கொளுத்தி வாயில் வைத்து விடுகிறார்கள் (அணையும்போதெல்லாம், யாராவது எடுத்து ஊதிவிட வேண்டும்!?). தென் கொரியாவில் இறந்தவரின் உடலை எரித்து, அந்தச் சாம்பலைக் கொண்டு பல வண்ணங்களில் மணிகள் செய்து கழுத்தில் அணிந்து கொள்கிறார்கள்.

மடகாஸ்கர் நாட்டில் புதைத்த உடலை ஐந்து வருடங்களுக்கு  ஒரு முறைத் தோண்டி எடுத்து, எலும்புகளை மீண்டும் புதுத்துணியில் கட்டி, வாத்தியக்காரர்கள், பாடகர்கள் சகிதம் உடலைத் தூக்கிக் கொண்டு நடனம் ஆடுகிறார்கள். திபெத்தில் இறந்த உடலை ஒரு மலைமுகட்டில் கொண்டு வைக்கிறார் கள். அது தானாக அழிந்தபின், எலும்புகளைப் பொறுக்கி வந்து, அதை மாவாகச் செய்து, தண்ணீரில் கரைத்து, மாடுகளுக்குக் குடிக்கக் கொடுக்கிறார்கள் (அந்த ஊரில் யார் செத்தாலும், அதிகம் துக்கப்படுவது மாடுகளாகத்தான் இருக்கும். ‘ஏண்டா இப்படி கொடுமைப்படுத்துறீங்க?’)

இந்தியாவில் 100 கிலோ மீட்டருக்கு ஒருமுறை கலாச்சாரம் மாறுபடுகிறது என்கிறார்கள். எனவே, ஒவ்வொரு 100 கிலோமீட்டரிலும் ஓர் இந்தியன் வித்தியாசமாக இறந்து, வித்தியாசமாக அடக்கம் செய்யப்படுகிறான்.

‘மறைக்கப்பட்ட இந்தியா’ என்ற அருமையான புத்தகத்தில் (தேசாந்திரி பதிப்பகம், சென்னை), எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன், இந்தியாவில் உள்ள பார்சி இனத்தவரின் விசித்திரமான அடக்க முறைகள் பற்றிச் சொல்கிறார். பார்சிகள் ஈரான் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு 8-10  நூற்றாண்டுகளில் அகதிகளாக வந்தவர்கள்.  ஜாதவ் ரானா என்ற குஜராத் மன்னர் ஆதரவு தர, அப்பகுதியில் முதலில் நிலைகொண்டு, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நாட்டின் மற்ற பகுதிகளுக்குப் பரவியிருக்கிறார்கள். மதம், ஜொராஷ்ட்ரியம். கட வுளின் பெயர், வாயில் நுழையக் கடினமான ‘அஹூரா மாஜ்டா’. ஈரான், ஈராக் உள்ளிட்ட பகுதிகள் ஒரு காலத்தில் ‘பாரசீகம்’ என்று அழைக்கப்பட்டது.  அதிலிருந்து வந்ததுதான் ‘பார்சி’ என்ற சொல். உலகின் மிகப் பழமையான இனங்களில் ஒன்று. பார்சிகள் தொழில் செய்வதில் கெட்டிக்காரர்கள்.  இரத்தன் டாட்டா ஒரு பார்சி!

பார்சிகள் இறந்த உடலை அடக்கம் செய்யும் முறை இந்தியாவின் மற்ற கலாச்சாரங்களிலிருந்து  மாறுபட்டது. அவர்கள் உடலை எரிப்பதில்லை. புதைப்பதும் கிடையாது. மாறாக, ‘டாக்மா’ அல்லது ‘டவர் ஆஃப் சைலென்ஸ்’ என்று அழைக்கப்படும் ஒரு கோபுரத்தில் கொண்டு போய், கழுகுக்கு இரையாக வைத்து விடுகிறார்கள். இறந்த உடல் ஓர் அசுத்தம்.  அதைப் புதைத்தால் மண் கெட்டுப் போகிறது. எரித்தால் காற்று மாசுபடுகிறது. நதிகளில் மிதக்கவிட்டால் நீர் மாசுபடுகிறது. சுற்றுச்சூழலுக்கு எந்தக் கேடும் வரக்கூடாது என்பதற்காகத்தான் உடலைக் கழுகுக்கு இரையாக்குகிறோம் என்று பார்ஸிகள் சொல்கிறார்கள்.   

மும்பையில் இதுபோன்ற ஒரு ‘டவர் ஆஃப் சைலென்ஸ்’ மலபார் பகுதியில் இருக்கிறது. இரண்டு அடுக்குக் கட்டடம். இரண்டாம் மாடிக்கு மேல், 50 மீட்டர் உயரத்தில் ஒரு பெரிய கோபுரம். அதன் உச்சியில் உடலை வைத்து விட்டு, கழுகாரை அழைக்கிறார்கள். அங்கு எல்லாரும் செல்ல முடியாது. பார்சி இனத்தில் குறிப்பிட்ட குழுவினரே அடக்கச் சடங்குகளை நிறைவேற்றுகிறார்கள். அவர்கள்   வெளியுலகுக்கு வராமல், சமுதாயத்திலிருந்து தனித்து வாழ்கிறார்கள் என்று எஸ். இராமகிருஷ்ணன் சொல்கிறார்.

இறக்கும் தறுவாயில் ஒரு பார்சிக்கு, புனித நூலின் ஒரு பகுதியை உறவினர்கள் வாசித்துக் காட்ட வேண்டியது கட்டாயம். அவர்களின் புனித நூல் ‘ஜென்ட் அவஸ்தா.’ சாவதற்கு முன் ஒரு மிடறு மாதுளைச் சாறு குடிக்க வைக்கிறார்கள் (நம் ஊரில் பால் ஊற்றுவதுபோல!). இறந்த உடலை வீட்டை விட்டு வெளியே கொண்டு வரும்போது, ஒரு நாய் அதைப் பார்க்க வேண்டும் என்ற சடங்கும் இருக்கிறது (‘என் சாவுக்கு ஒரு நாயும் வரவேண்டாம்’ என்று ஒரு பார்சியும் வீராப்புப் பேச முடியாது!). நான்கு முகங்கள் கொண்ட ஒரு நாய்தான் மரணத்தின் தூதுவன் என்பது அவர்களின் நம்பிக்கை. டவர் ஆஃப் சைலென்சில் ஓர் ஆண்டு வரை கூட ஓர் உடல் கிடக்க அனுமதிக்கப்படுகிறது. கழுகு சாப்பிட்டது போக, மீதமான எலும்புகளை எடுத்து வந்து அப்புறப்படுத்துகிறார்கள்.

கழுகு இனம் வேகமாக அழிந்து வருவது, பார்சிகளின் அடக்கச் சடங்கில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சூரியக் கண்ணாடிகள் அல்லது சோலார் சக்தி கொண்டு உடலை அழிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டிலும் அடக்கச் சடங்குகள் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன, கத்தோலிக்க அடக்கங்கள் உள்பட. தெருக்களை அடைத்து வைக்கப்படும் கண்ணீர் அஞ்சலி பேனர்கள் (இறந்து விட்டால் எல்லாரும் ‘எங்கள் இதய தெய்வம்’தான்), நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம், தப்பு மேளம், குத்தாட்டம், சிவந்த கண்களுடன் சலம்பல் செய்யும் ஆண்கள், மூக்கு சிந்தும் பெண்கள், வாடகைக்கு அமர்த்தப்பட்ட  ஒப்பாரிகள், ஆட்டோ அறிவிப்பு, சாலையில் பிய்த்து எறியப்படும் மலர்கள்... என்று சில பொது அம்சங்கள் அண்மைக் காலங்களில் நிலைபெற்று விட்டாலும், நுட்பமான வேறுபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. குடும்பத்தில் யார் இறுதிச் சடங்கை நிறைவேற்றுவது? தலை எந்தப் பக்கம் இருக்க வேண்டும்? எத்தனை முறை கல்லறையைச் சுற்றி, பெட்டியை எந்தப் பக்கம் பார்த்து வைக்க வேண்டும்?

நான் பிறந்த ஊரில் அந்தக் காலத்தில் கோவிலுக்குக் கிழக்குப் பக்கமாக வாழ்பவர்கள், இறந்த உடலைக் கோவிலுக்குக் கொண்டு போகமாட்டார்கள். ஏனென்றால், கல்லறையும் கிழக்கில்தான் இருந்தது. ஒரு வழியில் போன பிணம், அந்த வழியாகவே திரும்பி வரக்கூடாதாம். அதனால் சாமியாரை ஒருமுறை வீட்டிற்கு அழைத்தும், இன்னொரு முறை கல்லறைக்கு அழைத்தும் மந்திரிப்பார்கள் (சாமியார் ஒரே பாதையில் எத்தனை முறை வேண்டுமானாலும் போய் வரலாம். தப்பில்லை!).

பெண்கள் இன்னும் சில ஊர்களில் கல்லறைக்கு அனுமதிக்கப்படுவதில்லை. நான் தற்போது இருக்கும் பங்கில், சில கிராமங்களில் இறந்த உடல்களைக் கோவிலுக்குக் கொண்டுவர அனுமதியில்லை. கோவிலின் சுத்தம் கெட்டு விடுமாம்!  ‘அந்த ஒட்டடையை எடுங்கள்’ என்றால், கேட்க ஆளில்லை.

கத்தோலிக்க இறையியலில் உடலுக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு. உயிருள்ளது, உயிரற்றது இரண்டுக்குமே. அதனால் அடக்கச் சடங்குகள் மிகுந்த மரியாதையுடனும், ஒழுங்குடனும் நடத்தப்பட வேண்டும் என்று திரு அவை வலியுறுத்துகிறது. ஒரு காலத்தில் உடல்களை எரிப்பதற்குக் கத்தோலிக்கத் திரு அவையில் அனுமதி இல்லை. 1963-இல் சட்டத்தில் மாற்றம் வந்த பின், இப்போது எரிப்பு அனுமதிக்கப்படுகிறது. பரிந்துரைக்கப்படுவதில்லை. எரித்த பின் கிடைக்கும் சாம்பலை, ஒரு கல்லறையிலோ, கோவிலுக்குக் கீழ் உள்ள நிலவறையிலோ அல்லது நினைவு மண்டபத்திலோ தகுந்த மரியாதையுடன் புதைக்க வேண்டும். சாம்பலைக் குவளையில் போட்டு படுக்கை மாட்டிலேயே வைத்துக் கொள்வது, பேங்க் லாக்கரில் பூட்டி வைப்பது அல்லது ஹெலிகாப்டரில் சென்று வங்காள விரிகுடா மேல் தூவி விடுவது போன்ற நாடகங்களைத் திரு அவை அனுமதிப்பதில்லை.

இடத் தட்டுப்பாடு, சுற்றுப்புறச் சூழல், நடை முறை வசதிகள்... இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது என் தனிப்பட்ட தேர்வு எரித்தல்தான். சுருக்கமாக வேலை முடிந்து விடும். எடை குறைவு என்பதால், கல்லறைக்கு எடுத்துச் செல்வதும் எளிது. ஓர் ஆள் போதும்!  இன்னொன்று, முக்கியமாக என்னால் எல்லாப் பக்கமும் அடைக்கப்பட்ட ஒரு சிறிய பெட்டிக்குள் பதற்றமில்லாமல் அடங்கி இருக்க முடியாது. I am claustrophobic!

பார்சிகளின் இந்திய வருகை குறித்து ஒரு பெர்சியப் பழங்கதை இருக்கிறது. மதத் துன்புறுத்துதலிலிருந்து தப்பித்து, ஈரானிலிருந்து பார்சிகள் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்கு வருகிறார்கள். அப்போது அங்கு மன்னராக இருந்தவர் ஜாதவ் ரானா. இன்றைய குஜராத். பார்சிகளின் தலைவர் தஞ்சம் கேட்டு மன்னருக்குத் தூது அனுப்புகிறார். ஜாதவ் ரானா நல்ல உள்ளம் கொண்டவர்தான். ஆனால், திடீரென்று ஒரு பெரிய கூட்டம் நாட்டிற்கு வந்தால், அதன் தேவைகளைச் சமாளிக்க முடியுமா? என்று அவருக்குச் சந்தேகம். அதனால் விளிம்புவரை பால் நிரப்பப்பட்ட ஒரு குவளையைத் தூதுவனிடம் கொடுத்தனுப்பி, “என் அரசில் ஏற்கெனவே மக்கள்தொகை அதிகம். புதிதாக அகதிகளை எடுத்துக்கொள்ள முடியாது” என்று செய்தி அனுப்பினார்.

பதிலுக்குப் பார்சிகளின் தலைவர் அதில் ஒரு கைப்பிடி சர்க்கரையை அள்ளிப்போட்டு, “என்னதான் குவளை நிரம்பியிருந்தாலும், அதில் சர்க்கரைக்கு இடம் இருக்கிறது. அதுபோல, நாங்களும் உம் அரசில் சர்க்கரையாக இருந்து இனிக்கச் செய்வோம்” என்று சொல்லி அனுப்பினாராம். புத்திசாலி!!

இங்கே எல்லாருக்கும் இடம் இருக்கிறது!!

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)

Comment