No icon

விடைபெறட்டும்...

மதம் சார்ந்த அரசியல்!

என் இனியநம் வாழ்வுவாசகப் பெருமக்களே!

சமுதாயத்தின் நேரிய ஒருங்கமைவுக்காக உருவாக்கப்பட்ட ஒரு வடிவமே அரசு. அந்த அரசை ஆய்வு செய்யும் வழிமுறையே (அரசு + இயல்) ‘அரசியல்’. நேர்மையின் நிறம் மாறாமல், நீதியின் வழி பிறழாமல் நெறிசார்ந்த அரசியல் நடைபெற வேண்டும் என்பதே யாவருடைய விருப்பமும்கூட. ஆனால், நம் நாட்டில் தவறான சுதந்திரத்திற்கு எல்லையில்லை; ஒழுங்கீனத்துக்கோ அளவேயில்லை.

நினைவிருக்கலாம், 31.03.2024 ‘நம் வாழ்வுஇதழின் தலையங்கத்தில்நாகரிகம் பேணுமா தேர்தல் களம்?’ என்று எழுதியிருந்தோம். ‘பரப்புரைகளில் உண்மை உரைக்கப்பட வேண்டும்; நீதி உணர்த்தப்பட வேண்டும்; நேர்மை நிலைநிறுத்தப்பட வேண்டும்; தனிநபர்களின் தரமற்ற ஆளுமை விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும்; அழுக்கு வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் அர்ச்சனை செய்வது நிறுத்தப்பட வேண்டும்என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனால், இன்று நடப்பது என்ன? நாட்டின் பிரதமர் தொடங்கி, பா...வின் அடித்தட்டுப் பேச்சாளர் வரை அனைவருடைய பரப்புரையும் வரையறை கடந்து, வரம்பு மீறுகிறது; கண்ணியம் சிதைந்து கறைபடிந்து விட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி இராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாராவில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர், “காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மக்களுடைய சொத்துகளைப் பகிர்ந்தளித்துவிடும்என்று கூறியதுடன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், “நாட்டின் வளங்களில் இஸ்லாமியருக்கே முன்னுரிமைஎன்று குறிப்பிட்டிருப்பதாகச் சாடினார். அவ்வாறு பேசும் போது, “இந்திய மக்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்களை ஊடுருவல்காரர்களுக்கும், அதிகக் குழந்தைகளைக் கொண்டுள்ளவர்களுக்கும் பிரித்தளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதுஎன்று குற்றம் சாட்டினார்.

இது தேர்தல் விதிமீறல் மட்டுமல்ல, இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்து என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதையும் கடந்து, வெறுப்புப் பேச்சுக்கு எதிரான உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மீறும் செயலாகும். இது மதரீதியான பிளவையும், வன்முறையையும் தூண்டும் செயலாகும். பா...வின் வஞ்சகமான திசைதிருப்பும் எண்ணம் இது என்பதையும் நாம் உணர வேண்டும். “இந்த நச்சுப் பேச்சும், வெறுப்பும், பாகுபாடு மனநிலையும்தான் இன்றைய பிரதமரின் ஆளுமைக்கான வரையறைஎன்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின், ‘இது மிகவும் வருத்தத்துக்குரியதுஎன்று குறிப்பிட்டதுடன், ‘இது அவருடைய தோல்வி பயத்தின் புலம்பல்என்ற உண்மையையும் போட்டு உடைத்திருக்கிறார்.

மதரீதியான பரப்புரையை மேற்கொள்வது என்பது பா...விற்குப் புதிதல்ல; ஆண்டாண்டு காலமாகத் தொடரும் பாரம்பரியச் செயல் இது. ஆனால், அது இன்று உச்ச நிலையை அடைந்திருப்பதுதான் பலரையும் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது; அதிர்ச்சியளிக்கிறது. வட மாநிலங்களில் இஸ்லாமியருக்கு எதிராக வெறுப்புப் பேச்சை முன்னெடுத்து வரும் பிரதமர் மோடி, இஸ்லாமியர்களைஊடுருவல்காரர்கள்என்கிறார். ‘அதிகப் பிள்ளைகளைப் பெறுபவர்கள்என்று நாகரிகமற்றுப் பேசுகிறார் - ஆறு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்த மோடி.

நாடு முழுக்க பா...வுக்கு எதிராகக் கிளர்ந்து வரும் மக்களின் மனநிலையை மடைமாற்ற, இந்துகளின் வாக்குகளை ஒன்றிணைக்க முயல்கிறார் மோடி. அதற்காகவே 2006-இல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பேச்சில் ஒரு பகுதியை மட்டும் வெட்டி எடுத்து, காங்கிரசை இஸ்லாமியருக்கான கட்சி மட்டுமே என நிறுவ முயல்கிறார். இவர்களின் வெறுப்புப் பேச்சால் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஆன்மா முற்றிலுமாகச் சிதைக்கப்படுகிறது. உலக அரங்கில் இந்தியாவின் மானம் காற்றில் பறக்கிறது.

இந்துகளின் பாதுகாவலனாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் மோடி, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள மேற்கு வங்கத்தின் மால்டா தொகுதியில் தனது குரலை அப்படியே மாற்றுகிறார். “முத்தலாக் ஒழிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்ததன் மூலம், இஸ்லாமியச் சகோதரிகளுக்குத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்து விட்டதுஎன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

அமித்ஷாவோ இன்னும் ஒரு படி மேலே சென்று, .பி-யில்கரசேவகர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா? அல்லது இராமர் கோவில் கட்டித்தந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா? என மக்கள் முடிவு செய்ய வேண்டும்என மீண்டும் மீண்டும் மதத்தையே கையிலெடுக்கிறார். நீடிக்கும் வறுமை, தொடரும் வேலைவாய்ப்பின்மை போன்றவைகளால் விரக்தியின் விளிம்பில் இருக்கும் வட இந்திய மக்களை மதப்பூச்சாண்டி காட்டி, மீண்டும் தனது வலைக்குள் சிக்க வைக்க முயல்கிறது பா...

தேர்தலில் வெற்றி பெறுவதும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் அல்லது அதில் பங்கு பெறுவதும், அதன் மூலம் செல்வமும், செல்வாக்கும் பெறுவதும் இன்றைய அரசியல் தலைவர்களின், குறிப்பாக பா...வின் இலக்கு. அரசியல் நாணயம், அறம் சார்ந்த அரசியல், ஒழுக்கம், கூட்டுப்பொறுப்பு, உன்னத இலட்சியம், உயர்ந்த நோக்கம், வளர்ச்சிக்கான கொள்கைகள், திட்டங்கள் என யாவும் விடைபெற்று விட்டனஅறம் சார்ந்த அரசியல்  மலையேறிப் போய்விட்டது. சுருக்கமாகச் சொன்னால், பிழைப்பு வாதிகளின் புகலிடமாக இழிந்து போய் விட்டது இன்றைய அரசியல். இதனால் தேர்தல் அரசியலின் மீதே நம்பிக்கையற்று விட்டார்கள் இந்தியர்கள். நடந்து முடிந்த வாக்குப் பதிவின் குறைந்த சதவிகிதம், இந்த உண்மையைத்தான் உரக்கச் சொல்கிறது.

அரசியலில் பிழைப்புத் தேடியவர்கள் தமக்கான இருப்பிடங்களை வலுவாக்கிக் கொண்டார்கள். இவர்களை இறக்குவதும், இறங்க வைப்பதும் கடினம்; அகற்றுவதும், அப்புறப்படுத்துவதும் நம் முன் நிற்கும் பெரும் சவால்வெற்றி வாய்ப்பும், அரசியல் ஆதாயமுமே இவர்களின் குறிக்கோளாக, தாரக மந்திரமாக மாறிவிட்டதால், அநாகரிகத்தின் கடைசி எல்லைவரை சென்றுவிட்டார்கள். தொண்டும், தூய்மையும் என்றோ இவர்களிடமிருந்து தூர விலகிவிட்டன!              

இத்தகைய நிலையில் ஓர் அரசும், அரசனும், அரசவையும் எத்தகைய மாண்புடன் இருக்க வேண்டுமென வரையறை தருகிறார் உலகப் பொதுமறை தந்த ஐயன் வள்ளுவர்.

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு’ (குறள் 385).

அதாவது, முறையாகப் பொருள் சேர்க்க நிதி ஆதாரங்களைத் தீட்டி, அரசு கருவூலத்திற்கு வருவாயைத் திரட்டி, அவ்வாறு திரட்டப்பட்ட செல்வங்களைப் பிறர் கவராத வண்ணம் பாதுகாத்து, திட்டமிட்டுச் செயல்படுவதுதான் திறமையான ஒரு நல்லாட்சிக்கு இலக்கணம் என்கிறார்.

இங்கே ஆட்சி என்பது ஆற்றல் பொருந்தியிருக்க வேண்டும். அதற்கு முறையான திட்டமிடலும், செயல்பாடுகளும் இருக்க வேண்டும் என்று தெளிவு படுத்துகிறார் வள்ளுவப் பெருந்தகை. அவ்வாறே அரசனோ... 

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மானம் உடைய தரசு’ (குறள் 384) என்கிறார்

அதாவது, ஆட்சி முறைக்கு உரிய அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் குறைவு படாது மானத்தோடு அரசாள்பவனே சிறந்த அரசன், தலைவன், வழிகாட்டி என்று ஆள்வோருக்கு இலக்கணம் வகுக்கிறார்.

இத்தகைய சிறப்புமிக்க ஓர் அரசனைச் சூழ்ந்திருக்கும் அமைச்சர்களின் ஆளுமைக்கான வரையறையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்

திறனறிந்தான் தேர்ச்சித் துணை’ (குறள் 635)

அதாவது, அறநெறிகளைத் தெரிந்து, கல்வியால் சிறந்தவராகவும், மேன்மையானவற்றை எடுத்துரைக்கும் சொல்லாற்றல் கொண்டவராகவும், எப்போதும் செயலாற்றும் செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே அரசருக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கக் கூடிய துணையாக விளங்க முடியும் என்கிறார்

பொய்மையையும், புரட்டுகளையும், பகைமையையும் அடித்தளமாகக் கொண்ட பா...வின் நாகரிகமற்ற செயல்பாடுகளால்வள்ளுவன் வகுத்த அறநெறி மதிப்பீடுகளிலிருந்து முற்றிலும் முரண்பட்டு நிற்கிறது இன்றைய இந்திய அரசியல் சூழல்

இந்தியாவில் இந்துகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பவர்கள் கனவுலகத்தில் வாழ்பவர்கள். இந்தியாவைத் தங்கள் நாடாகக் கொண்டிருக்கும் இந்துகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் அனைவரும் இந்த மண்ணின் மக்களே. உலகின் எந்தப் பகுதியிலும் ஒரே தேசியச் சமுதாயம் என்பது ஒரே மதம் என்ற நிலையில் இருந்ததில்லை. இந்தியாவிலும் அப்படியில்லைஎன்கிறார்இந்திய சனநாயகம்என்ற நூலில் காந்தியடிகள்.

எனவே, அறிவார்ந்த சமூகம் விழிப்படைய வேண்டிய நேரமிது. அன்பர்களே! நல்ல நிர்வாகமும், மக்கள் நலனும், நாட்டு ஒருமைப்பாடும் முன்னி றுத்தப்பட வேண்டும். நல்ல நிர்வாகம் அமைய நல்ல அரசியல் கட்சிகள் வேண்டும்; நல்ல அரசியல் கட்சி அமைய சுயநலமில்லா நல்ல தலைவர்கள் வேண்டும்; அதற்குப் பொதுநலன் கொண்ட கற்றறிந்த அறிவார்ந்த இளைய சமூகம் திரண்டெழ வேண்டும். எளிமையும், நேர்மையும், தூய்மையும் துலங்க, மண்ணில் தூய்மையான அக வாழ்வும், நேர்மையான பொது வாழ்வும் கொண்ட மனிதர்களாக இளையோர் புறப்பட வேண்டும்.   சமூகநலன் பேணும் இளையோர் ஒருங்கிணைந்து அமைப்புகள் மூலம் மாற்றத்தை முன்வைத்துச் செயல்பட வேண்டும். புதிய சமுதாயத்திற்கு, புதிய இந்தியாவிற்கு அதுவே புதியதொரு பாதை வகுக்கும்!

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்

 

Comment