No icon

மே தினம்:

உழைப்பே உயர்வு தரும்!

என் இனியநம் வாழ்வுவாசகப் பெருமக்களே! உங்கள் ஒவ்வொருவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்!

மே தினம் ஒப்பற்ற உன்னதமான நாள்! உழைப்பின் மேன்மையையும், உழைப்பாளிகளின் உன்னதத்தையும் உணர்த்தும் நாள் இது. இந்த நாள் ஆண்டு நாள்காட்டியில் அணிகலனாக வந்து அலங்கரித்த நாளல்ல; மாறாக, மனித மாண்பை, உழைப்பவர் மேன்மையை, உழைப்பின் கண்ணியத்தை, உழைப்பவர் உரிமையை உலகிற்கு உணர்த்த மேற்கொண்ட போராட்டங்கள், உயிரிழப்புகளின் வலியால் பிறந்த நாள் இது. விடுதலைப் போராட்டத்திற்கும், விடுதலை நாளுக்கென்றும் ஒரு வரலாறு நீண்டிருப்பது போன்று, உழைப்பாளர்களின் உரிமைக்கும், உழைப்பாளர் தினத்திற்கும் வித்திட்டுப் போராடிய போராளிகளின், தொழிற்சங்கங்களின் நீண்டதொரு வரலாறும் மானுடச் சமூகத்தின் விடுதலை விழுமியங்களின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொருவருடைய உழைப்பும் அங்கீகரிக்கப்பட வேண்டும்; அது கொண்டாடப்பட வேண்டும். ஆனால், அன்றும் இன்றும், ‘உழைப்புஇங்கு அரசியலாக்கப்படுகிறது; அடிப்படை உரிமைக்காகப் போராட வேண்டியிருக்கிறது. எட்டு மணி நேர உழைப்பு, சிறப்பு ஊதியம், ஊதியத்துடன் கூடிய விடுப்பு போன்றவை அப்போராட்டங்களின் கனிகளாகும். இவை இன்றைய காலத்தில் சாதாரண அடிப்படை உரிமையாகத் தென்பட்டாலும், இவற்றைச் சட்டப்பூர்வமாக்கவும், அறநெறிப்படுத்தவும் அன்றைய ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராக மேற்கொண்ட போராட்டங்களை அறிய வரலாற்றுப் பக்கங்களைச் சற்றே நாம் பின்னோக்கிப் புரட்ட வேண்டும்.

உழைப்பாளர் உரிமைக்கான போராட்டத்தில், ‘எட்டு மணி நேர வேலைஎன்ற முழக்கமே அன்று தொடக்கப் புள்ளியாய் அமைந்தது. 16 மணி நேரமும் 6 நாள்களுக்குக் குறையாமல் ஒருவர் வேலை செய்ய வேண்டும் என்ற சூழலே இம்முழக்கம் எழுப்பப்படக் காரணமானது. 1806-இல் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரத்தைப் பத்து மணி நேரமாகக் குறைக்க வேண்டி நடத்திய போராட்டம், நாளொன்றுக்கு இருபது மணி நேரம் வரை இவர்கள் வேலை வாங்கி சுரண்டப்பட்ட கொடுமையை வெளிக்கொணர்ந்தது. இப்போராட்டத்தை முன்னிறுத்தி 1810-இல் இங்கிலாந்தின் நியூலானார்க் என்ற இடத்தில் தொடங்கப்பட்ட இயக்கமும், 1848-ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சிக்குப்பின் பிரெஞ்சுத் தொழிலாளர்கள் 12 மணி நேரமாகத் தங்கள் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டிப் போராடியதும் உச்ச நிலை அடைந்து, 1886-ஆம் ஆண்டு மே மாதம் 1 - ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோஹேய மார்க்கெட்பகுதியில் 80,000 தொழிலாளர்கள் திரண்ட பேரணியால் உலகெங்கும் எதிரொலித்தது. இப்போராட்ட அதிர்வலைகளால் சில நாள்களிலேயே அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் தீவிரமாகப் போராட, போராட்டக் களத்தில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததும், போராட்டத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டதும் உலக அளவில் தொழிலாளர்களிடையே பெரும் கிளர்ச்சியை உருவாக்கியது.

இத்தொடர் போராட்டத்தின் இறுதியில், தொழிலாளர் ஒற்றுமையும், இயக்கத்தின் வலிமையும்எட்டு மணி நேர வேலைஎன்ற முடிவை அரசால் ஒப்புக்கொள்ள வைத்தது. இவ்வாறாக, தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு உரமிட்டு, வலிமைக்குப் போராட வைத்த மே 1-ஆம் தேதி நிகழ்வு, ‘உழைப்பாளர் தினமாகஉலகெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது.

உழைப்பே ஒவ்வொருவருடைய வாழ்வையும் மேன்மைப்படுத்துகிறது. வாழ்வும், உழைப்பும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதவை. உழைப்பே வாழ்வு என்றாகிறது; உழைப்பிற்கே உரியது வாழ்வு என்றும் தெளிவாகிறது. வாழ்வு உழைப்பினாலானது; உழைப்பினால் ஒருவரின் வாழ்வு உயர் நிலை அடைகிறது.

தன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துப் படைத்துத் தன் உணவை உண்பவர்களே மேலானவர்கள் என்கிறது உலகம். ஆகவேதான் தூய பவுல், “உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது” (2தெச 3:10) என்கிறார். தான் கூறியது போலவே உழைத்தே அவர் உண்டார். அவ்வாறே, காந்தியடிகளும்உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள்என்கிறார். எனவே, உழைப்பு வாழ்க்கையின் இயல்பாக, அங்கமாக இருக்க வேண்டும். சோம்பலுடனும், சோர்வுடனும் நூறு ஆண்டுகள் வாழ்வதை விட பெரும் முயற்சியுடனும், கடின உழைப்புடனும் ஒருநாள் வாழ்வதே மேலானது. அதுவே இம்மண்ணில் சொர்க்கத்தின் வாசலைத் திறக்க வழிவகுக்கும். உழைத்தால் வெற்றி நம் வீட்டு வாசல்கதவைத் தட்டியே தீரும் என்று நிரூபித்தவர்கள் உலகில் எண்ணற்றோர்.

ஆகவேதான், உழைப்பின் மேன்மையை அறிந்த உலகப் புகழ்பெற்ற கவிஞரும், கல்வியாளருமான ஹென்றி லாங்ஃபெல்லோ, “பெரிய மனிதர்கள் உச்ச நிலையை அடைந்தார்கள் என்றால், அவர்கள் திடீர் என்று தாவிக் குதிக்கவில்லை; மாறாக, மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போதும் அவர்கள் உழைத்துக் கொண்டிருந்தார்கள்என்கிறார். இப்படிப்பட்டவர்கள்தான்,

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்

கருமமே கண்ணாயி னார்

என்கிறார் ஒளவையார். காய்த்துப் போன கைகளும் கால்களுமே உழைப்பவர்களின் அடையாளம்; கைகள் மரத்துப் போனதும், மாறிப்போனதுமே கடின உழைப்பின் கைமாறு! இத்தகைய உழைப்பின் மேன்மையும், உழைப்பவர் மாண்பும் இன்றைய தலைமுறைக்கு உணர்த்தப்பட வேண்டும். உழைக்கும் கரங்கள் வணக்கத்துக்குரியவை. தன்னைச் சந்திக்க வந்த ஒருவரின் கைகளைப் பற்றி கண்ணில் மாறி மாறி ஒற்றிக்கொண்ட நபிகள்இக்கரங்களில் உழைத்துக் காய்த்துப்போன சுவடுகள் இருந்தன. எனக்கும், உலகிற்கும் உணவு படைப்பது இந்தக் கரங்களே!” என்று கூறிய வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன. உழைப்போரை மேன்மைப்படுத்தவே ஐயன் வள்ளுவரும்,

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்’ (குறள் 1033)

என்கிறார். அறிவுழைப்பு, உடலுழைப்பு என வகைப்படுத்தப்படும் உழைப்பில் அறிவுழைப்பை உயர்ந்ததாகவும், உடலுழைப்பைத் தாழ்ந்ததாகவும் பார்ப்பது மடமையே. உழைப்பின் வகையால் உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்றில்லை. உழைப்பவர் யாவரும் மேலோரே! அறிவுழைப்பும், உடலுழைப்பும் இணைவதே வளர்ச்சி. இவற்றில் ஒன்று சிறந்து, மற்றொன்று தளர்ந்தால் அது வீழ்ச்சி. இரண்டும் இணைந்து பயணித்தால்தான் உலகம் தழைக்கும். ஒன்றிலிருந்து மற்றொன்று விலகி நின்றால் உலகம் தவிக்கும்.

நான் எப்போதும் உழைத்துக் கொண்டே இருப்பேன். என்னால் ஒருபோதும் சும்மா இருக்க முடியாது. மரணம் மட்டுமே என் உழைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்என்றார் ஆபிரகாம் லிங்கன். உயிருள்ளவரை மனிதன் உழைத்துக் கொண்டே இருக்கிறான்; இருக்க வேண்டும். உழைக்காதவனுக்கு உறக்கம் கூடாது. எதிலும் முயற்சி இல்லாதவனுக்கு மகிழ்ச்சி கிடையாது. முயற்சியும், உழைப்பும் இல்லாத மனிதனுக்கு வாழ்க்கையும் இல்லை, வளர்ச்சியும் இல்லை. ஒவ்வொரு மனிதனின் பெருமைக்குரிய உடைமை அவரவருக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கை. வாழ்க்கை என்பதுவாழ்தல்எனப் பொருள்படும். வாழ்க்கை தேக்கமற்ற உழைப்பால் அணி செய்யப்பட வேண்டும். உழைப்பே உயர்வு தரும்; சிறப்பைத் தரும்; இறுதி நாள் வரைக்கும் உழைப்பு தொடர வேண்டும். வாழ்வின் ஒரு நொடிகூட பொருளற்று வீணாகி விடக்கூடாது.

பிரிட்டனின் பிடியிலிருந்து அமெரிக்க மக்களை விடுவிக்க போர்க்களம் புகுந்து, வலிமை மிக்க பிரிட்டிஷ் இராணுவத்தை வீழ்த்தி வெற்றி கண்டார் அமெரிக்கப் படையின் தலைமகன் ஜார்ஜ் வாஷிங்டன். போர் முடிந்தது, அமெரிக்க மண்ணில் சுதந்திரக் கொடி பறந்தது. ஆனால், வாஷிங்டன் எந்தப் பதவியையும் எதிர்பார்க்காமல் தன் விளை நிலங்களில் விவசாயம் செய்யப் புறப்பட்டுவிட்டார் என்பது வரலாறு. ஆயினும், மக்களோ அவரை விடவில்லை; இரண்டு முறை அதிபராக முடிசூட்டி மகிழ்ந்தனர். உழைப்பவனுக்கு உன்னதமான கைம்மாறு உறுதி.

உழைப்பு எந்த வகையில் வெளிப்பட்டாலும், உழைப்பு உழைப்புதான். உழைப்பு யாவருக்கும் பொதுவானது. நாமனைவருமே உழைப்பாளிகள்தான். உழைக்கும் அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டிய நாள் இது. உழைப்பவர் உரிமைகளைப் பெற்றுத் தந்த வரலாற்றுத் தலைவர்களை நன்றியோடு எண்ணிப் பார்க்க வேண்டிய நாள் இது. கொண்டாட்டத்தின் மத்தியில் உழைப்பாளர்களின் எதார்த்த நிலையையும் அலசிப் பார்க்க வேண்டும். நூற்றில் ஒன்பது பேர் மட்டுமே அமைப்பு சார்ந்த பணிகளில் (Organised Sector) ஈடுபட்டிருக்கின்ற னர். அவர்களுக்கு மட்டுமே உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 91 பேர் வீட்டு வேலை, கட்டட வேலை, விவசாயக் கூலி வேலை, பிற தினக் கூலி வேலை என்ற அமைப்பு சாரா (Unorganised Sector) தொழிலாளர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு இந்த உரிமைகளும், சலுகைகளும் அளிக்கப்படுகின்றனவா? மாண்புடன் நடத்தப்படுகின்றனரா? என்பதே பெரும் கேள்வி.

வளரும் இந்தியாவையே நாம் எதிர்நோக்கியிருக்கிறோம். ஆயினும், முழுமையான, பரவலான வளர்ச்சி என்பது எல்லா நிலைகளிலும் உள்ள உழைப்பாளர்களின் பங்களிப்பிலும், அங்கீகாரத்திலும் உருவாக வேண்டும். ஒன்றிணைந்து உழைப்போம்! ஒளிமயமான இந்தியாவைப் படைப்போம்!

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்

 

Comment