No icon

மாண்புமிகு வாக்காளர்களே...

ஒரு வாக்கியத்தில், ‘முற்றுப்புள்ளிஎன்பது மிக முக்கியமானது. அது கருத்தை நிறைவு செய்யும்; சிந்தனைத் தெளிவை உறுதி செய்யும். இது வாக்கியத்திற்கு மட்டுமல்ல, வாழ்வியலுக்கும் பொருந்தும். அநீதிக்கு முற்றுப்புள்ளி என்பது, நீதிக்குத் தொடக்கம் என்றுதானே பொருள்! ஏன் இந்த முற்றுப்புள்ளி? எதற்கு இந்த முற்றுப்புள்ளி? என்பது எதார்த்தமான ஒரு முடிவை எடுப்பதற்கான சிந்தனையாக இருக்க முடியாது. அது தீர்க்கமான சிந்தனையின் செயல்பாடாகவே இருக்க வேண்டும். ஏன்? எதற்கு? என்பதையும் கடந்து, எப்படி முற்றுப்புள்ளி வைப்பது? என்பதே பல சூழல்களில் நாம் எதிர்கொள்ளும் பெரும் சவால்! ஆனால், அரசியலை உள்ளடக்கிய வாழ்வியலில் இது சாத்தியமே!

முற்றுப்புள்ளிக்கான முகவுரையே தேர்தல்; முடிவுரையே வாக்களிப்பு. அன்றும் இன்றும்வாக்களிப்புஒன்றே எதையும் சாத்தியப்படுத்தும். வாக்கு வல்லமை கொண்டது. ஒவ்வொரு வாக்காளரும் இதை உணர்ந்தால், மாற்றம் என்பது தீர்க்கமாகும்; அதுவே நம் விடியலின் கீதமாகும்.

தேர்தல்’, ‘வாக்களிப்புஇவை இரண்டையும் பற்றிச் சற்றே நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நேரமிது. தேர்தல் என்பது நாட்டின் பன்முக வளர்ச்சி சார்ந்தது. தேர்தலில் வாக்களிப்பது நமது உரிமையும், கடமையும் ஆகும். தேர்தல் நாளில் வாக்களிப்பதை நம் முதல் கடமையாகக் கருத வேண்டும். பொறுப்புமிக்க நமது சனநாயகக் கடமை என்று உணர வேண்டும்.

தேர்தல் சனநாயகத்தில் மக்களே இந்நாட்டின் மன்னர்கள்; பிறகு எப்படி நாம் அரசியல்வாதிகளுக்கு வாக்கு வங்கியானோம்? அது என்னவாக்கு வங்கி?’ வங்கி என்றதும் பண பரிவர்த்தனைதான் இவர்களுக்கு நினைவுக்கு வருகிறதோ! இவர்களுக்கு மட்டும்தானா? நமக்கு இந்தச் சிந்தனை எழுவதில்லையா? ‘ஏமாறுபவன் இருக்கும்வரை, ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்என்பதை மறந்துவிடக்கூடாது. வாக்குச் சாவடிக்குச் செல்லும்முன் மாண்புமிகு வாக்காளர்களே, நாம் சற்றே தீர்க்கமாகச் சிந்திக்க வேண்டும்.

ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வழிபாடு நடத்துவதற்காகவா நமது வாழ்க்கை? ‘நம்மை ஆள்பவர்களை உருவாக்குபவர்கள் நாம்தான்என்ற புரிதல் நமக்கிருக்கிறதா? இதுவரை நாம் உருவாக்கி வந்த ஆள்வோர்கள் யார் யார்? நமக்குத் தரப்பட்டிருக்கும் வாக்கின் வல்லமையை நாம் அறிவோமா? அப்படி அறியாததால்தான் வாக்குப் பிச்சை கேட்டு நம் வாசல் வந்தவர்கள், நம் வாழ்நாள் எல்லாம் நம்மைப் பிச்சை எடுக்க வைக்கிறார்கள். வறுமை வாட்டுவதால் வாக்குச் சுதந்திரத்தின் வலிமை அறியாமல், தரமற்ற மனிதர்களுக்குத் தலை வணங்குகிறோம். ஏன் இந்த வறுமை? இந்த வறுமை எவரால் வந்தது என்று எப்போதாவது நாம் சிந்தித்ததுண்டா? நமது அறியாமையே அவர்களின் மூலதனம் என்பதை என்றாவது உணர்ந்ததுண்டா? சுயநலத்தில் ஊறித் திளைக்கும் தலைவர்களின் திருவிளையாடல்களை இன்னும் எவ்வளவு நாள்கள் நாம் பார்த்து இரசிக்கப் போகிறோம்? அரசியல் கட்சிகள் சந்தர்ப்பவாதத்தில் சாகசம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டோமா? இவர்கள் விளையாடும் சதுரங்க விளையாட்டில் வெட்டப்படும் காய்கள் நாம்தான் என்ற புரிதல் எப்போது நமக்கு ஏற்படப் போகிறது? நாம் விழிப்புணர்வு பெற்றுவிட்டால், அவர்கள் விழிபிதுங்கி விடுவார்கள் என்பதை என்றாவது எண்ணியதுண்டா? நாம் விழிப்புணர்வு அடையாத வரை இந்திய நாடு விழித்தெழ வாய்ப்பில்லை.

புழுக்கள் நெளிவதால்

ஏற்பட்ட சலனத்தை

நீரோட்டம் என்றால்

ஏமாந்தா போவோம்

என்ற கவிஞர் இன்குலாப்பின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

கடந்த பத்து ஆண்டுகளில் நாடெங்கும் மக்களின் வாழ்வியல் சூழலில் அதிகம் எதிரொலித்த பதம்இல்லைஎன்பதுதான். ‘இல்லைஎன்பதுதான்  இங்கு எங்கும் இருக்கிறது. சிறுபான்மையினருக்கு வாழ்வுரிமை இல்லை; பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளோருக்குப் பொருளாதார ஏற்றம் இல்லை; விவசாயிகளுக்கும், ஏனையோருக்கும் வாழ்வாதாரம் இல்லை; கூலித் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை; மீனவர்களுக்குப் பாதுகாப்பில்லை; பலருக்குத் தொழிற்சாலையின் கதவுகள் திறக்கப்படவில்லை; கற்றறிந்த இளையோருக்கு வேலை இல்லை; கிராமங்களில் அடிப்படை வசதி இல்லை; தனிமனித-சமூகப் பொருளாதார வளர்ச்சியில்லை; ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றமில்லை; தனிமனித கருத்துச் சுதந்திரம் இல்லை; ஊடகங்களுக்குச் சுதந்திரச் செயல்பாடுகள் இல்லை; ஆள்வோரின் பேச்சில் உண்மை இல்லை; நீதிமன்றங்களில் உரிய நீதி இல்லை; அரசு இயந்திரத்தின் செயல்பாடுகளில் உண்மைத் தன்மை இல்லை; அரசு அதிகாரிகளின் வாழ்வில் நேர்மை  இல்லை. மொத்தத்தில், நல்லவர்களுக்கு அரசியலில் இடமில்லை!

எனவே, அரசியலும், அதன் குழந்தையாக அமையும் அரசும் நலமானதாக அமையாவிட்டால், நாட்டின் நான்கு புறமும் சமூக-அரசியல்-பொருளாதார வாழ்வியலைத் தாக்கும் நோய்கள் பீடிக்கும். ஆயினும் நலமான ஆட்சி அமைந்தால் மட்டுமே, வளமான மருந்துகள் அவற்றை ஒழித்துக் கட்டும்.

ஊழல் பேர்வழிகளும், ஊர்ப் பணத்தில் சுற்றித் திரியும் அரசியல்வாதிகளும் தாங்களாகவா அதிகாரத்தில் வந்து அமர்ந்தார்கள்? இல்லை, நாம்தானே விவரமில்லாமல் வாக்களித்து வினையை அனுபவிக்கிறோம். ஆட்சித் தலைமையில் வந்து அமரும் மனிதர்களின் மேன்மையைப் பொறுத்தே நாட்டின், இச்சமூகத்தின் மேன்மையும் அமையும். இப்பேருண்மையை உணர்ந்து நாம் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

நாடு... நமது முகவரி; நமது இருப்பிடம்; நமது வாழ்விடம்; அதுவே நமது அடையாளம். இந்நாடு வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் நாமே பொறுப்பு. ஒரு நாட்டின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது; இல்லையில்லை, ஒற்றை விரலில்தான் உள்ளது. உலகம் முழுவதையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து ஆட்டிப் படைக்க முயன்றநாஜிஹிட்லரும் இந்த ஒற்றை விரலால் - தேர்தல் மூலம் பதவிக்கு வந்தவர்தான். ஆக, நம் விரலில் இடும் புள்ளி நம் வாழ்க்கைக்கு வைக்கும் முற்றுப்புள்ளியாக மாறிவிடாது, யாருக்கான முற்றுப்புள்ளி என்பதில் கருத்தாய் இருப்போம்.

மனித குலத்தை எது பிரித்துச் சிதைக்குமோ அது கேடானது; தவறானது; இழிவானது!’ என்றார் லியோ டால்ஸ்டாய். 2014-இல் இருந்து நமது அடையாளங்கள் சிதைக்கப்படுவதும், வாழ்விடங்கள் மறுக்கப்படுவதும், ‘வேற்றுமையில் ஒற்றுமைஎன்ற பன்முகப் பண்பு புறந்தள்ளப்படுவதும் திட்டமிட்ட செயல்களாகவே தொடர்கின்றன. இதற்கான திட்டங்கள்நாக்பூரில்தீட்டப்படுகின்றன. நாடு முழுக்க நடைமுறைப்படுத்தப்படுகின்றன. குனிந்தவர் நிமிர்ந்தெழுந்தால் என்ன நடக்கும்? அதற்குச் செயல்முறை விளக்கம் சொல்லும் நாள்தான் ஏப்ரல் 19.

வாழ்க்கை முழுவதும் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்பவர் யாரோ, மக்களுக்குத் தீமை தரும் செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல், இருப்பவர் யாரோ, அவரையே மக்கள் தங்கள் ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்என்று தன்னுடைய அழியாப் புகழ் பெற்றஅரசியல்எனும் நூலில் அறிவுறுத்துகிறார் மாமேதை அரிஸ்டாட்டில். ஆகவே, எந்த விதமான சிந்தனைத் திறனும், செயல் ஊக்கமும், சமூகக் கண்ணோட்டமும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் இல்லாது, பதவி ஒன்றையே இலக்காகவும், பணம் ஒன்றையே முதலாகவும், புகழ் ஒன்றையே கொள்கையாகவும், இவற்றை அடைய சாதி, மதங்களைக் கேடயமாகவும் பயன்படுத்தும் மனிதர்கள் எனப்படும் மாக்களை இந்தத் தேர்தலுக்குப் பின் அரசியலிலிருந்தே அப்புறப்படுத்துவோம்.

மாற்றாக, மனச்சான்றுக்கும், உயரிய இலட்சியத்திற்கும் மதிப்பளிக்கும் அரிய ஆளுமைகளை அரியணையில் அமர வைப்போம். ஏனெனில், அநீதிக்காரர்கள் அகற்றப்படாமல் மீண்டும் அரியணையில் அமர்த்தப்பட்டால்நமது அறியாமை உலக அரங்கில் கேலிக்குள்ளாக்கப்படும்.

தன் வாழ்க்கை வரலாற்றைப் வடித்த லூயி ஃபிஷரிடம் உரையாடும் போது கனத்த இதயத்துடன் தேசப்பிதா மகாத்மா காந்தி, “என்னுடைய இந்தியா இப்போது என்னுடன் இல்லை என்பதை நான் நன்றாக அறிவேன்என்று கூறியது நினைவுக்கு வருகிறது. விடுதலை நாள் அன்று நாம் பெற்றநமது இந்தியாஇன்று நம்முடன் இல்லை. ‘இந்தியா என் தாய்நாடு; இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர்என்பது இன்று நம் உள்ளத்திலுமில்லை, உதட்டிலுமில்லை.

ஆயினும், ‘ஒளிமயமான எதிர்காலம்சற்றே என் நம்பிக்கையில் தளிர்விடுகிறது. தெற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும் வரும் செய்திகள் மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன. எனவே, நம் நம்பிக்கை நாளை சாத்தியமாகும்! இந்த நாட்டை ஆள்பவர்களும், ஆள விரும்புபவர்களும் எப்படி இருக்க வேண்டும் என்ற தீர்ப்பை நாம்தான் எழுத வேண்டும். ஏனெனில், மக்களாட்சியின் இறுதி அதிகாரம் அதன் குடிமக்களான நம்மிடம்தான் உள்ளது.

நேர்மையும், நல்லொழுக்கமும், நிர்வாகத் திறனும், தொலைநோக்கு எண்ணமும், வளர்ச்சிப் பணிக்கான தீர்க்கமான தெளிவும் உள்ளவர்களே பதவி நாற்காலிகளில் அமர வேண்டும். இதை அலங்கரிப்பவர்களுக்கு நாட்டுப்பற்று மட்டும்தான் ஒரே அளவுகோல். தகுதிக்கும், திறமைக்கும் தலை வணங்கும் தேசமாக நம் நாடு விளங்க வேண்டும்.

எனவே, ஒன்றுபட்டு உறுதி ஏற்போம்! உலகு வியக்கும் ஒருமித்த இந்தியாவை, புதிய இந்தியாவைப் படைப்போம்!

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்

Comment