No icon

தலையங்கம்

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுதல் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி!

ஒரு ஜனநாயகப் போராட்டம் காலதாமதம் ஆனாலும் வெற்றி பெற்றே தீரும் என்பது மூன்று வேளாண் மசோதாக்களும் திரும்பப் பெறப்பட்டதன் மூலம் மீண்டும் ஒருமுறை நிருபணமாகியுள்ளது. ஏறக்குறைய 750க்கும் மேற்பட்ட விவசாயிகளை பறி(லி)கொடுத்த நிலையில், 13க்கும் மேற்பட்ட விவசாயிகள் இச்சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், ஓராண்டுக்கும் மேலாக அற வழியில் போராட்டம் நடத்திய நிலையில், நவம்பர் மாதம் 19 ஆம் தேதி இச்சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிரதமரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற பெயரில் எண்ணற்ற விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து, இந்தப் போராட்டத்தை நடத்தி, பாஜகவைத் தேர்தலில் வீழ்த்துவோம் என்று ஒரே முடிவில் இவர்கள் நீடித்து அறவழியில் நிலைத்து நின்றதால் ஒன்றிய அரசால் இவர்களை ஒன்றும் செய்ய இயலவில்லைகிசான் மகாபஞ்சாயத்துகள்  உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானாவின் பாஜக அரசை அசைத்துப்பார்த்ததுநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி தினம் தினம் நடத்தவிருந்த டிராக்டர் பேரணி அதிர்ச்சியளித்தது. கடந்த ஓராண்டு காலமாக விவசாயிகளின் அறவழி போராட்டத்தை ஒடுக்க ஒன்றிய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் மிகப்பெரிய அளவில் முயற்சித்தன. கடந்த குடியரசு தின விழாவன்று நடத்திய டிராக்டர் பேரணியை வன்முறைக்களமாக மாற்றியமைத்தனர்; செங்கோட்டையிலும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறும்வகையில் பார்த்துக்கொண்டனர். விவசாய சங்கங்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தினர்; அவர்களின் ஒற்றுமையை சீர்குலைத்தனர். போலீசாரைக் கொண்டு கூடாரமடித்து போராடிய விவசாயிகளை அப்புறப்படுத்தினர்; அவர்களைச் சுற்றி முள்வேலி அமைத்தனர்; வெளியிலிருந்து மேலும் விவசாயிகள் வராத வண்ணம் தடுப்புகளை ஏற்படுத்தினர்சாலைகளில் ஆணிகளைக் கொண்டு தடுப்பு அரண்கள் அமைத்தனர். தண்ணீர் பீரங்கிகளும் லத்திகளும் அவர்களைச் சூழ்ந்தன. உணவும் தண்ணீரும் மேலும் கிடைக்காத வண்ணம் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இப்போராட்டத்தை ஒருங்கிணைக்கும் ராகேஷ் திகைத் அவர்களுக்கு மிரட்டல் கொடுத்துப் பார்த்தனர்கடும் வெயிலிலும், கொட்டும் பனியிலும், நடுங்கும் குளிரிலும் பெய்யும் மழையிலும் அவர்கள் தங்கள்  போராட்டத்திலிருந்து துளியும் பின்வாங்கவில்லை. தாமரைக்கு வாக்களித்தது தவறு; இனி அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டோம் என்று கிசான் மகாபஞ்சாயத்துகள் வழியாக செய்த பிரச்சாரம் இடைத்தேர்தலில் பாஜக மண்ணைக் கவ்வ உதவியதுஇந்த நிலையில்தான் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வெளியே, ‘வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். விவசாயிகளிடம் மன்னிப்பைக் கேட்டுள்ளார்.

வழக்கம்போல் சோகமான முகத்துடன், விவசாயிகளின் வேதனைகளை, சவால்களை நான் அறிவேன் என்று கேமராக்களுக்கு முன்பு உருகி, உருகி அறிவித்துள்ளார்விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார். வேளாண் சட்ட நலனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு புரிய வைக்கமுடியவில்லை என்று தங்கள் தவறை ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கான நடவடிக்கையை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எடுப்பதாக அறிவித்துள்ளார். மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப்பெறுவதற்கு மூலக் காரணமாக இருந்தவர்கள் முழுக்க முழுக்க பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச விவசாயிகள்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இறுதியில் மக்கள் சொல்வதையே ஒன்றிய அரசு கேட்கும் என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் தோல்வியால் பாஜகவுக்கு ஞானம் பிறந்துள்ளதுதேச விரோதிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட விவசாயிகள் தற்போது இவர்களின் நண்பர்களாகியுள்ளனர். தேர்தல் தோல்வி இவர்களை அடிபணிய வைத்துள்ளது. உலக வரலாற்றிலேயே மிக நீண்ட அறவழிப் போராட்டம்  இறுதியில் வெற்றி கண்டுள்ளதுநாடாளுமன்றத்தில் முறையாக சட்டங்கள் திரும்பப் பெறும்வரை நாமும் காத்திருப்போம்.

ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி

இது காலத்தின் பெருமை! பெண்குலத்தின் பெரும்பேறு!

பெண்கல்வி மட்டுமே ஒரு குடும்பத்தின், நாட்டின், சமூகத்தின் விடுதலைக்கான பேராயுதமாக அமைய முடியும். திருஅவையும் சமூகமும் ஆணாதிக்க மனப்பான்மையிலிருந்து விடுபட வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. விண்வெளி முதல் உலகின் அனைத்து துறைகளிலும் கோலோச்சும் மகளிரை நம் தமிழ்ச்சமூகமும் கொண்டாடி மகிழ்ந்திட வேண்டும். மண்வாசனையோடு இம்மண்ணுக்காக, இம்மக்களுக்காக, இடம்-பொருள்-ஏவல் என்று அனைத்தையும் அறிந்து தமிழகத்தில் பிறந்த அருள்சகோதரிகளின் சபைகளில் முதன்மையானது திருச்சி புனித அன்னாள் சபை. இவர்கள் காலத்தோடு தாங்களும் வளர்ந்து, ஞாலத்தில் காலத்திற்கேற்றார்போல் தங்களையும் திருஅவையையும் வளர்த்து, காலத்தையும் வென்று, ஒன்றரை நூற்றாண்டு காலமாக, தமிழகத் திருஅவை வரலாற்றில் அளப்பரிய பங்களிப்புச் செய்துள்ளனர் என்றால் அது மிகையன்று. அறிவிலும் ஆற்றலிலும் கல்வியிலும் சேவையிலும் களப்பணியிலும் மறைப்பணியிலும் இவர்கள் முத்திரைப் பதித்துள்ளனர். மேட்டிமைச் சமூகத்திற்கு மட்டுமே எங்கள்சேவை என்று நகரங்களில் பல்வேறு துறவறச் சபைகளின் (உயர்) கல்வி நிறுவனங்கள் முடங்கியது நாமறிந்ததே. இவர்களோ பட்டி தொட்டிகளைத் தேடி, கிராமங்களைத் தேடி, சிறு நகரங்களைத் தேடி தங்களின் கல்விப் பணியை அமைத்துக் கொண்டனர். பொன்விழாக் காணும் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி இவற்றுள் முதன்மையானது. எஸ்டேட் தொழிலாளர்களின் பிள்ளைகள், மலையகத் தமிழர்களின் வாரிசுகள், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், விளிம்புநிலை மக்கள், கள்ளிக்காட்டு பெண்பிள்ளைகள் காலத்திற்கேற்ற கல்வி கற்க வேண்டும்; அடிமைத்தன விலங்குகளை அறுத்தெறிந்திட வேண்டும் என்று தேனி-பெரியகுளத்தில் அமைத்திட்ட இந்த உயர்கல்வி நிறுவனம் இவர்கள் உயரிய நோக்கத்திற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு. ஒரு சிறந்த தலைமைத்துவத்திற்கான முன்னுதாரணம். கல்வி நிறுவனத்தையும் வளர்த்து, அதனை மேன்மேலும் வளர்ப்பதற்காக, தம் துறவறச்சபையின் அருள்சகோதரிகளையும் கல்வியில் வளர்த்து, சிறந்த நிர்வாகத்தை காலத்திற்கேற்றார்போல் கொடுத்து, காலத்தின் அறிகுறிகளை அறிந்து, பக்கபலமாக, சேவைக்காக பல்வேறு துணை நிறுவனங்களையும் தொடங்கி, இவர்கள் செய்து வரும் இக்கல்விப் பணியால் தாய்த்திருஅவை பேருவகை அடைகிறது. தேனியின் பெண்செல்வங்களை அவையில் முந்தியிருக்கச் செய்யும் இவர்களின் முயற்சி மேன்மேலும் வெற்றி பெறவும், பொன்விழா... நூற்றாண்டை நோக்கி வீறுநடைபோடவும்நம் வாழ்வுவாழ்த்திச் செபிக்கிறது.

Comment