No icon

பாராட்டுக்குரிய தமிழக முதல் வேளாண்மை நிதிநிலை அறிக்கை - 2021

தலையங்கம்

குடந்தை ஞானி

பாராட்டுக்குரிய தமிழக

முதல் வேளாண்மை நிதிநிலை அறிக்கை - 2021

2021-22 ஆம் நிதியாண்டில் நம் தமிழக அரசு, தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக, ஆகஸ்டு 14, 2021 அன்று, ரூ. 34,220 கோடியில் வேளாண்மைக்கென தனி பட்ஜெட் போட்டு தமிழகத்தின் முதுகெலும்பான விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் வலிமை சேர்த்துள்ளது; இதன் மூலம் விவசாயத்தை மற்ற துறையினருக்கு நிகராக அங்கீகரித்துள்ளது.  ஒரு நாட்டில், ஒரு மாநிலத்தில்  வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை வகுத்தால், அத்துறை வளர்ச்சியடையும் என்ற பொருளாதார நிபுணர்களின் நீண்ட கால கோரிக்கை இதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதற்கு முன்பே  கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் தமிழகத்தில் முதல் முறையாக வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ய மாவட்டந்தோறும் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தி, விவசாயிகளின் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து, முதல்முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரிய செயல் ஆகும். 

வேளாண்மை - விவசாயம் என்பது இன்றைய இளைய தலைமுறையினரிடையே வேண்டத்தகாத, தீண்டத்தகாத தொழிலாக மாறிவரும் சூழ்நிலையில், கான்கிரீட் காடுகளாக விவசாய நிலங்கள் நகரமயமாக்கலால் நசுங்கி வரும் நிலையில், தமிழகத்தில் 5.7 இலட்சம் கோடி கடன்கள் உள்ள நிலையில், வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என்றாலும் அதில் குறைபாடுகள் இல்லாமல் இல்லை.

இந்த பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மைக்கும் மரபு வேளாண்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது மட்டுமின்றி, பின்வரும் ஐந்து ஆண்டுகளில் 11.75 இலட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் சாகுபடி நிலங்களாக உயர்த்தப்படும் என்றும்  தற்போது 10 இலட்சம் ஹெக்டேர் அளவுக்கு உள்ள இருபோக நெல் சாகுபடி நிலங்கள் அடுத்து பத்து ஆண்டுகளில் இருபது இலட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும் என்றும்  தொலைநோக்கோடு செயல்பட்டுள்ளது  பாராட்டுக்குரியது.  சாகுபடி பரப்பை உயர்த்தும் அதேவேளையில் அதற்கு உறுதுணையாக உள்ள நீர்வள ஆதாரத்தை உறுதி செய்யும் திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில்  இடம்பெறாதது  ஏட்டுச் சுரைக்காயாக இதிலுள்ள பெருங்குறையாகும்.

பாரம்பரிய நெல் ரகங்களை நெல் ஜெயராமன் வழியில் பரவலாக்கம் செய்வதும், பனை மரங்களை பாதுகாக்கவும் பரவலாக விதைக்கவும் எடுத்துள்ள முயற்சி சிறப்புக்குரியதாகும். நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம், நெல் ஜெயராமன் பெயரில் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை.  பயிர் காப்பீடு திட்டத்திற்கு மட்டும் இதுவரை இல்லாத வகையில் 2327 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் உலர் களம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும் சிறந்த முயற்சியே. தமிழ் நிலத்தின் அடையாளமான பனைமரத்தை வெட்ட தமிழக அரசு தடைவிதித்திருப்பதும், பனை வெல்லத்தை (கருப்பட்டி), சிறுதானியங்கள் ஆகியவற்றை பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகளில் விநியோகிப்பதும்  பாராட்டுக்குரியதே.  உழவர் சந்தைக்கு உயிரூட்டுவதும் பாராட்டுக்குரியதே. மேலும் இன்றைய தலைமுறையை வேளாண் தொழிலில் ஈர்த்து, புதிய தொழில் நுட்பத்துடன் விவசாயம் மேற்கொள்ள இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சி அளிக்கும் திட்டமும் பாராட்டுக்குரியது.

ஆனால் வேளாண் விளைபொருள்களுக்கு உரிய கொள்முதல் விலை நிர்ணயம் செய்வதில் இந்த நிதிநிலை அறிக்கை துரோகம் இழைத்துள்ளது. உழுதவன் கணக்குப் பார்த்தால் அவனுக்கு உழக்கைக் கூட மிஞ்ச வைக்க மாட்டோம் என்று தமிழக அரசு விவசாயிகளின் முதுகில் குத்தியுள்ளது. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 2,500 விலை தருவோம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை வசதியாக மறந்துவிட்டு, ஒரு குவிண்டால் சன்ன ரகத்துக்கு ரூ.1960ம் சாதாரண ரகத்துக்கு 1940ம் வழங்கி டெல்டா விவசாயிகளின் வயிற்றில் பால்டாயில் வார்த்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கும் கொடுத்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.  கரும்புக்கு டன்னுக்கு 4,000 ரூபாய் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தார்கள்.  ஆனால், கொள்முதல் விலையாக கரும்புக்கு டன்னுக்கு ரூ.2,900 மட்டுமே நிர்ணயித்து கரும்பு விவசாயிகளின் வாயில் டெமக்ரான் ஊத்தியிருக்கிறார்கள்.  நெல் மற்றும் கரும்பு கொள்முதல் விலையை விவசாயிகளின் உழைப்புக்கேற்ப கட்டுப்படியாகும் நிலையில் கொள்முதல் விலையை நிர்ணயிக்காவிட்டால்  விவசாயிகள் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டமாட்டார்கள்; ஆகையால் அவற்றின் சாகுபடி பரப்பு சுருங்கும்.  2012 ஆம் ஆண்டு 255 டன் மெட்ரிக் டன்னாக இருந்த கரும்பு உற்பத்தி, தற்போது 82 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளதே இதற்கு சாட்சி. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் 1200 கோடி ரூபாய்க்கு நிலுவை வைத்துள்ளன. இதனைப் பெற்றுத்தருவதற்கான அறிவிப்பு எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

ஆளும் திமுக தலைமையிலான தமிழக அரசு, கடனில் தள்ளாடும் தமிழகத்தை தலைநிமிர்த்த வேளாண்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளதற்கான அத்தாட்சிப் பத்திரமே இந்த நிதிநிலை அறிக்கை. இந்நிலையில்  விவசாய நிலங்களில்  உயர்மின் கோபுரம் அமைப்பதையும், கெயில் எரிவாயு குழாய்கள் பதிப்பதையும், மீத்தேன் கிணறுகள் அமைப்பதையும் தடுத்து நிறுத்தி விவசாயிகளுக்கு உதவ வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்தி, வேளாண் விளைபொருட்களை எளிதாக சந்தைப்படுத்த உட் கட்டமைப்புகளை ஏற்படுத்தி, பயிர் காப்பீடு வசதிகள் செய்து, ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி விளைநிலம் செழிக்க உதவ வேண்டும். விவசாயிகள் வாழ்வில் விளக்கேற்ற தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண்மைக்கான தனி பட்ஜெட் களஞ்சியங்கள் நிரம்பி தமிழர்களின் வயிறு நிரம்பவும், நல்ல கொள்முதல் விலை கிடைத்து விவசாயிகளின் கைகள் நிரம்பவும் வழிவகுக்கும் என நம்புவோமாக.

Comment