No icon

சிந்தனைச் சிதறல் – 15

கைதிகளின் தாய்!

பார்வைகள் பலவிதம்! சிறையில் வாடும் சிறைவாசிகள் அனைவரும் குற்றவாளிகளா? என்று சிந்திக்கும்போது, அது முழுமையான உண்மைக்கு இட்டுச் செல்வதில்லை. அறியாமையினாலும், வறுமையினாலும், தீய நட்புகளாலும் சிறைக்குள் இல்லவாசிகளாகத் தண்டனைகளை அனுபவிக்கின்றார்கள் என்பதுதான் உண்மை! கறுப்பின மக்களுக்கு விடுதலை பெற நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் ராபன் தீவு சிறையில் சிறிய அறையில் தண்டனையை அனுபவித்தார்நம் இந்திய தேசத்திற்காக உழைத்த, பாடுபட்ட தலைவர்கள் பெரும்பாலும் சிறையில் இருந்தவர்கள்தாம். தற்காலத்தில் கூட கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடியவர்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடிய விவசாயிகள்... இதுபோன்ற பொதுமக்களின் வாழ்வுக்காகப் போராடிய பல போராளிகள் சிறை சென்றவர்கள்தாம். இப்படியாக, சிறையில் இருப்பவர்களின் சார்பாக இறை மக்களுக்குத் திருத்தந்தை கூறிய ஆறுதலான வார்த்தைஅவர்கள் சுதந்திரத்தை இழந்திருக்கின்றார்கள்; ஆனால், கண்ணியத்தை இழக்கவில்லை.” எனவே, தவறு செய்தவர்கள் இன்னும் தங்கள் மனித மாண்பை இழக்கவில்லை. இதுபோன்ற சிறைவாசிகளின் கண்ணியத்தைக் காக்க, கடந்த 22 வருடங்களாகச் சிறையிருக்கும் இல்லவாசிகளுக்காக உழைக்கும் தாயின் உண்மைக் கதை இது.

அன்னை நெல்லிஎன்று அழைக்கப்படும் அருள்சகோதரி நெல்லி லியோன் கொரியா Mujer, levántate’ (பெண், எழுந்து நில்!) அறக்கட்டளையின் தலைவரும், இணை நிறுவுநரும் ஆவார். இந்த அறக்கட்டளையின் இலக்கு மக்கள் சிறையில் இருக்கும் இல்லவாசிகள். இந்த அறக்கட்டளையின் நோக்கம் சிறையில் உள்ளவர்களுக்கு நம்பிக்கையையும், விடுதலை பெற்றவர்களுக்குக் குணப்படுத்துதலையும் தருகிறது. இதுவரை இந்த அறக்கட்டளையினால் ஓர் ஆண்டுக்குச் சராசரியாக 250 பெண்கள் பயன் பெற்றுள்ளார்கள். இதுவரை ஆண்டிற்கு 700 குழந்தைகள் தமது வாழ்க்கையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் பெற்றுள்ளார்கள். இவ்வாறு பலருக்கும் மதிப்பையும், மாண்பையும் தந்து கொண்டிருக்கும் அருள்சகோதரியின் வாழ்வு எப்படியாக இருந்திருக்கும்? என்பதைப் பார்ப்போம். பிறருக்கு வாழ்வைக் கொடுக்க வேண்டும் என்ற பண்பை வளர்த்துக்கொள்ள, விதை விதைத்தவர்கள் யார் என்பதைக் காணலாம்.

செப்டம்பர் 21, 1958-இல் பிறந்தவர் அருள் சகோதரி நெல்லி. இவரது தந்தை ஏபெல். ஒரு கடின உழைப்பாளி (விவசாயி). தாயார் கார்மென் கிராமப் புறத்துத் தாய். நெல்லி தனது 17-வது வயதில் தாயை இழந்தார். வலியை எதிர்கொள்ள முடியாது என்று அவர் நினைத்தாலும், துன்பம் படிப்பை முடிக்க அவருக்கு வலிமையைக் கொடுத்தது. அவரது உடன்பிறப்புகள் யாரும் செய்யாத வீட்டுப் பணியாளராகவும், சலவையாளராகவும், விவசாயியாகவும் வேலை செய்தார்.

அப்பொழுது ஒருமுறை பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலைத் தன்னுடைய கண்களால் கண்டார். அக்குழந்தை இறந்ததையும் கண்டார். அவரால் அக்குழந்தையின் இறப்பைத் தடுக்க இயலவில்லை. எனவே, பெண் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று வழி தேடிக்கொண்டிருந்தார். அப்பொழுதுநல்ல சமாரியன்என்ற அருள் சகோதரிகள் சபை, பெண் குழந்தைகளின் மாண்பைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு ஆன்மிகத்தையும், பொருளாதார வாழ்வை உறுதிசெய்யவும் பணி செய்து கொண்டிருந்தது.

1980-களில் நெல்லி தனது தந்தையின் அனுமதியின்றி நல்ல மேய்ப்பர் சபையில் சேர்ந்தார். தன்னை அர்ப்பணமாக்கினார். தானும் அருள்சகோதரியாக இணைந்து பெண் குழந்தைகளின் விடுதலைக்காக உழைக்க முன்வந்தார். 1886-ஆம் ஆண்டு தனது இறுதி வார்த்தைப்பாட்டைக் கொடுத்து, முழுமையாகச் சபைக்காகத் தன்னை அர்ப்பணமாக்கினார். 1999-ஆம் ஆண்டில் இவர் சிறையில் உள்ள பெண்களுக்கு உதவ வால் பரைசோ நகரத்திற்கு அனுப்பப்பட்டார். ஓர் அருள்சகோதரியாகக் கம்பிகளுக்குப் பின்னால் பெண்களின் துன்பமானது இவர் எதிர்பார்த்ததை விட மிகவும் கடுமையானதாகவும், வேதனையானதாகவும் இருப்பதைக் கண்டார். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் பற்பல உடைந்த வாழ்க்கைகளும், மிகுந்த வேதனைகளும் இருப்பதைக் கண்டார். அவர்களுக்கு உதவி செய்வது எளிமையான காரியமாக அமையவில்லைதன்னால் இந்தச் சேவையைத் தொடர முடியாது என்று நினைத்தார். ஆனால், இவருடைய நம்பிக்கையும், மற்றவர்களுடன் இணைந்து ஆற்றக் கூடிய பண்பும் இந்தச் சேவையைத் தொடர்ந்து செய்ய ஆற்றலைக் கொடுத்தது. அதனால் சாண்டி யாகோ சிறையில் பெண்களின் இழிவான வாழ்வை மாற்றினார்.

2005-ஆம் ஆண்டில் இவர் நாட்டின் மிகப் பெரிய பெண்கள் சிறைக்குத் திரும்பினார். இந்த முறை பெண் இல்லவாசிகள் வாழ்ந்த பரிதாபகரமான நிலைமைகளையும், அவர்களின் கண்ணியத்திற்கு மரியாதை இல்லாததையும் கண்டபோது இவருடைய இதயம் நொறுங்கியது. ‘கடவுள் தமது மகள்களை இத்தகைய துயரத்தில் வாழ எவ்வாறு அனுமதிக்கிறார்?’ என்று கேள்வி எழுப்பினார். ஆனால், விடவில்லை. இந்தப் பெண்களின் வாழ்க்கை இவருக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும், உலகில் யாரோ ஒருவர் அவர்களைப் பற்றி அக்கறை காட்டுகிறார் என்பதையும் அவர்கள் உணர வேண்டும் என்றார். அப்பொழுது இறைவனே வழியமைத்துக் கொடுத்தார்.

உலகமேகொரோனாஎன்ற நோயினால் முடங்கிய காலம்; அக்காலத்தில் அருள்சகோதரி நெல்லி சிலி நாட்டின் சாண்டியாகோவிலுள்ள சிறையில் சிறைவாசிகளைச் சந்திப்பதற்காகச் சென்றார். ஊரடங்கு காரணமாகச் சிறைக்குள்ளே தங்க நேரிட்டது. குற்றம் செய்யவில்லை, தவறு புரிய வில்லை; ஆனால், சிறைக்குள்ளே 18 மாதங்கள் தங்கினார். இதனைத் தண்டனையாகவோ, துன்பமாகவோ பார்க்கவில்லை; மாறாக, வாய்ப்பாகப் பார்த்தார். சிறைக்குள்ளே இருக்கின்ற இல்லவாசிகளோடு தங்கினார். அவர்களின் துன்பத்தைத் தானும் அனுபவித்தார். தன்னுடைய இருப்பால் அவர்களின் வலியைக் குறைத்தார். கடவுள் அவர்களுக்காக இருக்கின்றார் என்பதைச் சுட்டிக்காட்டினார். இன்றும் மாத ஊதியம் பெறாத சிறைக் காவலாளியாகப் பணி செய்கின்றார்.

தொடர் தவறு செய்பவர்களைத் திருத்துகின்றார். தவறு செய்து மனம் வருந்துவோருக்கு மன்னிப்பைப் பெற்று தருகின்றார். இல்லவாசிகளால் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்து, மீண்டும் உறவைப் புதுப்பிக்கவும், உறவை வளர்க்கும் பாலமாகவும் செயல்படுகின்றார்.

2018, ஜனவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் சிலி நாட்டிற்குச் சென்றபோது, சாண்டியாகோவின் சிறைச்சாலைக்குச் சென்று இல்லவாசிகளைச் சந்தித்து சிறப்பு ஆசீர்வாதத்தைக் கொடுத்தார். அருள்சகோதரி நெல்லி மற்றும் அறக்கட்டளையின் முயற்சிகளுக்குப் பாராட்டுகளையும் வழங்கினார். இச்செயல் அவர்களின் பணிக்கு அங்கீகாரத்தையும், மதிப்பையும் கொடுத்தது.

அருள்சகோதரி நெல்லியின் உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியிலிருந்து பிறந்த இந்த நிறுவனம், ஏற்கெனவே 15 வயதை எட்டியுள்ளது. தன்னை ஒரு தேசிய அடையாளமாக நிலை நிறுத்தி, காரித்தாஸ், மிலானோ போன்ற அமைப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவரது குரல் பொது விவாதங்களில் கேட்கப்படுகிறது. சிலி மற்றும் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் சிறையில் அடைக்கப்பட்ட பெண்களின் கண்ணியத்தை ஊக்குவிக்கிறது.

Comment