No icon

வாழ்க்கையைக் கொண்டாடு – 38

விட்டு விலகி நிற்போம்!

நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதுபோலதான் நாம் எப்படிப் பிறரை நடத்துகிறோம் என்பதும்.

நான் ஒழுங்கா இருக்கேன், மத்தவுங்கள ஒழுங்குபடுத்துறது என்னோட வேலை இல்லஎன்று ஒதுங்கிப் போவோரும் உண்டு.

சமூகத்துக்கு உன்னால நல்லது பண்ண முடியலையா? யாருக்கும் கெடுதல் பண்ணாம நீ மட்டும் நல்லவனா வாழ்ந்துட்டுப் போயிருஎனும் வசனம்தம்பிதிரைப்படத்தில் இடம்பெற்று இருக்கும்.

ஆனால், நாம் பணிபுரியும் இடங்களில் அப்படியெல்லாம் நாம் எதையும் கண்டும் காணாமல் சென்றுவிட முடியாது, நமக்கென்று ஒரு பொறுப்பும், பணியிட வேலைகளும் இருக்கும். அதில் நான் மட்டும் சரியாக இருந்தால் போதும், மற்றதெல்லாம் எனக்கு அவசியமே இல்லை எனக் கண்டும் காணாமல் சென்றால், நாம் வேலைக்குத் தகுதியான நபர் அல்லர் எனும் நிலைதான் வரும். அப்படியென்றால் எல்லாவற்றையும் தூக்கித் தோளில் சுமக்கச் சொல்கிறீர்களா? இல்லையில்லை! தேவையானவற்றில் முழுக்கவனமும், தேவையற்றவற்றில் கண்டும் காணாமலும் அதாவது விட்டு விலகி நிற்பதும் நல்லது.

ஒருவர் தனக்கான வேலையில் எவ்வாறு கவனம் செலுத்துகிறார்? எப்படி வேலையை நேசிக்கிறார்? தனக்கு உறுதுணையாகப் பணியாற்றும் பணியாளர்களை எப்படி நெஞ்சாரப் போற்றுகிறார்? அவரை விட்டு விலகுபவர்களை எப்படி நடத்துகிறார்? என்பதையெல்லாம் நம்மை விட, நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மிக உன்னிப்பாகக் கவனிப்பார்கள். ‘அவர்களுக்காக நான் வாழ வேண்டிய அவசியமில்லையேஎனக் கேள்வி கேட்காமல், நாம் அப்படி நடந்து கொள்வதால், நம்மைப் பற்றிய ஒரு மதிப்பு அவர்களிடம் நமக்குத் தானாக உருவெடுக்கும். அது நமக்கு மிகப்பெரிய பாதுகாப்புக் கவசமாக மாறும்.

விட்டு விலகிவிட முடியாத அளவிற்கு ஒரு பந்தமும், தொட்டு நம்மைத் தோல்வி அடைய வைக்க முடியாத வண்ணம் ஓர் அரணும் உருவாகும், அது நம்மை வெவ்வேறு உயர்வுகளுக்கு இட்டுச் செல்லும். தொட்டுவிட முடியாத உயரத்திற்கு நாம் சென்றதும், நம்மைப் பற்றி நல்லது மட்டுமே சொல்லும் அளவிற்கு நம் பகைவர்கள் கூட மாறி விடுவார்கள்.

எல்லாவற்றையும் சிறப்புற நாம் செய்ய முடியுமா? தவறு செய்தால் அவ்வளவுதானா? அப்படியெல்லாம் அல்ல; கீழ்க்காணும் மூன்று நிலைகள் இதைப் பற்றிய ஒரு தெளிவினைத் தரும். வாருங்கள் பார்க்கலாம்.

1. குறைபாடுகள்: குறைபாடுகள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படும். அதைச் சரிசெய்ய வேண்டியது நம்முடைய முழுப்பொறுப்பு. குறைபாட்டோடு பிறக்கும் எந்தக் குழந்தையையும் பெற்றோர் கைவிடுவதில்லை. எப்படிச் சரி செய்து நல்ல நிலைக்குக் கொண்டுவர முடியும் என்பதைப் பற்றி தொடர்ந்து சிந்தித்து, அதற்கான செயலில் இறங்குவார்கள். அதுபோலத்தான் நாம் செய்யும் செயலில் குறைபாடுகள் இருந்தால் அதைச் சரிசெய்து முழுமைப்படுத்தும்போது, நம் செயல் பாராட்டுக்கு உரியதாக மாறும்.

2. தவறுகள்: ஒரு செயலைச் சிறப்புறச் செய்ய நாம் முற்படும்போது, சில தவறுகள் ஏற்படுவது இயல்பு, அந்தத் தவறினை முதலில் புரிந்து, அதிலிருந்து பாடம் கற்று, அதைச் சரி செய்வது மிக மிக அவசியம். அப்படிச் செய்யும்போது, நமக்கான பெரும் புகழ் தானாக வந்தடையும்.

3. தப்புகள்:  சரிசெய்ய மறுக்கும் அல்லது நாம் செய்த தவறுகளிலிருந்து எதுவும் கற்க மறுக்கும் செயலே தப்புகளாக மாறுகின்றன. பிறர்மேல் பழிபோட நினைத்து நாம் தப்பித்து விட்டதாக நினைக்கும் அந்தச் செயல் ஏற்றுக்கொள்ளப்படாத மற்றும் மன்னிக்கப்பட முடியாத குற்றமாகக் கூட சில சமயங்களில் மாறிவிடும்.

நமக்கெல்லாம் தெரிந்த பழமொழி ஒன்றுதொடர்ந்து உண்பவனை விட, பசித்து இருப்பவனுக்கு உணவின் ருசி தெரியும்என்பது போல, தனக்கான மேன்மை இதுதான் என்று தொடர்ந்து ஒரு தேடலோடு பசித்து இருப்பவனுக்கு, எதை, எப்போது அணுக வேண்டும்? எப்போது எதில் இருந்து விலகி இருக்க வேண்டும்? என்பது நன்றாகத் தெரியும்.

எனது பள்ளிப்பருவத்தில் நீளம் மற்றும் உயரம் தாண்டும் போட்டியை உற்றுக் கவனித்தபோது, ஒரு வாழ்வியல் பாடத்தை நான் கற்றுக்கொண்டேன். அதிக தூரம் தாண்ட முயல்பவன் கொஞ்சம் பின் செல்வதைப் போல, நாமும் சில நேரங்களில் உயர்வானதை அடைய சில பின்வாங்கலைச் செய்துதான் ஆகவேண்டும். இங்குபின்வாங்கல்என்பது சிலவற்றில் இருந்து விட்டு விலகி இருத்தல் எனும் பொருளில் கூட எடுத்துக் கொள்ளலாம்.

மொத்தத்தில் தீமையை விட்டு விலகி, நன்மையானதை நோக்கித் தொடர்ந்து நாம் பயணிக்கும்போது, நாம் விலக வேண்டிய இடம் எது? நம்மைச் சிலவற்றில் இருந்தும், சிலரிடம் இருந்தும் விட்டு விலக்க வேண்டிய தருணம் எது? என்பதும் நன்கு புலப்படும். அப்படிச் செய்யும்போது ஒரு மனத்திடமும், மனநிறைவும் ஏற்படும். அதுதான் நம் வாழ்விற்கான மிகப்பெரிய பரிசு! அந்தப் பரிசினை வெல்லும் நோக்கில் தொடர்ந்து பயணிப்போம்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது

குறைபாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும்;

தவறுகள் மன்னிக்கப்படும்;

தப்புகள் தண்டிக்கப்படும்!

தொடர்ந்து பயணிப்போம்...

Comment