No icon

குடந்தை ஞானி

திருத்தந்தை: உண்மையான அன்பு ஒருபோதும் அடக்கி ஆளாது

உண்மையான அன்பு ஒருபோதும் அடக்கி ஆளாது. மாறாக, சுதந்திரமாக அன்புகூர உதவும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 29 ஆம் தேதி, ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறினார். ஆண்டவருடைய விண்ணேற்றத் திருவிழா பாரம்பரியமாக மே 26 ஆம் தேதி வியாழனன்று வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்டவேளை, பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்கு முந்திய மே 29 ஆம் தேதி, ஞாயிறன்று இவ்விழா உலக நாடுகளில் சிறப்பிக்கப்பட்டது.

இவ்விழாவின் நற்செய்தி வாசகத்தை (லூக்.24:46-53) மையப்படுத்தி அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு விண்ணேற்பு அடைவதற்குமுன் கடைசி முறையாக தம் சீடர்களுக்குக் காட்சியளித்தபோது, இரு காரியங்களை அவர்களுக்கு அறிவித்தார் என்று கூறியுள்ளார்.

தூய ஆவியார் எனும் கொடை

இயேசு, தம் சீடர்களுக்கு தூய ஆவியார் எனும் கொடையை அறிவித்தார். பின்னர் அவர் தம் சீடர்களை ஆசீர்வதித்தார் என்றுரைத்த திருத்தந்தை, இயேசு தம் தந்தையிடம் சென்றபோது மனித சமுதாயத்தை அவர் கைவிட்டுவிடவில்லை. மாறாக, அவர் தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்குறுதி அளித்தார். அந்த ஆவியார், அவர்களின் பணிகளில் உடனிருந்து, வழிநடத்தி, அவர்களின் ஆன்மீகப் போராட்டத்தில் அவர்களைப் பாதுகாப்பார் என்று எடுத்துரைத்தார்.

இதிலும்கூட இயேசு நம்மீது வைத்துள்ள அன்பைப் பார்க்கிறோம். அவரது பிரசன்னம், நம் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் முறைகளைத் தேடவில்லை. ஏனெனில் உண்மையான அன்பு எப்போதும் நெருக்கத்தைப் பிறப்பிக்கும் என்று திருத்தந்தை கூறியுள்ளார். இயேசுவின் விண்ணேற்பு, தூய ஆவியாரில் மனிதகுலம் அனைத்திற்கும் நெருக்கமாக வருவதற்கு அவரை அனுமதித்துள்ளது என்றும், காலம், இடம் என அனைத்து எல்லைகளையும் கடந்து, தூய ஆவியார், இயேசு நம்மில் பிரசன்னமாக இருக்கச் செய்துள்ளார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

கடவுளின் ஆசிர்

இயேசு, விண்ணேற்பு அடைவதற்குமுன்னர், சீடர்களை ஆசீர்வதித்தார். இது அருள்பணித்துவ அடையாளம் என்றுரைத்த திருத்தந்தை, நம் வாழ்வில் இயேசு மிகப்பெரிய குரு என்பதை நற்செய்தி நமக்குச் சொல்ல விரும்புகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இயேசு, விண்ணகத்தில் இறைத்தந்தையோடு இணைந்து நமக்காக ஓர் இடத்தைத் தயார் செய்வதற்கும், அவர் விண்ணேற்பு அடைந்தார் எனவும், அவர் நம்மை ஆசீர்வதிப்பதற்குக் கைமாறாக கடவுளிடமிருந்து நாம் பெறும் அதே வகையான அன்போடு மற்றவரை அன்புகூரவேண்டும் மற்றும் நற்செய்திக்குச் சாட்சிகளாய் விளங்கவேண்டும் எனவும்  திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

Comment