No icon

நெய்தல் மக்கள் இயக்கம்

குமரி மீனவர்களை கேரளாவுக்கு அனுப்புங்கள்


  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள துறைமுகங்களில் தங்கி தொழில்செய்ய இடவசதி இல்லாததால் பாதிக்குமேற்பட்ட விசைப்படகுகள் *கேரளாவில் கொல்லம், கொச்சி, முனம்பம்* போன்ற துறைமுகங்களை தங்குதளமாகக்கொண்டு மீன்பிடித்தொழில் செய்துவருகின்றனர்.
  கொரோனா பேரிடர் வந்ததால் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கள் வாழ்வாதார தொழில்கருவிகளை போட்டதுபோட்டபடி விட்டுவிட்டு சொந்த ஊர்களுக்கு வந்துவிட்டனர். ஊரடங்கு இன்றுமுடியும் நாளைமுடியும் ஒருவாரத்தில் முடியும் என்று நம்பிநம்பியே மூன்றுமாதங்கள் கடந்துவிட்டது. துறைமுகங்களில் விட்டுவிட்டு வந்த தங்கள் விசைப்படகுகளும் தொழில் தளவாடங்களும் என்ன நிலையில் இருக்கிறது என்று பார்க்கக்கூட வழிகிடைக்காததால் பெரும் இழப்பிற்கும் நஷ்டத்திற்கும் மீனவர்கள் ஆளாகியுள்ளனர். அவர்களின் கஷ்டத்திற்குத் தீர்வு ஏற்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
   தற்போது கேரள அரசு விசைப்படகுகளை மீன்பிடிக்க அனுமதித்ததால் கேரளாவிலுள்ள விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்றுவிட்டன. ஆனால் அங்கு நிறுத்தப்பட்டுள்ள குமரிமாவட்ட விசைப்படகுகளும் அதில் பணிசெய்யும் மீனவர்களும் கேரளா செல்லமுடியாமல் தவித்துவருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்யக்கேட்டு *குறும்பனை, வாணியக்குடி, கோடிமுனை, சைமன்காலனி, குளச்சல், கொட்டில்பாடு, புதூர், பெரியவிளை, சின்னவிளை* விசைப்படகு மீனவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் மீன்வளத்துறைக்கும் தமிழக முதலமைச்சருக்கும் மனு அளித்துவிட்டு தங்களை கேரளாவுக்கு அனுப்ப வழிபிறக்கும் என்று காத்திருக்கிறார்கள். அவர்களை இனிமேலும் அனுப்பவில்லையென்றால் எத்தனைக் குடும்பங்கள் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழக்கும் என்று சொல்லமுடியாத துயரநிலையில் உள்ளனர்.
  புலம்பெயரும் தொழிலாளர்களை அரசு அக்கறையோடு அணுகுவதுபோல, தங்கள் விசைப்படகுகளையும் தொழில்களையும் கேரளாவில் விட்டுவிட்டு சொந்த ஊருக்க வந்த குமரி மாவட்ட மீனவர்களை மீண்டும் அவர்கள் தொழில்செய்யும் இடங்களான கேரளா துறைமுகங்களுக்கு அனுப்ப குமரிமாவட்ட ஆட்சித்தலைவரும் மீன்வளத்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க மீனவ மக்கள் சார்பாக *நெய்தல் மக்கள் இயக்கம்* வேண்டுகோள் வைக்கிறது.
  உதவுங்கள்-

Comment