No icon

அருள்பணி. ஜேம்ஸ் பீட்டர், கிறிஸ்துவின் சேனை மாத இதழின் ஆசிரியர்

மன்றாடி மகிழ்ந்திடுவோம்

தாவீது

எனக்குப் புத்துயிர் அளிக்கிறீர் (திபா 23:3)

சவுலுக்குப் பயந்து காட்டில் வாழ்ந்த காலத்தில் தாவீதும், அவருடனிருந்த 400 வீரர்களும், பிலிதியாவிலிருந்து, தாங்கள் குடியிருந்த சிக்லாகை அடைந்தபொழுது, அவர்களது பகுதி முழுவதும் அமலேக்கியரால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. மனைவிமார், குழந்தைகள் எல்லாரும் சிறைபிடிக்கப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

அப்பொழுது தாவீதும், அவருடன் வந்த மக்களும் வலிமை உள்ள மட்டும் ஓலமிட்டு அழுதனர்.

தாவீது மிகவும் மனவருத்தமடைந்தார். வீரர் அனைவரும் தங்கள் புதல்வர், புதல்வியர் பொருட்டு மிகவும் துயருற்றதால், அவரைக் கல்லால் எறிய வேண்டும் எனப் பேசிக்கொண்டனர். ஆனால், தாவீது கடவுளாகிய ஆண்டவரின் வலிமை பெற்றிருந்தார் (1 சாமு 30:1-6).

400 வீரர்கள் கற்களை வீசத் தயாராக இருக்கும்போது, தாவீது எப்படி ஆண்டவரின் வலிமை பெற்றார்? ஐயோ, என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள் என்று தாவீது அவர்களைக் கெஞ்சாமல், தன்னை முன்குறித்து அருள்பொழிவு செய்த உயிருள்ள ஆண்டவரை நோக்கினார்.

உலகம் அனைத்தையும் ஆண்டவரின் கண்கள் சுழன்று பார்க்கின்றன. அவர் தம்மை முழு மனத்துடன் நம்பும் அனைவர்க்கும் ஆற்றல் அளிக்கிறார்” (2 குறி 16:9).

புத்துயிர் பெற்ற தாவீதுதன் வீரர்களைத் திடப்படுத்திஎதிரிகளை முறியடித்து, தங்கள் பிள்ளைகளையெல்லாம் மீட்டு வருகிறார்.

குற்றுயிராய்க் கிடக்கிறவர்களைக் கண்டு, கடந்து போகிறவர் அல்ல நம் ஆண்டவர்.

வழிபாடுதான் பெரிது; தன் வேலைதான் உயர்ந்தது என்று விலகிச் சென்றார்கள். ஆனால், நல்ல சமாரியனோ அருகில் வந்தார்; கண்டதும் பரிவு கொண்டார்அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும், எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டு போய், அவரைக் கவனித்துக் கொண்டார்.

மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக்கொள்ளும்இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்என்றார் (லூக் 10:30-35).

உள்ளம் உடைந்து போனவர்களுக்கு அருகில் இருப்பவர் நம் ஆண்டவர்.

குற்றுயிராய் காயப்பட்டு இருக்கும் ஒவ்வொருவர் மீதும் பரிவு காண்பிக்கும் ஆண்டவராக இருக்கிறார்.

பரிவு என்றால் மனமிரங்குதல், மனதுருக்கம் (compassion) என்றுதானே பொதுவான பொருள்.

தன் ஒரே வாலிப மகனை இழந்து அழுதுகொண்டு சென்ற விதவைத்தாயைப் பார்த்த இயேசு, அவள்மீது பரிவு கொண்டார் என்பதற்கு ஆங்கில மொழிபெயர்ப்பு his heart went out to he அவரது இதயம் அவளுக்குள் சென்றது என்று இருந்தது. அர்த்தம் என்ன?

இன்னும் கொஞ்ச நாளில், நானும் சிலுவையில் மரித்துத் தொங்கும்போது, தன் ஒரே மகனை இழந்து தவிக்கும் எனது தாயும் இப்படித்தானே வேதனைப்படுவார்கள் என்று, தனது தாயின் வேதனையை, நயீன் விதவைத் தாய்மையில் பார்த்ததால், அவரது இதயம் அவளுக்குள் சென்றது (லூக் 7:13).

தொழுநோயாளியைக் கண்டபோது பரிவு கொண்டாராம். காண்போர் கண்மறைத்து, அருவருக்கப்படும் மனிதனைப்போல, மனித சாயலே இழந்து, இப்படித்தானே சிலுவையில் தொங்குவேன் என்று, தன் வேதனையை, அந்தத் தொழுநோயாளியில் கண்டதால் அவரது இதயம் அவனுக்குள் சென்றது. பரிவு கொண்டார். தொட்டுக் குணமாக்கினார்.

எத்துணை அருமையான ஆண்டவர் நம் இயேசு!

ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய் என்று சவுலைப் பார்த்து இயேசு கேட்டதன் காரணம் என்ன? இங்கு நாம் படும் வேதனைகள் ஒவ்வொன்றையும் காண்கிறவர் மட்டுமல்ல; நம் வேதனையில் பங்குபெறுவர்; துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுகிறவர்.

நம் ஆண்டவர், சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவர்களிடம் ஊக்கம் பெறச் செய்கின்றார்.”

இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர்ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ, புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார் (எசா 40:30-31).

Comment