No icon

அருள்பணி. எம். ஏ. ஜோ, சே.ச

தேடுங்கள் கிடைக்கும் – 19 ஆற்றலா? ஆபத்தா?

சத்யா: கொஞ்ச நாளா இவன் ஒரு புது ஃபிரண்டோட சுத்திட்டு இருக்கான். அது எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கலை.

சுந்தர்: யாரு? இந்திரனைச் சொல்றியா? அவன் உன் கூட பேசுறதில்லைன்னு உனக்குப் பொறாமை.

சத்யா: அவன் என் கூட பேசறதில்லையா? எத்தனை முறை பேச வந்திருக்கான்னு உனக்குத் தெரியுமா? நான் தான் அவன் கூட பேசுறதில்லை. புரிஞ்சுக்கோ.

ஆசான்: சரி, அவன் பேரு என்ன சொன்னீங்க?

சுந்தர்:  இந்திரன்.

ஆசான்: இந்திரனும் சுந்தரும் நண்பர்களாக இருப்பது ஏன் சத்யாவுக்குப் பிடிக்கல?

சத்யா: அவன் நல்லவன் இல்லை.

சுந்தர்: ஆனா கெட்டிக்காரன். சாமர்த்தியசாலி. நினைச்சதை எப்படியாவது சாதிச்சிடுவான்.

சத்யா: நினைச்சதை சாதிச்சிடுவான்றது உண்மைதான். ஆனால், ஏமாத்த தயங்க மாட்டான். கூசாம பொய் சொல்லுவான். மத்தவங்களை கஷ்டப்படுத்துறோமேன்னு யோசிக்க மாட்டான்.

சுந்தர்: அவன் ரொம்ப நல்லவன்னு நான் சொல்லல. ஆனா ஏதாவது ஒன்னு நடக்கணும்னா, ஏதாவது ஒன்னு செஞ்சு ஆகணும்னா அவன்கிட்ட தான் எல்லாரும் போவாங்க. எப்படியாவது அவன் காரியத்தை முடிச்சிடுவான்.

ஆசான்: இந்திரன் போன்றவர்களுக்கு ஒரு கதை இருக்கிறது. இது மேலை நாடுகளில் மிகப் பிரபலமான கதை. சார்ல்ஸ் பெர்ரால்ட் (Charles Perrault) என்ற எழுத்தாளர் ஃப்ரெஞ்ச் மொழியில் எழுதி 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்த கதை.

சுந்தர்: 17ஆம் நூற்றாண்டிலயா?

ஆசான்: ஆனால் ஆய்வாளர்கள் அவருக்கு முன்பே இரண்டு பேர் இதனை பெருமளவு ஒத்த ஒரு கதையை எழுதி இருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். கதையின் பெயர் ‘பூட்ஸ் அணிந்த பூனை’.

சத்யா: இங்கிலீஷ்ல?

ஆசான்:  ‘புஸ் இன் பூட்ஸ்’ (Puss in Boots). புஸ் என்றால் பூனை.

சுந்தர்: புஸ்னா பூனையா? புதர்னு நான் நினைச்சிட்டிருந்தேன்.

சத்யா: அது Bush. இது Puss. .

சுந்தர்: பூட்ஸ்னா இராணுவ தளபதிகள்- போலீஸ் அதிகாரிகள், பிரபுக்கள் போன்ற பெரிய மனிதர்கள் அணிகிற உயர்தர காலணிகள் தானே? அதை வாங்கிப் போட்ட பூனை பற்றிய கதையா?

ஆசான்: ஆம். அந்தப் பூனை தான் கதையின் நாயகன். ஒரு ஏழைத் தந்தை தனக்கு இருந்த சொற்ப சொத்துக்களை தன் மூன்று மகன்களுக்கும் பாகம் பிரித்துக் கொடுத்தார். மூத்தவனுக்கு வீடு கிடைத்தது. வேலைகள் செய்யவும் பயணம் போகவும் தேவைப்பட்ட கழுதை இரண்டாம் மகனுக்குக் கிடைத்தது. எஞ்சியிருந்தது அவர் வளர்த்த பூனை மட்டும் தான்.

சத்யா: அதை மூனாவது மகனுக்கு கொடுத்தாராக்கும்? பூனையை வைச்சு அவன் என்ன பண்ணுவான்?

ஆசான்: அப்படித்தான் அந்த இளைய மகனும் நினைத்தான். வேறு ஒன்றும் செய்ய இயலாது. அதை அடித்து சாப்பிடத்தான் முடியும் என்று நினைத்தான்.

சத்யா: பூனையை சாப்பிடலாம்னு நினைச்சானா? அடக் கருமமே! சீனாக்காரனுங்க இப்படிக் கண்டதையும் திங்கிறதுனால தானே இவ்வளவு கஷ்டம்?

ஆசான்: அவன் இப்படி நினைத்ததும் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் பூனைக்கு ஏற்பட்டது. தனது எஜமானன் ஆகிவிட்ட மூன்றாவது மகனிடம், “இங்க பாரு இந்தப் பூனையை வச்சு என்ன பண்ண முடியும், இதனால் எனக்கு என்ன பிரயோஜனம்னு தானே நினைக்கிறே? என்னப் பத்தி உனக்குத் தெரியாது. என் அறிவையும், திறமையையும் பயன்படுத்தி உன்னை இந்த நாட்டின் இளவரசனா மாத்திக் காட்டுறேன்! நான் கேட்கிறத  மட்டும் வாங்கிக் கொடு” என்றது.

சுந்தர்: அப்படி என்ன கேட்டது?

ஆசான்: இரண்டு காரியங்கள். ஒன்று பூட்ஸ். இரண்டாவது ஒரு பெரிய பை.  பூட்ஸையும் பையையும் வைத்துக்கொண்டு இந்தப் பூனை தன்னை எப்படி இளவரசனாக்க முடியும் என்று புரியாவிட்டாலும் சரி, பார்ப்போம் என்று சொல்லி இளையமகன் இந்த இரண்டையும் வாங்கிக் கொடுத்தான். பூட்ஸை அணிந்து கொண்டு, பையை எடுத்துக்கொண்டு அரண்மனையை நோக்கிப் புறப்பட்டது பூனை. அரண்மனைக்குப் போகும் வழியில் துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்த முயல் ஒன்றைப் பிடித்து பையில் போட்டுக்கொண்டு அரண்மனைக்குப் போய் அரசனைப் பார்க்க வேண்டும் என்றது. பூனைகளையெல்லாம் அரசன் பார்ப்பதில்லை என்று காவலாளி விரட்டினான். “நான் யாருன்னு நினைச்சே? என்னைப் பார்த்தா தெரியலையா? கரபா நாட்டு சிற்றரசர் நம் அரசருக்குக் கொடுத்தனுப்பிய பரிசை நான் கொண்டு வந்திருக்கேன். அரசர்கிட்டக் கொடுத்துட்டு உடனே கிளம்பிடுவேன்“ என்றது பூனை. காவலன் போய் அரசனிடம் சொல்ல, ‘பூட்ஸ் அணிந்து வந்திருக்கும் பூனையா?’ என்று வியந்து, பூனையை உள்ளே அனுப்பச் சொன்னார். உள்ளே வந்த பூனை அரசரைப் பணிந்து வணங்கி, “அரசே, கரபா நாட்டு சிற்றரசரின் தூதுவன் நான். உங்கள் மீது அவர் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டுள்ளார். அதன் அடையாளமாக இந்த முயலை பரிசாகக் கொடுத்து வரச் சொன்னார்” என்றது.

அரசர் புன்னகைத்தார். கரபா நாட்டையோ, அதன் சிற்றரசர் பற்றியோ எதுவுமே கேள்விப்பட்டதில்லையே என்று யோசித்தாலும் பரிசை வாங்கிக்கொண்டார். அதன் பின்பு, புறா, கோழி என்று எது அகப்பட்டாலும் அதையெல்லாம் வாரம் ஒருமுறை கொண்டு போய் பூனை அரசரிடம் கொடுக்க, கரபா நாட்டு சிற்றரசரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அரசரிடம் அதிகமாகிக் கொண்டே வந்தது. ஒரு நாள் காலை இளவரசியான தன் மகளோடு அரசர் தேரிலேறி ஆற்றங்கரையோரம் இருந்த சாலையிலே எங்கோ போகிறார் என்று கேள்விப்பட்ட பூனை அவசரம் அவசரமாக தன் எஜமானனாகிய இளைய மகனை அழைத்து வந்து, ஆடைகளைக் களைந்துவிட்டு ஆற்றில் குதிக்கச் சொன்னது. அவனது ஆடைகளை பாறை ஒன்றின் பின்னே மறைத்து வைத்துவிட்டு, வெளியில் வந்து, அரசனின் தேருக்குப் பின்னே ஓடி, அவர் காதில் விழும்படி சத்தமாக “அவசரம்! ஆபத்து! யாராவது உதவ மாட்டீர்களா?” என்று பூனை உரக்கக் கத்தியது.

அரசர் தேரை நிறுத்தச் சொல்லி பூனையை அழைத்து என்ன நடந்தது என்று விசாரித்தார். பூனை சொன்னது, “அரசே, என் எஜமானர் யாரென்று உங்களுக்கு தெரியும். கரபா நாட்டு சிற்றரசர். அவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பொழுது கரையில் வைத்திருந்த அவரது உடைகளை யாரோ திருடன் எடுத்துப் போய்விட்டான். இப்போது எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் சிற்றரசர் ஆற்றிலேயே நிற்கிறார்” என்றது.

அரசர் தன் பணியாளரிடம் அரண்மனைக்குப் போய் பட்டாடைகள் எடுத்து வருமாறு பணித்தார். அவன் போய் அவற்றைக் கொண்டு வந்தான். பூனை அவற்றை எடுத்துக்கொண்டு போய் ஆற்றில் நின்ற இளைய மகனிடம் கொடுத்து அணிந்து கொள்ளச் சொன்னது. அந்த ஆடம்பர உடையில் அவ்வளவு அழகாக இருந்த இளைய மகன் அரசருக்கு நன்றி சொல்ல அருகில் போக, “இவர் தானா அந்த சிற்றரசர்? இத்தனை அழகாய் இருக்கிறாரே!” என்று அரசர் வியக்க, மயங்கிய இளவரசி, “அப்பா, இரவு விருந்துக்கு அரண்மனைக்கு அழையுங்கள். இப்போது தேரில் ஏறச் சொல்லுங்கள்” என்று கிசுகிசுத்தாள்.

இளையமகன் தேரிலேறி பின்னாலிருந்த இளவரசிக்கு அருகில் அமர, அரண்மனைக்குத் திரும்புவதற்குள் அவர்களிடையே...

சுந்தர்: காதல் மலர்ந்திருச்சாக்கும்! சரி, பூனைக்கு என்ன ஆச்சு?

ஆசான்: பூனை செய்ய வேண்டியிருந்தது இன்னும் கொஞ்சம் மீதியிருந்தது. அரசரின் தேரை விட வேகமாக ஓடி, ஒரு பூதம் வாழ்ந்த பெரிய கோட்டைக்குள் நுழைந்தது. பூதத்தை வணங்கி, “பூதப் பிரபு, உங்களின் மந்திர சக்திகளை பற்றி நிறைய கேள்விப் பட்டேன். உண்மை தானா என்று பார்க்க வந்தேன். எந்த விலங்கின் உருவத்திற்கு வேண்டுமானாலும் உங்களால்  மாற முடியுமாமே?” என்றது பூனை. “இப்போது பார்!” என்று உறுமிய பூதம் ஒரு சிங்கத்தின் உருவெடுத்து கர்ஜித்தது. ஆடிப்போனது பூனை. “சிங்கமாக உருமாறுவது அவ்வளவு கடினமானது அல்ல. மிகச்சிறிய எலியாக உங்களால் மாற முடியுமா?” என்று பூனை கேட்டதும், “ஆஹாஹா” என்று சிரித்த பூதம் “இப்போது பார்!” என்று சொல்லி எலியாக மாறி நின்றது. மறுகணம் பாய்ந்து அதை லபக் என்று கவ்விப்பிடித்த பூனை அதை விழுங்கி ஏப்பம்விட்டது.

வெளியே போய் அரசரின் தேருக்காகக் காத்து நின்றது. தேர் வந்ததும், “அரசே, உங்கள் தேரில் இளவரசியின் அருகே அமர்ந்து வரும் என் எஜமானர் கரபா நாட்டு சிற்றரசர் சார்பாக அவரது கோட்டைக்கு உங்களை அழைக்கிறேன்“ என்றது. அரசரும் இளவரசியும் அந்த கோட்டையைப் பார்த்து மலைத்துப் போனார்கள். ‘அழகு மட்டுமல்ல, இவ்வளவு சொத்தும் இவனுக்கு இருக்கிறது” என்று தெரிந்ததும், இளவரசியின் காதல் இன்னும் ஆழமானது.

மறுநாள் காலை எல்லார் முன்னிலையிலும் ஒரு ஏழைத் தந்தையின் இளைய மகன் இளவரசியை மணக்க, தன் மருமகனை இளவரசன் என்று அறிவித்தார் அரசர். தான் சொன்னதை சொன்னபடி சாதித்துக் காட்டிய பூனைக்கு இளவரசர் அரண்மனையிலேயே நல்லதொரு பதவி தர, அன்றிலிருந்து எலிகளைப் பிடித்துத் தின்ன வேண்டிய நிர்ப்பந்தம் பூனைக்கு வரவில்லை.

சுந்தர்: ராஜ சாப்பாடா?

ஆசான்: இந்தக் கதை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மேலை நாடுகளில் எல்லாம் பிரபலமாக ஆன பிறகும் இந்தக் கதையை பலர் கடுமையாக விமர்சித்தார்கள். எத்தனை பொய்கள் சொல்லி, எத்தனை பேரை ஏமாற்றும் ஒரு பூனையை கதையின் நாயகன் ஆக்கியதன் மூலம் எழுத்தாளர் எதை வலியுறுத்த நினைக்கிறார் என்று பலர் கேட்டனர். ‘அதன் சாதுரியத்தை” என்றார் இவர்.

நினைத்ததை நிறைவேற்றும் சாதுரியம், சாமர்த்தியம் ஒரு ஆற்றல் தான். ஆனால், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து தர்மத்தை, அறத்தைத் துறக்கலாமா? அறத்தின் வழி நின்று, பிறருக்கு நல்லது செய்ய தனது சாதுரியத்தை பயன்படுத்துவோரை நாம் பாராட்டலாம். ஆனால், அறத்தையும் பிறர் நலத்தையும் உதறி விட்டு, தங்கள் சாதுரியத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு வேண்டியதைச் சாதிக்க முயல்வோர் மிகவும் ஆபத்தான பேர்வழிகள்.

சத்யா: இப்ப புரியுதா நான் ஏன் இந்திரனோட சகவாசம் வேண்டாம்னு சொல்றேன்னு?

ஆசான்: இவர்கள் அறத்தைக் காப்பவர்களாக, நல்லவர்களாக, பிறருக்கு நன்மை செய்பவர்களாக இருந்தால் மிக நல்ல தலைவர்களாக ஆக முடியும்.

சுந்தர்: அவனோட நட்பாகப் பழகி அவன நல்லவனா...

சத்யா: மாத்தப் போறியாக்கும்?

சுந்தர்: மாத்த முடியுமானு கேட்கப் போனேன்.

சத்யா: அவன மாதிரி உன்னை  மாத்திடாம பார்த்துக்கோ.

Comment