No icon

வாழ்க்கையைக் கொண்டாடு – 41

கரையாத கற்பனைகள் காண்போம்!

இன்று நாம் கண்டு வியக்கும் எல்லா வளர்ச்சிக்கும், புரட்சிக்கும் அடிப்படையாக நிற்பது கற்பனைதான் என்றால் நம்ப முடிகிறதா? யாரோ ஒருவர், பிறரால் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்குக் கற்பனை செய்ததின் பயனை இன்று நாம் பல்வேறு விதங்களில் பயன்படுத்தி வருகிறோம். அந்தக் கற்பனைக்கு இவ்வளவு வலிமை உண்டா? ‘உண்டுஎன்பதைப் பலர் மெய்ப்பித்து உள்ளனர். நாமும் அதை மெய்ப்பித்தால் என்ன? எனும் ஆர்வம் உங்களுக்குள் ஊற்றெடுத்தால் அதைவிட வேறென்ன நமக்குப் பலன் இருந்துவிடப் போகிறது?

நம்முடைய வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்திலும், சில பங்கு துக்கத்திலும் போய்விடுகிறது. இந்தத் தூக்கத்தில் வருகிற கனவில் ஏறத்தாழ 95% கனவுகள் எழுந்தவுடன் நம் நினைவை விட்டு அகன்று போய்விடும் அல்லது மறந்து போய்விடும். இந்தக் கனவில் வருகின்ற எண்ணங்கள் எல்லாம் ஈடேறுமா என்றால், அதுவும் இல்லை; பிறகு ஏன்கனவு காணுங்கள் என்று நம் அப்துல் கலாம் ஐயா அவர்கள் சொன்னார்?’ எனும் கேள்வி வரலாம். கனவு சில நேரங்களில் கற்பனைகளின் தொடக்கம் என்று சொல்வதுண்டு.

ஆம், ஒன்றைப் பற்றிய விரிவான பார்வையை அது நமக்குத் தரும். நம் எண்ண ஓட்டப்படி அதனைத் தகவமைத்து, அடைய வேண்டியதை மனதளவில் எண்ணி நம்மைத் தயார்படுத்தும் ஒரு தகுதிநிலைதான் கற்பனை.

தெளிவான கனவின் அடுத்த நிலைதான் கற்பனை என்றுகூடச் சொல்லலாம். தெளிவான கனவு என்பது நாம் தூங்கிக் கொண்டிருந்தாலும் நாம் கனவு காண்கிறோம் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். தெளிவான கனவு என்பது நினைவு மற்றும் தூக்கம் ஆகிய இரண்டின் கலவையாகக் கருதப்படுகிறது.

கண் பார்வை இல்லாதவர்களுக்கும் கனவுகள் வரும்; அவர்கள் காட்சிப் பிம்பங்களைக் காண்பதாக ஆராய்ச்சி சொல்கிறது. ஆனால், கற்பனை என்பது எண்ணத் தெளிவு இருந்தால் மட்டுமே வரும் என்பது எவ்வளவு வியப்பானது!

கனவுகள் என்பது இயல்பாக அல்லது மனத்தில் தூங்கிக்கிடக்கும் நினைவுகள், தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. அதே நேரத்தில், கற்பனைகள் என்பது இரத்தமும், சதையுமான எண்ண அலைகளால் உருவாக்கப்படுகின்றன. பல நேரங்களில் உண்மை நிலையில் இருந்து நம்மைத் தற்காலிகமாக மீட்டெடுக்கும் ஒரு கருவியாகவும் இந்தக் கற்பனைகள் பயன்படுகின்றன. அதெப்படி? நாம் ஒரு சிக்கலில் மாட்டியுள்ளோம் என வைத்துக்கொள்வோம், அதிலிருந்து மீள எண்ண அளவில் தப்பிப்பது போல கற்பனை செய்து, அந்த வேதனையைக் குறைத்துக் கொள்ளுதல் இதில் அடங்கும்.

இப்படியாக, இருக்கும் நிலையில் இருந்து, ஒரு மாறுபட்ட அல்லது வேறுபட்ட சூழலுக்கு நம்மை மாற்றும் அதீத ஆற்றல் கொண்டது இந்தக் கற்பனை. அதெல்லாம் இருக்கட்டும், இதைப்பற்றி இங்கு அதிகம் பேசக் காரணம் என்ன? நாம் தொடக்கத்தில் பேசியதுபோல எல்லா முன்னேற்றங்களுக்கும் ஒரு தொலைநோக்குப் பார்வை அடிப்படையாக அமைவது இந்தக் கற்பனையால்தான். நாம் இன்று நம் கண்பட பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டு பயன்பெறுவதன் ஆணி வேர் என்பது, யாரோ சிந்தித்த கற்பனையின் ஊற்றுதான். இவ்வளவு தொழிற்புரட்சி ஏற்பட்டு, பல்வேறு பயன்கள் பலருக்கும் சென்றடைய அடிப்படைக் காரணம் இந்தக் கற்பனைதான். கற்பனை என்பது, நாம் செய்ய வேண்டிய வேலையினை அல்லது அடைய வேண்டிய இலக்கினை அடைய மனதளவில் நம்மைத் தயார்படுத்தி, அதை நோக்கி ஓடச் செய்வதாகும்.

ஒரு நாடு சிந்திக்கத் தொடங்கிவிட்டால், அதை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாதுஎனும் வீறுகொண்ட வரிகளைக் கூறிப் பிரெஞ்சு புரட்சிக்கு வித்திட்ட வால்டேர் ரூசோ சொல்கிறார், “எனது கற்பனையின் வளம்தான் இந்த மிகப்பெரிய செயலை செய்ய ஆக்கம் தந்தது.” மேலும், தொழிற்புரட்சி ஏற்படவும் பலருக்கு உதவியாக இருந்தது இந்தக் கற்பனை வளம்தான். எண்ணினார்கள், செயல்படுத்தினார்கள், வெற்றி கண்டார்கள்.

கற்பனை என்பது வெறுமனே எண்ண வடிவம்தான்; அதைச் செயலுக்குக் கொண்டு வரும்போதுதான் அதற்கு ஓர் உயிர் வருகிறது. அதீத கற்பனை செய்யும் பலர் அதைச் செயலில் சிறிதும் காட்ட முனைப்போ, முயற்சியோ காட்டுவதில்லை. அப்படி முயற்சிக்காத கற்பனை வீண்தான்.

தூக்கத்தில் மட்டுமே கனவுகள் வரும்; கற்பனை அப்படி அல்ல. விழிப்போடு இருக்கும் எல்லா நேரங்களிலும் வரும். கனவுகளுக்கு நாம் தடைபோட முடியாது; கற்பனைக்கு நாம் அணைபோட முடியாது. கற்பனை வளம் நம் பொருளாதார வளத்தையும் மாற்றும் ஆற்றல் கொண்டது. அந்தக் கற்பனை வளத்தால் எட்டிவிட முடியாத உயரங்களை நம்மில் பலர் சாதித்து உள்ளனர். பல்வேறு மாற்றங்கள், ஏற்றங்கள் மற்றும் புரட்சிகளுக்கு அடிப்படைக் கூறுகளாக இவை உள்ளது என்பதை அறியும்போது நமக்குள்ளே குதூகலம் ஏற்படுகிறதல்லவா! அதை நற்செயலில் காட்டும்போது நாமும் சிகரம் தொட்ட உயர்ந்த மனிதர்களாக மாறிவிடுவோம்.

இந்தக் கற்பனை உணர்வை வேறு யாரிடம் இருந்தும் நாம் கடன் வாங்க முடியாது. வயிற்றுப் பசியோடு இருந்தால் கனவுகள் வருவது சந்தேகம்தான். ஆனால், கற்பனைப் பசிக்கு  அணைபோட முடியாது.

பசி என்னைக் கொல்கிறது; ஆனால், கற்பனை என்னுள் வாழ்கிறதுஎன்று கவிபாடிய பாரதி தொடங்கி, அனைவருமே கற்பனையில் கரை கண்டவர்கள்! எண்ணற்ற தொழில் நிறுவனங்களின் நிறுவுநர்கள் மனத்தில் தோன்றிய எண்ணங்களைத் தாண்டி, பொங்கிப் பெருகிய கற்பனை வளத்தால்தான் இன்று பல்வேறு பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டு, மக்களின் வாழ்வு நிலை மேம்பட்டுள்ளது.

அண்மையில் ஓர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அது கொஞ்சம் காட்டுப் பகுதியினை ஒட்டியிருக்கும். அந்த அலுவலகத்தின் உள்ளே செயற்கைச் செடிகள் அதிகம் இருந்தன. ‘ஏன்?’ என்று கேட்டபோது, அவர்கள் சொன்ன பதில் எனக்குத் தூக்கிவாரிப் போடாத குறைதான். ‘பணியாளர்களுக்குக் கற்பனை வளமும், புதுமை (Innovative) எண்ணத்தைப் புகுத்தவும் இதை இங்கு வைத்துள்ளோம்என்றார்கள். காட்டை அழித்து கட்டடங்கள் கட்டிவிட்டு, அந்தக் கட்டடத்துக்குள் செயற்கைச் செடிகளை வைத்து, கற்பனை வளம் வளர்க்கும் அவர்களைக் கண்டு எனக்குப் புல்லரித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

நம்மை நாம் எப்போதும் உயிர்ப்போடு வைப்பதில் பல காரணங்கள் இருந்தாலும், கற்பனை ஒரு முக்கிய இடத்தினைப் பெறுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கற்பனை கரை புரளட்டும், நம் எண்ணங்கள் ஏற்றம் பெறட்டும்.

உன் வலியை உணர்ந்தால், நீ உயிரோடு இருக்கிறாய் என்று அர்த்தம்; பிறர் வலியை உணர்ந்தால் நீ உயிர்ப்போடு இருக்கிறாய் என்று அர்த்தம்.

தொடர்ந்து பயணிப்போம்...

Comment