No icon

அருள்சகோ. ம. விவின் ரோட்ரிக்ஸ் OCD

உடன் பயணிக்க வந்த இயேசுவாக பிறப்போம்!

பெருந்தொற்றுக் காலத்தில் மீண்டும் ஒரு கிறிஸ்மஸ். சென்ற ஆண்டு கொரோனா கிறிஸ்மஸ் ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கடினமாக இருந்தது நமக்கு. இந்த ஆண்டும் கிறிஸ்மஸ் வந்துவிட்டது. முன்னர் இருந்த கலக்கம் இப்போது நம்மிடம் இல்லை. “அதுவா பழகிப் போகும்எனும் மனநிலையில் தான் நாம் நகர்ந்துக் கொண்டிருக்கின்றோம். கொரோனாவின் முதல் அலை, இரண்டாம் அலை, அரும்பிக் கொண்டிருக்கும் மூன்றாம் அலையும் வந்தன. மேலும், கிரேக்க அகரமுதலி வரிசைகளில் உள்ள டெல்டா வந்தது, இப்போது ஒமைக்ரோன் நுழைந்திருக்கின்றது. “போதும் சாமி எப்போது தான் ஒமைக்ரோன் வந்து முடிவுக்கட்டுமோ?” என்றும்இந்த கிறிஸ்மஸ் எத்தகையதாக இருக்குமோ?” என்றும் அங்கலாய்க்கும் அளவிற்கு நாம் தள்ளப்பட்டுள்ள இந்நிலையில் கிறிஸ்மஸ் 2022 என்ன சொல்லப் போகின்றது.

உலகம் இப்படி சென்றுகொண்டிருக்க, கொரோனா புதிது புதிதாக தன்னையே மாற்றிக்கொண்டிருக்க, திருஅவையாகிய நாமும் ஒரு புதிய போக்கைத் தெரிந்தெடுத்துள்ளோம். சற்று மாற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கின்றோம். கூட்டியக்கத் திருஅவையாக மாறும் இலக்கில், உடன் பயணிக்கவும், உடன் பயணிப்பவர்களின் மெல்லியக் குரல்களை கூர்ந்து கவனிக்கவும் ஒன்றிப்பு, பங்கேற்பு மற்றும் நற்செய்திப் பணிகளால் இணைந்து செயலாற்ற புதியப் பார்வைகளை, புதியப் பாதைகளை, புதியப் பயணங்களை, புதியப் பதிவுகளை நோக்கி நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த பின்னணியிலும் சூழலிலும் தான் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பெருவிழாவிற்கு அர்த்தம் தர முனைய வேண்டும்.

கடவுள் மனிதர்களோடு மனிதனாக உடன் நடக்க வந்தாரே, இதுதான் கிறிஸ்து பிறப்பு.

மனிதம் செம்மாந்து சிறந்திட உடல் எடுத்து உடன் பயணிக்க வந்தாரே, இதுதான் கிறிஸ்து பிறப்பு.

மறைபொருள் ஆனவர், மனுவுருவானாரே, இதுதான் கிறிஸ்து பிறப்பு.

நம்மை நாம் இருக்கும் நிலையினிலேயே தேடி வந்து தேர்ந்தெடுத்தாரே, இதுதான் கிறிஸ்து பிறப்பு.

கூட்டியக்கத் திருஅவைமாமன்றத்தை துவங்கியிருக்கிற நமக்கு, இந்த கிறிஸ்மஸ் நம்மைஉடன் பயணிக்கும் இயேசுகளாக பிறக்கஅழைக்கின்றது.

விண்ணும் மண்ணும் ஒன்றித்தன கிறிஸ்துவின் பிறப்பில், புனிதம் மனிதத்தை முத்தமிட்டது கிறிஸ்துவின் பிறப்பில். இது ஒன்றிப்பிற்கான பாடம்.

மீட்பு என்பது ஒரு மனிதரின் செயல்பாடு அல்லஇதற்கு மரியா, யோசேப்பு, திருமுழுக்கு யோவான் மட்டுமல்ல; இடையர்களும் ஏன் பயணத்திற்கு கழுதையும், மாடடை குடிலும், தீவனத் தொட்டியும் தேவைப்பட்டன. மீட்பில் படைப்பு அனைத்தும் இணைந்து இயேசுவின் பிறப்பைச் சிறப்பாக்குகின்றன. இது பங்கேற்பிற்கான பாடம்.

நாங்கள் அடிமைகளாகவே தான் வாழ வேண்டுமா? விடியல் என்பதே வராதா?” என்று விழிகளில் ஏக்கத்தோடு காத்திருந்த இஸ்ராயேலின் கண்களுக்கு ஒளியாக வந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி தான், கிறிஸ்துவின் பிறப்பு. இது நற்செய்திப் பணிக்கான பாடம்.

இவ்வாண்டு  பாலன் இயேசு  எங்கெல்லாம் பிறந்திருக்கிறார் தெரியுமா?

விவசாயிகளின் உரிமைக் குரல் தந்த வெற்றியிலே இயேசு பிறந்திருக்கிறார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடி உதவிய நல்லவர்களில் இயேசு பிறந்திருக்கின்றார்.

கொரோனா இரண்டாம் அலையின்போது அர்ப்பணிப்புடன் மருத்துவ சேவை புரிந்த டாக்டர் சண்முகப்பிரியா போன்ற தியாகிகளின் தியாகத்தில் இயேசு பிறந்திருக்கிறார்.

இப்படி இன்னமும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இனி இயேசு எங்கெல்லாம் பிறக்க முடியும் தெரியுமா?

விண்ணில் இருந்து அல்ல; மாறாக, நமது மனம் என்னும் விண்ணிலிருந்து இயேசு பிறக்க முடியும்.

குளிர்ந்துப் போன இதயங்களுக்கு திடமூட்டும் நம்பிக்கை நிறைந்த சொற்களில் இயேசு பிறக்க முடியும்.

குறுகிப் போன மனநிலை உள்ளவர்களிடம் நாம் பெருந்தன்மையாக இருக்கின்றபோது இயேசு பிறக்க முடியும்.

அன்பியங்கள் தான் கூட்டியக்கத் திருஅவையின் அடித்தளங்கள் என்றுணர்ந்து குட்டித் திருஅவைகளை கட்டியெழுப்பும்போது இயேசு பிறக்க முடியும்.

நம் பங்குத் தளங்களில் பெரியவர்கள், “இதை எப்படி செய்தால் நல்லா இருக்கும் தம்பிகளா தங்கைகளா?” என்று இளையோரை ஆற்றல்படுத்தி, முடிவுகளை எடுக்கின்றபோது இயேசு பிறக்க முடியும்.

இளையோர் பெரியவர்களின் பழுத்த அனுபவங்களில் பாடம் கற்றுக்கொள்கின்றபோது, இயேசு பிறக்க முடியும்.

இவ்வாறு, நம் உடன் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் நாம் கிறிஸ்மஸ் எழுப்புகின்ற அன்பின் அதிர்வுகளை தர முடியும். நம் உடன்-பயணிப்பவர்களை வேறுபாடின்றி அன்புச் செய்ய தெரிகிறதா? நமக்கு எப்போதுமே கிறிஸ்மஸ் தான்!

நம்மோடு உடன் பயணிப்பவர்களில் இயேசு பிறக்கின்றார். சரி! ஆனால், இயேசுவிடம் அன்று மறைநூல் அறிஞர் கேட்டது போல இன்று நாமும் கேட்க வேண்டும். சோதிக்கும் நோக்கோடு அல்ல; இயேசுவுக்காக சாதிக்கும் நோக்கோடு: “யார் நம் உடன்-பயணிகள்?”

யார் நம் உடன்-பயணிகள்?

கூட்டியக்கத் திருஅவை மாமன்றத்தின் இலட்சினையை (டுடிபடி) குறித்த படம் கிறிஸ்து பிறப்போடு நெருங்கியத் தொடர்புடையதாக உள்ளது. இந்தப் படத்தில் நம்மோடு உடன் பயணிப்பவர்கள் யார் யார்? என்பதையும் சேர்ந்து நடக்கும் இந்த பயணத்திலே, நீதியின் தளிராக, பேரொளியின் கதிரவனாக பாலன் இயேசு உடனிருக்கிறார் என்பதையும் விளக்குவதாக நாம் புதிய பொருளை காண முடியும்.

இளையோர், முதியோர், ஆண்கள், பெண்கள், தனி நபர்கள், தம்பதிகள், குடும்பங்கள், பல வயதுக்குட்பட்ட குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், அருள்சகோதரிகள், அருள்பணியாளர்கள், ஆயர்கள் என்று முழு மானுடத்தையும் குறிக்கும் இவர்கள் தான் நம் உடன்-பயணிகள். இவர்கள் அனைவரும் உடன் பயணிக்கும் இயேசுகளாக இருக்கின்றார்கள்.

குழந்தை இயேசு நமக்கு கற்றுத் தருகின்ற பாடங்களைப் போல, உடன் பயணிக்கும் திருஅவையில் குழந்தைகள் தான் நம்மை வழிநடத்துகிறார்கள். சிறியவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள கிறிஸ்மஸ் நம்மை அழைக்கின்றது.

சரி சரி! இயேசு பொறந்துட்டாரு! நாம் எப்போது இயேசுவாக பிறக்கப் போகிறோம்?

காலம் காலமாக இயேசுவை பிறக்க வைத்திருக்கின்றோம். இனி நாம் இயேசுகளாக பிறக்க வேண்டும்.

சமூக அநீதியை சாடும்போதும், அரசியல் தரத்தை சற்று உலுக்கி பார்க்கின்றபோதும் ஏரோதை கலங்கவிட்ட இயேசுகளாக நாம் பிறக்கின்றோம்.

ஏழைகளின் சார்பாக நிலைப்பாடு எடுக்கின்ற போது கந்தைத் துணிகளில் பொதியப்பட்ட இயேசுகளாக பிறக்கின்றோம்.

இயற்கை வளங்களை மதித்து பேணி வளர்க்கின்றபோது மாட்டுக் குடிலில் இயற்கையின் வனப்பில் பிறந்த இயேசுவாக நாம் பிறக்கின்றோம்.

நாம் கொண்டாடும் கிறிஸ்மஸ் அல்ல; மாறாக, நம்மைக் கொண்டாடும் கிறிஸ்மஸ் இன்று தேவைப்படுகிறது. குழந்தைகள் கொண்டாடும் கிறிஸ்மஸ் அல்ல; மாறாக, குழந்தைகளையும் அவர்களின் மாண்பையும் கொண்டாடும் கிறிஸ்மஸ் தேவைப்படுகிறது. இளையோர் இன்புறும் கிறிஸ்மஸ் அல்ல; மாறாக, இளையோரை இன்புறச்செய்யும் கிறிஸ்மஸ் கொண்டாடப்பட வேண்டும்.

அன்னை மரியா இயேசுவை பெற்றிட கிறிஸ்மஸ் இரவிற்காக காத்துக் கொண்டிருந்தது போல, நாமும் நமது நல்ல செயல்பாடுகளில், கனிவிரக்கப் பண்பாட்டில், மானுட விடியலுக்கான தேடல்களில், இணைந்த திருஅவையாக பயணிக்க துடிக்கும் ஒன்றிப்பில் இயேசுவாக நாம் பிறக்க வேண்டும்.

இவ்வாறு, திருஅவையின் பல்வேறு பரிமாணங்களில் ஒன்றுச் சேர்ந்து இறையாட்சியை நோக்கி பரிணமிக்கின்ற போது, நமது கனவுத் திருஅவையாகிய கூட்டியக்கத் திருஅவை, உடன் பயணிக்கும் இயேசுவாகவே பிறக்கின்றது.

உடன் பயணிக்க வந்த இயேசுவை நம் கூட்டியக்கத் திருஅவையில் பிறக்க வைப்போம்!

Comment