No icon

14, ஏப்ரல் 2024 (இரண்டாம் ஆண்டு)

பாஸ்கா காலத்தின் 3 ஆம் ஞாயிறு-திப 3:13-15,17-19; 1யோவா 2:1-5; லூக் 24:35-48

இதோ, என் கைகளைப் பாருங்கள்!

2010-ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 5-ஆம் நாள், சிலே நாட்டின் அட்டக்காமா (Atacama) பாலைநிலத்தில் அமைந்துள்ள தாமிர, தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட ஒரு நிலச்சரிவால் அங்கு வேலைகளில் ஈடுபட்டிருந்த 33 தொழிலாளர்களும் நிலத்திற்கடியில் சுமார் 2,500 அடி ஆழத்தில் உயிரோடு புதைக்கப்பட்டனர். அவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோற்றுப்போயின. 17 நாள்கள் கழித்து, ஆகஸ்டு 22-ஆம் நாள் அவர்கள் உயிருடன் இருந்த உண்மை தெரிய வந்தது.

இனி வெளி உலகுடன் எந்தத் தொடர்பும் நமக்குக் கிடையாது; இனி உயிரோடு மீளமாட்டோம்என்ற அச்சத்தில், சந்தேகத்தில் புதையுண்டிருந்த அத்தொழிலாளர்கள், அக்டோபர் 13-ஆம் நாள், அதாவது புதைக்கப்பட்டு 69 நாள்களுக்குப் பின் அனைவரும் உயிரோடு மீட்கப்பட்டனர். இதைக் குறித்து அந்நாட்டின் அன்றைய ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Alejandro Karmelic அவர்கள், “சிலே நாடு இன்று உயிர்ப்பின் நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்துள்ளதுஎன்று கூறினார். 33 தொழிலாளர்களும் வெளியே வந்தபின் அவர்கள், “அந்தச் சுரங்கத்தில் 33 பேர் புதைந்து போனோம். ஆனால், எங்களுடன் 34-வது ஒருவராக இறைவன் எப்போதும் உடன் இருந்தார்என்று சொல்லி உயிர்த்த ஆண்டவரை உலகறிய பறைசாற்றினர்.

சுற்றி வாழும் அனைவராலும் கைவிடப்பட்ட சூழலில், அச்சம் மேலிடும்போது, தனிமையில் ஒருவர் நிற்கும் போது, மன அழுத்தத்தால் அழும்போது, வறுமை வாட்டும்போது, கவலை மேலிட கண்ணீர் வடிக்கும்போது நம்மில் எழும் மிக முக்கியமான கேள்விகளில் ஒன்று, ‘நலமானதைத் தருகிறவர் யார்?’ என்பதுதான். வாழ்வின் சவால்களைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் தமக்குள் கேட்டுப்பார்க்கும் கேள்வி இது. இக்கேள்வியில் மறைந்திருக்கும் மன்றாட்டு: “என் நெருக்கடி வேளையில் கடவுளே துணைபுரிய விரைந்து வாரும்என்பதுதான் (திபா 4:1,6,8). இக்கேள்வியும், மன்றாட்டும் இயேசுவின் பாடுகள் மற்றும் இறப்புக்குப்பின் சீடர்களின் உள்ளத்திலும் மையம் கொண்டன.

கல்வாரிக் கொடுமைகளுக்குப் பின், சீடர்களின் வாழ்நிலை அச்சமும், விரக்தியும் நிறைந்ததாகவே இருந்தது. தங்களின் கனவுகளும், எதிர்பார்ப்புகளும் பொய்த்துப் போனதாக எண்ணினர். அடுத்து என்ன நடக்கும் என்பதை அறியாதிருந்தனர். கதவுகளை மூடி, தங்களையே பூட்டி வைத்துக்கொண்டனர். “ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும் (திபா 4:6) என்பதுபோல வேண்டிக்கொண்டனர். இந்த நிலையில்தான், உயிர்த்த ஆண்டவர் வெவ்வேறு சீடர்களுக்கு, வெவ்வேறு இடங்களில் தோன்றுகின்றார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு 1. தாம் உயிர்த்ததைச் சீடர்கள் உறுதிபட நம்பவும், 2. உயிர்ப்புக்கு அவர்கள் (நாமும்) சாட்சிகளாக மாறிடவும் பல வழிமுறைகளைப் பொறுமையோடும், இரக்கத்தோடும் கையாள்வதைப் பார்க்க முடியும்.

முதலில், சீடர்களுக்கு நம்பிக்கையை உறுதிப்படுத்த தேவையானதாக இருந்தது அமைதி. எம்மாவு நிகழ்வின் தொடர்ச்சியாக அமைந்திருக்கும் இன்றைய நற்செய்தியில், எம்மாவு சீடர்கள் வழியில் தங்களோடு பேசிக்கொண்டு வந்தவர் ஆண்டவர் இயேசுதாம் என்பதை அடையாளம் கண்டுகொண்டவர்களாக, தங்கள் பயணத்தை நிறுத்திக்கொண்டு மீண்டும் எருசலேம் திரும்புகின்றனர். இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுகொண்ட அனுபவத்தை மற்ற சீடர்களுக்கு எடுத்துரைப்பதைக் காட்சிப்படுத்துகிறது இன்றைய நற்செய்தி. எம்மாவு சீடர்களின் அனுபவத்தைக் கேட்ட மற்ற சீடர்கள் மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக, நம்பிக்கையில் தளர்ச்சி அடைகின்றனர். காரணம், மூன்று நாள்களுக்கு முன்னர் கல்வாரியில் நடந்த சிலுவை மரணத்தின் தாக்கத்திலிருந்து அவர்கள் இன்னும் வெளிவரவில்லை. அவர்களிடமிருந்த அச்சம், இன்னும் அவர்களை விட்டு அகலவில்லை.

யூத மற்றும் உரோமை அடக்குமுறைகளால் அச்சத்திலும், குற்றப்பழி உணர்விலும் அமைதியை இழந்த சீடர்களின் உள்ளத்தை நன்கு அறிந்த இயேசு, அவர்களின் உள்ளக் காயங்களை நலமாக்க பேரார்வம் கொள்கிறார். இதன் காரணமாகவே, இயேசு அவர்கள் முன் தோன்றியதும், “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” (லூக் 24:36) என்று வாழ்த்துகிறார். இவ்வாழ்த்தைக் கேட்டதும் சீடர்கள் மகிழ்ச்சி (அமைதி) கொள்வதற்குப் பதிலாக, திகிலுறுகின்றனர்; அச்சம் கொள்கின்றனர். ஆகவே, அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த அடுத்த முயற்சியில் இறங்குகிறார் இயேசு.

இரண்டாவதாக, இயேசுவின் வருகையை எதிர்பார்த்திராத இவர்கள் ஆவியைக் காண்பது போல நினைக்கிறார்கள். ஒருமுறை இயேசு கடல் மீது நடந்து வந்தபோதும்கூட, ‘அது பேய்என அஞ்சி அலறியவர்கள் இவர்கள் (மாற் 6:49). இயேசு தாம் வாழ்ந்த காலத்தில் தம்முடைய உயிர்ப்பைப் பற்றிப் பலமுறை அறிவித்திருந்தாலும், இவர்கள் அச்செய்தியைப் புரிந்துகொள்ளவில்லை. இவர்களுடைய கலக்கத்தை இயேசு ஏற்றுக்கொள்ளவில்லை. “நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்?” (24:38) என மெதுவாகச் சாடுகிறார்.

அக்காலத்தில் ஆவி பற்றிய கதைகள் பல இருந்தன. ஆவிகளுக்குச் சதையும், எலும்பும் இல்லை என்றும் அவர்கள் நம்பியிருந்திருந்தனர். ஆவிகள் என்பன வெறும் அசைவுகள், அதோடு அனைத்து இடத்தினுள்ளும் செல்லக்கூடியவை என்றும் அவர்கள் நம்பினர். ஆவியாக இருந்தால் மூடியிருந்த அறைக்குள்ளும் அதனால் வர முடியும் என்பது அன்றைய நம்பிக்கை. எனவே, இந்தப் புரிதலில் இயேசுவைச் சீடர்கள் ஆவி என்று நினைத்ததில் வியப்பேதுமில்லை.

சீடர்களின் இத்தகைய உள்ளத்தின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட இயேசு, “என் கைகளையும், கால்களையும் பாருங்கள், நானேதான் (24:39) என்று சொல்லித் தம் கைகளையும், கால்களையும் காட்டுகிறார். அதாவது, தம் சதையையும், எலும்பையும் காட்டி, ‘ஆவிக்குச் சதையும், எலும்பும் இல்லை’ எனச் சுட்டிக்காட்டுகிறார். தாம் வெறும் ஆவியன்று; உண்மையிலேயே அவர்களோடு இருந்து பழகிய அதே இயேசுதாம்; ஆனால், இப்போது புதிய உயிரோடு, மாட்சிப்பெற்ற உடலோடு இருப்பதாகக் காட்டுகிறார். இயேசுவின் இந்தக் காட்சி அவர்களை மகிழ்ச்சிக்கும், வியப்பிற்கும் உள்ளாக்கியது. மகிழ்வு மற்றும் துயரம் ஆகிய இரண்டின் உச்சநிலைகளை அனுபவித்த சீடர்கள் நம்ப முடியாத ஒரு நிலையிலேயே இருந்தனர். சீடர்களின் மகிழ்வின் உச்சத்தை லூக்கா இவ்வாறு பதிவிடுகிறார்: “சீடர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்ப முடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள் (24:41). எனவே, இயேசு மூன்றாவது நிலைக்குச் செல்கிறார்.

மூன்றாவதாக, இயேசு தாம் ஆவி இல்லை என்பதைக் காட்ட, உணவு உட்கொள்ள முன் வருகிறார். இயேசு இறந்து உயிர்த்த பின் இரண்டு முறை சீடர்களுடன் உணவருந்துவதை லூக்கா பதிவு செய்கிறார். முதலாவது, எம்மாவு செல்லும் வழியில் இரண்டு சீடர்களுடன் உணவருந்துகிறார் (24:13-35). இரண்டாவதாக, இயேசு விண்ணேற்றம் அடையும் முன் எருசலேமில் சீடர்கள் அனைவரோடும் உணவருந்துகிறார் (24:36-49). இயேசு சீடர்களோடு கொண்டிருந்த உறவின் மிகச்சிறந்த அடையாளம் உணவு. தாம் உயிர்த்ததைச் சீடர்கள் உறுதிபட நம்ப,  “உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” (24:41) எனக் கேட்டு, வேக வைத்த மீன் துண்டு ஒன்றை அவர்கள் முன் அமர்ந்து உண்டு, தமது உயிர்ப்பைச் சீடர்களுக்கு இயேசு எண்பிக்கிறார். தாம் இறந்து உயிர்த்த பின்பும் அவர்களுடனான உறவு நீடிக்கும், தொடரும் என்பதை வெளிப்படுத்தும் அடையாளமாக அவர்களோடு அமர்ந்து உணவு உண்கிறார்.

உணவை இயேசு அவர்களோடு உண்பதன் வழியாகச் சீடர்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொள்கின்றனர். தந்தையின் மகிமையிலே பங்கு கொண்டுள்ள இயேசு தம் சீடர்களை விட்டு அகன்று சென்றுவிடவில்லை. எம்மாவு வழியில் அந்த இரண்டு சீடர்களின் கண்கள் திறந்தது போல், இங்கே இருந்த அனைவருடைய அகக் கண்களையும் இயேசு திறக்கிறார். இவ்வாறு, சீடர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்திய இயேசு, மிக முக்கியமான படிப்பினைகள் சிலவற்றையும் முன்வைக்கிறார். அ) மெசியா துன்புற்று இறந்து, மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட வேண்டும். ஆ) பாவ மன்னிப்புப் பெற மனமாற்றம் பெற வேண்டும். இ) இந்தச் செய்தி எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளுக்கும் இயேசுவின் பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் (24:46-47) என்று சொல்லித் திருத்தூதர்களை நற்செய்தியின் அதிகாரப்பூர்வமான சாட்சிகளாக ஏற்படுத்துகிறார். இவ்வாறு, படிப்படியாக, நம்பிக்கையில் வேரூன்றிய சீடர்கள் தலைவர்களாக, பணியாளர்களாக மாறுகின்றனர்; பாவ மன்னிப்புப் பெற ‘மனம் மாறுங்கள்என்று கூறி உலகெங்கும் நற்செய்தியைப் பறைசாற்றுகின்றனர்; இயேசுவுக்காக வாழவும், அவருக்காகத் துன்புறவும், இறக்கவும் ‘மறைச்சாட்சிகளாகஉருமாறுகின்றனர். உண்மையான ‘மறைச்சாட்சியம்என்பது இயேசுவை அறிந்து, அவரை அன்பு செய்வதிலும், அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப் பதிலும் நிறைவுபெறுகிறது என்பதை வாழ்ந்து காட்டினர்.

உள்ளங்கை உணர்த்தும் உண்மைகள்:

٭ உணவிலும், உள்ளங்கை உறவிலும் தம் உயிர்ப்பின் அனுபவத்தைச் சீடர்களுக்கு உணர்த்திய இயேசு, அன்றாடம் இறைவார்த்தையிலும், திருவிருந்திலும் பங்கேற்கும் நமக்கும் அதே உயிர்ப்பின் அனுபவத்தைத் தந்து, நம்பிக்கையில் திடப்படுத்துகிறார்.

٭ சிலே நாட்டின் சுரங்கத் தொழிலாளர்களைப்போல, வாழ்வில் சவால்களையும், நெருக்கடிகளையும், பேராபத்தையும் சந்திக்கின்றபொழுது, நம் வாழ்வில் நலமானதைச் செய்து, நம்மோடு நெருக்கமான உறவில் எந்நாளும் கடவுள் பயணிக்கிறார்.

٭ ஆண்டவருடைய உயிர்ப்பும், காட்சிகளும், காயங்களும் நாம் நமது அன்றாட செயல்களால் எல்லாரும் பயன்பெறும் விதமாக, வருங்கால தலைமுறைக்குச் சாட்சியம் பகர வேண்டும் எனும் உண்மையை உணர்த்துகின்றன.

நிறைவாக, விரைவில் சனநாயகக் கடமையை ஆற்றவிருக்கும் நாம், நற்செய்தியின் அடிப்படையில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சனநாயகம், சமூக நீதி, சிறுபான்மையினர் நலன் இவற்றைப் பாதுகாக்கும் நல்ல தலைவர்களை இனம் கண்டு தேர்வு செய்ய நமக்கும், நம் மக்களுக்கும் ஞானத்தைத் தர உயிர்ப்பின் ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

 

Comment