No icon

(இரண்டாம் ஆண்டு) எசா 50:4-7; பிலி 2:6-11; மாற் 14:1-15:47

ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு (24-03-2024)

பாடுகளின் பயணத்தில்...

நாமும் அவரோடு!

திருவழிபாட்டு ஆண்டின் மிக முக்கிய நாள்களை நாம் துவங்குகின்றோம். ஆண்டவர் இயேசுவின் பாடுகளைத் தியானிக்கும் புனித வாரத்தில் குருத்து ஞாயிறு வழியாக நாம் நுழைகிறோம். இந்த வாரத்தில் நாம் தியானிக்கவிருக்கும் வாசகங்கள், செபங்கள், வழிபாடுகள் அனைத்தும் புனிதமாக வாழ நம்மை அழைத்துச் செல்கின்றன. இன்று கிறிஸ்து ஆண்டவர் தமது பாஸ்கா விழாவை நிறைவு செய்ய எருசலேம் நகருக்குள் அமைதியின் மன்னராக நுழைகிறார்.

இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு என்னும் பாஸ்கா மறைபொருள்களின் நிகழ்வுகளோடு எருசலேம் நகரம் நெருங்கிய தொடர்புடையதாக இருந்ததால் இந்நகர் தனிச் சிறப்பு பெறுகிறது. இந்நகர் யூதர்களுக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கே புனித நகரமாகவும், புண்ணிய பூமியாகவும் இருக்கிறது. மேலும், பல்வேறு காரணங்களால் இது ‘முரண்பாடுகளின் நகரம்’ எனலாம். ‘இது ஆண்டவரின் நகர்’ (எசா 60:14) எனத் திருவிவிலியத்தில் பலமுறை புகழப்பட்டாலும், இது ‘இறைவாக்கினரைக் கொல்லும் நகரம்’ (மத் 23:37); இது ‘உண்மையுள்ள நகர்’ (சக் 8:3) என்றாலும், மக்களை அடிமைப்படுத்தும் நகர் (எசா 1:1-4); இது மகிழ்ச்சியின் நகரம் (திபா 48:2); அதேவேளை வேதனை நகரம் (புல 2:15).

‘இது பேரரசரின் நகரம்’ என எருசலேம் பற்றி இயேசு பெருமை கொள்கிறார் (மத் 5:35). அதேவேளை, இந்நகரின் செயல்களைக் குறித்து அழுகிறார் (லூக் 19:41). இந்நகர்மீது தாம் கொண்ட அன்பை வெளிப்படுத்துகிறார் (லூக் 13:37). அதேநேரம், கடவுள் தேடி வந்த காலத்தை அறிந்துகொள்ளத் தவறியதைக் கண்டிக்கிறார் (லூக் 19:42-44).

இந்நகரம் மக்களின் வழிபாட்டுத்தலமாகவும், அதே வேளை வரிவசூலிப்புத் தளமாகவும் இருந்தது. இந்நகரம் யூத மக்களின் இதயத் துடிப்பாகவும், அதேவேளை, சொந்த மக்களையே அதிகாரத்தால் அடிமைப்படுத்தும் அரசியல் மையமாகவும் இருந்தது. பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காகப் பலி ஒப்புக்கொடுக்கப்பட்ட இடத்தில்தான் வணிகப் பண்டமாற்றுகளும், வியாபாரமும் கொடிகட்டிப் பறந்தன. கடவுளுக்கு முதன்மை இடம் கொடுக்க வேண்டிய இடத்தில் பணத்துக்கு ஆரா தனை செய்யப்பட்டது. ‘ஓசன்னா’ என்ற முழக்கமும், ‘ஒழிக’ என்ற கூச்சலும் மாறி மாறி ஒலித்த நகரமும் இதுதான். இந்நகரத்தைப் பற்றி முழுமையாக அறிந்த இயேசு, எருசலேம் மக்களின் ஆர்ப்பரிப்போடு இந்நகரில் நுழைகிறார்.

இரு வேறு பேரணிகள் எருசலேம் நகரில் நுழைகின்றன. ஒன்று, அடித்தட்டு மக்களின் ஆர்ப்பரிப்புப் பேரணி; மற்றொன்று உரோமை அரசப் படையின் ஆதிக்கப் பேரணி. அடிமட்ட மக்களின் பேரணி கிழக்கிலிருந்து எருசலேமில் நுழைகிறது; ஒலிவ மலைச் சாரல் வழி கழுதையின்மேல் அமர்ந்து இயேசுவே இப்பேரணியை முன்னின்று நடத்துகிறார். உரோமை அரசப்படைப் பேரணி மேற்கிலிருந்து எருசலேம் நகரில் நுழைகிறது. உரோமை ஆளுநன் பொந்தியுபிலாத்து இப்பேரணியை முன்னின்று நடத்துகிறான். இயேசு இறையாட்சியை அறிவித்தார் என்றால், பிலாத்து உரோமை அரச அதிகாரத்தை அறிவித்தான். இயேசுவின் எருசலேம் நகர் நுழைவு இறையாட்சியைக் குறித்துக் காட்டியது என்றால், பிலாத்துவின் எருசலேம் நகர் நுழைவு அதிகாரம், பெருமை, வன்முறை என்பனவற்றைக் குறித்துக் காட்டின.

இயேசுவின் காலத்தில் உரோமை அரசப்படை அதிகாரத்திற்கும், அடக்குமுறைக்கும் அடையாளமாய் இருந்தது. யூதேயாவின் உரோமை ஆளுநர்கள் அனைத்து யூதப் பெருவிழாக்களிலும் அரசப்படையோடு எருசலேமில் சட்டம்-ஒழுங்கைக் கவனித்தனர்; புனித நகரில் உரோமைப்படை காவல் செய்தது. உரோமை அரசர்கள் வெறுமனே உரோமையின் அரசர் மட்டுமல்ல; அவர் ‘கடவுளின் மகன்’, ‘இறைவன்’, ‘மீட்பர்’, ‘பூமிக்கு அமைதி கொணர்ந்தவர்’ என அடையாளப்படுத்தப்பட்டனர். இவற்றையெல்லாம் அறவே வெறுத்தனர் யூதர்கள்.

சாதாரண மக்களை ஆதிக்க வர்க்கம் அடக்கி ஆண்டது; ஏழை மக்களின் வருமானத்தில் பாதி (1/2), மூன்றில் இரு பங்கு (2/3) வரியாகப் பிரிக்கப்பட்டுச் செல்வர்களுக்குச் சென்றது; ஆதிக்க வர்க்கம் ஏழை மக்களை வஞ்சித்து அடிமைப்படுத்தியதைச் சமயம் நியாயப்படுத்தியது. எடுத்துக்காட்டாக, அரசன் கடவுளின் அவதாரம் எனவும், கடவுளின் அதிகாரம் கொண்டவன் எனவும், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு முறை கடவுளின் விருப்பம் எனவும் நியாயப்படுத்தப்பட்டன. எல்லா யூதச் சமயத் தலைவர்கள் தங்கள் சமயத்தையும், தங்கள் இருப்பையும் தக்க வைத்துக்கொள்வதற்காக உரோமைப் பேரரசுடன் கைகோர்த்து இணைந்தே செயல்பட்டனர். ஒருபுறம் அதிகார வர்க்கமும், (உரோமைத் தலைமை); மறுபுறம் சமய வர்க்கமும் (யூதச் சமயத் தலைமை) ஏழை மக்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கின, ஒடுக்கின. இச்சூழ்நிலையில், ‘மெசியா வந்து எங்களுக்கு விடுதலை தரமாட்டாரா?’ என்ற விடுதலை உணர்வுகள் மக்களுக்குள் நிரம்பி இருந்தன.

மக்கள் நெடுங்காலமாக எதிர்பார்த்திருந்த மெசியா தாமே என்பதை வெளிப்படையாகவே மக்களுக்கு அறிவிக்கும் நேரம் இது! எருசலேம் நோக்கிய பவனியை இயேசுவே விரும்பி ஏற்கிறார். அமைதியை விரும்பி வரும் இயேசு ‘கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறார்’ என்ற செக்கரியாவின் இறைவாக்குகள் நிறைவேறுவதாக மக்கள் மகிழ்ந்து கொண்டாடினர் (செக் 9:9-10). மக்கள் கைகளில் பிடித்திருந்த குருத்தோலைகள் விடுதலையின், வெற்றியின் சின்னமாய் இருந்தன (2மக் 10:7). இயேசுவின் பின்சென்ற மக்களும், சீடர்களும் மகிழ்ச்சியால் ‘தாவீதின் மகனுக்கு ஓசான்னா’ என ஆர்ப்பரிக்கின்றனர் (யோவா 12:13). ‘இந்த அடக்குமுறைகளிலிருந்து எங்களுக்கு விடுதலை தாரும்; எங்களுக்கு விடுதலை வேண்டும்’ என்பதே இஸ்ரயேல் மக்களின் ஒரே முழக்கமாக இருந்தது. ‘ஓசன்னா’ என்னும் அரமேய - எபிரேயச் சொல்லுக்கு ‘விடுதலை தாரும் - வெற்றி தாரும்’ என்பது பொருள்.

மக்கள் எதிர்பார்ப்பதுபோல, இயேசு உரோமை மற்றும் யூதத் தலைமைகளை ஆயுதப் புரட்சியால் புரட்டிப்போட வரவில்லை. இயேசுவின் மெசியாத் தன்மை பிற புரட்சியாளர்களிடமிருந்து வேறுபட்டது. அவர் பாடுகள், மரணம், உயிர்ப்பு வழியாக அமைதியின் அரசாக வருகிறார். அன்றைய நாள்களில் போருக்குப் போகும்போது மன்னன் குதிரை மீது ஏறிச்செல்வார் (எசா 3:1-3; 1அர4:26). மாறாக, அமைதி விரும்பி வரும்போது கழுதையின்மீது ஏறி வருவார்  என்பது இஸ்ரயேல் சமுதாயத்தில் நிலவிய மரபு. அமைதியின் மன்னன் என்பதை அடிக் கோடிட்டுக் காட்ட இயேசு கழுதைமீது ஏறி வருகிறார்.

மக்களின் ஆர்ப்பரிப்புடனான இயேசுவின் எருசலேம் வருகை மதத்தலைவர்களுக்கும், உரோமை அரசுக்கும் அச்சத்தை கொடுத்தது. இயேசுவைச் சுற்றி உருவான இந்தக் கூட்டத்தைக் கண்டு, அதிகார வர்க்கம் ஆட்டம் கண்டது. எருசலேம் நகரில் ஊர்வலமாய் நுழைந்த இயேசு அங்கு குப்பையாய் குவிந்திருந்த அவலங்களை (அதிகார அழுக்குகளை) அகற்றினார் (யோவா 2:13-25). இயேசுவுக்கும், பிலாத்துவுக்கும் இடையே, இயேசுவுக்கும், சமயத் தலைவர்களுக்கும் இடையே மோதல்கள் முற்றின. இருப்பினும், இயேசுவின் பயணம் தடைபடவில்லை. இது ஒரு புரட்சிப் பயணம், விடுதலைப் பயணம், வீரப் பயணம், விண்ணகத்தை நோக்கிய பயணம், பலிக்கான பயணம், புனிதப் பயணம் தமது இறுதிப் பயணத்தில் இயேசு, ‘தம்மைத் துன்புறுத்தும் சமூகம்’ மற்றும் ‘தம்மோடு துணை நிற்கும் சமூகம்’ என இருவேறு மனநிலை கொண்ட மக்கள் சமூகத்தைக் காண்கிறார்.

இயேசுவைத் தீர்ப்பிடத் துடிக்கும் சமய மற்றும் அரசியல் தலைவர்கள், தம்மைக் காட்டிக்கொடுக்க விரும்பும் யூதாசு, மறுதலிக்க விரும்பும் பேதுரு, ஒரு மணி நேரம் விழித்திருக்க வலுவில்லாத சீடர்கள், ஆடையின்றித் தப்பி ஓடவிருக்கும் இளைஞர், ‘இவன் சாக வேண்டியவன்’ எனத் தீர்மானிக்கும் தலைமைக்குரு, நிர்வாணப்படுத்தும் படைவீரர்கள், ஏளனம் செய்து நையப்புடைப்பவர்கள், ‘பரபாவையே விடுதலை செய்யும்’ எனக் கேட்கும் கூட்டத்தினர், ‘அவனைச் சிலுவையில் அறையும்’ என்று உரக்கக் கத்துபவர்கள், காறி உமிழ்பவர்கள், கன்னத்தில் அறைபவர்கள், கசையால் அடிப்பவர்கள், பொய்சாட்சிச் சொல்பவர்கள், ஆணியால் அறைபவர்கள், முள்முடி சூட்டும் படைவீரர்கள், ‘யூதரின் அரசரே வாழ்க’ என ஏளனம் செய்பவர்கள், கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்த பிலாத்து, கசப்புக் காடியைக் குடிக்கக் கொடுப்பவர்கள், இயேசுவின் ஆடையைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொள்பவர்கள், ‘நீ மெசியாதானே! உன்னையும், எங்களையும் காப்பாற்று’ எனப் பழித்துரைத்த குற்றவாளி, இயேசு இறந்த பிறகும் விலாவில் ஊடுருவக் குத்துபவர்கள், ‘நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா’ எனப் பழித்துரைத்த வழிப்போக்கர்கள் எனப் பலரும் இப்பேரணியில் விரவிக் கிடக்கின்றனர்.

அதேநேரத்தில், இயேசுவுக்காகப் பேச முடியாமல் மௌனியாய்ப் பயணிக்கும் சிலர், இயேசுவின் சிலுவையைச் சிறிது நேரம் சுமந்து சென்ற சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன், மாரடித்துப் புலம்பும் பெண்கள், இயேசுவின் முகத்தைத் துடைத்த வெரோணிக்கா, ‘என்னை நினைவிற்கொள்ளும்’ என இயேசுவிடம் வேண்டிக்கொள்ளும் நல்ல கள்ளன், ‘இவர் உண்மையாகவே நேர்மையாளர்’ என்று கூறிய நூற்றுவர் தலைவர், தனது கல்லறையைத் தானமாய் அளித்த அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு, மறுப்பேதுமின்றிக் கழுதையைக் கொடுத்தவர், வெள்ளைப்போளமும், சந்தனத்தூளும் கொண்டு வந்த நிக்கதேம், மகதலா மரியா, குளோப்பாவின் மனைவியுமான மரியா, சலோமி போன்ற பெண்கள் சிலர், இறுதிவரை துணை நின்ற அன்னை மரியா மற்றும் அன்புச் சீடர் யோவான் போன்ற பலரும் இப்பேரணியில் பங்கெடுக்கின்றனர்.

எல்லாவற்றையும் அறிந்த இயேசு எருசலேம் நகருக்குள் எதற்காக நுழைகிறார்? தம் மக்களை இறுதிவரை அன்பு செலுத்த; கடவுளின் மக்களை உரோமை மற்றும் யூதச் சமய அடிமைத்தனத்தினின்று விடுவிக்க; மனித குலத்தின் விடியலுக்காகத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற; அன்பையும், நீதியையும் கொண்ட இறையாட்சியை நிலைநாட்ட; தீமை ஒருபோதும் நன்மையை வெற்றிகொள்ள இயலாது என்பதைத் தம் செயல்களால் காட்டிட; இறுதியில் தம்மையே தாழ்த்திச் சிலுவையை ஏற்றுக்கொள்வதற்காக!

இயேசுவின் பாஸ்கா விருந்தில் ஆர்வத்தோடு பங்கெடுக்க அழைக்கப்படும் நாம் கடவுளின் திட்டத்திற்கு முன்னிடம் கொடுக்கின்றோமா?  அன்னை மரியாவைப்போல இறுதிவரை இயேசுவோடு பயணம் மேற்கொள்கின்றோமா? சுயநலத்தைப் புதைத்துப் பிறர் நலம் பேணும் ஒருவராக என்னால் வாழ முடிகிறதா? இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமக்க முன்வருகின்றோமா? நம்பிக்கைக்குரிய நண்பனாக வாழ முடிகிறதா? இவை போன்ற பல கேள்விகளுக்கு இந்தப் புனித வாரத்தில் விடை காண்போம்.

Comment