No icon

03, மார்ச் 2024

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு (விப 20:1-17; 1கொரி 1:22-25; யோவா 2:13-25)

இயேசுவின் அறச் சினமும், அறநெறிச் செயல்களும்!

இன்று தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு! முதல் ஞாயிறு பசியோடும், களைப்போடும் இருந்த இயேசுவை நாம் பாலைநிலத்தில் சந்தித்தோம். இரண்டாவது ஞாயிறு தோற்ற மாற்றமடைந்து, ஒளிவெள்ளத்தில் தோன்றிய இயேசுவை மலைமீது சந்தித்தோம். இன்று, கோபக்கனல் தெறிக்க, சாட்டையைச் சுழற்றும் இயேசுவை நாம் எருசலேம் கோவிலில் சந்திக்கிறோம்.

பொதுவாக, கோவில் அல்லது ஆலயம் என்பது ஒரு புனிதமான இடம் என்றும், ஆலயம் என்பதற்கு ஆன்மாக்கள் ஆண்டவனின் திருவடியில் இலயிக்கும் (ஒன்றில் மனம் ஆழ்ந்து போகும் நிலை) இடம் என்றும் பொருள் கொள்ளலாம். நாம் இறைவனோடு ஒன்றிக்கின்ற, ஒன்றாகின்ற, அவரது அன்பில் திளைக்கின்ற இடமே ஆலயம். ‘ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே... ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே...’ - துயரங்களோடு ஆலயம் நோக்கி வரும் ஒவ்வொருவரின் உணர்வு நிலையை வெளிப்படுத்தும் வரிகள் இவை. கோவிலுக்குச் சென்றால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை நம்மில் பலருக்கு உண்டு. எனவேதான் ஆண்டுதோறும் பல்வேறு ஆலயங்கள் நோக்கிப் படையெடுக்கும் பக்தர்கள் ஏராளம்.

‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’, ‘கோவில் விளங்கக் குடி விளங்கும்’, ‘கோ உயர்ந்தால் குடி உயரும்’, ‘கோபுரத் தரிசனம் கோடி புண்ணியம்’, ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ - இவை கோவில்கள் அல்லது ஆலயங்கள் பற்றி நம் சான்றோர் கூறிய அறிவுரைகள். ஆலயங்கள் என்பவை நாம் சந்திக்கும் மையங்கள் மட்டுமல்ல, அவை நமது நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் வாழ்வு முறையின் அடையாளங்களும்கூட.

இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தமட்டில், எருசலேம் கோவில் அவர்களுக்கு இதயம் போன்றது. அனைத்து இஸ்ரயேல் மக்களுக்கும் இறைவன் உறையும் இடமாக, அவரை வழிபடும் இடமாக எருசலேம் கோவில் திகழ்ந்தது. கி.மு. 957-ஆம் ஆண்டில் சாலமோன் இதனைக் கட்டிய பின், யூதர்களுக்கு இந்தக் கோவிலே உலகின் மையம் என்ற சிந்தனையும், இறைவன் தங்கும் இல்லம் என்றும், உலகின் அனைத்து மக்களும் இதனை நோக்கியே வரவேண்டும் என்ற எண்ணமும் உருவாயிற்று. எருசலேம் கோவில் எருசலேமில் ஆன்மிகத் தலைமைப் பீடமாக இருந்தது. ஒவ்வொரு யூதரும் எருசலேம் கோவிலைத் தன்னுயிரினும் மேலாகக் கருதினர்.

எருசலேம் கோவில் கடவுளின் பிரசன்னத்தை மட்டுமல்ல; அவரது மன்னிப்பையும், இரக்கத்தையும் அருளும் இடம் என யூதர்கள் நம்பினர். எனவே, ஒவ்வொரு நாளும் காலை ஒன்பது மணிக்கும், பிற்பகல் மூன்று மணிக்கும் பலியிடப்படும் செம்மறி வழியாக இறைவன் பாவங்களை மன்னிக்கிறார் எனவும், விழா நாள்களில் புறாக்கள், செம்மறி ஆடுகள், காளை மாடுகள் மற்றும் பிற விலங்குகளைப் பலியிடுவதன் வழியாகக் கோவில் தூய்மையாக்கப்பட்டதெனவும் நம்பினர்.

இந்தக் கோவிலில்தான் பல்வேறு முறைகேடுகளும், நேர்மையற்ற செயல்களும், அரசியலும், பொருளாதாரச் சுரண்டலும் நடைபெற்றன. உண்மையான கடவுளைப் புறந்தள்ளி, வியாபாரத்தை முதன்மையாக்கி, தம் தந்தையின் இல்லத்தைச் சந்தையாக்கியதை வேதனையுடன் பார்க்கிறார் இயேசு (யோவா 2:16). அங்கு அவராலே இறைவனைக் காண முடியவில்லை! எனவேதான், கடுஞ் சினமுற்று சாட்டையைக் கையில் எடுக்கிறார்.

எருசலேம் கோவிலில் நடந்த பல்வேறு முறைகேடுகளை வெறும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது; அந்த அளவிற்கு முறைகேடுகளும், சுரண்டல்களும் பெருகி இருந்தன. ஏழை யூதர்களுக்கும், பிற இனத்தாருக்கும் எதிராக நடந்த முறைகேடுகளே இயேசு சீற்றம் கொள்வதற்கான, சாட்டை எடுத்ததற்கான முக்கியக் காரணங்களாகும். இயேசு கோவிலைத் தூய்மையாக்கிய நிகழ்வில், ஏழைகளுக்கு எதிராக நடந்த மூன்று மிக முக்கியமான முறைகேடுகளைப் புரிந்துகொள்வது பயனளிக்கும்.

முதலாவதாக, ஆடு, மாடு, புறா விற்போரிடம் காணப்பட்ட முறைகேடுகள்: ஏழைகள் கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதற்காகத் தங்கள் வீடுகளில் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்த ஆடு, மாடு, புறா போன்ற காணிக்கைகளைக் குருக்களிடம் கொண்டு வருவது வழக்கமாக இருந்தது. ஆனால், ஆலயத்தில் உள்ள குருக்கள் அந்தக் காணிக்கைகளில் குறை இருப்பதாகக் கூறி, அக்காணிக்கைகளை ஏற்க மறுத்தனர். சரியான காணிக்கையைச் செலுத்தவில்லையெனில் கடவுள் அவர்களைப் புறக்கணித்துவிடுவார் என்ற அச்சத்தை வறியோர் மீது குருக்கள் திணித்தனர். பலி செலுத்த வேண்டிய பொருள்களைக் கோவில் வளாகத்திலே அநியாய விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயச் சூழலை உருவாக்கினர். இதனால் ஆண்டு முழுவதும் ஏழைகள் சேமித்து வைத்த பணமெல்லாம் காணிக்கை வாங்குவதற்கே பற்றாமல் போனது.

இரண்டாவதாக, கோவில் முற்றத்தில் இலாபகரமான தொழிலில் ஈடுபட்டிருந்த நாணயம் மாற்றுவோரின் முறைகேடுகள்: பதினெட்டு வயது நிரம்பிய யூத ஆண் மகன் ஒவ்வொருவரும் தன் வருமானத்தில் ஒரு குறிப்பிட்டத் தொகையை எருசலேமில் செலவிட வேண்டும் என்று சட்டம் இருந்தது. எனவே, இவர்களிடம் 1/2 செக்கேல் ஆலய வரியாக வசூலிக்கப்பட்டது. எருசலேம் கோவிலுக்கு வந்தவர்கள் வெளியிடங்களைச் சார்ந்தவர்களாக இருந்ததால், தங்களது வெளிநாட்டு நாணயத்தை யூத நாட்டு நாணயமாக மாற்ற வேண்டிய கட்டாயத் தேவை எழுந்தது. எனவே, தங்களிடம் இருந்த தெனாரியம், திராக்மா போன்ற நாணயங்களைக் கொடுத்து நாணய மாற்றுச் செய்யும்போது 1/6 பங்கு மாற்றுக்கூலியாகப் பறிக்கப்பட்டது. இதன் வழியாக ஒருசிலர் பெரும் இலாபம் ஈட்டினர். இயேசுவின் பார்வையில் இது நேர்மையற்ற செயல்; பணப் பறிப்பு; சுரண்டல்; கொள்ளை!

மூன்றாவதாக, பிற இனத்தவர் உள்பட அனைத்து மக்களினங்களுக்குமான வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட முறைகேடு: இயேசுவின் காலத்தில் கோவிலின் மையமாகத் தூயகம் இருந்தது. அங்குதான் பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன. தூயகத்தைச் சுற்றிலும் யூதக் குருக்களுக்கான முற்றம்; அவர்களைத் தொடர்ந்து ஆண்கள் வழிபடுமிடம்; பிறகு யூதப் பெண்களுக்கான இடம்; பின் ஆலயத்தின் வெளி முற்றம் பிற இனத்தார் வழிபடும் இடமாக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த வெளிமுற்றம் ‘பிற இனத்தார் முற்றம்’ (The Court of the Gentiles) என்று அழைக்கப்பட்டது.

எருசலேம் கோவிலில் வியாபாரங்கள் நடந்ததெல்லாம் கோவிலின் வெளி முற்றத்தில்தான். பிற இனத்தார் இந்த வெளி முற்றத்தில் மட்டும் நின்று இறைவனைத் தரிசிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், அவ்விடத்திலும் விற்பதும், வாங்குவதும், நாணயம் மாற்றுவதுமென கடைகள் கூடிவிட்டதால், இறைவனைக் காண ஆவலாய் வந்த பிற இனத்தவர், இறைவனைக் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேற்குறிப்பிட்ட இந்த முறைகேடுகளால் ஏழைகளும், பிற இனத்தவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, இந்த முறைகேடான செயல்களைக் கண்டிக்க அறச் சினம் கொள்கிறார் இயேசு.

எருசலேம் கோவிலில் நடந்த இந்த வியாபாரச் செயல்களுக்கு முக்கியக் காரணமானவர்கள், அக்கோவிலை நடத்தி வந்த தலைமைக் குருக்கள்தாம். இவர்களின் அனுமதியோடு, ஒத்துழைப்போடு வியாபாரிகளும், நாணயமாற்றுவோரும் ஏழைகளிடமிருந்து பணம் பறித்தனர். இதில் பெரும் பங்கு (பணம்) தலைமைக் குருக்களின் பைகளை நிரப்பின. எனவேதான் ‘என் இறைவேண்டலின் வீட்டை நீங்கள் கள்வர் குகையாக்கி விட்டீர்களே!’ (மாற் 11:17) என இவர்களைக் கடிந்துகொள்கிறார் இயேசு.

இப்பகுதியில் ‘குகை’ என்ற உருவகம் நம் கவனத்தை ஈர்க்கின்றது. எரேமியா 7-ஆம் அதிகாரத்தின் பின்புலத்தில், ‘குகை’ என்பது ‘பாதுகாப்பான இடம்’ அல்லது ‘அடைக்கலம்’ எனும் பொருளைக் குறிக்கிறது (எரே 7:1-11). தாங்கள் திருடிய பிறகு, பிறர் பார்வையிலிருந்து தப்பி பாதுகாப்பான இடங்களில் ஒளிந்துகொள்ளும் திருடர்களைப்போல, தலைமைக் குருக்களும் ஏழைகளிடமிருந்து பணத்தைத் திருடிவிட்டு, கோவிலில் பாதுகாப்பாக ஒளிந்துகொள்கின்றனர். தங்கள் மந்தையை (மக்களை) மேய்க்காமல், அவ(ற்றை)ர்களைக் கொடுமையுடனும், வன்முறையுடனும் நடத்தினர் (எசே 34:4). எனவே, நீதியற்ற இவர்கள் கோவிலில் வழிபாடு நடத்தியதால் கோவில் இறைவனின் இல்லமாக அல்ல; கள்வர்களின் குகையாக மாறியது.

எருசலேம் கோவிலில் அல்லது கோவிலைச் சுற்றி அன்று நடந்த நிகழ்வுகளுக்கும், இன்று நம் கோவில்கள், திருத்தலங்களில் காணும் பல நிகழ்வுகளுக்கும் நெருங்கிய ஒப்புமை இருப்பதை மறுக்க இயலாது! ஒருவேளை இன்று இயேசு நம் கோவில்களுக்கு வந்தால்...?

இறுதியாக, இயேசுவின் செயல்களைப் பார்த்து ‘இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?’ (யோவா 2:18) என்ற தலைமைக் குருக்களின் கேள்விகளுக்கு, நேரடியாகப் பதில் சொல்லாமல், ‘இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்’ (யோவா 2:19) என்கிறார். அவர் தம் உடல் எனும் கோவிலைப் பற்றியே பேசினார் என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

இயேசுவின் போதனை நமக்குத் தரும் பாடங்கள்

● ஏழை எளிய மக்கள் சமயத்தின் பெயரால், பக்தியின் பெயரால், கடவுள் நம்பிக்கையின் பெயரால் சுரண்டப்படுதல், கோவிலில் மண்டிக் கிடக்கும் பெண்ணடிமைத்தனம், பங்கேற்பதில் ஏழை-பணக்காரன், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற பாகுபாடுகளுக்கு எதிரான அறச்சினத்தை வளர்த்துக்கொள்ள இயேசுவின் அறச் செயல்கள், அறச்சினம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

● சமயத்தையும், கடவுளையும் மூலதனமாக்கி நடைபெறும் வியாபாரங்கள், கடவுளுக்குப் பணி செய்யாமல் பணத்துக்குப் பணிபுரியும் (ஊழியம்) கோவில், திருத்தலப் பொறுப்பாளர்கள், கோவிலின் பெயரால் சண்டைகள், பிரிவினைகள், கலவரங்கள் ஏற்படுத்துவோர் இதயங்களில் இறைவன் குடிகொள்வதில்லை.

● ‘நமது உடலே இறைவன் தங்கும் ஆலயம்; நாமே கடவுளின் கோவில்’ (1கொரி 3:16-17).  தூய ஆவியானவர் தங்கி இருக்கும் உயிருள்ள ஆலயங்களாக நாம் மாற வேண்டுமெனில், மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு இறைவன் வெளிப்படுத்திய பத்துக் கட்டளைகளைக் கருத்தூன்றிக் கடைப் பிடிக்க வேண்டும் (முதல் வாசகம்). ஏனெனில், ஆண்டவரின் திருச்சட்டமும், ஒழுங்குமுறைகளும் சரியானவை; உண்மையானவை; நம்மை மகிழ்விப்பவை (திபா 19).

Comment