No icon

25, பிப்ரவரி 2024 (இரண்டாம் ஆண்டு)

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு (தொநூ 22:1-2, 9-13,15-18, உரோ 8:31-34, மாற் 9:2-10)

மலை உச்சியை நோக்கி... உரையாட... உருவா(க்)..!

ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறு, இயேசு சந்தித்த சோதனைகளைப் பற்றியும், இரண்டாம் ஞாயிறு, இயேசு தோற்ற மாற்றம் பெற்ற நிகழ்வைப் பற்றியும் சிந்திக்க திரு அவை நம்மை அழைக்கின்றது. கடந்த ஞாயிறு சிந்தனையில் பாலை நிலத்தில் இயேசுவைச் சந்தித்தோம். இன்று மலையுச்சியில் அவரைச் சந்திக்க வந்திருக்கின்றோம். இன்றைய வழிபாட்டின் இறைவார்த்தைகள் மூன்று மலை உச்சி இறையனுபவத்தை நம் சிந்தனைக்குத் தருகின்றன. அவை மோரியா மலை, ஓரேபு மலை, கல்வாரி மலை! ஆபிரகாம்இயேசு மற்றும் அவரது சீடர்களின்மலை அனுபவத்தைநமது சிந்தனைகளின் மையமாக்குவோம்.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரனின் (கடவுளின்) சிம்மாசனம்என்பது தமிழ் பழமொழி. தமிழ்நாட்டில் அனைத்து மலைகளிலும் கோயில்கள் இருப்பதை நாம் பார்க்கின்றோம். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் வாழிக்கடவுவிலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் அமைந்துள்ள குருசு மலை ஒரு புகழ்பெற்ற கிறிஸ்தவத் திருப்பயண இடமாக அமைந்துள்ளது. பல்வேறு வேண்டுதல்களோடு, தவமுயற்சிகளோடு மலைகளை நோக்கி நடைபயணமாக அல்லது திருப்பயணமாக மக்கள் தொடர்ந்து செல்வதுண்டு. ‘மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்!’ (திபா 121:1). மலை உச்சியை இறைவனோடு இணைகின்ற, இறைவன் அவரை நமக்கு வெளிப்படுத்துகின்ற இடமாக மீட்பின் வரலாற்றிலும் திரு அவையின் படிப்பினையிலும் நாம் காண்கின்றோம்.

நாற்பது நாள்கள் இருளான போராட்டத்திற்குப் பிறகு நோவாவின் பெட்டகம் அடைந்த இடம் ஆரராத்து மலைத் தொடர் (தொநூ 8:4). மோசே இறைவனைச் சந்தித்துப் பத்துக் கட்டளைகளைப் பெற்றது சீனாய் மலை (விப 19:18). எலியா இறைவாக்கினர் உயிருக்குப் பயந்து நாற்பது நாள்கள் பாலைவனப் பயணத்திற்குப் பிறகு தஞ்சம் அடைந்த மலை ஓரேபு மலை (1அர 19:8). எருசலேம் நகரை தாவீது உருவாக்கியது சீயோன் மலையிலே (எபி 12:22). இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் கடின இதயத்தோடு தன் ஒரே மகன் ஈசாக்கைப் பலியாக்கச் சென்றது மோரியா நிலப்பகுதியிலுள்ள மலை (தொநூ 22:2). மலை எப்பொழுதும் கடவுளின் இரக்கத்தின் இடமாய், கடவுள் மக்களை அன்பு செய்வதன் இடமாகக் காட்டப்படுகின்றது. தேர்ந்து கொள்ளப்பட்ட மனிதர்களோடு உறவாடக்கூடிய, உடன்படிக்கையை ஏற்படுத்தக்கூடிய, உறவுகளைப் புதுப்பிக்கக்கூடிய இடமாகவும் மலைகள் திருவிவிலியத்தில் காட்டப்படுகின்றன. கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்த மாபெரும் செயல்களில் பல நிகழ்வுகள் மலைகளிலேயே நடைபெறுகின்றன.

ஆபிரகாம் ஒரு கொடுமையான சோதனையை மோரியா மலையுச்சியில் அனுபவிக்கிறார். அவரது நம்பிக்கையைச் சோதிக்கும் நிகழ்ச்சி இது. வாரிசு இல்லை என்று வாடிக்கிடந்த ஆபிரகாமுக்குத் தனது முகவரியாக ஈசாக் என்னும் குழந்தை பிறக்கிறது. “உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக் கொண்டு, மோரியா நிலப்பகுதிக்கு செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரிபலியாக அவனை நீ பலியிட வேண்டும்” (22:2) என்ற கட்டளையைப் பிறப்பித்தார் கடவுள். ‘உன் சந்ததி வானில் உள்ள விண்மீன்கள் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகும்என்ற இறைவனின் வார்த்தையை நம்பிய ஆபிரகாமுக்கு, ஆண்டவர் கூறிய கட்டளை தனது நம்பிக்கையையே வேரறுக்கும் வண்ணம் அமைகிறது. தனது நூறாவது வயதில் கடவுளே தந்த மகனை அவரே பலியிடக் கேட்டது ஆபிரகாம் சந்தித்த பெரும் துன்பம். ஆனால், ஆபிரகாம் கடவுள்மேல் கொண்ட நம்பிக்கை அனைத்திலும் பெரிதாக இருந்தது. ‘இதோ, நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக் குட்டி எங்கே?’ என்று தன் தந்தையை நோக்கி ஈசாக்கு கேட்டபொழுது, ஆபிரகாம், ‘எரிபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பொறுத்தமட்டில், கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே’ (22:7) என்று கூறியது பழைய ஏற்பாட்டில் மிக முக்கியமான நம்பிக்கையின் வெளிப்பாடாக இன்றுவரை பார்க்கப்படுகிறது.

நம்பிக்கையே துன்பங்களையும், சோதனைகளையும் தகர்க்க வல்லதென எண்பித்தார் ஆபிரகாம். ‘கடவுள் கொடுத்தார், அவரே கேட்கிறார் கொடுப்பதே சரிஎன்று கடவுளைப் பணிந்து, அவரின் கட்டளைக்குப் பணிகிறார். மகனைப் பலி கேட்ட இறைவன், ஆபிரகாமுக்கு மலையுச்சியில் இறையனுபவத்தை அளிக்கிறார்.

நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு மலையுச்சியில் சீடர்களும் இறை அனுபவம் பெறுகின்றனர். இயேசு பாடுகளை நோக்கிய எருசலேம் பயணத்தில் தோற்றம் மாறியதையும், கடவுளிடம் கொண்ட நம்பிக்கையால் தளர்வுறாது பாடுகளைச் சந்திக்கத் துணிந்து சென்றதையும் இன்றைய நற்செய்தி முன்வைக்கின்றது. இயேசுவின் தோற்றம் மாற்ற நிகழ்வினைப் புரிந்து கொள்ள அதற்கு முன்னுள்ள பகுதியோடு இணைத்துப் பார்ப்பது அவசியம். இயேசு தம் பாடுகள் பற்றி முதன்முறை முன்னறிவிக்கிறார். ஆனால், பேதுரு உள்பட இயேசுவின் சீடர்கள் அதனைப் புரிந்துகொள்ளவில்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அவர்களிடம் மெசியா என்பவர் வலிமை கொண்ட அரசியல் தலைவர் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. அதனால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும், உயிரை இழப்பது என்பதும் அவர்களுக்குப் புரியாததாகவும் இருந்தது.

மேலும், இயேசு பேதுருவைக் கடிந்துகொண்ட பாணியும் சீடர்களுக்குப் பெரும் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளித்திருக்க வேண்டும். எனவே, இந்த அதிர்ச்சியிலிருந்து பேதுருவும், யாக்கோபும், யோவானும் வெளிவர, அவர்களை ஊக்கப்படுத்தஆன்மிக அருள்தேவைப்பட்டது. ஆகவே, சீடர்களின் பலவீனத்தை நன்கு அறிந்தவரான இயேசு, அவர்கள்மீது இரக்கம் கொண்டு, தம் பாடுகளுக்கும், இறப்பிற்கும் பின்பு வரவிருந்த தமது வெற்றியைத் தம் உருமாற்றத்தின் வழியாக வெளிப்படுத்துகின்றார். இயேசுவின் பாடுகளைப் பற்றிக் கேட்டு நொந்துபோயிருந்த பேதுரு, இப்போது அவரது வெற்றிகரமான தோற்றத்தில் பெருமகிழ்ச்சி கொள்கிறார். இதே தோற்றத்தில் இயேசு நீடித்திருக்க வேண்டும் என்று பேதுரு பெரிதும் விரும்புகிறார். ஆனால், இயேசுவோ இந்த அனுபவம் சீடர்கள் நம்பிக்கையில் ஆழப்பட வேண்டும், வாழ்வின் உண்மைத்தன்மையை உணர வேண்டும், வாழ்வுப் பயணத்தில் தயாரிக்க உதவ வேண்டும் என விரும்புகிறார்.

இன்றைய நற்செய்தியில், நம் கூடுதல் கவனத்தை ஈர்ப்பவர்கள் இயேசுவின் தோற்ற மாற்ற நிகழ்வில் இடம்பெறும் மோசேவும், எலியாவும். இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மோசேவும், எலியாவும் மிக முக்கியமானவர்கள். மோசே மிகப்பெரிய திருச்சட்ட மாமேதைஇறைவாக்கினர் எலியா இறை வாக்கினர்களுள் தலைமையானவர். திருச்சட்டமும், இறைவாக்கும் யூதர்களுக்கு இரு கண்கள் போன்றவை. கடவுளைத் தேடக் கூடியவர்கள் வாழ்வில் வரக்கூடிய பல்வேறு போராட்டங்களைச் சந்திக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துபவர்கள் இவர்கள் இருவருமே. மோசே இறைவன் கொடுத்த கட்டளைகளைப் பெற்றுக்கொண்டு அதன்படியே மக்களை வழிநடத்தப் புறப்படுகின்றபொழுது, அவர் எதிர்க்கப்பட்டாலும், மக்களால் பல்வேறு முணு முணுப்பிற்கு அவர் ஆளான சூழலிலும் கடவுளின் பார்வையில் மோசே ஏற்றுக்கொள்ளப்பட்டார். எலியாவும் அன்றைய காலத்தில் போலி இறைவாக்கினர்களால் எதிர்க்கப்பட்டாலும், யாவே கடவுளால் எலியா இறைவாக்கினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்; எலியா விண்ணிற்கு எடுத்துக்கொள்ளப்படக்கூடிய அளவிற்கு இறைவனால் உயர்த்தப்பட்டார் என்பதுதான் திருவிவிலியமும், இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கையும் நமக்குக் கொடுக்கக்கூடிய செய்தி.

நற்செய்தியாளர்கள் மாற்கும், மத்தேயுவும் தாபோர் மலையில் மோசேயும், எலியாவும் தோன்றி இயேசுவுடன் உரையாடிக் கொண்டிருந்தனர் என்கின்றார்கள். ஆனால், என்ன பேசிக்கொண்டிருந்தனர் என்பது பற்றி மத்தேயுவும், மாற்குவும் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், நற்செய்தியாளர் லூக்கா எருசலேமில் நிறைவேற இருந்த இயேசுவின் இறப்பைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தனர் (லூக் 9:31) என்று குறிப்பிடுகிறார்.

எனவே, பாடுகளிலும், போராட்டங்களிலும், எதிர்ப்புகளிலும் இறைவனின் திட்டத்தை நிறைவேற்றும் இயேசுவுடன் கடவுள் உடனிருக்கிறார் என்பதுதான் மோசேயும், எலியாவும் இயேசுவோடு உரையாடிய அந்தச் செய்தி. ‘கிறிஸ்துவின் மகிமையை அவரின் சிலுவையிலிருந்து பிரிக்க இயலாதுஎன்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்று.

சிலுவையை அரவணைப்பவர்களே அவரின் சீடராக இருக்க முடியும் என்பதே புனித பவுல் இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக நமக்கு விடுக்கும் செய்தி.

உடைபட... உருவா(க்)...

உருமாற்றம் என்பது தம்முடைய சீடர்கள் துன்புறத் தயாராயிருக்க வேண்டும் என்பதற்கான அழைப்பாகும். மகிமையான தோற்றத்தின் நடுவே பேசப்பட்ட பொருள் பாடுகளும், துன்பமுமே. எனவே, கடவுளின் திட்டத்தை நிறைவேற்றும்போது துன்பத்தைத் தவிர்க்க முடியாது. ‘சிலுவையின்றி மீட்பு இல்லை’, ‘துன்பமின்றி வெற்றியில்லை’. துன்பத்தின் வழியே மகிமை! துன்பத்தின் வழியே உயிர்ப்பு! துன்பங்கள், பாடுகள் வழியே கட்டமைக்கிற நம்பிக்கைதான் நிலையானது; நீடித்தது!

ஆபிரகாமின் மலை அனுபவம் இக்கட்டான சூழல்களில் கடவுள் பார்த்துக்கொள்வார் அல்லது எதிர்பாராத விதமாகக் கடவுள் நம் வாழ்வின் ஓட்டத்தை மாற்றுவார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. எனவே, கடினமான சூழல்கள், சந்தேகங்கள், குழப்பங்கள், கேள்விகள், இருள்நிறை தருணங்கள் இவற்றால் தவித்தாலும், விழிபிதுங்கி நின்று தடுமாறினாலும் நாம் கடவுளோடு இல்லாதபோதும்கூட அவர் நம்மோடுதான் இருக்கிறார்!

இயேசுவின் சிலுவை வழியில் பயணிக்க வேண்டுமாயின் எப்போதும் உடைபடத் தயாராய் இருக்க வேண்டும். வாழ்வின் குறிக்கோளை மேற்கொள்ள இயேசு சிலுவை மரணத்தை ஏற்கத் தயாராக இருந்தார். எனவே, மலையின் உச்சியில் இறையனுபவம் பெற்ற அந்த அற்புத உணர்வோடு, தம் சீடர்களை அழைத்துக் கொண்டு கீழே இறங்குகிறார். எதற்காக? மக்களை உருமாற்ற! தம் பணியைத் தொடர்ந்திட! அதன் பொருட்டு சிலுவையைச் சுமக்க!

Comment