No icon

18, பிப்ரவரி 2024 (தொநூ 9:8-15; 1பேது 3:18-22; மாற் 1:12-15)

தவக்காலத்தின்  முதல் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு)

தவக்காலம் என்பது மாபெரும் அன்பின் காலம். இறைவனின் நிபந்தனையற்ற அன்பினை நினைத்து உள்ளம் உருகி, மனம் மாறும் காலம்; கடவுளின் அருளையும், இரக்கத்தையும் பெற்றுக்கொள்ளும் அருளின் காலம்; சிறப்பாக, இறைவனுடன் ஒப்புரவாகும் பாவ மன்னிப்பின் காலம்; திரு அவையில், சமூகங்களில், குடும்பங்களில், தனி மனித வாழ்வில் பிளவுபட்ட உறவுகளைப் புதுப்பிக்கும் காலம்; கிறிஸ்துவில் புது வாழ்வைத் தொடங்க தங்களையே தயாரிக்கும் காலம்; கிறிஸ்துவின் உயிர்ப்பில் நம்மைப் பங்கெடுக்க அழைக்கின்ற மகிழ்ச்சியின் காலம்; பாவிகள் மனம் மாறி புனித, புண்ணிய வாழ்வு வாழ முயற்சி எடுப்பதால் இது புனிதக் காலம்!

இன்று தவக்காலத்தின் முதல் ஞாயிறு! நம் வாழ்வை மீள்பார்வைக்கு உட்படுத்தி ஆய்வு செய்யவும், அன்றாடம் எதிர்கொள்ளும் சோதனைகளில் இயேசுவைப்போல் எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ளவும் நாம் அழைக்கப்படுகின்றோம். ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறு அன்று இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்கத் திரு அவை நம்மை அழைக்கிறது. சோதனைகள் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒரு முக்கியமான கூறு. சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை எனலாம். இயேசுவே சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இயேசு சோதனைகளைச் சந்தித்ததும், அவற்றை அவர் வென்றதும் இன்றைய நற்செய்தி நமக்கு வழங்கும் நல்ல செய்தி.

திருவிவிலியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘சோதனை’ என்ற சொல் மூன்று விதமான புரிதல்களைக் கொண்டுள்ளது: 1. பாவம் செய்வதற்கான ‘தீவினையைத் தூண்டுதல்’ என்பதைக் குறிக்கின்றது (1திமோ 6:9); 2. ‘சோதித்து அறிதல்’ அல்லது ‘ஆய்ந்து அறிதல்’ என்பதைக் குறிக்கிறது. அதாவது, நம்பிக்கை, எதிர்நோக்கு, இறையன்பு ஆகியவை உறுதியானவையா? என்பதைக் கடுந்துன்பங்கள் வழியாகச் சோதித்து அறிவது (2கொரி 13:5; திவெ 2:2); 3. நீதிமான் கடவுளால் சோதிக்கப்பட்டும், அவர் பாவம் செய்யாமல் இறைநம்பிக்கையோடு இருந்து, கடவுளின் பிள்ளை என நிரூபிப்பது (யோபு, சாஞா 2:12-20; 5:1-23). இயேசுவுக்கு நிகழ்ந்த சோதனையை இந்த மூன்றாம் வகையாகப் புரிந்துகொள்ளலாம். பொதுவாக, நாம் முதல் இரண்டு நிலைகளில் சோதிக்கப்படுகின்றோம்.

பாவம் செய்வதற்கான சோதனையின் பிறப்பிடம் ‘தீமையின் தூண்டுதலே’ என்றும், கடவுள் அல்ல என்பதையும் முதலில் நாம் புரிந்துகொள்வோம். சோதனை வரும்போது, ‘இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது என்று யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில், கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்ப தில்லை’ (யாக் 1:13). சோதனையில் மனிதர் விழ நேர்ந்தால், அதற்குக் காரணம் மனித பலவீனமும், அதனை ஆட்டிப் படைக்கும் தீய ஆவியின் சக்தியுமே. சோதிப்பவன் சாத்தான்; அவனது பணி சோதனைக்கு உட்படுத்துவதே. எனவேதான் இயேசு சீடர்களுக்கு ‘எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்; தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்’ (மத் 6:13; லூக் 11:4) என்று செபிக்கக் கற்றுக் கொடுக்கிறார்.

சோதனைகள் தீயோனிடமிருந்து வருகிறது எனத் தெரிந்தும், அவற்றைவிட மனமில்லாமல் இறுதியில் நாம் துன்புறுவதை இந்தக் கதை நமக்கு விளக்குகிறது. செவ்விந்தியர் என்று அழைக்கப்படும் அமெரிக்கப் பழங்குடியினர் மத்தியில் ஒரு வழக்கம் இருந்தது. தங்கள் சமூகத்தில், ஒரு சிறுவன் இளமைப் பருவத்தை அடையும்போது அவன் சில நாள்கள் காட்டிலும், மலையிலும் தனியே தங்கி, தன்னையே ஒரு சக்தி மிகுந்த வீரனாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்தச் சமுதாயச் சடங்கில் ஈடுபட்டிருந்த ஓர் இளைஞன், ஒருநாள் பனி படர்ந்திருந்த ஓர் உயர்ந்த மலையுச்சியைச் சென்றடைந்தான். அங்கு நின்று கொண்டிருந்தபோது, காலடியில் ஒரு கட்டுவிரியன் பாம்பு. அந்தப் பாம்பு இளைஞனிடம் பேசியது: ‘நான் இந்தப் பனியில் இருந்தால், எனக்கு ஒன்றும் கிடைக்காது; நான் இறந்து விடுவேன். எனவே, தயவுசெய்து என்னை உன் கம்பளிப் போர்வைக்குள் வைத்து கீழே சென்று, அங்கே என்னை விட்டுவிடு. உனக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்’ என்றது.

இளைஞன் பாம்பிடம், ‘உன் குணம் எனக்குத் தெரியும். நான் உன்னைக் கையில் எடுத்தால், நீ என்னைக் கடித்துக் கொன்று விடுவாய்’ என்றான். பாம்பு அவனிடம், ‘கட்டாயம் இல்லை. உன்னிடம் நான் அப்படி நடந்துகொள்ளவே மாட்டேன்’ என்று கூறியது. இளைஞனும் பாம்பின் பேச்சை நம்பி, அதனை எடுத்து தன் கம்பளிப் போர்வைக்குள் வைத்துக் கொண்டு கீழே இறங்கினான். சம வெளியை அடைந்ததும், பாம்பை எடுத்து தரையில் விட அவன் முயன்றபோது, கட்டுவிரியன் திடீரென இளைஞனைக் கடித்தது. ‘என்னைக் கடிக்கப் போவதில்லை என்று உறுதி அளித்தாயே?’ என்று இளைஞன் கதறினான். பாம்பு அவனிடம், ‘மலை உச்சியில் என்னை நீ கையில் எடுக்கும்போதே, என் குணம் உனக்கு நன்றாகத் தெரிந்திருந்ததே!’ என்று சொல்லிவிட்டு அதன் வழி சென்றது. சில நேரங்களில் நாமும் நம் வாழ்வைச் சுற்றி வரும் தீமைகள் ‘கொடிய நச்சுப் பாம்புகள்’ என்று தெரிந்தும், அதை விடுவதற்கு மனமில்லாமல் தூக்கிச் சுமக்கிறோம் என்பதுதான் உண்மை.

கடவுளின் படைப்பில் குறையில்லை! ‘அவர் அனைத்தையும் மிகவும் நன்றாகவே படைத்தார்’ (தொநூ 1:31). ஆனால், மனிதர் கடவுளின் கட்டளைக்கு, அவரின் திட்டத்திற்குக் கீழ்ப்படிய மறுத்தபொழுது பாவம் உலகில் நுழைந்தது. எல்லாம் நல்லதெனக் கண்ட கடவுளின் படைப்பு பாழ்படுத்தப்பட்டது. உறவுகள் சீர்குலைந்து போயின. கொலைகள் அரங்கேறின. இதற்குக் காரணம் தீமையே. எனவே, படைப்பு முழுவதையும் புதுப்பிக்க விரும்பினார் இறைவன்.

வெள்ளப் பெருக்கினால் உலகின் அனைத்து உயிரினங்களையும் அழித்த இறைவன், மீண்டுமாய் ஓர் உடன்படிக்கையை நோவாவிடமும், அவர் புதல்வரிடமும் ஏற்படுத்தினார் என்பதை எடுத்துச் சொல்வதுதான் இன்றைய முதல் வாசகம். கடவுள் ஏற்படுத்துகின்ற உடன்படிக்கை, அவரது அன்பின் வெளிப்பாடாக, அவர் மனிதர்களோடு கொள்கின்ற உண்மையான உறவின் வெளிப்பாடாக அமைகின் றது. “நானே உங்கள் கடவுள்! நீங்கள் என் மக்கள்!” (லேவி 26:12) - இதுதான் உடன்படிக்கையின் உன்னதச் செய்தி! இந்த உடன்படிக்கை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை இன்றைய திருப்பாடல் நமக்கு எடுத்துரைக்கிறது (திபா 25). ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போரின் பாதைகள் உண்மையானவை! ஆனால், அந்த உடன்படிக்கை பல நேரங்களில் மீறப்பட்டது என்பதைத்தான் இஸ்ரயேல் மக்களின் வாழ்வு நமக்கு உணர்த்துகின்றது.

கடவுள் ஏற்படுத்திய உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டியது தங்கள் கடமை என்பதை இஸ்ரயேல் மக்கள் உணர்ந்தபோதிலும், பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள் (விப 16:2-3; 17:1-7; 32:7-8). தங்கள் பாவச் செயல்களால் உடன்படிக்கை உறவை இழந்தார்கள். நாமும் கடவுளின் விருப்பத்தின்படி வாழ வேண்டுமென்று நினைக்கின்றபொழுது, பல்வேறு சோதனைகளுக்கு உட்படுகின்றோம். இந்தச் சோதனைகள் பல வேளைகளில் நம்மை வீழ்த்தி விடுகின்றன.

சோதனைகளை நாம் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றோம்? தப்பித்துக் கொள்ள முடியாத அளவு பெருகி வரும் ஒரு காட்டாற்று வெள்ளத்தில் நாம் அடித்துச் செல்லப்படுவதுபோல, நம்மில் பலர் சோதனைகளைப் பார்க்கிறோம். ‘சோதனைமேல் சோதனை போதுமடா சாமி’, ‘சோதனை தீரவில்லை, சொல்லி அழ யாருமில்லை’ போன்ற பாடல் வரிகளைப் பாடி, ஓர் இயலாத்தன்மையை மனத்தில் வளர்த்துக்கொள்கிறோம். இப்படி ஓர் இயலாத் தன்மையை நாம் வளர்த்துக் கொள்ளும்போது, நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற தவறான முடிவுக்கு வந்துவிடுகின்றோம். இதுவே இன்று நம் மத்தியில் உள்ள பெரிய சோதனை! சோதனைகளை எதிர்த்து நிற்கவும், அவற்றோடு போராடி வெற்றி பெறவும் நம்முள் உறுதியான மனம் உள்ளது என்பதே இன்றைய நற்செய்தி நமக்குத் தரும் நல்லதொரு பாடம்.

யோர்தானில் திருமுழுக்குப் பெற்றபோது தூய ஆவியால் நிரப்பப்பட்ட இயேசு (லூக் 3:22), பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார் (மாற் 1:12; லூக் 4:1); பாலைநிலத்தில் அவர் நாற்பது நாள்கள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார். இயேசு சோதிக்கப்பட்ட நிலையிலும், வானதூதர்களால் பணிவிடை பெறப்பட்டார். சோதனைக் காலத்திலும், துன்புற்ற நேரத்திலும் இறைப் பராமரிப்பை உணர்கிறார். தூய ஆவியின் வல்லமையைப் பெற்ற இயேசு, தம் பணி வாழ்வைத் துவங்கியபொழுது, மக்களை நோக்கி, “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” (மாற் 1:15) என்ற அழைப்பைக் கொடுக்கிறார். இதுவே இத்தவக்காலம் முழுவதும் நம் இதயங்களில் சுமந்து செல்ல வேண்டிய திருவார்த்தைகள்!

இந்நாள் நமக்கு உணர்த்தும்  நற்பாடங்கள்:

● மனமாற்றம் என்பது வாழ்க்கையில் தீய வழிகளிலிருந்து மாறி, அதற்கு நேர் எதிராக நல்வாழ்வு வாழ்வது. ‘உடன்படிக்கையின் மக்களாக’ வாழ வேண்டுமெனில் மனமாற்றம் கட்டாயம்! மனமாற்றத்தின் இலக்கு என்பது நாம் கடவுளின் சாயலை மீண்டும் பெறுவது (2 கொரி 3:18).

● நம்பிக்கை என்பது நற்செய்தியையும், நற்செய்தியான இயேசுவையும் நம்புவதாகும். அதாவது, சமூகத்தின் தீமைகளை, கடவுளின் விருப்பத்திற்கு மாறானவற்றைத் துணிவுடன் எதிர்த்துப் போராடுவது. இந்த ஆற்றலைப் பெற ‘அப்பா - அனுபவம்’ தேவை! (மத் 11:27).

● நமது வாழ்விலும் சோதனைகளை எதிர்கொள்ளும்போது, எத்தனை போராட்டங்களும், பின்னடைவுகளும் வந்தாலும், பலவிதமான அவமானங்களைச் சந்தித்தாலும் இறைப்பராமரிப்பு நமக்கு உண்டு என்பதை, ‘பாலைவன அனுபவம்’ வழியாக உணரமுடியும் (1 கொரி 10:13).

● ‘தீய ஆவியோடு நாம் ஒருபோதும் உரையாடலை வளர்க்கக் கூடாது. தீய ஆவியோடு உரையாடல் நிகழ்த்தும் போது தீய ஆவியே நம்மை வெற்றிகொள்ளும். இச்சோதனை நேரத்தில் நாம் இயேசுவின் துணையை நாடவேண்டும்’. - திருத்தந்தை பிரான்சிஸ் (மூவேளைச் செப உரை, 28.01.2024).

Comment