No icon

11, பிப்ரவரி 2024 (இரண்டாம் ஆண்டு)

ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு (லேவி 13:1-2, 44-46; 1கொரி 10:31- 11:1; மாற்கு 1:40-45)

நோயுற்றோர் திரு அவையின் இதயத்தில் உள்ளனர்!

நோயாளருக்கென ஒரு தினமா? நோயாளரின் உலக நாளைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமா? நோய் என்றதும் எதிர்மறையான எண்ணங்கள் மட்டும்தானே நம் மனத்தில் எழுகின்றன! அப்படி இருக்க, நோயாளர் தினத்தை எப்படிக் கொண்டாடுவோம்?

எத்தனையோ தினங்களை நாம் கொண்டாடுகிறோம். அன்னையர் தினம், தந்தையர் தினம், பெற்றோர் தினம், நண்பர்கள் தினம், இளைஞர் தினம், மகளிர் தினம், முதியோர் தினம், குழந்தைகள் தினம்... விரைவில் கொண்டாடவிருக்கும் காதலர் தினம் எனக் கொண்டாட்டங்களுக்குப் பஞ்சமில்லை!

எதற்காக நாம் இத்தினங்களை எல்லாம் கொண்டாடுகிறோம்? அந்த ஒரு நாளிலாவது அந்தக் கருத்தை இன்னும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே. ஆனால், பரிதாபம்! இத்தினங்களுக்கே உரிய உயர்ந்த, ஆழமான பல எண்ணங்களிலிருந்து நம்மைத் திசைத்திருப்பும் வண்ணம் அன்னையர், தந்தையர், காதலர், நண்பர்கள் என்ற பல தினங்களை வர்த்தக உலகம் அபகரித்துவிட்டது. வர்த்தக உலகம் இத்தினங்களைப் பரிசுப் பொருள்கள், வாழ்த்து அட்டைகள், மலர் கொத்துகள் மற்றும் விருந்துகள் என்ற வெளியடையாளங்களால் நம் எண்ணங்களையும், கண்ணோட்டத்தையும் (ழு)ங்கச் செய்துவிட்டன. உலக நோயாளர் தினத்தையும் இந்த வர்த்தக உலகம் விட்டு வைக்கவில்லை. நோய்க்கான மருந்து, மாத்திரைகளை வாங்க முடியாமலும், மருத்துவமனைக்குச் செல்ல இயலாமலும் வேதனையுறும் நோயாளிகள் நம் மத்தியில் இலட்சம் பேர்!

இன்று நமது எண்ணங்களையும், கவனத்தையும் நோயாளர்மீது திருப்ப திரு அவை பாசத்தோடு நம்மை அழைக்கிறது. திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால், தன் தலைமைப் பணியின் இறுதி ஆண்டுகளில், பார்கின்சன்ஸ் (Parkinson’s) எனப்படும் நரம்புத்தளர்ச்சி நோயால் துன்புற்றார். தான் ஒரு நோயாளர் என்பதை அவர் உணர்ந்ததும், பல்வேறு நோய்களால் துன்புறும் கோடான கோடி மக்களுடன் தன்னையும் இணைத்துக் கொண்டார். நோயுற்றோரை மையப்படுத்தி 1992-ஆம் ஆண்டு நோயாளரின் உலக நாளை அவர் உருவாக்கினார். ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் 11-ஆம் நாள், லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளன்று, இந்த உலக நாள் சிறப்பிக்கப்படுகிறது. நோயை நாம் கொண்டாடவில்லை; மாறாக, நோயுற்றோர் காட்டும் நம்பிக்கை, துணிவு ஆகியவற்றையும், நோயுற்றோர் மீது நாம் காட்டும் அக்கறை, பரிவு ஆகியவற்றையும் கொண்டாடவே இந்த நாள்.

இன்று 32-வது உலக நோயாளர் நாளை நாம் சிறப்பிக்கின்றோம். இந்த நாளுக்குமனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று’ (தொநூ 2:18) என்ற தொடக்க நூலின் இறைவார்த்தைகளையே மையப்பொருளாகத் தந்திருக்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

நமது வாழ்க்கை மூவொரு இறைவனின் சாயலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் தனியாக அல்ல; ஒன்றாக இருக்கவே படைக்கப்பட்டுள்ளோம். அன்பிற்காக உருவாக்கப்பட்ட நாம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்துடன் வாழ அழைக்கப்படுகின்றோம். கைவிடப்படுதல், தனிமை என்பவை இன்று நம்மை அதிகமாகவே துன்புறுத்துகின்றன. கடுமையான நோயின் தொடக்கக் காலத்தில் தனிமை இன்னும் அதிகமாகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் மிகவும் ஏழைகளே. அமைதி மற்றும் அதிக வளங்கள் கொண்ட நாடுகளில்கூட முதுமை மற்றும் நோயினால் பலர் தனிமை என்னும் கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர்.

தனிமை என்பது கடவுளின்உடனிருப்பின் அர்த்தத்தைஇழக்கச் செய்கிறது; அன்பின் மகிழ்ச்சியைப் பறிக்கிறது; வாழ்க்கையின் அனைத்து முக்கியமான நிகழ்வுகளிலும் தனிமையின் உணர்வை அனுபவிக்க வைக்கிறது. நோய்க்கு முதலில் தேவையான மருந்து இரக்கமும், மென்மை நிறைந்த உடனிருப்புமே. நோயுற்றவர்கள், பலவீனமானவர்கள், ஏழைகள் திரு அவையின் இதயத்தில் உள்ளனர் என்பவை நோயாளருக்கான உலக நாளில் திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ள செய்திகள்.

திருத்தந்தையின் உணர்வுகளோடு ஒன்றித்து, நோயுற்றோரைப் பற்றிச் சிந்திக்க இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்கு ஒரு வாய்ப்பைத் தருகின்றன: 1. தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உணர்வுகளையும், அது குறித்த சட்டங்களையும்; 2. தொழுநோயாளர் மட்டில் இயேசுவின் அணுகுமுறை பற்றியும் சிந்திக்கலாம்.

தொழுநோய் - வெளியே மறைக்க முடியாததால் நோயுற்றோர் உடலளவிலும், உள்ளத்தளவிலும் ஏராளமான வேதனைகளை அனுபவிக்கிறார்; தனது குடும்பமும், உறவும் தன்னை விட்டு விலகிச் செல்வதால் கூடுதல் வேதனை அடைகிறார்; தன் பாவ வாழ்க்கையே தனது நோய்க்குக் காரணம் எனக் கருதி, தன்னையே தாழ்த்திக்கொள்கிறார்; தனது நோய் பிறரையும் பாதிக்கக்கூடியது என்பதால் ஒதுங்கிச் செல்கிறார்; தன்னை மற்றவர் வெறுத்து விரட்டிவிட்டார்கள், தன்னை அன்பு செய்ய எவருமில்லை என்கின்ற உணர்வால் தனிமையில் துடிக்கிறார்; தான் எதற்குமே அருகதை அற்றவர் என்றும், உயிரோடு தனது வாழ்வு புதைக்கப்பட்டு விட்டதாகவும் கருதுகிறார்.

மேலும், இவர்களைக் குறித்துச் சட்டம் என்ன சொல்கிறது? எனில், இவர் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு ஊருக்கு வெளியே தனியாகக் குடியிருக்க வேண்டும்; பொது வாழ்க்கையிலும், வழிபாட்டுக் கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்ளக் கூடாது; கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேல் உதட்டை மறைத்துக் கொண்டு, ‘தீட்டு, தீட்டுஎனக் குரலெழுப்ப வேண்டும் (லேவி 13:45,46); அல்லது மணியடித்துத் தன் இருப்பைக் குறித்து எச்சரிக்க வேண்டும். எவ்வளவு கொடுமை!

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து யூதர்களின் எண்ணங்கள் இவ்வாறு இருந்தன: இவர்கள் மக்கள் மத்தியில் கண்டனத்தைப் பெற்றவர்கள்; ‘தீட்டுஎன முத்திரை குத்தப்பட்டவர்கள்; இறைவனின் கோபத்திற்கு, சாபத்திற்கு உள்ளானவர்கள்; இச்சாபத்தைக் கடவுளால் மட்டுமே நீக்க முடியும் (2 அர 5:7) என நம்பினர்; இந்நோய் உடையிலும் (லேவி 13:47-58), வீட்டிலும் (லேவி 14:34) காணப்பட்டதாக நம்பினர்; இவர்கள் இறைவனின் தண்டனைக்கு உரியவர்கள் (எண் 12:9-10; இச 28:27, 35; 2 அர 5:19-27; 15:1; 2குறி 16-21); உயிரோடு இருந்தாலும்இறந்தவர்களாகவேகருதப்பட்டனர் (2 அர 7:3; 15:3-5). இவர்கள் கடவுளிடமிருந்து பிரிந்தவர்கள்; எனவே, இவர்கள் பாவிகள். இது குறித்து லேவியர் 13 மற்றும் 14 ஆகிய இரு அதிகாரங்கள் இன்னும் விரிவாக விளக்குகின்றன.

இப்படிப்பட்ட தொழுநோயாளர் மட்டில் இயேசுவின் அணுகுமுறை என்ன என்பதுதான் இன்று நாம் இதயத்தில் சுமந்து செல்ல வேண்டிய மிக முக்கியமான பாடம். இயேசுவின் அணுகு முறையை மாற்கு நற்செய்தியாளர் மிக அருமையாக விளக்குகிறார். தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ‘நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்என்று முழந்தாள்படியிட்டு வேண்டுகிறார். இது இயேசுவின் மீது அந்த மனிதர் வைத்திருந்த மிகப்பெரிய நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. இயேசு அவர்மீது பரிவு கொண்டு, தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்று சொல்ல, உடனே தொழுநோய் அவரை விட்டு நீங்கியது (மாற் 1:40-42). என்னே! அற்புதமான நிகழ்வு இது.

இயேசு தொழுநோயாளரை நலப்படுத்திய முறை, சுற்றி நின்ற பலருக்கும் ஏன், நமக்கும் வியப்பைத் தருகின்றது. தொழுநோயாளரைத் தொட்டாலேதீட்டுஎன்று இயேசுவுக்கும் தெரியும். இருப்பினும், மூன்று நற்செய்தி நூல்களுமே தொழு நோயாளரை இயேசு, ‘கையை நீட்டித் தொட்டார்’ (மாற் 1:41; மத் 8:3; லூக் 5:13) என்றே கூறுகின்றன. ‘நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!’ என்று தூரத்தில் நின்றவாறே ஒரே வார்த்தையில் நலப்படுத்தியிருக்கலாமே! ஆனால், இயேசு அவர்மீது பரிவு கொள்கிறார்; தம் கையை நீட்டுகிறார்; அவரைத் தொடுகிறார். ‘தொடுதல்என்ற சொல்லுக்குக் கிரேக்க மூலத்தில்அணைத்துக் கொள்ளுதல்என்றும் பொருள் கொள்ளலாம்.

இயேசுவின் இந்தச் செயல் தற்செயலாக நடந்ததுபோல தெரியவில்லை. தொழுநோயாளரைக் குணப்படுத்துவதைவிட, சுற்றி நின்றவர்களின் உள்ள நோயைக் குணப்படுத்துவதிலே இயேசு தீவிரம் காட்டியிருப்பார். இயேசு அங்கேசமூக அருளடையாளம்நிகழ்த்த விரும்புகிறார். சட்டங்கள் அனைத்தையும் நன்றாக அறிந்த இயேசு ஊருக்கு வெளியே இருக்க வேண்டியவரைத் தம்மை நெருங்கிவர அனுமதிக்கின்றார் (மாற் 1:40); தொட்டால் தானும் தீட்டு ஆவோம் (லேவி 5:3) என்ற நிலையிலும், கரம் நீட்டித் தொடுகின்றார் (1:41). இது சட்டத்தை மீறிய செயல்; யூதத் தலைவர்களின் கோபத்தைத் தூண்டி எழுப்பிய செயல். ஆனால், இயேசு இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வில்லை. இயேசுவுக்கு இது தவறான செயலாகவும் படவில்லை. இயேசுவின் பார்வையில் ஊருக்குப் புறம்பே தள்ளப்பட்டவர் ஊருக்குள் வரவேண்டும்; சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். எனவே, தொழுநோயாளரைத் தொட்டு நலமாக்கும் செயல் தந்தை கடவுளுக்கு விருப்பமான செயலே என்பதை உணர வைக்கின்றார். சுற்றி நின்ற மக்களின் மனத்தில்இவரும் ஒரு மனிதரேஎன்னும் பார்வையைப் பதிய வைக்கின்றார். அங்கேசமூக அருளடையாளம்நிகழ்கிறது!

இறுதியாக, நலம் பெற்றவருக்கு இயேசு வழங்கும் இரண்டு கட்டளைகள்: 1. தாம் ஆற்றிய வல்ல செயலையாருக்கும் சொல்ல வேண்டாம்’; 2. ‘குருக்களிடம் காட்டி நோய் நீங்கியதற்கான காணிக்கையைச் செலுத்த வேண்டும்’ (மாற் 1:43-44). முதல் கட்டளை, இயேசுவின்மெசியாவின் செயலாகப்பார்க்கப்பட்டது. இதையே திருவிவிலிய அறிஞர்கள்மெசியா மறைபொருள்என்கின்றனர். இரண்டாம் கட்டளையாக, ‘குருக்களிடம் போய் காண்பிஎன்று சொல்வதற்கான காரணம், மோசே எழுதி வைத்த சட்டத்தின்படி தொழுநோய் நீங்கி விட்டது என்பதை உறுதி செய்வதற்குக் குருக் களுக்கு மட்டுமே அதிகாரம் இருந்தது (லேவி 13:3; 14:1-32).

ஆனால், நலம் பெற்றவர் இந்த இரு கட்டளைகளையும் நிறைவேற்றினாரா? இல்லை! இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பி வந்தார். இதுவரை அனுபவித்திராத மகிழ்ச்சியை யாரால்தான் அடக்கி வைக்க முடியும்? இப்போது இயேசுவைப் பற்றிய செய்தி எங்கும் பரவியதால், இயேசு தற்போது தொழுநோயாளர் அனுபவித்த சூழலுக்குத் தள்ளப்படுகிறார். அதாவது, மக்கள் நடுவே நடமாட இயலாமல், மறைவாகவே வாழ்ந்த தொழுநோயாளர் மக்கள் மத்தியில் நடமாடுகிறார். ஆனால், மக்கள் மத்தியில் நடமாடி வந்த இயேசுவோ, எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியாததால், வெளியே தனிமையான இடங்களில் தங்கி வந்தார் (மாற் 1:45). நாம் தனிமையாக இருக்கக்கூடாது என்பதற்காக இயேசு தனிமையை அனுபவிக்கிறார் போலும்! இயேசுவைப் போன்ற மனநிலை எவருக்கு வரும்?

என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

வல்ல செயல்கள் எல்லாவற்றிற்கும் காரணமாக அமைந்தது இயேசுவின் பரிவு. இயேசு தம்மை நோயாளிகளோடு இணைத்துக்கொள்ளும் ஒரே தன்மை அவரிடம் காணப்பட்ட பரிவுதான். பரிவும், இரக்கமுமே இறையாட்சிப் பணியின் அடிப்படைப் பண்பாக இருக்க முடியும் (இயேசுவைப்போல பரிவுடன் நோக்கிட!).

கிறிஸ்தவத்துக்குள் கிறிஸ்தவர்கள் சிலர்சாதியம்எனும் சமுதாயப் பாவத்தால்  தனிமைப்படுத்தப்படுகின்றனர். இது இயேசுவின் போதனைக்கு, அவரது மனநிலைக்கு எதிரானதன்றோ! இயேசு அன்றேசமூக அருளடையாளம்நிகழ்த்தினார். இன்றுசமூக அருளடையாளம்திரு அவைக்கு அதிகம் தேவைப்படுகிறது (இயேசுவைப்போல அரவணைத்திட!).

இயேசு ஏழைகளிடத்திலும், தொழுநோயாளரிடத்திலும் இறைச்சாயலைக் கண்டார். அவரைப் போல துயருறும் நோயாளர் முகத்தில் புனித பிரான்சிஸ் அசிசியாரும், புனித அன்னை தெரேசாவும், புனித தமியானும் இயேசுவின் முகத்தைக் கண்டதாலே அவர்களிடத்தில் அன்புப் பணி செய்யமுடிந்தது  (இயேசுவைப்போல இறைச் சாயலைக் கண்டிட!).

Comment