No icon

28, சனவரி 2024 (இரண்டாம் ஆண்டு)  

ஆண்டின் பொதுக்காலம் 4-ஆம் ஞாயிறு இச 18:15-20; 1கொரி 7:32-35; மாற் 1: 21-28

இயேசுவின் அருள்பணியும் அதிகாரமும்!

முன்பொரு காலத்தில், ஓர் அழகான பாடும் பறவையை அரசன் காண்கிறான். அதைப் பிடித்து வர ஆள் அனுப்புகிறான். ஆனால், பறவை பறந்து பக்கத்து ஊருக்குப் போய்விடுகிறது. உடனே ஏராளமான வீரர்களை அந்த ஊருக்கு அனுப்புகிறான் அரசன். ஆனால், அந்தப் பறவை பறந்து அடுத்த நாட்டிற்கே போய்விடுகிறது. சினம் கொண்ட அந்த அரசன், பெரும் படையையே அந்த நாட்டிற்கு அனுப்பி அந்தப் பறவையைப் பிடித்துவரக் கட்டளையிடுகிறான். அந்தப் படையும் அந்த நாட்டை ஆக்கிரமித்து, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று அழிக்கிறது. வீடுகள் பல தீக்கிரையாகின. இறுதியில் அந்தப் பறவையும் பிடிபடுகிறது.

இப்போது பிடிபட்ட பறவையை ஒரு தங்கக் கூண்டில் அடைத்துப் பாடச் சொல்கிறான் அரசன். ஆனால், அந்தப் பறவையோ பாடவே இல்லை. ‘ஏன் அது பாடவில்லை?’ எனக் கோபப்பட்டுக் கேட்டதற்கு அவரது அமைச்சர், ‘மன்னா, அது மனிதர்களின் மகிழ்ச்சியைத்தான் இந்நாள் வரை பாடிக்கொண்டிருந்தது. தற்போது சுற்றிலும் கேட்கின்ற மரண ஓசையையும், அழுகையையும் கேட்டு அதனால் பாட முடியவில்லை’ என்றான். அதிகாரத்தால் பறவைகளைப் பாட வைத்துவிட முடியாது என்பதைக் காலம் எப்போதும் காட்டிக் கொண்டேதான் இருக்கிறது. மனிதர்கள் நாம்தாம் கற்றுக்கொள்ள மறந்துவிடுகிறோம்.

அன்பிற்குரியவர்களே! ஆண்டின் பொதுக்காலம் 4-ஆம் ஞாயிறு இறைமகன் இயேசுவின் அருள்பணியையும், அது சார்ந்த அதிகாரத்தையும் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கின்றது. மாற்கு நற்செய்தியில் இயேசுவின் முதல் வல்ல செயல், அவர் தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்தியது. அதாவது, தீய ஆவியின் சக்திகள் கொண்ட ஆட்சியை அப்புறப்படுத்தினால்தான் இறையாட்சியை நிலைநாட்ட முடியும் என்ற கொள்கைளை இயேசுவின் முதல் வல்ல செயல் வழியாக மாற்கு நற்செய்தியாளர் வலியுறுத்துகிறார்.

தொழுகைக்கூடத்தில் இயேசு நுழைந்ததும் அங்குக் கூடியிருந்தவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்குகிறார். ஆனால், மற்ற மறைநூல் அறிஞர்களைப்போல இயேசு போதிக்கவில்லை. மாறாக, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்தார் (மாற் 1:22). எனவே, இயேசுவின் இந்தப் போதனை மக்களை வியப்பில் ஆழ்த்தியது. அது மட்டுமல்ல; அவர்கள் இதுவரைக் கேட்டிராத ஓர் அதிகாரத்துடன் ஒலித்தது அந்தப் போதனை.

தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பிக்கத் தொடங்கிய இயேசுவைப் பார்த்து, பாதிக்கப்பட்ட மனிதருக்குள் புகுந்த தீய ஆவி, ‘நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்?’ (1:24) என்று கத்தியது. அப்பொழுது இயேசு மிகுந்த அதிகாரத்தோடு அந்தத் தீய ஆவியை நோக்கி, ‘வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ’ (1:25) என்று சொல்லக்கூடிய அளவிற்குக் கடவுளின் வல்லமையை அங்கே வெளிப்படுத்தினார்.

நற்செய்தியாளர்கள் பல இடங்களில் இயேசுவின் அதிகாரத்தையும், ஆற்றலையும் பற்றிக் குறிப்டுகின்றார்கள். இயேசு அதிகாரத்தோடு போதித்தார் (மத் 7:29); விண்ணுலகிலும், மண்ணுலகிலும் அதிகாரம் மிக்கவராய் இருந்தார் (மத் 9:6); மண்ணுலகில் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார் (மாற் 2:5); காற்றையும், கடலையும் அமைதிபடுத்தும் அதிகாரம் கொண்டிருந்தார் (மாற் 4:39); தீமையை விரட்டும் அதிகாரம் கொண்டிருந்தார் (மாற் 5:8); தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் உடையவராக இருந்தார் (யோவா 5:27). எனவே தான் இயேசுவின் செயல்களையெல்லாம் கண்ட தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும், மூப்பர்களும் இயேசுவை நோக்கி ‘எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? எங்களுக்குச் சொல்லும்’ (காண். மாற் 11:28; மத் 21:23; லூக் 20:2) என்றார்கள். தம்மிலே அதிகாரம் கொண்டிருக்கிற இயேசு ‘கடவுளின் மகன்’ (மாற் 1:1) எனும் நிலையிலே அந்த அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார் என்பதை மாற்கு தன்னுடைய நற்செய்தியின் முதல் வரியிலே வெளிப்படுத்துகிறார். இதைத் தீய ஆவிகளும் தெரிந்துகொண்டன. ஆகவேதான், ‘நீர் யார் என எனக்குத் தெரியும்; நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்’ (மாற் 1:24) என்று தீய ஆவி கத்தியது.

இயேசுவின் அதிகாரம் பணிவால், பணியால் ஆனது; அவரது அதிகாரம் அரவணைப்பால் ஆனது; அது அன்பின் அடிப்படையில் பணியாற்றும் தன்மை கொண்டது; அது சமூக நோக்கிலானது; சமூகக் கரிசனை மிக்கதாக இருந்தது; அதிகார மையத்தை அசைக்கக்கூடியதாக இருந்தது; தீமையின் ஆதிக்கத்தை ஒழிப்பதாக இருந்தது; நீதியின் சார்பாக, உண்மையின் சார்பாக அவரது அதிகாரம் அமைந்திருந்தது; விடுதலை அளிப்பதாக இருந்தது; மாபெரும் மாற்றத்தை மக்களுக்கு வழங்குவதாக இருந்தது. சுருங்கக்கூறின், இறையாட்சியை நிறுவுவதுதான் இயேசுவின் அதிகாரம்.

இதே கண்ணோட்டத்தில், அதிகாரம் என்பதன் உண்மையான இலக்கணத்தைத் தன் சொல்லாலும், வாழ்வாலும் சொல்லித் தருபவர் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். 2013-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் நாள் புனித யோசேப்பு திருநாளன்று, கத்தோலிக்கத் திரு அவையின் தலைமைப் பணியை ஏற்றார். அத்திருப்பலியில் அவர் வழங்கிய மறையுரை, அதிகாரம் என்ற சொல்லுக்கு ஆழமும், அர்த்தமும் தருவதாக இருந்தது. அவர் ஆற்றிய மறையுரையிலிருந்து ஒரு சில எண்ணங்கள்:

பேதுருவின் வழித்தோன்றல் என்ற நிலை அதிகாரமுள்ள ஒரு நிலை. இயேசு பேதுருவுக்கு அதிகாரம் அளித்தார். ஆனால், அது எவ்வகை அதிகாரம்? தம் உயிர்ப்புக்குப் பின்னர் பேதுருவைச் சந்தித்த இயேசு, அவரிடம் மும்முறை அன்பின் வாக்குறுதியைப் பெறுவதிலிருந்தும், ‘என் ஆட்டுக் குட்டிகளைப் பேணி வளர். என் ஆடுகளை மேய்’ என்று கூறியதிலிருந்தும் இது எவ்வகை அதிகாரம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். பணிபுரிவதே உண்மையான அதிகாரம். இந்தப் பணியில் தன்னை முழுவதும் இணைத்து, சிலுவையில் இறுதியில் இணைவதே திருத்தந்தையின் அதிகாரம். சிறப்பாக, வறியோர், வலுவிழந்தோர், சமுதாயத்தில் எவ்வகையிலும் முக்கியத்துவம் பெறாதோர் திருத்தந்தையின் பணியில் முதலிடம் பெறவேண்டும். அன்புடன் பணிபுரிபவர்களால் மட்டுமே அகிலத்தைப் பாதுகாக்க முடியும். எனவே, தலைமைத்துவம் என்பது ஒரு பணியே அன்றி, பதவியோ, அதிகாரமோ அல்ல என்பதைத் திருத்தந்தையின் இவ்வுரையிலிருந்து புரிந்துகொள்கிறோம்.

இன்றைய முதல் வாசகமும் இறைவாக்குப் பணி என்பது அதிகாரத்தோடு மக்களை அடக்கி ஆள்வது அல்ல; மாறாக, பணிவோடு பணி செய்வது என்பதை நமக்குக் கற்றுத்தருகிறது. எளிய மனிதரான மோசே கடவுளால் அழைக்கப்பட்டவர்; அதிகாரத்தோடு அனுப்பப்பட்டவர்; அடிமை நிலையிலிருந்து விடுதலை வாழ்வை நோக்கி மக்களை முன்னின்று நடத்தியவர்; சில நேரங்களில் மக்கள் அவருக்கு எதிராக எழுந்தபோதும் தாயன்போடு அரவணைத்துச் சென்றவர்; வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கியப் பயணத்தில் மக்கள் சார்பாய் யாவே இறைவனோடு உடன்படிக்கை செய்துகொண்டவர்; இறைவனின் குரலாய் ஒலித்தவர்; அவர் சார்பாய்ச் செயலாற்றியவர்; நீதியுடன் மக்களை வழிநடத்தியவர். இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டில் நுழையும் முன் மோசேவின் இறுதிக் காலத்தில் மக்கள் தளர்வுற்றிருந்த நிலையில், நம்பிக்கைத் தருவதாக அமைகிறது மோசேவின் உரை. தன்னை மட்டுமே தலைவராகவும், இறைவாக்கினராகவும் கண்டுகொண்ட சூழலில், தன்னைப்போல தனக்குப் பின் ஒருவரைக் கடவுள் ஓர் இறைவாக்கினராய் ஏற்படுத்துவார். எனவே, கலங்க வேண்டாம் என்ற நம்பிக்கையையும், ஆறுதலையும் மக்களுக்கு வழங்குகிறார் மோசே.

ஆகவே, அதிகாரம் என்பது ஒரு சேவை. அது அனைவரின் நன்மைக்காகவும், நற்செய்தியைப் பரப்புவதற்காகவும், எளிய மக்களின் உரிமைகளுக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே மோசே, அவர் வழி வந்த இறைவாக்கினர்கள், அவர்களின் முழு வடிவமாக, இறைவாக்காக வந்த இயேசு, அவர் வழிவந்த சாமானியத் திருத்தூதர்கள் போன்றோர் நமக்கு உணர்த்தும் பாடம்!

பொதுவாக ‘அதிகாரம்’ என்ற சொல்லைக் கேட்டதுமே இன்றைய உலகைத் தங்கள் அதிகாரத்தால் ஆட்டிப் படைக்கும் சில அரசு அல்லது அரசியல் தலைவர்கள்தாம் நம் நினைவுக்கு வருகின்றார்கள். இந்தத் தலைவர்கள் தலைமைப்பணி, அதிகாரம் ஆகிய சொற்களுக்குத் தவறான இலக்கணம் வகுத்துக் கொண்டிருப்பவர்கள். சீனா, இந்தியா, இலங்கை, இஸ்ரேல், இரஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடு எனப் பல நாடுகளில் அதிகாரத்தில் இருப்போர் பல்வேறு வழிகளில் மக்கள் மீது காட்டும் அடக்கு முறைகளையும், அதிகாரப்போக்கையும் நாம் அறியாமல் இல்லை. ‘நச்சுப் பாம்பின் பிளந்த நாக்கைப் போல் அதிகார பலமும், பணபலமுமே இன்று இரண்டு கொடிய நச்சு முனைகளாகி எல்லா நியாயங்களையும் தீண்டி அழித்து விடுகிறது’ என்ற எழுத்தாளர் நா. பார்த்தசாரதியின் வரிகள்தான் இங்கே என் நினைவுக்கு வருகிறது.

போட்டியிட்டுப் பெறும் பதவிகள் வழியே அதிகாரத்தைப் பெறும் அரசியல்வாதிகள், அந்த அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள மேற்கொள்ளும் பரிதாபமான முயற்சிகள் நம்மை வேதனையில் ஆழ்த்துகின்றன. அதிகாரத்தை வைத்துக்கொண்டு எதையும் செய்யலாம் என்ற மனநிலையில் இயங்கும் தலைவர்கள் சிலரைப் பார்க்கும்போது, அதிகாரம் என்ற சொல்லே நாம் வெறுக்கின்ற சொல்லாக மாறிவிடுகிறது.

இன்றைய உலகில் ‘சர்வாதிகாரி’ என்றால் நம் எல்லாருக்கும் நினைவுக்கு வரும் பெயர் ஹிட்லர்! சர்வாதிகாரம் என்ற சொல்லுக்குப் புதிய இலக்கணம் படைத்தவர். ஜெர்மனியில் 1933 முதல் 1945-ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் நீடித்த இவருடைய சர்வாதிகார ஆட்சியில், ‘யூதர்கள் ஒழிப்புத் திட்டம்’ என்ற பெயரில் 60 இலட்சம் யூத மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தார். ‘தன்னை வெல்ல யாரும் இல்லை’ என்ற இறுமாப்பில் போலந்து மீது படையெடுத்து இரண்டாம் உலகப் போருக்குப் பாதை ஏற்படுத்திக் கொடுத்தார். இறுதியில் மன அழுத்தம் ஏற்பட்டு, துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஹிட்லரின் வாழ்க்கை இரத்தச் சகதியால் ஆனது! அவரின் இறுதி நிலை அந்தோ பரிதாபம்! ஹிட்லரின் தற்கொலையோடு சர்வாதிகாரம் மட்டுமல்ல, அடுத்த சில வாரங்களில் இரண்டாம் உலகப் போரும் முடிவுக்கு வந்தது.

கடைப்பிடிக்க முயற்சி செய்வோம்!

● உலகத் தலைவர்கள், அரசுத் தலைவர்கள் தொடங்கி, நாம் ஒவ்வொருவரும் தினமும் சந்திக்கும் ஒரு மனித அனுபவமே ‘அதிகாரம்’. இன்று சர்வாதிகாரம் நமது குடும்பப் பொறுப்புகளில் ஆரம்பித்து, அரசியல், சமயம், சமுதாயம் என்று உலக நாடுகள் வரை பல வடிவங்களில் வெளிப்படுகின்றது. இன்று நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் அதிகாரம் எவ்வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்வோம் (அதிகாரம் வரையறைக்கு உட்பட்டது!).

● அதிகாரம் என்பது அயலாரை அடக்கி ஆள்வது அல்ல; மாறாக, உன்னதமான பண்பு அல்லது உயர்ந்த அறிவு இவற்றைக் கொண்டு ஒருவர் உருவாக்கிக்கொள்வது. இந்த அதிகாரம் அவர் வாழ்நாள் முழுவதும் தொடரும். இந்த அதிகாரத்தில் ஆணவம் இருக்காது; அடக்குமுறை இருக்காது. ஒருவர் சுயமாகத் தனக்குள் வளர்த்துக்கொள்ளும் இந்த அதிகாரம், உள்மனச் சுதந்திரத்தைத் தரும், உண்மைகளைப் பேச வைக்கும். அது கேட்பவர்களையும் சுதந்திரம் அடையச் செய்யும்; உண்மையை நோக்கி அவர்களை வழி நடத்தும் (அதிகாரத்தின் ஊற்று இறைவன்!).

● இறையாட்சியின் பணியாளர்களாய் இருக்க அழைக்கப்பட்டிருக்கும் நாம் இன்றைய உலகிலும், சமூகத்திலும், ஏன் திரு அவையிலும் காணப்படும் அலகையின் செயல்பாடுகளையும், ஆட்சியையும், அதன் ஆரவாரங்களையும் அடக்கவும், விரட்டவும் வேண்டியவர்களாய் இருக்கிறோம் என்பதை இன்று கற்றுக்கொள்வோம் (அதிகாரம் பணி செய்வதற்கே!).

‘திரு அவையில் அதிகாரம் உள்ளவர்கள் கடவுளின் நலன்களுக்குப் பதிலாகத் தங்கள் சொந்த நலன்களைத் தேடுவதைப் பார்ப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது’ - திருத்தந்தை பிரான்சிஸ் (மூவேளைச் செப உரை, அக் 4, 2020).

Comment