No icon

அருள்பணி. P. ஜான் பால்

பாஸ்கா காலம்  5 ஆம் ஞாயிறு திப 14:21-27, திவெ 21:1-5, யோவா 13:31-35

திருப்பலி முன்னுரை

பிறரை அன்புசெய்வதால் நீங்கள் என் சீடர் என்ற கருத்தினை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பாஸ்கா காலத்தின் இந்த 5 ஆம் ஞாயிற்றுக்கிழமையில் நமக்கு வழங்குகிறார். போர் நுணுக்கங்களை கற்றுத் தரும் குரு, தன் சீடர் தன்னைப்போலவே போர் புரிய வேண்டும் என்று விரும்புவார்.

விளையாட்டுப் போட்டிக்கான நுணுக்கங்களைக் கற்றுத் தரும் குரு, தன் சீடர் தன்னைப் போலவே விளையாட வேண்டும் என்று நினைப்பார். மல்யுத்த கலைகளை கற்றுத் தரும் குரு, தன் சீடர் தன்னைப்போலவே மல்யுத்தத்தில் சண்டையிட வேண்டும் என்று விரும்புவார். இப்படி ஒவ்வொரு குருவும் தன் சீடர் தம்மைப் போல இருக்கவேண்டுமேன்று விரும்புவர். ஆண்டவர் இயேசு இதற்கு விதிவிலக்கு அல்ல.

தன் சீடர்கள் தன்னைப்போல அப்பங்களை, மீன்களை பலுகச்செய்யவில்லையே, தன்னைப்போல தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றவில்லையே என்று ஆண்டவர் இயேசு ஒருபோதும் தன் சீடர்களை நினைத்து கலங்கியதில்லை. மாறாக, தன்னைப்போலவே தன் சீடர் அயலானை அன்பு செய்யவேண்டுமென விரும்பி, அவர்களது பாதங்களைக் கழுவி, இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்று சொன்னார்.

இன்று இந்த சமூகம், ஒரு சீடனின் செயல்களைக் கொண்டு அவரின் குரு யார் என்று கணித்துவிடுகிறது. கிறிஸ்தவர்களாகிய நமக்கும் அதே நிலைதான். கிறிஸ்து அன்பானவர், மன்னிப்பவர். எனவே, அவரின் சீடர்களாகிய கிறிஸ்தவர்களும் அவரைப்போலவே இருப்பர் என்ற நல்ல முத்திரையை இந்த சமூகம் நமக்கு தந்திருக்கிறது. அதற்கேற்றவாறு நாம் வாழ்கிறோமா என்று சிந்தித்தவர்களாய் இத்திருப்பலியில் பக்தியோடு பங்குபெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

இன்பங்கள் வழியாகவோ, சுகபோக வாழ்வு வழியாகவோ, ஒருவர் இறையாட்சிக்குள் நுழையமுடியாது. மாறாக, பல்வேறு இன்னல்கள், வேதனைகள் வழியாகவே ஒருவர் இறையாட்சிக்கு உட்படமுடியும் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

புதியதொரு விண்ணகத்தையும், மண்ணகத்தையும் படைத்த இறைவன், விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து தன் மக்களோடு, அவர்கள் நடுவே குடிகொள்வதால், அங்கு சாவு இருக்காது. மாறாக, வாழ்வு மட்டுமே இருக்கும் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. எங்கள் அன்புத் தந்தையே! உம் திரு அவையை வழிநடத்தும் உமது திருப்பணியாளர்கள், தாங்கள் சந்திக்கும் வேதனைகள், அவமானங்கள் மத்தியிலும் உமது மந்தைகளை மகிழ்வோடு வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இரக்கமுள்ள தந்தையே! உலக நாடுகளின் தலைவர்கள், உம் திருமகன் இயேசுகிறிஸ்து கொண்டுவந்த அன்பை தங்கள் மக்களின் மீது பொழிந்து, உமைப்போல அன்பின் உலகை அமைத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. பரிவுள்ள தந்தையே! எங்கள் குடும்ப உறவுகளில் நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, பிரிவினைகள் கலைந்து, எங்களின் பலம் மற்றும் பலவீனங்களை ஏற்றுக்கொண்டு, அன்பு செய்து வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் பரம்பொருளே! எம் பங்கில் உள்ள இளையோர்கள், உம் திருமகனின் திருத்தூதர்களைப் போல தாங்கள் செல்லும் இடமெல்லாம் உமது அன்பின் நற்செய்தியை அறிவித்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் விண்ணகத் தந்தையே! அயலாரின் அன்பிற்காக, இரக்கத்திற்காக, அமைதிக்காக ஏங்கித் தவிக்கும் பலருக்கு, உமது அருளையும், ஆசியையும் பொழிந்து, அவர்களை காத்து வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment