No icon

குடந்தை ஞானி

முப்படை தலைமை தளபதியின் இறப்பிற்கு ஆயர்கள் இரங்கல்

இந்தியாவில் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், உட்பட 14 மூத்த அதிகாரிகளின் உயிரிழப்புக்கு, இந்திய கத்தோலிக்க ஆயர்கள், தங்களின் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளனர்.

63 வயது நிரம்பிய தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட இந்தியாவின் இராணுவத்தைச் சார்ந்த 14 பேரின் இறப்பு, நாட்டை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும், சவால்நிறைந்த சூழல்களில் பணியாற்றிய அவர்களின் அர்ப்பணத்தையும், துணிச்சலையும் நாடு ஒருபோதும் மறக்காது என்றும், இந்திய ஆயர்கள் கூறியுள்ளனர்.

இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர் பேராயர் ஃபெலிக்ஸ் மச்சாடோ அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இவ்வாறு கூறப்பட்டுள்ளதோடு, இறந்த அனைவரது குடும்பங்களுக்கும் ஆயர்களின் ஆழ்ந்த அனுதாபங்களும் செபங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 8 ஆம் தேதி புதனன்று, தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது, முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவருடைய மனைவி மதுலிகா ராவத், 12 ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டுப்பகுதியில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், ராவத் அவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களின் அடக்கச்சடங்கு டிசம்பர் 10 ஆம் தேதி வெள்ளியன்று இடம்பெற்றது.

விமானி வருண் சிங் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு, பெங்களூரு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Comment