No icon

பல்கேரியா - வட மாசிடோனியா

திருத்தந்தையின் 29வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம்

நம் திருத்தந்தை பிரான்சிஸ்  மே 5 ஆம்  தேதி முதல் 7 ஆம் தேதி வரை, மூன்று நாள்களுக்கு தனது 29வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை பல்கேரியா மற்றும் வட மாசிடோனியா ஆகிய நாடுகளில் மேற்கொண்டார்.
உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஆல் இத்தாலியா (ஹ321) என்ற விமானத்தில்  காலை 7 மணிக்கு பல்கேரியத் தலைநகர் சோஃபியாவுக்குப் புறப்பட்டார். அவரது விமானத்தில் பன்னாட்டுச் செய்தியாளர்கள் இடம்
பெற்றிருந்தனர். அவரது விமானம் குரோவேஷியா, போஸ்னியா-எர்சகொவினா, செர்பியா ஆகிய நாடு களின் மீது பறந்துசென்றபோது, அந்தந்த நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கு வாழ்த்துத் தந்திகளை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பினார். இரண்டு மணி நேரம் பயணம்செய்து, பல்கேரியா நாட்டின் சோஃபியா நகர் விமான நிலையத்தை, உள்ளூர் நேரம்
காலை பத்து மணிக்குச் சென்றடைந்தார்.
பல்கேரியாவில் முதல் நாள்
வரவேற்பும் பரிசளிப்பும்
விமான நிலையத்தில், பல்கேரியப் பிரதமர் போஜ்கோ
மெத்தோடிவ் போரிசோவ் திருத் தந்தையை வரவேற்றார். மரபு ஆடைகளை அணிந்திருந்த நான்கு
சிறார்கள், திருத்தந்தைக்கு மலர்கள்
கொடுத்து வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்தில், ஓர் அறையில், திருத்தந்தையும் பிரதமரும் தனியே சிறிது நேரம் கலந்துரையாடினர். நம் உலகில்
விசுவாசத்தின் அடையாளமாக இருக்கும், மனிதராகிய தங்களை வரவேற்பதில் மகிழ்வடைகிறேன், தாங்கள் அமைதிக்காகச் செபிக்கும் செபம், கிழக்கே உக்ரைன் வரையும், மேற்கு பால்கன் பகுதி வரையும் விரிந்துள்ள எம் பகுதிக்கு மிகவும் தேவைப்படுகின்றது என்று பிரதமர், திருத்தந்தையிடம் தெரிவித்தார். பின்னர், திருத்தந்தைக்கு, பல்கேரியத் தயிரைக் குடிக்கக் கொடுத்தார் பிரதமர். தான் அர்ஜென்டீனாவில் சிறுவனாக இருந்த சமயத்தில், பாட்டி தனக்கு முதன்முறையாக, பல்கேரியத் தயிரைக் கொடுத்தார் என திருத்தந்தை நினைவுகூர்ந்தார். மேலும், ஆர்த்தடாக்ஸ் புனிதக் குறியீடுகள், ஆர்த்தடாக்ஸ் பாரம்பரிய ஆயர் ஆடை ஆகியவற்றையும் திருத் தந்தைக்கு அன்பளிப்பாக பல்கேரியப் பிரதமர் பரிசாக அளித்தார்.
இச்சந்திப்புக்குப் பின்னர், பத்துக் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசுத்
தலைவர் மாளிகைக்குச் சென்றார்.
பல்கேரிய அரசுத் தலைவர் ரூமன் ராடேவ், அம்மாளிகையின் முகப்பிலேயே, திருத்தந்தையை வரவேற்று உள்ளே அழைத்துச்
சென்றார். அந்த மாளிகையில், இராணுவ அணிவகுப்பு மரியாதை களும் திருத்தந்தைக்கு வழங்கப் பட்டன. அரசுத்தலைவர் ராடேவ் அவர்களும், திருத்தந்தையும் தனியே கலந்துரையாடினர். பரிசுப்
பொருள்களும் பரிமாறப்பட்டன. புனித திருத்தந்தை 23ஆம் ஜான் அவர்கள், பேராயராக (ஆஞ்சலோ ரொன்காலி) இருந்த சமயம், 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி, பல்கேரியாவுக்குத் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஆவணத்தின் நகல் ஒன்றை,  அரசுத்தலைவர்க்கு அன்பளிப்பாக அளித் தார் திருத்தந்தை பிரான்சிஸ். இது, வத்திக்கான் இரகசியப் பதிவேடுகளிலிருந்து எடுக்கப்பட்டது.
அரசுத்தலைவர்களோடும் ஆர்தோடாக்ஸ் தலைவர்களோடும்
பல்கேரிய அரசுத்தலைவரைச் சந்தித்த பின்னர், அந்த மாளிகையின் முன்புறமிருக்கின்ற அத்தனாஸ் புரோவ் வளாகத்தில், பல்கேரிய அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து உரையாடினார்.  அரசுத்
தலைவரின் உரைக்குப் பின்னர், திருத் தந்தையும், அந்நாட்டுக்கு, தனது முதல் உரையை
வழங்கினார். இந்நிகழ்வுக்குப் பின்னர், பல்கேரிய ஆர்தோடாக்ஸ்பேரவையின் மாளிகைக்குக் காரில் சென்
றார்.  அம்மாளிகையில், ஆர்தோடாக்ஸ் முதுபெரும் தந்தை நியேஃபிட் அவர்களையும், ஆர்தோடாக்ஸ் பேரவையின் பிரதிநிதிகளையும் சந்தித்தார் திருத் தந்தை பிரான்சிஸ். பல்கேரிய மக்கள் தொகையில், 76 விழுக்காட்டினர் ஆர்தோடாக்ஸ் கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் முதலில், முதுபெரும்தந்தை நியேஃபிட் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். முதுபெரும்தந்தை நியேஃபிட் அவர்களின் வரவேற்புரைக்குப் பின்னர், திருத்தந்தையும் உரையாற்றினார். புனித பவுல் அவர்கள் பிறந்ததன் இரண்டாயிரமாம் ஆண்டை முன்னிட்டு அமைக்கப்பட்ட அழகான படம் ஒன்றைப் பரிசாக அளித்தார்.   
இச்சந்திப்பை நிறைவு செய்து, பல்கேரிய முதுபெரும் தந்தையின் புனித அலெக்சாந்தர் நெவிஸ்கி பேராலயம் சென்று திருத்தந்தை பிரான்சிஸ் செபித்தார். ஒட்டமான்கள் ஆதிக்கத்திலிருந்து
ஸ்லாவிய மக்களை விடுதலை செய்வதற்காக, துருக்கியர்களுக்கு எதிராக, 1877, 1878 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போரில் உயிரிழந்த 2 இலட்சம் இரஷ்யப் படைவீரர்களின் நினைவாக இப்பேராலயம் எழுப்பப்பட்டது. இப்பேராலயத்தில் புனிதர்கள் சிரில், மெத்தோடியஸ் திருவுருவங்களின் முன்னர் திருத்தந்தை செபித்தார். பின்னர், அப்பேராலய வளாகத்தில் அல்லேலூயா வாழ்த்தொலி உரையாற்றினார்.
அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்னர், பல்கேரிய பல்சமயப் பிரதிநிதிகள் பத்துப் பேரைச் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்நிகழ்வை நிறைவுசெய்து, பல்கேரிய திருப்பீடத் தூதரகம் சென்று மதிய உணவருந்தி ஓய்வும் எடுத்தார். ஞாயிறு மாலையில் முதலாம் அலெக்சாண்டர் கினியாஸ் வளாகத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்து தம் முதல்நாள் திருத்தூதுப் பயணத்தை சோஃபியாவில் நிறைவு செய்தார். 
பல்கேரியாவில் இரண்டாம் நாள்
அகதிகளுக்கு ஆதரவு
மே 6, திங்கள், திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாளன்று,  சோஃபியா நகரின் திருப்பீட தூதரகத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, விராஸ்தெப்னா புலம்பெயர்ந்தோர் முகாமிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் சென்றார்.  சோஃபியா நகரின் புறநகரிலுள்ள முன்னாள் பள்ளி ஒன்று, 2013ம் ஆண்டில், முகாமாக, மாற்றப்பட்டது.  இம்முகாமுக்குச் சென்ற திருத்தந்தையை, அதன் இயக்குனரும், காரித்தாஸ் அமைப்பின் இயக்குனரும் வரவேற்றனர். பின்னர், அம்முகாமின் உணவு அறையில், சிரியா, ஈராக், பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகளைச் சார்ந்த, ஏறத்தாழ ஐம்பது புலம்பெயர்ந்த சிறார் மற்றும் அவர்களின் பெற்றோரைச் சந்தித்து திருத்தந்தை பிரான்சிஸ் உரையாடினார். இம்முகாமில் பணியாற்றும் தன்னார்வலர் ஒருவர் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் இச்சிறார் பாடல் ஒன்றை இசைத்தனர். இச்சிறாரிடமிருந்து, அவர்கள் வரைந்த ஓவியங்களை, திருத்தந்தை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார். இவர்களிடம் பேசிய திருத் தந்தை, சமுதாயத்தில் நிலவும் காரியங்களை நாம்
புரிந்து கொள்வதற்கு சிறார் எப்போதும் உதவுகின்றனர்.
இச்சிறார், தங்கள் சொந்த நாடுகளில் இடம்பெறும் போர் மற்றும் துன்பங்களிலிருந்து தப்பித்து, நம்பிக்கை உணர்வோடு உலகின் பிற பகுதிகளுக்கு
வருகின்றனர். இன்றைய உலகில், புலம்பெயர்ந் தோரும், குடிபெயர்ந்தோரும், ஒரு சிலுவையின் பகுதியாக, மனித சமுதாயத்தின் ஒரு சிலுவையின் பகுதியாக உள்ளனர். இது, ஏராளமான மக்கள் துன்புறும் சிலுவை என்று கூறினார். இச்சந்திப்பை முடித்து, பிளோதீவ்  நகருக்கு விமானத்தில் புறப் பட்டார்.
முதல் நற்கருணை திருவிருந்துக் கொண்டாட்டம்
பல்கேரியா வின் தெற்கேயுள்ள பிளோதீவ் நகரம், பால்கன் பகுதியில், தொழிற்சாலை, வர்த்தகம், அறிவியல் மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய இடமாகும். பல்கேரியாவின் இரண்டாவது பெரிய நகரமாகிய பிளோதீவை, காலை பத்து மணிக்குச் சென்றடைந்த திருத்தந்தை பிரான்சிஸ், அங்கிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ராகோவ்ஸ்கி  தூய இயேசுவின் திருஇதய ஆலயத்திற்குச் சென்றார். அவ்வாலயத்தில், முதல் நற்கருணை வாங்கும் 245 சிறாரும், அவர்களின் உறவினர்களும் அமர்ந்திருந்தனர். ஆலயத்தில் திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலியை, பெரிய திரை வழியாகப் பார்த்து, அதில் பங்குபெற, ஆலய வளாகத்தில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர். அவர்கள் மத்தியில் திறந்த காரில் வந்த திருத்தந்தை, ஆலயம் சென்று திருப்பலியைத் தொடங்கினார். ஆலயத்தில் 700 விசுவாசிகளும், ஆலய வளாகத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் விசுவாசிகளும் இத்திருப்பலியில் பங்கு கொண்டனர். இத்திருப்பலியில், திருத்தந்தை மறையுரையாற்றினார். இம்மறையுரையின் இறுதியில், முதல் நற்கருணை வாங்கவிருக்கும் சிறாருக்கென திருத்தந்தை பிரான்சிஸ் சிறு அறிவுரை வழங்கினார்.
திருப்பலியின் இறுதியில், எல்லாரும் எழுந்து நின்று கைதட்டினர். இத்திருப்பலியை நிறைவுசெய்து, களைப்பின்றி, மலர்ந்த முகத்துடன், திருத்
தந்தை ஆலயத்தின் நடுப்
பகுதி வழியாகச் சென்றபோது
மேலிருந்து வெண்ணிற மலர் கள் தூவப் பட்டன. புதுநன்மைச் சிறாரும் மகிழ்வோடு கை தட்டிக்கொண்டே இருந்தனர். இத்திருப்பலிக்குப் பின்னர், அந்த ஆலயத்திற்கு அருகி லுள்ள பிரான்சிஸ்கன் அருள் சகோதரிகள் இல்லத்தில், பல்கேரிய ஆயர்களுடன் மதிய உணவருந்தினார்.
ராகோவ்ஸ்கி புனித மிக்கேல் தலைமைத் தூதர் ஆலயத்தில்
பின்னர் பிற்பகல் 3.20
மணிக்கு, ராகோவ்ஸ்கி புனித மிக்கேல் தலைமைத் தூதர் ஆலயம் சென்றார். (1928 ஆம் ஆண்டில் கடுமையான நிலநடுக்கத்தால் சேதமடைந்த இந்த ஆலயம், அப்போதைய பல்கேரிய அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி, புனித திருத்தந்தை 23 ஆம் ஜான், திருத்தந்தை 11 ஆம் பயஸ் ஆகியோரின் உதவியுடன், மீண்டும் சீரமைக்கப்பட்டு, 1931 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி அர்ச்சிக்கப்பட்டது). அவர் திறந்த காரில் சாலையில் சென்றபோது
இருபக்கங்களிலும், விசுவாசிகள் வத்திக்கான் கொடி
களுடன் நின்றுகொண்டு திருத்தந்தையை வாழ்த்தினர். மஞ்சள் மற்றும் வெண்மை நிற பலூன்களையும் பறக்க விட்டனர். ஆலயத்திற்கு வந்த திருத்தந்தையை, ஒரு சிறுமி மஞ்சள்நிற ரோஜா மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், திருத்தந்தை, ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த திருத்தந்தை புனித 23 ஆம் ஜான் அவர்களின் உருவப்படம், அவரின் திருப்பண்டம் ஆகிய வற்றின்முன் சிறிதுநேரம் செபித்தார். பின்னர், அவர் ஆலயப் பீடத்திற்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். புனித மிக்கேல் தலைமைத் தூதர் ஆலயச் சந்திப்பில், நற்கருணை சபையின் ஓர் அருள்சகோதரி, ஓர் அருள்பணியாளர், ஒரு குடும்பம் ஆகியோர் தங்கள்
சாட்சியங்களை வழங்கினர். ஒவ்வொரு சாட்சியமும்
முடிந்த பின்னர் பாடல்களும், நடனமும் இடம் பெற்றன. அனைவரையும் ஆசீர்வதித்து, புனித மிக்கேல் தலைமைத் தூதர் ஆலயத்திலிருந்து திருத்தந்தை வெளியே வந்தபோது, சில தன்னார்
வலர்கள், நோயாளிகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அவர்களையும் திருத்தந்தை ஆசீர்வதித்தார். அந்நேரத்தில் ஆலய மணிகள் ஒலித்துக் கொண்டிருந்தன. இந்நிகழ்வை நிறைவுசெய்து, பிளோதீவ் நகர் விமானத்தளம் சென்று சோஃபியாவுக்குப் புறப்பட்டார்.

பல்கேரிய பல்சமயப் பிரதிநிதிகள் சந்திப்பு
மாலை 6.15 மணிக்கு, பல்கேரிய பல்சமயப் பிரதிநிதிகளுடன் அமைதிக்கான நிகழ்வை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். இத் துடன் பல்கேரியாவில் இரண்டாவது நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகள் முடிவடைந்தன. 

திருத்தூதுப் பயணத்தில் மூன்றாவது நாள்

திருத்தூதுப் பயணத்தின் மூன்றாவது நாளான புதன்கிழமை மே ஏழாம் தேதி காலை விமான நிலையத்தில் பல்கேரிய பிரதமர் திருத்தந்தையை  நன்றி சொல்லி, வட மாசிடோனியாவிற்கு வழியனுப்பி வைத்தார். 55 நிமிடங்கள் விமானப் பயணம் செய்து, வட மாசிடோனியா தலைநகர்  புனித அன்னை தெரசாவின்  பிறந்தகமான ஸ்கோப்ஜே  நகர் விமானத்தளத்தை, உள்ளூர் நேரம் காலை 8.15 மணிக்குச் சென்றடைந்தார். வட மாசிடோனியா அரசுத்தலைவர் ஜார்ஜ் இவானோவ் அவர்களும், பிரதமர் ஸோரான் ஷாயேவ் அவர்களும், விமானத்திற்குள்ளே சென்று திருத்தந்தையை வரவேற்றனர். விமானத்தளத்தில், மரபு ஆடைகளை அணிந்திருந்த இரு சிறார், தட்டுகளில், ரொட்டி, உப்பு மற்றும் தண்ணீர் வைத்து திருத்தந்தையை வரவேற்றனர். பின்னர், காரில் ஏறி, அங்கிருந்து 22.6  கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்கு திருத்தந்தை பிரான்சிஸ் சென்றார் அரசுத்தலைவரும், பிரதமரும், திருத்தந்தையுடன் சென்றனர். அந்த மாளிகையில் திருத்தந்தைக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன், அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது. முதலில் அங்குள்ள ஓர் அறையில், அரசுத்தலைவர் ஜார்ஜ் இவானோவ் அவர்களுடன் தனியே உரையாடிய பின்னர், அதற்கு அருகிலுள்ள வேறோர் அறையில் பிரதமர் ஸோரான் ஷாயேவ்அவர்களுடனும் தனியே உரையாடினார். பரிசுப்பொருள்களும் பரிமாறப்பட்டன. அதன்பின்னர் அரசுத்தலைவர் மாளிகையிலுள்ள மொசைக் அறையில், வட மாசிடோனிய, அரசு மற்றும் தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் பிரிதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்தார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தூதுப் பயணம், மாசிடோனியாவிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதன் 25 ஆம் ஆண்டு நிறைவில் இடம்பெறுகின்றது. இச்சந்திப்பை நிறைவு செய்து, அவ்விடத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள புனித அன்னை தெரசா நினைவிடத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் சென்றார்.
அன்னை தெரசா திருத்தலத்திற்கு அடிக்கல் நாட்டிய திருத்தந்தை
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அன்னை தெரசா சபை அருள்சகோதரிகள் குழுவின் தலைவர் வரவேற்றார். ஒரு சிறுவன் கொடுத்த மலர்களை, புனித அன்னை தெரசா திருவுருவத்தின் முன்பு வைத்த திருத்தந்தையை, அச்சபைச் சகோதரிகள், புனித அன்னை தெரசா அவர்களின் இரு உறவினர்கள் ஆகியோர், சிற்றாலயத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்த ஆலயத்தில், புனித அன்னை தெரசா அவர்கள் பயன்படுத்திய சில பொருள்கள் மற்றும் அவரின் திருப்பொருளும் இருந்தன. அவ்விடத்தில் சிறிது நேரம் செபித்த திருத்தந்தை, அன்னை தெரசாவிடம் செபித்தார். பின்னர், அவ்வில்லத்தில் பராமரிக்கப்படும் ஏறத்தாழ நூறு ஏழைகளையும் சந்தித்த திருத்தந்தை, அங்குப் பணியாற்றும் ஒருவர் கூறிய சாட்சியத்தையும் கேட்டறிந்தார். பின்னர், புனித அன்னை தெரசா புதிய திருத்தலத்திற்கென, அடிக்கல்லையும் திருத்தந்தை பிரான்சிஸ் புனிதப்படுத்தினார். புனித அன்னை தெரசா அவர்கள், கடவுளன்பிற்கு ஒரு சாட்சியாக விளங்குகிறார் என்று திருத்தந்தை கூறினார்.
மாசிடோனியா வளாகத்தில் திருப்பலி
புனித அன்னை தெரசா சபையினரைச் சந்தித்த பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ், அங்கிருந்து
800 மீட்டர் தூரத்திலுள்ள மாசிடோனியா வளாகத்திற்குச் சென்று திருப்பலியை ஒப்புக் கொடுத்தார். திருத்தந்தை பிரான்சிஸ். சரயோவோ பேராயர், கர்தினால் வின்கோ புலிஜிக்  அவர்களும், திருத்தந்தையுடன் சேர்ந்து கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினார். இலத்தீன் மற்றும் மாசிடோனிய மொழிகளில் நிறைவேற்றப்பட்ட இத்திருப்பலியில், திருத்தந்தை மறையுரை ஆற்றினார். திருப்பலியின் இறுதியில், ஸ்கோப்ஜே மேயர்  கிரோ ஸ்டோயனோவ் திருத்தந்தைக்கு நன்றி சொன்னார். இத்திருப்பலியில் பங்குபெற்ற ஏறத்தாழ 15 ஆயிரம் விசுவாசிகளை ஆசீர்வதித்து, ஸ்கோப்ஜே ஆயர் இல்லம் சென்று மதிய உணவருந்தி சிறிதுநேரம் ஓய்வும் எடுத்தார். 
பல் சமய இளையோர் கூட்டம்
மாலை 3.45 மணிக்கு, ஸ்கோப்ஜே மேய்ப்புப்
பணி மையம் சென்ற திருத்தந்தையை, இரு இளையோர், ரொட்டியும் உப்பும் கொடுத்து வரவேற்றனர். கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய இளையோர் கூட்டம் பாடலுடன் ஆரம்பமானது. கத்தோலிக்க-ஆர்தோடாக்ஸ் கலப்புமண ஒரு தம்பதியர், ஒரு முஸ்லிம் இளைஞர், ஒரு கத்தோலிக்க இளைஞர் ஆகியோர் சான்று பகர்ந்தனர். ஒவ்வொரு பகிர்வுக்குப் பின்னும், பாடல் இசைக்கப்பட்டது. இறுதியில் இடம்பெற்ற நடனத்திற்குப் பின்னர், திருத்தந்தையும் உரையாற்றினார். இளையோரின் ஆடல் பாடல்களில் மகிழ்ந்து, இறுதியில், அவர்களுக் காக புனித அன்னை தெரசாவிடம் செபித்து, இந்நிகழ்வை நிறைவு செய்தார். இச்செவ்வாய் மாலை 5 மணிக்கு, ஸ்கோப்ஜே, இயேசுவின் தூய இதய பேராலயத்தில் அருள்பணியாளர், குடும்பத்தினர் மற்றும் இருபால் துறவியரைச் சந்தித்தார். அதற்குப் பின்னர், ஸ்கோப்ஜே விமானத்தளம் சென்று உரோம் நகருக்குப் புறப்பட்டார். இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், 29 ஆவது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவு பெற்றது.
இவ்வாண்டு திருத்தந்தை மேற்கொள்ளும் நான்காவது திருப்பயணம் இது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்க கண்டத்தை அடுத்து ஐரோப்பா கண்டத்திற்குள் இத்திருப்பயணம் அமைந்துள்ளது.

Comment