No icon

பேராயர் பிரகாஷ் மல்லவரப்பு

கோவிட்-19 நோயாளரைப் பராமரிப்போர் வானதூதர்கள் போன்றவர்கள்

இந்த உலகை கொரோனா தொற்றுக்கிருமியிலிருந்து காப்பாற்றுவதற்கு, தங்கள் உயிரையும், குடும்பத்தையும் புறந்தள்ளி, மிகுந்த அர்ப்பணத்துடன் பணியாற்றிவரும், நலப்பணியாளர்களை மாவீரர்களாக, வானதூதர்களாகக் கருதவேண்டும் என்று, இந்திய தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தியாவில், கோவிட்-19 நோயாளிகள் மத்தியில் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள், சில மாநிலங்களில் தாக்கப்பட்டுள்ள இவ்வேளையில், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு, நடுவண் அரசு சட்டம் இயற்றியுள்ளதைப் பாராட்டியுள்ளார், இந்திய ஆயர் பேரவையின் நலவாழ்வு பணிக்குழு தலைவரான, பேராயர் பிரகாஷ் மல்லவரப்பு (Archbishop Prakash Mallavarapu).

மருத்துவர்கள் மீது வன்முறைகளை மேற்கொள்ளும் நபர்களைத் தண்டிப்பதற்கு இந்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டம் குறித்து யூக்கா செய்தியிடம் பேசிய, விசாகப்பட்டிணம் பேராயர் மல்லவரப்பு அவர்கள், இந்த மருத்துவர்களைப் பாதுகாப்பதற்கு இத்தகைய சட்டம் அவசியம் என்று கூறினார்.

நலப்பணியாளர்கள் தங்களை கடமைகளை மிகுந்த பக்தி உணர்வுடன் ஆற்றுகையில் அவர்களைப் பாராட்டவில்லையெனில், அவர்களைத் தாக்குவதற்கு எந்தவித உரிமையையும் கொண்டிருக்கவில்லை என்றும், பேராயர் மல்லவரப்பு அவர்கள் எச்சரித்தார்.

ஏப்ரல் 22, இப்புதனன்று இந்திய மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்தின்படி, நலப்பணியாளர்களைத் தாக்குகிறவர்கள் மற்றும், துன்புறுத்துகிறவர்களுக்கு, ஏழாண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஐந்து இலட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று, அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் அவர்கள் அறிவித்துள்ளார்.

மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் மற்றும், ஏனைய மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை மற்றும், துன்புறுத்தலை அரசால் சகித்துக்கொள்ள முடியாது என்றும், பிரகாஷ் ஜவ்டேகர் அவர்கள், டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

உலக வங்கி

இதற்கிடையே, இந்தியாவில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையால், நான்கு கோடி வெளி மாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நாடும், வெளி மாநில தொழிலாளர்களுக்கு, உடல்நலம், குடியிருப்பு, கல்வி, இழந்த வேலையை மீண்டும் பெற்றுத் தருவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், உலக வங்கி கூறியுள்ளது.

Comment