No icon

COP26 உச்சிமாநாட்டு வளாகத்தில், 'Little Amal' பொம்மை

'Little Amal' என்ற பெயருடன் உருவாக்கப்பட்டுள்ள 3.5 மீட்டர் (அதாவது, 11.5 அடி) உயர பொம்மை, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் COP26 உச்சிமாநாட்டு வளாகத்தில், நவம்பர் 9ம் தேதி முதல் 11ம் தேதி முடிய, தன் பயணத்தை மேற்கொண்டு வருகிறது என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

சிரியா நாட்டைச் சேர்ந்த புலம்பெயர்ந்த சிறுமியாக உருவாக்கப்பட்டுள்ள 'Little Amal' பொம்மை, நான்கு மாதங்களுக்கு முன்பு, சிரியாவிலிருந்து புறப்பட்டு, ஐரோப்பாவின் பல நாடுகளில், 8000 கி.மீ. பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் உருவாகும் நெருக்கடிகள், குடிபெயர்ந்தோரையும், புலம்பெயந்தோரையும் பெருமளவு பாதிக்கின்றன என்ற கருத்தை வலியுறுத்த, 'Little Amal' பொம்மை, COP26 வளாகத்தில் நவம்பர் 9 செவ்வாய் முதல் தன் பயணத்தைக் துவங்கியது.

நவம்பர் 10ம் தேதி புதனன்று, 'Little Amal' பொம்மை, கிளாஸ்கோ நகரில், நூற்றுக்கணக்கான பள்ளிக்குழந்தைகளுடன் இணைந்து, COP26 நடைபெறும் வளாகத்தைச் சுற்றி ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டது.

புலம் பெயர்வு, குடிபெயர்வு ஆகிய பிரச்சனைகளை வெளிச்சமிட்டுக் காட்ட, Good Chance என்ற நாடகக் குழுவினர், 2015ம் ஆண்டு, காடு என்று பொருள்படும் 'The Jungle' என்ற பெயரில் உருவாக்கிய நாடகத்தில், சிரியா நாட்டைச் சேர்ந்த சிறுமியாக, 'Little Amal' என்ற கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டது.

இந்த நாடகம், ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்களில் அரங்கேற்றம் செய்யப்பட்ட வேளையில், பெரும் வரவேற்பை பெற்றதால், அதைத் தொடர்ந்து, 'Little Amal' கதாப்பாத்திரம், ஒரு பொம்மை வடிவில் உருவாக்கப்பட்டு, தன் பயணத்தை மேற்கொண்டது.

புலம்பெயர்ந்தோரின் பிரச்சனைகளை, குறிப்பாக, பெற்றோர் இன்றி, புலம்பெயரும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படும் சிறுவர், சிறுமியரின் பிரச்சனைகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கென்று உருவாக்கபப்ட்டுள்ள 'Little Amal' பொம்மை, சிரியாவிலிருந்து புறப்புட்டு, துருக்கி, கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் பயணித்து, தற்போது, பிரித்தானிய அரசில் தன் பயணத்தை நடத்தி வருகிறது.

'Little Amal' பொம்மை, இத்தாலியில் பயணம் மேற்கொண்ட வேளையில், செப்டம்பர் 10ம் தேதி, வெள்ளிக்கிழமை, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்திலும் வலம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Comment