No icon

குடந்தை ஞானி

உலக அமைதி நோபல் விருது பெறும் செய்தியாளர்கள்

பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த மரியா ரெஸ்ஸா மற்றும் ரஷ்ய நாட்டின் திமித்ரி முரட்டோவ்  என்ற இரு செய்தியாளர்கள், இவ்வாண்டின் உலக அமைதி நோபல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று நோபல் விருதுக்குழு, அக்டோபர் 8 வெள்ளியன்று அறிவித்துள்ளது.

குடியரசின் விழுமியங்களும், நீடித்த அமைதியும் நிலவ அடிப்படைத் தேவையான கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க இவ்விருவரும் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி, இவ்விருது இவ்விருவருக்கும் வழங்கப்படுகிறது என்று நார்வே நாட்டின் நோபல் விருதுக்குழுவின் தலைவர், பெரிட் ரைஸ் ஆன்டர்சன்  அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

குடியரசைப் பாதுகாக்கும் ஊடகத்துறையின் சுதந்திரம் பல்வேறு ஆபத்துக்களைச் சந்தித்துவரும் இன்றையக் காலக்கட்டத்தில், துணிவுடன் போராடிவரும் ஊடகப் பணியாளர்கள் அனைவரின் பிரதிநிதிகளாக, மரியா ரெஸ்ஸா மற்றும் திமித்ரி முரட்டோவ் ஆகிய இருவரும் விளங்குகின்றனர் என்று, நோபல் விருதுக்குழுவினர் கூறியுள்ளனர்.

58 வயதான மரியா ரெஸ்ஸா அவர்கள், புலனாய்வுகளை மேற்கொள்ளும் இதழியல் நெறியுடன், ராப்லர் (Rappler) என்ற டிஜிட்டல் ஊடக நிறுவனம் ஒன்றை, 2012 ஆம் ஆண்டு நிறுவி நடத்தி வருகிறார். பிலிப்பீன்ஸ் நாட்டின் அரசுத்தலைவராக, ரொத்ரிகோ துத்தெர்ததே அவர்கள் பதவியேற்றதிலிருந்து, நடத்திவரும் போதைப்பொருள் ஒழிப்பு போரினால் கொல்லப்பட்டவர்கள் சார்பில் உண்மை விவரங்களை வெளியிட்டு வரும் மரியா ரெஸ்ஸா அவர்களை, நோபல் விருதுக்குழுவின் தலைவர்,  ரைஸ் ஆன்டர்சன்   அவர்கள் பாராட்டியுள்ளார்.

59 வயதான திமித்ரி முரட்டோவ் அவர்கள், 199 ஆம் ஆண்டு, நோவாயா கெசட்டா என்ற தனிப்பட்ட நாளிதழை உருவாக்கி, கருத்துச் சுதந்திரத்தை அடக்க ரஷ்யாவில் மேற்கொள்ளப்படும் அனைத்து அடக்குமுறைகளையும் கேள்விக்குள்ளாக்கி வருகிறார் என்று  ரைஸ் ஆன்டர்சன்  அவர்கள் கூறினார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பர்க், எல்லைகளற்ற செய்தியாளர்கள் குழு, றுழடீ எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் உட்பட, 329 பேர் உலக அமைதி நோபல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர் என்பதும் இவர்களில், மரியா ரெஸ்ஸா, திமித்ரி முரட்டோவ் ஆகிய இரு செய்தியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

Comment