No icon

ஆயரின் சுற்றுமடல்

சிறைப்பணி ஞாயிறு

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிரபராதியாக இருந்து, மரண தண்டனை விதிக்கப்பட்டு, மனிதரால் அவமான சின்னமாக கருதப்பட்ட சிலுவையில், ஏற்றிக்கொல்லப்பட்ட நமது நாதர் கிறிஸ்துவின் அறைக்கூவலை ஏற்று, செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமைப்புதான் தமிழக சிறைப்பணி. இன்றைய காலகட்டத்திலும் அதே கொடுமைகளை நமது சிறைச்சாலைகளில் நாம் காண முடிகின்றது. நாம் ஆராதிக்கும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ஓர் வரலாற்று நபர். சிலுவையில்  ஏற்றிக் கொல்லப்பட்ட ஒருவர். அவரைத் தீர்த்துக்கட்டத் துடித்தவர்களின் வாழ்வோ முடிந்து போனது. ஆனால், அவர் மரணத்தை வெற்றி கொண்டார். நீங்களும், நானும் மறு கிறிஸ்துவாக என்றும் வாழ்வதற்காக நம்முள் நற்கருணை வடிவில் தினமும் வருகின்றார். நற்கருணையில் எழுந்து வரும் கிறிஸ்து, நம்மில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். வாழும் கிறிஸ்துவாகிய நாம், நமது சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டு, இருட்டு அறையில் வாழும் நமது சகோதர, சகோதரிகளின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டிய நாள்தான் இந்த சிறைப்பணி ஞாயிறு. சிறைப்பணி ஞாயிறை கொண்டாடும் நாம், சிறையில் இருப்பவர்களை நம் சகோதர, சகோதரிகளாகப் பாவித்து, அவர்களின் ஒருங்கிணைந்த, ஒட்டுமொத்த முழு மானுட வளர்ச்சிக்கும், வாழ்வாதாரத்திற்கும் நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம்.

வாழும் கிறிஸ்துவாக

தமிழக சிறைப்பணியின் பல்வேறு பணிகளில் அயல்நாட்டு மற்றும் பிற மாநில சிறைவாசிகளை மறுகுடி அமர்த்துதலில் (திருப்பி அனுப்புதல்) முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு கீழ்காணும் நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டாகும். நமது அண்டை நாடான வங்க தேசம் நமது நாட்டை விட மிகவும் பின்தங்கிய ஏழை நாடு என்பதை அனைவரும் அறிந்ததே. அங்கே பெரும்பான்மையோர் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்கள். ஒரு குடும்பத்தில் ஏழ்மையின் காரணமாக கணவனை இழந்த விதவை தாய், தனது 14 வயது மகளுக்கு திருமணம் முடித்தார்கள். 15 வயதில் குழந்தையை கொடுத்துவிட்டு, கணவன் வேறு ஒரு பெண்ணை நோக்கி சென்று விட்டான். கைக்குழந்தையுடன் வாழ வழி அறியாது தவித்து நிற்கும் வேளையில், விடியல் கிடைத்ததை போல, ஒரு பெண் அவரை அழைத்து, நல்ல வேலை வாங்கிதருவதாக கூறி, இந்தியாவிற்கு அரசின் வழிமுறையைப் பின்பற்றாமல் ஆற்றினை கடந்து, இந்தியாவில் நுழைந்தார்கள். அங்கிருந்து பெங்களூர் மாநகரம் வழியாக சேலம் வந்தடைந்தார்கள். சேலம் தங்கும் விடுதியில் அவருடன் கூட இருந்த மூன்று பெண்களையும், ஆக மொத்தம் நான்குபெண்களையும் காவல்துறை விபச்சார வழக்கில் கைதுசெய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தார்கள்.

நீதிமன்றத்தில் வழக்கு 2 ஆண்டுகள் நடைபெற்று, இந்தப்பெண் விபச்சாரத்திற்கான குற்றம் புரியவில்லை என்று கூறி, இவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். ஆனால், அரசாங்கம் இவர் வெளிநாட்டினர் என்ற காரணத்தால் முகாமில் அடைத்து, அங்கும் ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், உடன் இருந்தவர்களின் தூண்டுதலால் முகாமிலிருந்து தப்பித்து ஓடினார். ஒன்றரை ஆண்டுகள் ஒன்றும் செய்யாத அரசும், காவல் துறையும் உடனடியாக செயல்பட்டு, அவரைக்  கைது செய்து, புழல் மத்திய சிறையில் அடைத்தார்கள். சிறைப்பணி தன்னார்வத் தொண்டர்கள் இவரைச் சந்தித்து, அவரது கடந்து வந்த வாழ்க்கை பாதையை கேட்டவுடன், உடனடியாக அவரது முகவரி மற்றும் தொலைபேசியைக் கேட்டறிந்து தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை உடனடியாக செய்ய, நான் வங்கதேசத்தில் பணியாற்றியபோது, என்னுடன் இணைந்து பணியாற்றிய மேதகு ஆயர் பிஜாய்ஸ் டி குரூஸ் அவர்களை தொடர்பு கொண்டு, இந்த பெண்ணிற்காக உதவி கேட்டேன். அவர்களும் இந்த குடும்பத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவர் ஆயர் என்று கூட அறியாமல் மகளை கடத்தி வைத்திருக்கும் கடத்தல்காரன் என்ற எண்ணத்தில், “ஐயா, நான் பத்தாயிரம் டாக்கா (பணம்) உங்களுக்கு தருகிறேன், என் மகளை விட்டு விடுங்கள்” என்று கெஞ்சினார் அப்பெண்ணின் தாய். ஆயர் அவர்கள் சற்றும் மனம் நோகாமல், அவர்களுக்கு சிறைப்பணி பற்றி எடுத்துரைத்து, அவர்களுக்கு உதவுவதாக கூறினார்கள். அவர்கள் சொன்னபடியே செயலிலும் செய்து காட்டினார்கள்.

அந்த நாட்டு அரசிடமிருந்து பெற வேண்டிய அனைத்து ஆவணங்களையும் நமக்கு பெற்றுத் தந்து, வங்கதேச தூதரகம் வழியாக, அப்பெண் தம் சொந்த நாட்டுக்கு முறையாகச் செல்ல அனுமதி பெற்று, அப்பெண்ணின் சொந்த வீட்டிற்கு தமிழக சிறைப்பணியின் சார்பாக, ஒருங்கிணைப்பாளரும், செயலரும் இணைந்து சென்று, அந்நாட்டு காவல் துறையின் முன்னிலையில் ஒப்படைத்தனர். 5 ஆண்டுகளுக்குப் பின்னால் அந்த சிற்றூர் மக்கள், அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஊதாரி மைந்தன் உவமையை கண்டு, தொலைந்துபோன மகளை கண்டடைந்த சிற்றூரின் மகிழ்ச்சியைக் கண்டு வியக்க முடிந்தது. சிறைப்பணியின் இப்படிப்பட்ட மகத்தான பணியினை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். நிரபராதியான இயேசுக்களை விடுவிக்க நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும். இந்த இளம் பெண்ணைப் போன்று, எத்தனையோ இளம் பெண்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என்று பல்வேறு மக்கள், நிரபராதியாகிய இயேசுவை போன்று சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தங்களது வாழ்க்கையை இருட்டறையில் தொலைக்கிறார்கள். இப்படிப்பட்ட மக்களை மீட்க தமிழக சிறைப்பணியானது மறு கிறிஸ்துவாக வாழ்வதற்காக உங்களை அன்போடு வரவேற்கின்றது.

தமிழகத்தில் 9 மத்திய சிறைச்சாலைகள், 5 பெண்கள் தனிச்சிறைச்சாலைகள், 10 மாவட்டச் சிறைச்சாலைகள், மற்ற கிளை சிறைச்சாலைகள் உள்பட 130 சிறைச்சாலைகளில் 17,696 சிறைவாசிகள் நமது வரவுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். 18 மறைமாவட்டங்களில் மறைமாவட்ட ஆயர்களது மேற்பார்வையில் சிறைவாசிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவி, சிறைவாசிகளுக்கு பொருளாதார உதவி மற்றும் சிறைவாசிகளுக்கு மன ஆற்றுப்படுத்துதல், சிறைப்பணி தன்னார்வத் தொண்டர்கள் வழியாக நடைபெற்று வருகிறது. நமது தமிழகத்தில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் சார்பாக உற்றார், உறவினர் இல்லாதவர்களுக்காக ஒரு மறுவாழ்வு இல்லமானது திருத்தணி அருகே, கே.ஜி. கண்டிகை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. சிறைவாசிகள் தங்களுக்கு ஒருவருமில்லை என்ற மன ஏக்கத்தை மாற்றும் முயற்சியாக இந்த இல்லம் இயங்கி வருகிறது. தமிழக சிறைகளில் வாழுகின்ற 17,696 இல்லவாசிகளையும் நினைத்துப்பார்த்து ஜெபிப்போம். அவர்களின் குடும்பங்களையும், சிறைவாசிகளைக் கைதிகளாக சிறைகளில் தொலைத்துவிட்டுத் தவிக்கின்ற அனைத்து உள்ளங்களையும் சிறைப்பணியில் தங்களை முழுமையாகக் கரைத்துக்கொண்டு, பணியாற்றுகின்ற சிறைத்துறை அதிகாரிகளையும், சிறைப்பணி செய்கின்ற தன்னார்வலர்களையும் நினைத்து ஜெபிப்போம். சிறையில் இருக்கும் அன்பு சகோதர, சகோதரிகளே நாங்கள்  உங்களை நேசிக்கிறோம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நாங்கள்உங்களுக்காக ஜெபிக்கிறோம். மேலும், உங்கள் சீர்திருத்தத்திற்கும், மறு ஒருங்கிணைப்பிற்கும் உங்களின் வாழ்வு மறுவாழ்வு அடையவும், உங்களின் மீட்பிற்காக சாத்தியமான அனைத்தையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். அன்புள்ள சிறைப்பணி குடும்ப உறுப்பினர்களே, நீங்கள் சிறைக்கு சென்று, சிறையில் இருப்பவர்களை சந்திப்பது இயேசுவை சந்திப்பதற்கு சமம். ‘ஏனெனில், நான் சிறையில் இருந்தேன் நீங்கள் என்னை பார்க்க வந்தீர்கள்” (மத் 25:36) என்று, நம் ஆண்டவர் இயேசு கூறுகிறார்.

சிறைப்பணியின் பாதுகாவலரான புனித மேக்ஸ்மிலியன் கோல்பே, இந்த ஊழியம் சிறக்கவும், நல்ல பலன் தரவும் இறைவனிடம் பரிந்து பேசுவாராக. அன்னை மரியா உங்களை எப்போதும் பாதுகாப்பாராக.

Comment