No icon

புனித யோசேப்பு

தொழிலாளர்களின் பாதுகாவலர்!

மனிதனை மாண்புமிக்க ஒருவனாக/ஒருத்தியாகக் காட்டுவது உழைப்புதான். “உழைப்பு ஒன்றே மனித முன்னேற்றத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றதுஎன்று எழுத்தாளர் ஜேம்ஸ் ஆலன் கூறுகிறார்.

உழைப்பு இல்லாமல் வெற்றி கிடைக்காது. மனிதன் இயல்பாக நாடுவதும், தேடுவதும் வெற்றியையே. அதற்கு உழைப்பு மிகவும் அவசியம். ‘உழைக்காதவன் உண்ணலாகாது, ‘உழைப்பின்றி ஊதியமில்லைஎன்று உழைக்க மனம் இல்லாத மனிதர்களைச் சாடும் பழமொழிகளும் தமிழில் உள்ளன. உழைப்பு மனித வாழ்வில் இன்றியமையாத, மனிதனிடமிருந்து பிரிக்க முடியாத ஒன்று.

அகில உலகமும் மே 1-ஆம் தேதியை உழைப்பாளர் தினமாகச் சிறப்பித்து உழைப்பாளிகளை மேன்மைப்படுத்துகின்றது. நம் திரு அவையும் உழைப்பாளர்களை நினைவுகூரும் வகையில் அவர்களுக்காகச் செபிக்கும் நோக்கில் புனித யோசேப்பிடம் தொழிலாளர்களை அர்ப்பணித்து வேண்டுகிறது.

இந்தச் சிறப்பு விழா, உழைப்பைப் பற்றிய கிறிஸ்தவப் புரிதலை உலகம் முழுவதும் உள்ள உழைப்பாளர்களுக்குப் புனித யோசேப்பு மூலம் உறுதிபட எடுத்துரைக்கின்றது.

உலக வரலாற்றில் பலமுறை தொழிலாளர்கள் மேலாதிக்கச் சக்திகளால் நசுக்கப்பட்டு இருக்கின்றனர். திரு அவையின் திருத்தந்தையர்கள் சிலர் அதற்கு எதிராக உழைக்கும் மக்களைப் போற்றும் வகையில் ஒருசில சுற்று மடல்களையும்  தந்துள்ளார்கள். சிறப்பாக, திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர் 1955-ஆம் ஆண்டு மே முதல் தினத்தன்று புனித யோசேப்பு, தொழிலாளர் என்ற விழாவைக் கொண்டாட அழைப்பு விடுத்தார். அந்த ஆண்டு முதல் இந்தத் தினத்தன்று அனைத்துத் தொழிலாளர்களையும் திரு அவை புனித யோசேப்பிடம் ஒப்படைத்து வேண்டுகின்றது.

தொழில் என்பது ஒருவருக்கு அடையாளத்தைத் தருகிறது. மத்தேயு 13:55-இல் “இவர் தச்சரின் மகன் அல்லவா?” என்று இயேசு யோசேப்பின் மகனாக அடையாளம் காணப்படுகிறார். சமீப காலங்களில் புனித யோசேப்பை நோக்கிய இறைவேண்டல் என்பது மிகவும் அதிகரித்து இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கின்றது. ஆனால், புனித யோசேப்பு மீதான நமது புரிதல் இன்னும் தெளிவடைய வேண்டும்.

புனித யோசேப்பு தொழிலாளர்களின் பாதுகாவலர் என்ற விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் புனித யோசேப்பைப் பற்றி மேலும் அறிய முயல்வோம்.

புதிய ஏற்பாட்டு நம்பிக்கை நாயகன்

திருவிவிலியப் பின்புலத்தில் ஆபிரகாம் ‘நம்பிக்கையின் தந்தைஎன்று அழைக்கப்படுகிறார். ஏனென்றால், தன் ஒரே மகனைக் கடவுளுக்காகக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கவும் அவர் முன் வந்தார். அதுபோல புனித யோசேப்பைப் புதிய ஏற்பாட்டின் நம்பிக்கை நாயகனாகப் பார்க்க முடிகிறது.

தத்துவவியலில் ஒரு பிரிவான இருத்தலியலின் (existentialism) தந்தை என அழைக்கப்படுகிற சோரன் கீர்க்கார்டு (Soren Kierkegaard) மனித வாழ்வினை மூன்று நிலைகளாகப் பிரிக்கிறார்:

1. அழகியல் நிலை (aesthetic stage), 2. நெறிமுறை நிலை (ethical stage), 3. நம்பிக்கை நிலை (religious stage). பெரும்பாலான மனிதர்கள் இந்த அழகியல் என்ற உணர்வு சார்ந்த நிலையிலேயே தேங்கிவிட்டு உலகப் போக்கான வாழ்க்கையை வாழ்ந்து விட்டு மறைந்து விடுகின்றனர். வெகுசிலர் இரண்டாம் நிலையைத் தேர்ந்து இந்தச் சமுதாயத்திற்கு உகந்த நல்ல மனிதராக, நெறிமுறைகளைப் பின்பற்றுபவராக வாழ்ந்து, வாழ்வின் பொறுப்பு, கடமைகளை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஆனால், மூன்றாம் நிலையாகிய நம்பிக்கை நிலை, ஒரு சவாலான வாழ்க்கை முறை. இறை விருப்பத்திற்காக நீதி, நேர்மையைக் கடந்து வாழ்வது. வெகுசிலரே இவ்வாழ்க்கையைத் தெரிந்து கொள்கின்றனர். அவர்களே புனித நிலைக்கு உயர்த்தப்படுகின்றனர். புனித யோசேப்பும் இந்தச் சவாலான ஒரு வாழ்க்கை நிலையை ஏற்றுக்கொண்டு, நம்பிக்கையை மணி மகுடமாகக் கொண்ட வாழ்க்கையை வாழ்ந்திருப்பது தெரிகிறது.

மேலே கூறப்பட்டிருப்பது போல புனித யோசேப்பு அன்னை மரியாவை ஏற்றுக்கொள்ளத் தயங்கினாலும், மறைவாக அவரை விலக்கிவிடத் திட்டமிட்டிருந்தாலும், கடவுளின் விருப்பத்தை அறிந்து, கல்லால் எறியப்பட்டுக் கொல்லப்பட வேண்டிய குற்றத்திலிருந்து அன்னை மரியாவைக் காப்பாற்ற இறை விருப்பத்திற்காக அவரை மனைவியாக ஏற்றுக்கொள்கின்றார். எனவே, புனித யோசேப்பின் நம்பிக்கை நிலை என்பது ஆபிரகாமின் நம்பிக்கையைப் போன்றது. புனித யோசேப்பு புதிய ஏற்பாட்டின் நம்பிக்கை நாயகனாக விளங்குகின்றார்.

கீழ்ப்படிதல்

பாவங்களுக்கு எல்லாம் அடிப்படையாய் அமைவது கீழ்ப்படியாமை. தொடக்க நூலில் இருந்தே இதை நாம் உணர்கிறோம். கீழ்ப்படிதல் என்பது ஒரு தலைசிறந்த பண்பு. கீழ்ப்படிதல் என்பது மனித மாண்பு. வானதூதர்களில் ஒரு பிரிவினர் கீழ்ப்படியாமையால்தான் கடவுளால் தண்டிக்கப்பட்டனர். எனவே, மனித இனமும், வானவர் அணிகளும் வீழ்ந்ததற்குக் கீழ்ப்படியாமைதான் காரணமாக அமைந்திருக்கின்றது.

கீழ்ப்படிதல் நம்மை மேன்மை அடையச் செய்கின்றது. மேலும், மனித வாழ்விற்கான மதிப்பை அளிக்கின்றது. கீழ்ப்படிதல் என்பது ஒரு தைரியமான செயல். ஒருமுறை இலத்தீன் மொழி அறியாத ஒரு குருவானவர் அவருடைய சபைத் தலைவரால் இலத்தீனில் மறையுரையாற்ற வேண்டும் என்று அழைக்கப்படுகிறார். இந்தக் குருவிற்கு இலத்தீன் மொழி தெரியாது என்று அந்தச் சபைத் தலைவருக்குத் தெரியும்,  இருப்பினும் அழைக்கப்பட்டார். அவர் சென்று மறையுரை முழுவதும் ‘ஆண்டவரே இரக்க மாயிரும், கிறிஸ்துவே இரக்கமாயிரும் (Kyrie eleison, Christe eleison) என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். சபைத் தலைவர் அந்தக் குரு வினுடைய கீழ்ப்படிதலைக் கண்டு வியந்துவிட்டார். எனவே, கீழ்ப்படிதல் என்பது மிக முக்கியமான அடிப்படையான வாழ்க்கைச் செயல்பாடு.

புனித யோசேப்பு உயர்வான கீழ்ப்படிதலைக் கொண்டிருந்தார். நற்செய்திகளில் புனித யோசேப்பு பேசாமல் இருந்தாலும், அவருடைய இந்தக் கீழ்ப்படிதல் அவரைப் பற்றி அதிகம் எடுத்துக் காட்டுகிறது. ஒவ்வொரு முறை சோதனைகளைச் சந்திக்க நேர்ந்த போதும், கடவுளின் தூதர் கனவில் வந்து புனித யோசேப்புவுக்குக் கூறும்பொழுதெல்லாம் அவர் அதை வெறும் கனவாக எடுத்துக்கொள்ளவில்லை; மாறாக, கடவுளின் வழிகாட்டுதலாக எடுத்துக்கொண்டு, அச்சொல்லுக்கு அப்படியே கீழ்ப்படிந்தார்.

பெத்லகேமில் இருந்து எகிப்திற்குச் செல்லக் கட்டளையிட்டபோது கூட உடனடியாகக் கீழ்ப்படிந்தார் என்பதைப் பார்க்கின்றோம். இந்தக் கீழ்ப்படிதல் மூலமாகத் திருக்குடும்பத்தைப் பாதுகாத்தவர் புனித யோசேப்பு. எனவே, கீழ்ப்படிதல் மூலம் தன்னை இறைவனுக்கு உகந்தவர் என்று எண்பித்து, தனது புனித நிலையை உயர்த்தி இருக்கின்றார் புனித யோசேப்பு.

இந்தப் புனித நாளில் புனித யோசேப்பு நமக்குக் கற்றுத் தருகின்ற வாழ்க்கைப் பாடங்களை நாமும் வாழ்வாக்கி, எச்சூழலிலும் கடின உழைப்பால் உயர்ந்து, கிறிஸ்துவின் வழி நடந்திட புதிய வாழ்வு வாழ்வோம்.

Comment