No icon

அருட்தந்தை L. ராக்கர்

மேகாலயா மாநிலத்தில் வன்முறை

கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக மேலும் ஒரு நிகழ்வானது பல்சமய பண்பாட்டை பின்பற்றும் இந்திய நாட்டில் நடந்தேறியிருக்கிறது. மேகாலயா மாநிலத்தில் தாராம் என்கிற ஒரு குக்கிராமத்தில் அமைந்திருக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டவர் இயேசு, அன்னை மரியாள், அவரது கணவர் யோசேப்பு இவர்களின் திருவுருவ சுரூபங்கள் மர்ம நபர்களால். உடைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வன்முறை நிகழ்வானது ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி நடந்துள்ளது. இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சைலேந்திர பாமானியா “ஆலயத்தில் இருக்கும் சுரூபங்கள் உடைக்கப்பட்டிருப்பது உண்மை. இது குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் இதுவரை யாரையும் இது தொடர்பாக கைது செய்யவில்லை” என்று உள்ளூர் செய்தித்தாள் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

துராவின் ஆயர் ஆண்ட்ரூ ஆர் மரக் UCA செய்தி நிறுவனத்திடம் “இங்கு வாழ்பவர்கள் மிகவும் பழமை வாய்ந்த கிறிஸ்தவர்கள். அருட்தந்தை L. ராக்கர் எனும் இத்தாலிய மறைப்பணியாளர் முதன் முதலில் மேகாலயாவில் இவ்விடத்தில் தான் கால் பதித்தார். மேலும் மேகாலயா பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒரு முக்கிய காலனியாக இருந்தது. எனவேதான் மேகாலயாவில் கிறிஸ்துவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். இது போன்ற ஒரு வன்முறை நிகழ்வு இங்கு நிகழ்ந்திருப்பது உண்மையாகவே ஆச்சரியமளிகின்றது. இந்த சுரூபங்களை மட்டுமல்ல ஆண்டவர் இயேசுவின் பாடுபட்ட சுரூபத்தையும் மர்ம நபர்கள் உடைத்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் ஏதோ பொருட்களை திருட வந்தது போல தெரியவில்லை. மாறாக வேண்டுமென்றே கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தி மதகலவரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த வன்முறையை நிகழ்த்தியிருக்கிறார்கள். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கண்டிப்பாக குற்றவாளிகளை கைது செய்வார்கள்” என்று ஆகஸ்ட் 30 ஆம் தேதி கூறினார்.

Comment