No icon

சமூகக் குரல்கள்

மாணவச் செல்வங்களாகிய நீங்கள் நினைப்பதை அடைய வேண்டுமென்றால், முதலில் நாம் அதனை நினைக்க வேண்டும். எண்ணம் இல்லை என்றால், அந்த எண்ணத்தை அடைய முடியாது. நீங்கள் நினைப்பதைத்தான் படிக்க முடியும், படித்தால்தான் சாதிக்க முடியும். எண்ணியதை மட்டுமே நீங்கள் அடைய முடியும். எண்ணாததை எந்தவொரு காலத்திலும் அடைய முடியாது. வெற்றியாளருக்கும், வெற்றி பெறாதவர்களுக்கும் உள்ள வேறுபாடு எண்ணம்தான். நீங்கள் சாதிக்க வேண்டும் என்று திடமாக நம்பினால், ஆசைப்பட்டால், அதற்காக உழைத்தால் இந்த உலகம் இணைந்து அவற்றை உங்களுக்குத் தந்துவிடும். அனைவருக்கும் 24 மணி நேரம்தான் இருக்கிறது. அந்த நேரத்தை நாம் எவ்வாறு செலவிடுகிறோம் என்பதைப் பொறுத்தே அனைத்தும் அமையும். புத்தகங்களைத் தொடர்ந்து படிக்க வேண்டும். மனம், எண்ணம், குணம், சொல், செயல், பழக்கம் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால்தான் நாம் நினைத்தது நடக்கும். நம்முடைய பழக்கவழக்கங்கள் சரி இல்லையெனில், நமது எண்ணங்கள் சரியில்லாமல் போய்விடும். நம் மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியும்.”

- முனைவர் . அமல்ராஜ், தாம்பரம், மாநகரக் காவல் ஆணையர்

அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும்; அதுவும் ஒரே தரத்தில் இருக்க வேண்டும். ஆனால், தகவல் தொழில்நுட்ப உலகில் இந்த இடைவெளி அதிகரித்த வண்ணம் உள்ளது. நான் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைத்தான் மாணவர்களுக்கு மீண்டும் கூறுகிறேன். கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நான் எனக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். அதனால்தான் என்னால் உயர முடிந்தது. மாணவர்கள் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினால், உங்களுக்கான உயரம் எங்கேயோ காத்துக் கொண்டிருக்கும். நான் உயர்வதற்குக் காரணம், எனக்குக் கிடைத்த கல்வியே! அந்தக் கல்வி மக்களின் வரிப் பணத்தில்தான் எனக்குக் கிடைத்தது. ஆகவேதான், இம்மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.”

- திரு. மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ மேனாள் விஞ்ஞானி

 “மதிப்பெண்களைக் காட்டிலும் மாணவனுக்கு ஒழுக்கம் மிக முக்கியம். இளைஞர்களின் எண்ணிக்கையில் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கும் என்பதால், குழந்தைகளை அறிவாற்றல் மிக்கவர்களாக வளர்க்க நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு மனிதச் சக்திக்கு இணையாகப் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அதேநேரம், மாணவர்கள் தவறான பாதையில் செல்லும் வாய்ப்பும் இதன்மூலம் அதிகமாகலாம். ஆகவே, தொழில் நுட்பங்களை மாணவர்கள் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.”

- திரு. பி.என். பிரகாஷ், உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி

Comment