No icon

நோய்த் தொற்றும்

நோய்த் தொற்றும்
தொடக்க காலத் திருஅவையின்
நம்பிக்கை வாழ்வும்


ஆராயும் முன்...
பிளேக், தொற்று நோய், கொள்ளை நோய், நோய், பஞ்சம், போர் மற்றும் இயற்கை பேரழிவுகள் இவையாவும் விவிலியத்தில் நாம் வாசிக்கின்ற ஒன்று. இது கிறிஸ்தவ வரலாற்றிலும் திருஅவையின் வரலாற்றிலும் மறைவாயிருக்கும் ஒன்று கிடையாது. திரு அவையும் பல்வேறு காலக்கட்டங்களில் இக்கொடிய, கோரமான சூழ்நிலையைச் சந்தித்து வந்திருக்கிறது. இன்றையச் சூழலை நாம் வரலாற்று கண்கொண்டு பார்ப்பது, இதைக் குறைத்து மதிப்பிடுவதற்கல்ல; மாறாக, நம் நம்பிக்கை வாழ்வை உறுதிப்படுத்த, உற்சாகப்படுத்தவே ஆகும். இன்றும் உலகம் முழுவதும் எத்தனையோ கிறிஸ்தவர்கள் மறைசாட்சியத்தை (வேதகலாபனை) தழுவிக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்து இன்றைய உலகத் துன்பங்களிலிருந்து நமக்கு விடுதலை அளிப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை: “என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” (யோவா 16:33) என்று நாம் சந்திக்கவேண்டிய எதிரியை அடையாளம் காட்டி அவரில் நம்பிக்கையும் அமைதியும் கொண்டு வெற்றிகொள்ள அழைப்பு விடுக்கிறார்.  


கி.பி. 410-இல் கடவுளின் நகரமான உரோமை (Eternal City) வெளிநாட்டு படையெடுப்புகள் ஆக்கிரமித்துத் தீக்கிரையாக்கியபோது, புனித அகுஸ்தின் வட ஆப்
பிரிக்காவில் அவருடைய மேய்ப்புப் பணியகத்திலிருந்து கடவுளின் நகரம் (City of God) என்ற நூலை எழுதி, இவ்வுலகஎதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் சிதைத்து சின்னாபின்ன
மாக்கப்பட்டாலும், எதிர்காலத்தைப் பற்றிய இறையாட்சியின் நிலையான வாக்குறுதிகள் நிலையானது என்கிறார். இது மட்டுமல்ல, நெருக்கடிகளுக்கு மத்தியில், துன்பங்களிடையே, கொள்ளை நோய், இயற்கை பேரிடர்களுக்கு இடையே தொடக்ககால, மத்தியக்கால கிறிஸ்தவர்கள் நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்னவெனில், நெகிழவைக்கும் நம்பிக்கையும் நோயாளிகள் மற்றும் இறக்கும் தருவாயில் இருப்போர்மீது காட்டிய இரக்கமுமே என்பது நம் திரு அவையின் கிறிஸ்தவ வரலாறு. இதை நோக்குவதே இவ்வாய்வின் நோக்கம். எனவே, இப்போது வரலாற்றில் நாம் பார்க்கப்போகும் தொற்றுநோய்களும் அதனைத் திருஅவை எவ்வாறுகிறிஸ்துவின் வழியில் கையாண்டது; ‘நோயில், ஆபத்தில் இருப்போருக்கு கிறிஸ்துவைப் போன்று உதவ, எவ்வாறு நம்மை உந்தித்தள்ளி, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு, இரக்கம் ஆகியவற்றை நோக்கி கிளர்ந்தெழ வைக்கிறது என்பதை சற்று பின்னோக்கி பார்ப்போம்.


1. ஏதேன்ஸ் நோய்த்தொற்று
வரலாறு, நோய்த்தொற்றின் பர வலைப் பார்க்க பெரிதும் உதவுகிறது.  இறைபராமரிப்பையும் மனித சமூகம் சந்தித்த துயரங்களையும் நாம் 2500 ஆண்டுகளுக்குமுன்பே, நோய்த்தொற்றின் முதல் சாட்சியாகப் பார்க்கிறோம். இரண்டரைமில்லேனியத்துக்கு முன்பு ஏற்பட்ட இந்தஏதென்ஸ் நோய்த்தொற்று ஒரு லட்சம் உயிர்களைக் கொன்றது. இதன் விளைவு மக்கள் பயத்திலும் விரக்தியிலும் இருந் தார்கள். அதனால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தனிமையிலும், தனியாக வும், கவனிக்கப்படாமலும் இருந்ததால் இறந்து போனார்கள்.  இந்தப் பேரழிவு மக்கள் மத்தியில் அறநெறி ஒழுக்கத்தில் தளர்வை ஏற்படுத்தி, உடனடி இறப்பிற்கு பயந்து, உடனடி இன்பத்திலும் லாபத்திலும் கவனம் செலுத்தத் தூண்டியது.


2. மார்க்குஸ் அவுரேலியுஸ் (Marcus Aurelius) ஆட்சி
165-இல் மார்க்குஸ் அவுரே லியு ஸின் ஆட்சியில் ஒரு பேரழிவுத் தொற்றுநோய் உரோமானியப் பேரரசு ழுமைக்கும் பரவியது.  மேற்கத்திய நாடுகளில் முதன் முறையாகத் தோன்றிய பெரியம்மையோ என்றுசில மருத்துவ வரலாற்று ஆய்வாளர்கள் சந்தேகிக்கவும் தொடங்கி னார்கள். எது எப்படியோ, அதுவரை பார்த்திராத அன்றைய தலைமுறைக்கு, அது ஒரு தொற்றும் தன்மைக்கொண்ட, ஆபத்தான நோய்த் தொற்றாக பார்க்கப்பட்டது. 15 ஆண்டு கால நோய்ப் பரவலில் மூன்றில் கால்பகுதி மக்கள்தொகை இறப்பைச் சந்தித்தது. நோய்த் தொற்றின் உச்சம் எந்த அளவுக்கு பல நகரங்களைக் காவு வாங்கியது என்றால், அரசன் மார்க்குஸ் அவுரேலியுஸே நோய்த் தொற்றினால் இறந்துபோனார்.  இறந்தவர்களை இழுத்துச் செல்லும் வண்டிகளைப் பார்த்து அதிர்ந்து போனதாகக் குறிப்பிடுகிறார் அரசர். கிறிஸ்தவர்கள் உரோமானியர்களின் கடவுளை வணங்காததே இதற்கு காரணம் என்று அன்றைய கிறிஸ்தவர்களைக் குற்றமும் சாட்டினார். ஆனால், பிற இனத்தவரிடையே இந்த நோய்த் தொற்று, கிறிஸ்தவர்களைப் பற்றிய பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கிறிஸ்தவர்கள் தங்கள் உயிர்களையே பொருட்படுத்தாது நோயாளிகளைக் கவனித்துக் கொண்டார்கள். இதற்குக் காரணம், நிலையான வாழ்வு நிச்சயம் கிடைக்கும் என்ற அவர்களது உறுதியான நம்பிக்கையே. இது கிறிஸ்தவத்தை பலரும் தழுவப் பெரிதும் உதவியது.


3. டயோனிசியுஸ் (Dionysius, Bishop of Alexandria), அலெக்சாந்திரியா நகர் ஆயர்
சிப்பிரியான் நோய்த் தொற்று(249-262) அன்றைய கால கட்டத் தில் ஒரு பெருந்தொற்றாக மாறி, உரோமில் ஒரே நாளில் 5,000 உயிரைப் பறிக்கும் கொள்ளை நோயாக மாறிப்போனது. உலக வரலாற்றிலேயே மிக நீண்ட பேரரசான உரோமானியப் பேரரசையே இந்த நோய்த்தொற்று பலவீனப் படுத்தியது. ஆனால் கிறிஸ்துவின் வழியையும், ஞானத்தையும் பின்பற்றிய அன்றைய கிறிஸ்தவர்கள் செய்த மனித நேயச் செயல்கள் எல்லோரையும் வியக்கவைத்தது மட்டுமல்லாமல், அனைவரும் கிறிஸ்துவைப் பின்பற்ற எடுத்துக்காட்டாய் அமைந்தது. இதைத்தான் அலெக்சாந்திரியா நகர் ஆயர், டயோனிசியுஸ் இவ்வாறு விவரிக்கிறார்: “பெருவாரியான நம்முடைய கிறிஸ்தவச் சகோதரர்கள் தங்கள் உயிரைத் துச்சமென மதித்து, துன்பத்தில் இருக்கும் சகோதர சகோதரிகள்மீது கட்டுக்கடங்காத அன்பையும் அக்கறையையும் காட்டினார்கள். நோயிலும் ஆபத்திலும் இருக்கும் நோயாளி களைப் பேணிப் பாதுகாத்து, அவர்களுடைய எல்லா தேவைகளையும் பூர்த்திசெய்து, கிறிஸ்துவுக்கு செய்வதுபோல் அவர்களுக்கு பணிவிடை செய்து, அவர்கள் வாழ்வு அமைதியாக, சாந்தமாக அமைய உதவினார்கள். நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் நோய்களை தம்மேல் சுமந்து கொண்டு, நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மகிழ்ச்சியோடு அவர்கள் வலிகளை தங்கள் வலியாக உணர்ந்தார்கள். அவர்களைக் கவனித்துக் கொண்டதன்மூலம் அவர்கள் இறப்பை தங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, அவர்களுக்குப்பதில், இவர்கள் பலியானார்கள். இதுதான் பலர் வாழ்வுபெற தன்னையே பலியாக்கிய கிறிஸ்துவின் பலிக்கு ஒப்பானது.” ஆனால், திருஅவைக்கு வெளியே இவ்வாறு இல்லை என்று ஆயர் டயனோசியஸ் தொடர்கிறார்: “பிற இனத்தவரிடையே எல்லாம் வேறுவிதமாக இருந்தது. நோயாளிகளைத் தங்களிடமிருந்து அப்புறப்படுத்தினார்கள். நோயாளிகளைச் சாலைகளில்தூக்கிப் போட்டார்கள். நெருங்கிய நண்பர்களிட மிருந்து தப்பியோடினார்கள். இறப்பில் பங்கெடுக்க வில்லை. இறந்தவர்களை அடக்கம் செய்யவில்லை. தெருவில் இறந்தவர்களும் இறப்பவர்களும் குவியல்களில் கிடந்தனர். அதனால், சடலங்களைத் தொடு வதைத் தீட்டாகப் பார்த்தார்கள். நோய் பரவும் என்று பயந்தார்கள். இவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தும் அவர்களாலும் நோய்த்தொற்றிலிருந்து தப்பமுடியவில்லை (Eusebius, Eccl. Hist. 7. 22. 7-10). ஆனால் இரண்டாம் நூற்றாண்டின் திரு அவை எதிர்த்துப் போராடி, எல்லோருடைய பாராட்டைப் பெற்று பலர் கிறிஸ்தவ மதத்தை தழுவக் காரணமாக அமைந்து நம்பிக்கை ஊட்டியது.


4. சிப்பிரியான், கார்தேஜ் நகர் ஆயர் (250-256)
251-ல் கிறிஸ்தவர் மக்கள் தொகை 12 லட்சம்.  இது பேரரசில் 1.9 சதவிகிதமாகும். மொத்த மக்கள் தொகையில் கணிசமாகவே இருந்தாலும் அடுத்து வந்த இன்னொரு நோய்த் தொற்று, கிறிஸ்தவர் எண்ணிக்கையை இன்னும் முன்னோக்கி அழைத்துச் சென்றது. இதன் தாக்கம் இதற்கு முந்தைய நோய்த் தொற்றின் பலி எண்ணிக்கையைவிட அதிகமானது.  இத்தாலி நகரங்கள் துண்டிக்கப்பட்டன.  இராணுவம் மற்றும் அரசின் கட்டமைப்புகளும் பலவீனமாயின. மீண்டும் இந்தச் சோதனையிலும் கிறிஸ்தவர்கள் பிரகாசித்தார்கள். ஆயர் சிப்பிரியான் இவ்வாறு கூறுகிறார்: “கொடூரமாகவும் கோரமாகவும் உள்ள இந்த நோய்த்தொற்று மற்றும் கொள்ளை நோய் இந்த நேரத்தில் இவ்வாறு தேவையாகவும் பொருத்தமானதாகவும் இருக்கிறது; ஒவ்வொருவரின் நீதியை தேடுகிறது; மனித சமூகத்தின் மனநிலையைப் பரிசோதிக்கிறது; நோயற்றவர்கள் நோயுற்றோரில் அக்கறைக் கொள்ளத் தூண்டுகிறது; சொந்த, பந்தங்களை நேசிக்க வேண்டிய கட்டாயத்தை எடுத்துச் சொல்கிறது. மருத்துவர்கள் துன்பப்படும் நோயாளிகளை விட்டுவிலகிப் போகவிடாமல் தடுக்கிறது. இந்த நோய்த் தொற்றுகள் ஊனுடலுக் குரியவற்றை நாடாமல், ஆவிக்குரிய வழியைக் காணவைக்கிறது; இவ்வாறு இந்த மூன்றாம் நூற்றாண்டின் நோய்த்தொற்றுத் திருஅவையில் ஆவியால் நிரப்பப்பட்ட பிள்ளைகளை, அவர் களுடைய போதகராகிய கிறிஸ்துவின் வழியில் நடக்க வைக்கிறது. எனவே மூன்றாம் நூற்றாண்டின் கிறிஸ்தவர்களுக்கு அன்றைய நோய்த் தொற்று ஒரு பெரிய விஷயமாக இருந்தது. இதுவே இந்நூற்றாண் டில் பிற இனத்தவர்கள் ஏராளமாக கிறிஸ்தவ மதத் திற்கு மனம் மாறுவதற்கு பேருதவியாக இருந்தது.


5. ஜஸ்டீனியன் நோய்த் தொற்று
6 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட இந்த நோய்த் தொற்று மிகவும் கொடூரமானது. பைசாந்தியப் பேரரசர் ஜஸ்டீனியன் ஆட்சியின்போது, 5 கோடி உயிர்களை காவு வாங்கியது. இது அரசரின் நேர்மையற்ற ஆட்சிக்கு கடவுள் கொடுத்தத் தண்டனை என மக்கள் நினைத்தார்கள். இது கொரோனாவைப் போல் சீனாவில் தோன்றி, மேற்கு மார்க்கமாக சென்று, ஈரானில் ழிவைஉண்டாக்கி,கான்ஸ்டாண்டிநோபிளைஅடைந்தது.  இதன் விளைவு மக்கள் நல்ல அறநெறி வாழ்விற்குத் திரும்பினார்கள். கடவுள் பக்கம் திரும்பினார்கள். தங்கள் அரக்க நிலையிலிருந்து மாறி, தங்கள் கடமையிலும்நல்ல இதயம் கொண்டவர்களாகவும் மாறினார்கள். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர் கள் தாமாக முன்வந்து தங்களையே தனிமைப் படுத்திக் கொண்டார்கள் (ஏடிடரவேயசல ணுரயசயவேiநே).  இந்த நோய்த் தொற்று பைசாந்தியப் பேரரசைப் பலவீனப் படுத்தினாலும், கிறிஸ்தவ நம்பிக்கை பலமானது.


6. கறுப்புச் சாவு (Black Death : 1346-1360) கறுப்புச் சாவு என்னும் கொள்ளை நோய் ஐரோப்பா கண்டத்தையே பேரழிவுக்கு உள்ளாக்கியது.  உலகம் முழுவதும் 13 கோடி மக்களை பலிவாங்கி யது. அதில் ஐரோப்பியர்கள் மட்டுமே 5 கோடி ‘மறுமலர்ச்சி’யில் (The Reformation) நாகரிகத்தின் கதை (The Story of Civilization) 6 ஆம் தொகுதியில் Will Durant இவ்வாறு கூறுகிறார். “மத்தியக் கால வரலாற்றில்கொள்ளைநோய் ஒரு சாதாரண நிகழ்வாக மாறியேபோய்விட்டது; அது 14 ஆம் நூற்றாண்டில் 32 ஆண்டுகளும், 15 ஆம் நூற்றாண்டில் 41 ஆண்டுகளும், 16 ஆம் நூற்றாண்டில் 30 ஆண்டுகளும் ஐரோப்பாவை வாட்டி வதைத்து துன்புறுத்தியது.  கறுப்புச் சாவு என்பது வரலாற்றில் வந்த மோசமான கொள்ளை நோய்களிலேயே மிகவும் கொடூரமான உடல் பேரழிவு ஆகும்.


7. மார்ட்டின் லூத்தர், விட்டென்பெர்க்
1527 இல் விட்டென்பெர்க்கை தாக்கிய கொள்ளைநோயும் மிகக் கொடியதே. எல்லோரும் உயிருக்கு பயந்து அந்நகரைவிட்டு தப்பி ஓடினார்கள். ஆனால் மார்ட்டின் லூத்தரும் அவரது மனைவி கத்தரீனாவும்மத்தேயு 25:41-46 காணும் இயேசுவின்வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு,‘நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை’ என்ற அவரது அழைப்புக்கு செவிமடுத்து, நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளஅவர்கள் அங்கேயே தங்கிவிட்டார்கள். அதன் பரிசுஅவருடைய மகள் எலிசபெத்தையே பறி கொடுத்தார் கள். மேலும் அவர், “நாங்கள் திருத்தொண்டரோடு தனியாக இருக்கிறோம். ஆனால் கிறிஸ்து எங்களோடு இருக்கிறார். எனவே நாங்கள் தனியாக இல்லாவிட்டாலும், பழைய பாம்பு, கொலையாளி, பாவத்தின் ஆசிரியர் சாத்தான் கிறிஸ்துவின் குதிகாலை தீண்ட முற்பட்டாலும் கிறிஸ்துவே வெற்றிக் கொள்வார். எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். சென்று வாருங்கள்” என்ற நம்பிக்கை வார்த்தைகளால் உற்சாகப்படுத்துகிறார் (கடிதம் ஆகஸ்ட் 19, 1527).


இவ்வாறு அன்றைய காலக்கட்டங்களில் இறப்பின் முகத்தை எதிர்கொள்ளும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை நெகிழவைத்தது. மேலும் அவர்கள் துன்பங்களில் ஒன்றாக, ஒரே குழுமமாக சேர்ந்து, ஒருவரோடு ஒருவர் இணைந்து, சார்ந்து நோய்த் தொற்றை எதிர்கொண்டார்கள். அவர்களில் கிறிஸ்து வின் பிரசன்னம் வலுவாக இருந்தது. நோயாளிகள் நோய்த் தொற்றை வெற்றிக் கொண்டார்கள். திரு அவையின் வெற்றியில் கிறிஸ்து உடனிருந்தார்.  
நோய்த் தொற்றிலிருந்து குணம் பெற்றார்கள். 


மார்ட்டின் லூத்தரும் கத்தரீனாவும் உயிர் பிழைத்துக் கொண்டார்கள். இயேசுவின் வழியில் சோதனையிலிருந்து மீண்டார்கள்.
எனவே பெருவாரியாகப் பரவும் தொற்று நோய்க்கு இவர் இவ்வாறு பதிலுரைக்கிறார்: “நம்இல்லங்களிலேயே இறப்போம். கிறிஸ்தவ மருத்துவர் கள் அவர்கள் மருத்துவமனைகளை கைவிட வேண்டாம். கிறிஸ்தவ அரசு அதிகாரிகள் அவர்கள் மாவட்டங்களை விட்டு தப்பிச் செல்லவேண்டாம்.  கிறிஸ்தவ போதகர்கள் அவர்கள் மந்தைகளை விட்டுவிலக வேண்டாம். நோய்த் தொற்று நம்முடைய கடமைகளைக் கலைக்கமுடியாது; அவற்றைச் சிலுவை யாக மாற்றுகிறது. எனவே கிறிஸ்துவைப் போல இதில் இறக்கத் தயாராவோம். ஆக, நாம் இதுவரை அணிந்து பழக்கமில்லாத முகக்கவசம் அணிந்து வாழ்வதைவிட கிறிஸ்தவர்களாகிய நாம் நம் அயலாருக்கு உதவி செய்து இறப்பது என்பது மேலானது.


இதுதான் உண்மையான நம்பிக்கை; உண்மையான கிறிஸ்தவ வாழ்வு; உண்மையான கிறிஸ்துவின் போதனை.  இப்போதனைகளில் நாம் நம்பிக்கை கொள்ளும்போது, நாம் கடந்து வந்த வரலாறு நம்மைத் தேற்றும், ஆற்றுப்படுத்தும், கொரோனாவை வீழ்த்தும், வெற்றிக்கொள்ளும். இதைக் கூர்ந்து கவனிப்பதே நம் வாழ்வு; எதார்த்தம்.  எனவே உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்; இதுவும் கடந்துபோகும்...                             (தொடரும்)

Comment