No icon

விவிலிய வரலாற்றில்...

கொரோனாவும் திருவழிபாடும்

விவிலிய வரலாற்றில்...
நோய்த் தொற்று என்பது மனித சமுதாயத்துக்கு ஒன்றும் புதிதல்ல.  பழைய ஏற்பாட்டில் நாம் வாசிக்கும் பத்து கொள்ளை நோய்கள் பற்றி நன்கு அறிவோம்.  ஒடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டினின்று விடுதலை பெற்றது மீட்பு வரலாற்றில் ஒரு முக்கியக் கட்டமாகும். கடவுளே முன்வந்து தம் மக்களின் அடிமைத்தளையை அறுத்து, விடுதலை நோக்கி அவர்களை அழைத்துச் சென்ற ‘விடுதலைப் பயணமே’ கொள்ளை நோய்க்குப் பின் இஸ்ரயேலர் கண்ட மாபெரும் அற்புதம்.


உலக வரலாற்றில் தொற்றுநோய்...
உலக வரலாற்றையும் நோய்த்தொற்று விட்டு வைக்கவில்லை. கி.பி. 541 இல் பைசாந்திய பேரரசில் ஜஸ்டின் என்னும் பேரரசரின் காலத்தில் தோன்றிய தொற்று நோய் (துரளவயைn ஞடயபரந) ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா, அரேபியா, கான்ஸ்தாந்திநோபிள் வரை பரவியது.  1324 இல் நிகழ்ந்த ‘கறுப்புச் சாவு’ (Justinian Plague) என்று குறிப்பிடப்படும் கொள்ளைநோய், அன்றிருந்த ஐம்பது கோடி உலக மக்கள் தொகையில், ஏறக்குறைய இருபது கோடி மனிதர்களைக் கொன்றழித்தது என்பதும் நாம் அறிந்த வரலாறு. இக்காலத்தில்தான் உயிர் பிழைப்பதற்காக 30 நாள்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ளல் (Quarantine) முதன் முதலில் தோன்றியது.  லண்டனில் தோன்றிய பெருங்கொள்ளை நோய் (Great Plague of London) கி.பி. 1348 முதல் 1665 வரை 20 ஆண்டு இடைவெளியில் 40 முறை தோன்றி மக்களை வாட்டியது; கி.பி. 1665 இல் மட்டும் ஒரு இலட்சம் பேர் இறந்தனர். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் (1918), ஏற்பட்ட ‘ஸ்பெயின் காய்ச்சல்’ (Spanish Flu) நோய்த்தொற்று
பத்துக் கோடி மனித உயிர்களைக் காவு வாங்கியது. ஏன் இந்தியாவிலும்கூட அடிக்கடி ஏற்படும் அம்மை நோய்த்தொற்றுக்கும் பல பேர் பலியாகியுள்ளனர் என்பதும் நாம் அறிந்த வரலாறே. 


இன்று...
வரலாற்றில் இதுவரையில் ஏற்பட்ட எந்தத் தொற்றும் தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்-19 எனும் கொரோனா நோய்த் தொற்றுப்போல உலக வாழ்க்கையை புரட்டிப் போட்டது கிடையாது. உலகிற்கு பேரழிவை முன்னறிவிக்கக்கூடிய ஒரு அறிகுறியாகவே விளங்குகிறது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் என்னென்ன பாடங்களை இது கற்றுத் தருகிறது என்பதே இன்றைய சமூகத்தின் எதார்த்தமான பார்வையாக இருக்கிறது.


அரசியல் அமைப்புகள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், பொதுப் பணித் துறைகள் தங்களையே மறு ஆய்வு செய்ய வேண்டிய நேரம் நெருங்கி வருவதை இது எச்சரிக்கிறது. திருஅவைத் தலைவர்கள் தம் தலைமைப் பண்புகளையும், பொறுப்புகளையும் மறு ஆய்வு செய்யப் பணிக்கிறது. தனி மனித வாழ்வு, வழிபாடு, சமூகப் பணி ஆகியவற்றில் முழுமையான ஒரு சீர்திருத்தத்தைக் கொணர அறைகூவல் விடுக்கிறது. எல்லாவற்றுக் கும்மேலாக, நம் அடிப்படை நம்பிக்கை வாழ்வு, திருப்பலியில் பங்கெடுப்பது, விரும்பிய திருத்தலங் களுக்குச் செல்வது, நவநாள், நற்கருணைப் பெருவிழா, பங்குத் திருவிழாக்களில் பங்கெடுப்பது, ஆலயங்களுக்குச் சென்று செபமாலை செபிப்பது என்ற நம் அடிப்படை ஆன்மிக வாழ்வையே ஆட்டம் காணவைத்துவிட்டது.


பல ஆண்டுகளாக பயிற்றுவிக்கப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்ட நம்பிக்கையாளர்கள், பார்வை யாளர்கள் நிலையிலிருந்து பங்கேற்பாளர்கள் நிலைக்கு நகர்ந்து கொண்டிருந்த நிலையில், இன்று தொலைக்காட்சிப் பெட்டியில் திருவழி பாட்டு நிகழ்வுகள் ஒளிபரப்புவதைப் பார்த்து, தொலைக்காட்சியோடு இணைந்து செபிப்பது, இந்த இக்கட்டான நேரத்தில் ஒரு ஆறுதலைக் கொடுத்தாலும் நாம் பார்வையாளராகவே மாறி விடுவோமோ?! பங்கேற்பாளர் நிலை பரிதாபமாகி விடுமோ?! என்ற அச்சம் ஆன்ம மேய்ப்பர்களிலிருந்து அடிப்படை நம்பிக்கையாளர்கள் வரை ஆட்டிப் படைக்கிறது.  காரணம், வழிபாடு ஒரு நிகழ்வாக மாறும்போது (Event), கையில் ரிமோட்டுடன் தொலைக்காட்சிமுன் அமரும் நாம், அடிக்கடி சேனல்களை மாற்றும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதனால் நம் ஆன்மீக வாழ்வு வளருமா என்ற கேள்வியும் எழத்தானே செய்கிறது.  இவ்வாறு இயல்பு வாழ்வுக்குத் திரும்பும் வரை நம் நம்பிக்கை, ஆன்மீக வாழ்வு சறுக்கிக் கொண்டே அதல பாதாளத்திற்கு சென்று விடுமோ என்கிற அச்ச வுணர்வு அருள்பணியாளர்கள் தொடங்கி ஆழ்ந்த இறை நம்பிக்கையுள்ள நம்பிக்கையாளர்கள் வரை அனைவரையும் ஆட்டம் காணச் செய்கிறது. இந்த நடைமுறைச் சிக்கல்களிலிருந்து நமது நம்பிக்கை வாழ்வை மீட்டெடுப்பது எப்படி!


வழிபாடே வாழ்வாக...
அடிப்படையில் பார்க்கின்றபொழுது, நம் திருஅவை நமக்குக் கற்றுத் தந்த வழிபாடு வெறும் சடங்கோடு முடிவதல்ல. ‘வழிபாடே வாழ்வாகமாற வேண்டும். ஒருவேளை இந்தச் சூழல் கூட, நமக்கு இந்தப் பாடத்தைக் கற்றுத் தரலாமோ என்று எண்ணவும் தோன்றுகிறது. வழிபாடே வாழ்வாக மாறும்போது வாழ்வும் வழிபாடும் பிரிக்கமுடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. ஓர்  அக்கறையுள்ள மேய்ப்புப் பணியாளராகப் புனித பவுல் உரோமை யிலுள்ள நம்பிக்கையாளர் சமூகத்துக்கு அவர்கள் தங்கள் வாழ்வையே வழிபாடாக மாற்றுமாறு அறிவுறுத்துகிறார். “சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங் களுக்குத் தெளிவாகத் தெரியும்”  (உரோ. 12:1-2).


ஆண்டவருக்காக வாழ்கிறபோது நாம் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்கள், போராட்டங் கள், அநீதிகள் அனைத்தையும் துணிச்சலோடு எதிர்கொண்டு வாழ்வதே, நம்மையே உயிருள்ள பலியாக்கும் உள்ளார்ந்த வழிபாடு என புனித பவுல் அடியார் கூறுகிறார். நாம் செய்யும் வழிபாடு நம் வாழ்வையே மாற்றி அமைக்க வேண்டும்.  இதைத்தான் எசாயா வழியாக இறைவன் நமக்கு அறிவுறுத்துகிறாரோ என்ற எண்ணமும் எழத்தான் செய்கிறது: “எண்ணற்ற உங்கள் பலிகள் எனக்கு எதற்கு? இனி, காணிக்கைகளை வீணாகக் கொண்டு வர வேண்டாம்; நீங்கள் தொடர்ந்து மன்றாடினாலும் நான் செவி கொடுப்பதில்லை; உங்களை கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; தீமை செய்தலை விட்டொழியுங்கள்; நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; எனவே மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால் நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள்.” இதுவே இன்றைய வாழ்வியல் எதார்த்தமாக மாறவேண்டுமோ என்ற எச்சரிக்கையும் எழத்தான் செய்கிறது. அன்பும், ஒழுக்கமும், நீதியும், நேர்மையும், அடுத்தவர் நலனில் அக்கறையும் கொண்டவர்களாக நாம் மாறவேண்டிய கட் டாயத்தை கொரோனா நமக்கு கற்றுத் தருகிறது.  இது ஒருபுறமிருக்க, இன்று நாம் பங்கெடுக்கும் திருவழிபாட்டு நிகழ்வுகள் நமக்கு ஓர் எச்சரிக்கை யைத் தருகிறது.


காணும் காணொளி வழிபாடுகள்
திருவழிபாடுகளில் பங்கேற்க வாய்ப்பு இல்லாத இக்கொரோனா காலத்தில், நாம் தொலைக்காட்சிகள், சமூகத் தொடர்பு சாதனங்கள் (ளுடிஉயைட ஆநனயை) வழியாக திருவழிபாட்டு நிகழ்வுகளை கண்டு வருகிறோம்.  கொரோனாத் தொற்றின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் நமக்கு இந்த நவீன சாதனங்கள் பெரும் ஆறுதலாக இருக்கின்றன.  இறைவனுக்கு நன்றி சொல்லுவோம்.  திருப்பலியில் பங்கேற்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை, ஆன்ம தாகத்தை தணிக்க கடவுள் கொடுத்த ஒரு கொடை.  விவிலிய வாசகங்கள், மறையுரை ஆகியவற்றைக் கேட்டு நாம் நம்பிக்கையில் உறுதியுடன் இருக்க உதவும் ஒரு சிறப்பான தருணம். ஆனால், நாம் காணும் தொலைக்காட்சித் திருவழிபாட்டு நிகழ்வுகள் ஓர் தற்காலிகமே. இது அருள்பணியாளரோடு இணைந்து ஆலயத்தில் நடைபெறும் திருப்பலியில் உடல் அளவிலும், முழுமையாகவும், உணர்ந்தும் செயல் முறையிலும் (Fully, Consciously, Actively) பங்கேற்கும் கொண்டாட்டத்திற்கு ஒருபோதும் இணையாகாது.


திருப்பலியின் முதன்மையும் மாண்பும்
திருப்பலிக் கொண்டாட்டம் கிறிஸ்துவும் திரு ஆட்சி முறைப்படி அமைந்த இறைமக்களும் சேர்ந்து ஆற்றும் செயல் ஆகும்.  எனவே அனைத்துலகத் திரு அவையினுடையவும் தல திருஅவையினுடையவும் நம்பிக்கையாளர் ஒவ்வொருவருடையவும் முழுமையான கிறிஸ்தவ வாழ்வின் மையம் ஆகும் (திருவழிபாடு, 41; திருஅவை, 11). ஏனெனில், “திரு வழிபாடு திருஅவையின் செயல் முழுவதுமே நாடி நிற்கும் சிகரமாக அமைந்துள்ளது. அத்துடன் திருஅவையின் ஆற்றல் அனைத்திற்கும் அது ஓர் ஊற்றாகவும் உள்ளது” (திவ 10); மேலும், திருப்பலிக் கொண்டாட்டத்தில்தான் கடவுள் கிறிஸ்துவில் உலகைப் புனிதப்படுத்தும் செயலின் சிகரம் அமைந்துள்ளது; இதில்தான் மக்கள் கிறிஸ்து வழியாகத் தூய ஆவியாரில் தந்தைக்குச் செலுத்தும் வழிபாடு வெளிப்படுகின்றது (திவ 10). எல்லாப் புனிதச் செயல்களுமே கிறிஸ்தவ வாழ்வின் எல்லாச் செயல்பாடுகளும் திருப்பலியோடு இணைந்து, அதிலிருந்து தொடங்கி, அதை நோக்கியே நாடி நிற்கின்றன (திருப்பணியாளர்கள், 5).  எனவே திருப்பலி, அதாவது ஆண்டவரின் இரவு விருந்துக் கொண்டாட்டம் முறைப்படுத்தப்படுவதால், திருப்பணியாளர்களும் நம்பிக்கையாளரும் தத்தம் நிலைகளுக்கு ஏற்பத் திருப்பலியில் பங்கேற்று, அதன் பயன்களை நிறைவாகப் பெறுவது மிக இன்றியமையாதது (திவ, 19).


செயல்முறை பங்கேற்பு???
எனவே, இந்நோக்கம் நிறைவேற ஒவ்வொரு திருவழிபாட்டுக் குழுமத்தின் தன்மைக்கும் இதரச் சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு திருப்பலிக் கொண்டாட்டம் அமைய வேண்டும்; இதன் பயனாக, நம்பிக்கையாளர் பொருள் உணர்ந்தும் செயல்முறையிலும் முழுமையாகவும் பங்குகொள்வதற்குத் தூண்டப்பட வேண்டும். அதாவது, அவர்கள் ஆர்வமிக்க நம்பிக்கையுடனும் எதிர்நோக்குடனும் அன்புடனும் உள்ளத்தாலும் உடலாலும் செயல்முறையிலும் முழுமையாகவும் இக்கொண்டாட்டத்தில் பங்குகொள்வதைத் திரு அவை மிகவே விரும்புகின்றது; இது கொண்டாட்டத் தின் இயல்புக்கே இன்றியமையாதது. இது திருமுழுக்கினால் கிறிஸ்தவ மக்களின் உரிமையும் கடமையும் ஆகின்றது (திவ, 14).  இவ்வாறு நம்பிக்கையாளரின் உடனிருப்பும் செயல்முறைப் பங்கேற்பும் கொண்டாட்டத்தின் திருஅவைப் பண்பைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன (திவ, 41).மேற்கண்ட இரண்டாம் வத்திக்கான் சங்கக் கொள்கைத் திரட்டின் ஆய்வின்படி, திருப்பலியில் நம்பிக்கையாளரின் உடனிருப்பும் செயல்முறைப் பங்கேற்பும் திருஅவையின் பண்பும், போதனையுமாக இருக்கின்றது. மேலும், இது கிறிஸ்துவினுடையவும் திருஅவையினுடையவும் செயல் ஆகும். இதனால் “திருவழிபாட்டுக் கொண்டாட்டம் ஒவ்வொன்றும்... அனைத்திலும் உயர்ந்த திருச்செயல் ஆகின்றது. தகுதியிலும் நிலையிலும் இச்செயல் ஆற்றலுக்குத் திருஅவையின் வேறு எந்தச் செயலும் இணை யாகாது” (திவ, 7). இன்னும் குறிப்பாக, “திருவழி பாட்டில் மிகச் சிறப்பாக தூய்மைமிகு நற்கருணைப் பலியில் நமது மீட்பு அலுவல் நடந்தேறுகிறது” (திவ, 2).  
எனவே, திருப்பலியில் நாம் முழுமையாக, உணர்ந்து, செயல்முறையில் பங்கேற்க வேண்டும்.  உடலும் உள்ளமும் மனமும் இணைந்து பங்கேற்க வேண்டும். பதிலுரைகள், வாழ்த்தொலி, மன்றாட்டுகள், நிற்றல், முழந்தாளிடல், அமர்தல், வணங்கு தல் போன்ற உடல் நிலைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இவற்றைத் தொலைக்காட்சித் திருப்பலி காணும்போது நம்மால் செயல்படுத்த முடியுமா என்றால் அதுவே வெறும் கேள்விக்குறியே!  மேலும், அரை குறை மனசு, வேடிக்கை, பராக்கு போன்றவற்றிற்கு வாய்ப்புகள் பல உண்டு. எனவே, தொலைக்காட்சித் திருப்பலி நமக்கு உண்மையான, முழுமையான செயல்முறை பங்கேற்பைத் தருவது என்பது கடினமே.  மேலும் இச்சூழல் ஒரு தற்காலிகமே.


திருஅவையின் போதனை
திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் “அன்பின் அருள்சாதனம்” என்னும் திருத்தூது ஊக்கவுரையில் கூறுவது: “தொடர்பு ஊடகங்கள் வழியாக திருப்பலியில் பங்கேற்பதன் மதிப்பு பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டும்; அதாவது சாதாரண சூழ்நிலைகளில், இத்தகைய ஒளிபரப்புகளைக் கேட்பவர்களோ அல்லது பார்ப்பவர்களோ திருப்பலி யில் பங்கேற்க வேண்டிய தங்கள் கடமையை நிறைவு செய்வதில்லை என்பதை அறிந்திருக்க வேண்டும். கண்ணால் காணக்கூடிய படங்கள் உண்மையைப் பிரதிபலிக்கலாம்; ஆனால் அவை செய்முறையில் அவற்றை மீண்டும் விளைவிப்பதில்லை. வய தானவர்களும் நோயுற்றோரும் வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாகத் திருப்பலியில் பங்கேற்பது மிகவும் போற்றத்தகுந்தது என்றாலும், இத்தகைய ஒலி - ஒளிபரப்புகள் கோவிலுக்குச் செல்வதில் இருந்தும் உயிருள்ள திருஅவையில் நற்கருணைக் கொண்டாட்டத்தில் (திருப்பலியில்) பங்கு கொள்வதிலிருந்தும் தங்களுக்கு விடுப்பு அளிக்கமுடியும் என்று நினைப்பவர்களுக்குப் பொருந்தாது” (எண். 57).


எனவே, கொரோனாவிற்கு பிறகு...
இன்றையச் சூழல் எவ்வளவு நாள்வரை இருக்கும் என்பது நமக்குத் தெரியாது. கொரோனா நோய்த்தொற்று நீங்கிய பிறகு மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று இன்றைய திருஅவை கவலை
கொண்டுள்ளது.  நாம் சந்தித்த வரலாற்று நிகழ்வு களும், இயற்கை பேரிடர்களும் வேதகலாபனையில் இரத்தம் சிந்திய மறைசாட்சிகளும் நம்பிக்கைத் தளர்வின்றி வாழ்ந்திருக்கிறார்கள் என்பது வரலாற்று உண்மை. "இதுவும் கடந்துபோகும்" என்று நம்புவோம்.  அதன்பிறகும் ஆலயம் தேடி ஆண்ட வனின் பாதம் நாடி அண்டி வருவோம்.

Comment