No icon

‘அருள்கொடை மற்றும் மறைப்பணி’

மறைப்பணி இல்லாமல் தேவஅழைத்தல் இல்லை - திருத்தந்தை

ஏப்ரல் 26 ஆம் தேதி, புதனன்று, அழைப்பு : ‘அருள்கொடை மற்றும் மறைப்பணி’ என்ற தலைப்பில் இறையழைத்தலுக்கான 60 வது உலக இறைவேண்டல் தினத்தை முன்னிட்டு வழங்கியுள்ள செய்தியில் அனைத்து மக்களுடனும் நாம் உறவில் இருந்தால் மட்டுமே திரு அவையின் எந்தவொரு குறிப்பிட்ட அழைப்பும் அதன் உண்மைத்தன்மையையும் வளமையையும் முழுமையாக வெளிப்படுத்துகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார். ‘உலகம் படைக்கப்படும் முன்பே நாம் இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டோம்’, ‘இந்த உலகில் நான் ஒரு மறைபணியாளர்’, ‘அவருடன் இருக்கவும், நற்செய்தியைப் பறைசாற்றவும் அழைக்கப்பட்டுள்ளோம்’ ஆகிய மூன்று தலைப்புகளின் கீழ் திருத்தந்தை பிரான்சிஸ் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

உலகம் படைக்கப்படும் முன்பே தேர்ந்துகொள்ளப்பட்டோம்

புனித பவுலடியாரின் (எபே 1:4-5) வார்த்தைகளை மேற்கோள் காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வார்த்தைகள் நாம் கடவுளின் சாயல் மாற்றும் உரு என்பதையும், நாம் அவரது அன்பால், அவரது அன்பிற்காக, அன்புடன் உருவாக்கப்பட்டுள்ளோம் என்றும் உரைத்துள்ளார்.

வறுமையின் சூழ்நிலைகளில், இறைவேண்டல் தருணங்களில், நற்செய்தியின் தெளிவான சாட்சியைக் காணும்போது அல்லது நம் மனதைத் திறக்கும் ஒன்றைப் படிக்கும்போது, சுய வரத்திற்கான கடவுளின் அழைப்பு படிப்படியாகத் தன்னைத் தெரியப்படுத்துகிறது என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் வார்த்தையைக் கேட்கும்போது, அது நம்மிடம் நேரடியாகப் பேசப்படுவதை உணரும்போது, உடன்பயணிக்கும் சகோதரர் சகோதரிகளின் அறிவுரையில், நோய் அல்லது துயரத்தின் தருணங்களில் அவர் நம்மை அழைக்கும் எல்லா வழிகளிலும், அவர் தனது எல்லையற்ற படைப்பாற்றலைக் காட்டுகிறார் என்றும் விளக்கியுள்ளார்.

இந்த உலகில் நான் ஒரு மறைபணியாளர்

மறைப்பணி இல்லாத தேவஅழைத்தல் எதுவும் இல்லை. நாம் பெற்ற புதிய வாழ்க்கையை மற்றவர்களுக்கு வழங்காத வரையில் மகிழ்ச்சியும் முழு அகவுணர்வும் இருக்காது என்றும், அன்பிற்கான கடவுளின் அழைப்பு என்பது நம்மை அமைதியாக இருக்க அனுமதிக்காத ஒரு அனுபவம் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!’ (காண்க 1 கொரி 9:16) என்ற புனித பவுலடியாரின் வார்த்தைகளையும் இதற்குச் சான்றாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மறைப்பணியானது, பொருள் மற்றும் ஆன்மீக இரக்கத்தின் செயல்களில் அதன் வெளிப்பாட்டைக் காண்கிறது. மேலும், ஒதுக்கப்படுதல் மற்றும் அலட்சியத்தின் கலாச்சாரத்திற்கு மாறாக, உடனிருப்பு, இரக்கம் மற்றும் கனிவை பிரதிபலிக்கும் ஒரு மென்மையான வாழ்க்கை முறையை கொண்டுள்ளது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

அவருடன் இருக்கவும், நற்செய்தியைப் பறைசாற்றவும்....

திருஅவை என்பது ஒரு குழுமம், இது, தங்களுக்குள் அன்பைப் பகிர்ந்துகொள்வதற்கும் (காண்க. யோவா 13:34; 15:12) நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கும், இயேசுவால் அழைக்கப்பட்ட திருக்குழுமத்தை அடையாளப்படுத்துகிறது. ஏனென்றால் இதன் வழியாகவே இறையாட்சி இப்புவியில் கட்டியெழுப்பப்படுகிறது என்றும் திருத்தந்தை விவரித்தார்.

நமது பல்வேறுபட்ட அழைப்புகள், வாழ்க்கை முறைகள் மற்றும் பணிகளுக்கேற்ப திருஅவைக்குள் நாம் பணியாளர்களாக இருக்கிறோம் என்றும், அனைத்து மக்களுடனும் நாம் உறவில் இருந்தால் மட்டுமே திருஅவையின் எந்தவொரு குறிப்பிட்ட அழைப்பும் அதன் உண்மைத்தன்மையையும் வளமையையும் முழுமையாக வெளிப்படுத்துகிறது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

அன்பான சகோதரர் சகோதரிகளே, அழைப்பு என்பது ஒரு கொடை மற்றும் ஒரு பணி, புதிய வாழ்க்கை மற்றும் உண்மையான மகிழ்ச்சிக்கான ஆதாரமாக இருக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நாளுடன் தொடர்புடைய இறைவேண்டல் மற்றும் செயல்பாட்டின் முன்முயற்சிகள் நமது குடும்பங்கள், நமது பங்குத்தளங்கள், அர்ப்பணிக்கப்பட்ட இருபால் துறவறக் குழுக்கள் மற்றும் நமது திருஅவைக் குழுமங்கள் மற்றும் இயக்கங்களுக்குள் அழைத்தல் பற்றிய விழிப்புணர்வை வலுப்படுத்தட்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

Comment