No icon

திருத்தந்தை

பணிவாழ்வின் வேர்களைக் கொண்டது திருமுழுக்கு

திருமுழுக்கு மற்றும் தூய ஆவியின் வரங்கள் பணிவாழ்வின் வேர்களைக் கொண்டுள்ளன என்றும், கிறிஸ்துவை நம்புவோர் அவரது சீடராக ஏற்றுக் கொள்ளப்பட்டு, சமூகத்திற்கான பயனுள்ள பணியினை ஆற்றுகின்றார்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். ஏப்ரல் 22 ஆம் தேதி சனிக்கிழமை வத்திக்கானின்  கிளமெந்தினா அறையில் பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்விற்கான திருப்பீடத்துறையின் நிறையமர்வுக் கூட்டத்தின் பங்கேற்பாளர்களைச் சந்தித்த போது திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறினார்.

ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவையில், பொது நிலையினர் மற்றும் பணிஎன்ற கருப்பொருளில் நடைபெறும் இக்கூட்டத்திற்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுநிலையினரின் பணி என்பது பேராயங்களின் சட்டங்கள் அடிப்படையில் அல்ல; மாறாக, திருமுழுக்கின் அடிப்படையில் சீடர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டதனால், செய்யப்படுவது என்றும் எடுத்துரைத்தார்.

தூய ஆவியின் வரங்கள் நம்பிக்கையுள்ள பொதுநிலையினர் வழியாக, சமூகத்திற்கான ஒரு பயனுள்ள பணியாக அங்கீகரிக்கப்படுகின்றது என்றும், குறிப்பிட்ட பேராயத்தின் வழியாக அப்பணி அறிமுகப்படுத்தப்பட்டு உலகமெங்கும் பரவுகின்றது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.

பேராயங்கள், சேவைகள், பணிகள், அலுவலகங்கள் ஆகிய அனைத்தும் ஒருபோதும் தனிப்பட்ட நபரை அடையாளப்படுத்தும் சுய குறிப்புகளாக மாறக்கூடாது என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உலகில் கிறிஸ்தவ விழுமியங்களைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.பொது நிலையினருக்கு ஒப்படைக்கப்பட்ட இப்பணியினை, சமூகத்தின் மாற்றத்திற்கு நற்செய்தியைப் பயன்படுத்துவதில் உண்மையான அர்ப்பணிப்பு இல்லாமல் திருஅவைக்கு ஆற்ற முடியாது என்றும், மறைப்பணி, மக்கள் பணி ஆகிய இரண்டும் மிக முக்கியமானதாக கருதப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

கிறிஸ்துவுக்கும் பணியாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் திருமுழுக்கின் வழியாகவே தனது சொந்த வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டறிய முடியும் என்றும், ஆசீர்வதிக்கவும், உயிர்ப்பிக்கவும், விடுவிக்கவும், குணப்படுத்தவும், இந்தப் பூமியில் அவர் ஆற்றும் பணியினால் மகிழ்ச்சியின் ஒளியாக விளங்குவார்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.

 

Comment