No icon

ஆப்ரிக்கா நாட்டின் குவாம் அமைப்பு

நல்ல சமாரியர்களாக நற்செய்தியின் சாட்சிகளாக வாழுங்கள்

அன்றாட உணவை எங்களுக்குத் தாரும் என்ற இயேசு கற்பித்த செபத்தில் உணவு என்பது உடல் நலனைக் குறிக்கின்றது எனவும், இத்தகைய உடல் நலனை ஆப்ரிக்க மக்களுக்கு வழங்கும் மருத்துவர்கள் நல்ல சமாரியர்களாக நற்செய்தியின் சாட்சிகளாக விளங்க வேண்டும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

நவம்பர் 19 ஆம் தேதி சனிக்கிழமை உரோம் வத்திக்கான் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் ஆப்ரிக்கா நாட்டின் குவாம் அமைப்பைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும்  பணியாளர்கள் என ஏறக்குறைய 6000 பேரை சந்தித்த போது திருத்தந்தை இவ்வாறுக் கூறியுள்ளார்.

பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வம், உரையாடல் மற்றும் விடாமுயற்சியுடன் மருத்துவர்கள் செயல்படும்போது, அமைதி மற்றும் மோதல்களை சமாளிப்பதற்கான கருவிகளாக அனைவரும் மாற முடியும் எனவும், தங்களது ஆர்வமுள்ள பணிகள் வழியாக நல்ல சமாரியர்களாக நற்செய்தியின் சாட்சிகளாக திகழ வேண்டும் எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

CUAMM அமைப்பு

70 ஆண்டுகளுக்கு முன்பு, இளம் ஆப்ரிக்க மருத்துவ மாணவர்களை வழிநடத்துவதற்காக பதுவாவில் ஓர் உறைவிடப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து உருவான CUAMM அமைப்பினர், ஆப்ரிக்காவுடன் இருத்தல் மற்றும் ஆப்ரிக்காவிற்காக இருத்தல் என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும் எனவும்,  அடிப்படைத் தேவைகளான உணவு, நீர், வீடு, வேலை போன்று உடல் நலனும் இன்றியமையாதது எனவும், அதனை அனைத்து ஆப்ரிக்க மக்களுக்கும் கொடுக்க பணிபுரியும் மருத்துவர்களின் பணி பாராட்டுதற்குரியது எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

தலத்திருஅவையுடன் இணைந்த செயல்பாடுகள்

ஆப்ரிக்காவில் உள்ள தலத்திரு அவைகள், துறவற மறைப்பணியாளர்கள்,  மற்றும் நாடுகளின் நிறுவனங்களுடன் ஒத்துழைத்து மருத்துவர்கள் செய்யும் பணி, மக்களின் தேவைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் உதவும் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். 

இணைந்து பணியாற்றுவதன் வழியாக, அனுபவம், சிறப்பான அறிவு, நற்செய்தியால் ஈர்க்கப்பட்ட சமூக நிகழ்வுகள், ஏழை மக்களை இலக்காகக் கொண்ட  நலப்பணிகள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும் எனவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் பெருந்தொற்று, போர், கடுமையான உலகளாவிய நெருக்கடி போன்றவைகள் வளர்ந்த நாடுகளையே துன்பத்திற்கு உள்ளாக்கும்போது ஆப்ரிக்கா போன்ற ஏழ்மையான நாட்டில்  வாழும் மக்கள் மிகவும் ஏழ்மையான மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்புகள் இல்லாதவர்களாகவும், வறுமையினால் மோசமடைந்து வறுமை பட்டினி ஊட்டச்சத்துக் குறைபாடு, மருந்து பொருட்களின் பற்றாக்குறை போன்றவற்றால் பின்னோக்கி செல்பவர்களாகவும் மாறுகின்றார்கள் என்றும் கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட சூழலில் மக்கள் உடல் நலனில் அக்கறை காட்டும் மருத்துவர்கள் அவர்கள் வாழ்வில் நம்பிக்கை என்னும் சிறிய தளிரை துளிர் விடச்செய்பவர்களாக இருக்கின்றார்கள் என்றும், ஏழை மக்களின் மறைக்கப்பட்ட துன்பம் மற்றும் வேதனைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றார்கள் எனவும் கூறியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் அழுகையை ஆண்டவர் கேட்கிறார் என்று கூறிய திருத்தந்தை, ஏழைகளின் புதிய எதிர்காலத்திற்கான பணிவான, மற்றும் உறுதியான கைவினைஞர்களாக மருத்துவர்கள் செயல்படக் கேட்டுக் கொண்டார்

இளையோரில் கவனம்

இறுதியாக, இளைஞர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும், உள்ளூர் செயல்பாடுகளில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி எதிர்காலத்தை வளமாக வாழ ஆர்வமுடன் இருக்கும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் திருத்தந்தை வலியுறுத்தினார்.

1950ஆம் ஆண்டு முதல் ஆப்பிரிக்க மருத்துவர்கள் துணையுடன் ஆப்பிரிக்க மக்களின் நலவாழ்வை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் உருவாக்கப்பட்ட முதல் இத்தாலிய அமைப்பே CUAMM என்பதாகும்.

ஆப்ரிக்க நாடுகள் உட்பட 41 நாடுகள் குறிப்பாக உலகின் ஏழ்மையான இடங்களில் வசிப்பவர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் சேவைகளை வழங்குவதற்காக 1,600க்கும் மேற்பட்ட நபர்களின் மனித மற்றும் தொழில்முறை வெற்றியை எடுத்துரைக்கும் அமைப்பு, தற்போது அங்கோலா, எத்தியோப்பியா, மொசாம்பிக், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சியரா லியோன், தெற்கு சூடான், தான்சானியா மற்றும் உகாண்டாவில் உள்ள மருத்துவமனைகள், மாவட்டங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ளூர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் பரந்து விரிந்துள்ளது.

Comment