No icon

நவம்பர் 19 சனிக்கிழமை

வடஇத்தாலியில் உள்ள ஆஸ்தி நகருக்கு பயணித்த திருத்தந்தை

ஆஸ்தி தலத்திருஅவைத் தலைவர்களை சந்திக்கவும், அப்பகுதியில் வாழும் தன் உறவினரான  கிளாரா ரபேஸ்ஸானா என்பவரின் பிறந்தநாளைச் சிறப்பிக்கவும், தன் பூர்வீக ஊரான வட இத்தாலியின்  ஆஸ்தி நகராட்சிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் பயணம் மேற்கொண்டுள்ளார்.

நவம்பர் 19 சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 10 மணி, இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 2.30க்கு வத்திக்கான் ஹெலிகாப்டர் தளத்திலிருந்து ஆஸ்தி நோக்கிக் கிளம்பிய திருத்தந்தை, உள்ளுர் நேரம்  11,45 மணிக்குஇந்திய இலங்கை நேரம் மாலை 4.15 மணிக்கு ஆஸ்தியின் போர்டகோமரோ நகர் வந்தடைந்தார்.

ஆஸ்தி மறைமாவட்ட ஆயரான மார்கோ பிரஸ்டாரோ என்பவரை தனியாக சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன்பின் தனது இளமைப்பருவ நண்பரும் குடும்ப உறவினருமான கிளாரா ரபேஸ்ஸானா என்பவரின் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்றார்.

2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி புனித யோசேப்பு திருவிழாவன்று பொறுப்பேற்ற திருத்தந்தை முதன்முறையாக இப்போதுதான் தன் பூர்விக ஊருக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 20ஆம் தேதி ஞாயிற்றுகிழமை வரை தன் பூர்வீக ஊரில் இருந்த திருத்தந்தை, ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 11 மணிக்கு ஆஸ்தி மறைமாவட்டத்திலுள்ள பேராலயத்தில் கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றி, மூவேளை செபத்தை விசுவாசிகளோடு இணைந்து செபித்து, இறையாசீரையும் வழங்கினார்.

அதன்பின் ஆயர்களுடன் மதிய உணவை உண்டபின் மாலையில் தான் தங்கியிருக்கும் இடமான வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லத்திற்கு திரும்பினார்.

திருத்தந்தையின் பூர்வீகம் இத்தாலி

ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்ற இயற்பெயரைக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1936ஆம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி அர்ஜென்டீனா நாட்டின் ப்யோனஸ் அய்ரஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை மரியோ ஜோஸ் பெர்கோக்லியோ அவர்கள், இத்தாலியின் ஆஸ்தி மாவட்டத்தின் போர்டகோமரோ என்ற ஊரில் பிறந்தவர். இவரது அன்னை ரெஜினா சிவோரி அவர்கள், வட இத்தாலியைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில், புவனோஸ் அய்ரஸ் நகரில் பிறந்தவர். இவர்களின் குடும்பங்கள் 1929ஆம் ஆண்டில் அர்ஜென்டீனாவுக்குப் புலம்பெயர்ந்தவை.

 

 

 

Comment