No icon

மாபெரும் 500ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்

கடவுளுக்கு அடிபணிவதில் புனித இஞ்ஞாசியாரைப் பின்பற்றுவோம்

ஒரு போர்வீரராக இருந்த புனித இலொயோலா இஞ்ஞாசியார் (இக்னேசியஸ்) அவர்கள், புனித பூமிக்குச் செல்லும் வழியில் இஸ்பெயினின் ஒரு தொலைதூர இடத்தில் மனம்திரும்பியதன் ஐந்நூறாம் ஆண்டுக் கொண்டாட்டங்களுக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார்.

நவம்பர் 14, திங்களன்று இஸ்பெயினின் பார்சலோனாவில் அப்பகுதியின் அரசு மற்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் இணைந்து நடத்திய மாபெரும் 500ஆம் ஆண்டுக் கொண்டாட்டம், புனித இஞ்ஞாசியார், இயேசுவின் பக்கம் திரும்ப பயன்பட்ட தொற்று நோய், மற்றும் போரை நமக்கு மீண்டும் நினைவுபடுத்தி நிற்கின்றது என, தன் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

 உடலிலும் உள்ளத்திலும் காயம் அடைந்து, எல்லாவற்றையும் களைந்து, ஏழ்மையிலும் தாழ்மையிலும் கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் உறுதியாக இருந்த புனித இஞ்ஞாசியார், பார்சலோனாவை அடையவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு மன்ரேசா குகையில் தங்கவேண்டியதாகியது என்பதையும் நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாம்பலோனா முற்றுகையிலிருந்து அப்புனிதரை வெளிக்கொணர்ந்த போர்க்காலமும், பார்சலோனாவை அடையவிடாமல் குகைக்குச் செல்லவைத்த தொற்று நோயும் நம் வாழ்விலும் இடம்பெறுகின்றன என மேலும் கூறியுள்ளார்.

நாம் வாழ்வில் சந்திக்கும் அத்தனை தடைகளையும், நாம் இதுவரை பின்பற்றி வந்த போக்கை மாற்றியமைப்பதற்கு நமக்கு கிடைத்த வாய்ப்புகளாகப் பயன்படுத்தி, நாம் வரலாற்றின் முதலாளிகள் அல்ல என்பதை உணர்ந்து கடவுளுக்கு அடிபணிவதில் புனித இஞ்ஞாசியாரைப் பின்பற்றுவோம் என தன் செய்தியில் திருத்தந்தை கூறியுள்ளார்.

புனித இலெயோலா இஞ்ஞாசியார், தான் பெற்ற அழைப்பிற்குக் கீழ்ப்படிந்தது மட்டுமல்ல, தான் பெற்ற அந்த அருளைத் தானே வைத்துக் கொள்ளாமல், ஆரம்பத்தில் இருந்தே அதை மற்றவர்களுக்கும் உரிய கொடையாகப் பார்த்தார் என்ற திருத்தந்தைமற்றவர்களும் கடவுளைச் சந்திக்க உதவும் ஒரு வழியாக நாம் நம்மை அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 இந்த 500ஆம் ஆண்டு விழாவில் தானும் கலந்துகொள்ள விரும்புவதாகவும், புனித இஞ்ஞாசியாரின் மனம்திரும்பலின் 500ஆம் ஆண்டை சிறப்பிக்கும் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும், தனக்காக அனைவரும் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டு, தன் செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவுசெய்துள்ளார்.

Comment